Thursday, February 2, 2012

NEWS OF THE DAY.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் : கொழும்பில் வாகன நெரிசலைக் குறைக்க சொகுசுப் பேரூந்துகள்.
கொழும்பு வீதிகளில் வாகன நெருக்கடியை குறைக்கும் நோக்கில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பேரூந்துகள் இந்த மாதம் முதல் சேவையில்ஈடுபடுத்தப்படவுள்ளன. தனியார் வாகனங்கள் காரணமாக கொழும்பில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் முகமாக, மொரட்டுவ - புறக்கோட்டை, நீர்கொழும்பு – புறக்கோட்டை, கம்பஹா - புறக்கோட்டை, கெஸ்பாவ - புறக்கோட்டை, ஹோமாகம- புறக்கோட்டை ஆகிய இடங்களில் இந்தப் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.ஏற்கனவே இவ்வாறான சேவைகள் மொரட்டுவ- புறக்கோட்டை வீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கோதபாய இன்று இந்தியா பயணம்?
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உட்பட ஒரு குழுவினர்  இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக புதுடெல்லி சென்றுள்ளார்.இலங்கைக்கும் இந்தியாவுக்கும்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்த சமுத்திரத்தில் அனைத்துலக ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.பாதுகாப்புச் செயலர் கோதபாயவுடன், இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மற்றும் இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், இந்தக் கலந்துரையாடலிகளின் போது. இந்திய பாதுகாப்புக் கல்லூரிகளிலும் ஏனைய நிறுவனங்களிலும் சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்த கலந்துரையாடப்படவுள்ளதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள இலங்கையின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
எனினும், விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் பயணத்தின் போது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கைப் போன்ற சிறிய நாடுகளையே அமெரிக்கா தண்டிக்கிறது : ஜனாதிபதி மகிந்த.
அமெரிக்காவும் ஐரொப்பிய ஒன்றியமும் ஈரான் மீது மேற்கொள்ளும் பொருளாதார தடையால், இலங்கைப் போன்ற சிறிய நாடுகளே பாதிக்கப்படுகின்றன. எனவே தற்போதைய நிலையில் தீர்மானம் எடுப்பதற்காக ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இலங்கை, ஈரானிடம் இருந்து 93 வீத மசகு எண்ணெய்யை 7 மாத கடன் அடிப்படையில் இறக்குமதி செய்து வருகிறது. இதன்மூலமே மின்சாரம் உட்பட்ட பல்வேறு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்தநிலையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானை தண்டிக்கவில்லை. இலங்கை போன்ற சிறிய நாடுகளையே தண்டிக்கின்றன என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கிடையில் சீனாவின், இலங்கை பிரசன்னம் வர்த்தகமே தவிர, அரசியல் அல்ல என்று, சீன நிதியுதவியுடன் மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் கடற்படைத்தளம் ஒன்று அமைக்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கே ஜனாதிபதி மகிந்த இவ்வாறு தெரிவித்தார்.மேலும், ஈரானுக்கு டொலர் கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம், இலங்கை மத்திய வங்கியை கோரினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கேட்க்கப்பட்டது,
அதற்கு பதிலளித்த அவர்,
நேரடியாக அவ்வாறு இதுவரை கேட்கப்படவில்லை என்றும் இதேவேளை, இது குறித்து பேச்சு நடத்துவதற்காக அமெரிக்காவின் தெற்காசிய உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இலங்கைக்கு வரவுள்ளார்.அத்துடன் இந்திய பெற்றோலியத்துறை அமைச்சு அதிகாரிகளும் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தொடரும்: அமெரிக்கா.
பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே சண்டைகள் இருந்த போதிலும் மனிதாபிமான முறையில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 220 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.இதுகுறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் கூறியதாவது, கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமெரிக்க அரசு பல்வேறு நலத் திட்டங்களுக்காக, பாகிஸ்தானுக்கு 220 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி அளித்துள்ளது.
இதில் அவசரகால மனிதாபிமான உதவித் தொகையான 50 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவியும் அடங்கும். இந்த நிதியுதவி மின்சாரம், எல்லைப்புற ஸ்திரத் தன்மை, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது.இரு நாடுகளுக்கிடையில் சில பிரச்னைகள் இருந்தாலும் மனிதாபிமான உதவிகள் தொடரும் என்றார்.
திபெத்தில் சீன இராணுவத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு.
திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பை எதிரத்து புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது.இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக திபெத்தில் உள்ள புத்த கோவில்கள் மற்றும் மடாலயங்களில் சீனா பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இந்தாண்டு ஜனவரி மாதம் வரையில் 16 புத்தமதத் துறவிகள் சீன அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தீக்குளித்துள்ளனர்.இத்தீக்குளிப்பு திபெத்தில் சீனாவுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிடும் என்பதால் விரைவில் புத்த மடாலயங்களின் பாதுகாப்பை சீனா அதிகரிக்கும் என கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின.கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி திபெத்தின் கான்ஜி பகுதியில் மூன்று புத்தமதத் துறவிகள் தீக்குளித்தனர். அவர்களின் உடல்களை திருப்பித் தரும்படி, நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது சீன காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலர் பலியாகினர்.
இந்நிலையில் திபெத்தின் சீன உயர் அதிகாரி, கி ஜாலா வெளியிட்ட அறிக்கையில், புத்த கோவில்கள், மடாலயங்கள், திபெத்திற்குள் வரும் தேசிய நெடுஞ்சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.திபெத் தன்னாட்சிப் பகுதியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள தகவல்படி காவல்துறை அதிகாரிகள், ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொன்மையான சிற்பத்தை ஆப்கானுக்கு வழங்கியது ஜேர்மனி.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் நடந்த போது விற்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான புத்த மத சிற்பம் ஒன்றை ஜேர்மனி மீண்டும் ஆப்கானுக்கு அளித்துள்ளது.கடந்த 1990ன் முற்பகுதியில் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் ரஷ்யா படைகள் வெளியேறிய பின், உள்நாட்டு வீரர்கள் தலைநகர் காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தொன்மை வாய்ந்த சிற்பங்களைத் திருடி கள்ளச் சந்தை மூலம் வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதித்தனர்.
அருங்காட்சியகத்தின் 70 சதவீத சொத்துக்கள் இவ்வாறு திருடு போயின. மொத்தம் 70 ஆயிரம் சிற்பங்கள் இவ்வாறு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுக் கால போரால் அருங்காட்சியகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஜேர்மனியின் மூனிச் நகரில் காபூலில் இருந்து திருடு போன ஒரு சிற்பம் இருப்பது தெரியவந்தது. ஆப்கான் அரசு ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள தனது தூதரகம் மூலம் அதன் உரிமையாளர் யார் எனக் கண்டறிந்து மீண்டும் அதை நாடு கொண்டுவர முயற்சி மேற்கொண்டது.அதன் அடிப்படையில் கடந்த வாரம் அந்த சிற்பம் ஜேர்மனி அரசால் ஆப்கான் அரசுக்கு வழங்கப்பட்டது. 12 அங்குலம் உயரம் கொண்ட சுண்ணாம்புக் கல் ஒன்றில் கீழ் வரிசையில் நான்கு பேரும், மேல் வரிசையில் மூன்று பேரும் நின்று, தங்களது இடப் பக்கம் பார்ப்பது போல் அந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் உடல் சிதைந்துள்ளது. அனைவரின் மூக்குகளும் சிதைந்துள்ளன. இது கி.பி 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் ஆப்கானில் புத்த மதம் நிலவியிருந்தது.இவர்கள் தங்கள் அருகில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் புத்தரைப் பார்ப்பதாக இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளதாக, ஆப்கான் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அணு உலையில் திடீர் கோளாறு.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள அணு உலையில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அணு உலையைக் குளிர்விப்பதற்காகவும், அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் டர்பைன் பகுதியில் இருக்கும் நீராவி வெளியேற்றப்பட்டு வருகிறது என்று இந்த அணு உலையை பராமரித்து வரும் எக்செலான் என்கிற தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிகாகோ நகரில் இருந்து சுமார் 153 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பைரோன் பகுதியில் செயல்பட்டுவரும் அணுமின் நிலையத்திலுள்ள இரண்டாவது அணு உலையில் இந்தக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அணு உலைக்குச் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து, டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.டர்பைன் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீராவியில் குறைந்த அளவு கதிரியக்கத் தன்மை கொண்ட டிரிடியம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டிரிடியம் என்பது ஹைட்ரஜனின் கதிரியக்கம் கொண்ட வடிவமாகும்.
“வழக்கத்துக்கு மாறான சம்பவம்” என்று அமெரிக்க அணுஉலை ஒழுங்காற்று ஆணையம் இதைக் குறிப்பிட்டுள்ளது. அணுஉலை விபத்து தொடர்பான நான்கு வகையான அவசர நிலைகளில் இது கடைசி வகை என்றும் வரையறுத்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தால் பெரிய அளவில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றாலும், அணு உலையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அணு உலையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்று அணுஉலையைப் பராமரிக்கும் எக்செலான் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதனிடையே அணுமின் நிலையத்தில் ஸ்விட்ச்கள் உள்ள அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின் உலையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக எக்செலான் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
டர்பைன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், அதை குளிர்விக்க வேண்டியது அவசியம் என்று அணு ஒழுங்காற்று ஆணைய செய்தித் தொடர்பாளர் விக்டோரியா மிட்லிங் தெரிவித்தார்.இந்தச் சம்பவம் குறித்து அணு உலை அமைந்திருக்கும் ஓஜில் மாவட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதாக அப்பகுதி அவசரநிலை மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் கேண்டேஸ் ஹம்ப்ரே கூறினார். பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தாலி கப்பலை மீட்கும் பணி கைவிடப்பட்டது.
இத்தாலியின் ரோம் அருகே உள்ள தீவு ஒன்றில் 4200 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடந்த 14ம் திகதி தரை தட்டி மோதியதில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மொத்தம் 17 பேர் பலியாகினர், 15 பேரை இன்னும் காணவில்லை. இதில் காணாமல் போனவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இத்தாலி தீயணைப்பு படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் தற்போது மீட்பு பணி கைவிடப்பட்டு விட்டதாக இத்தாலி தீயணைப்பு படை அறிவித்துள்ளது.தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் கப்பல் மெல்ல மெல்ல நகர்ந்து வருவதாகவும், இதனால் வீரர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி மீட்பு பணியை கைவிட்டு விட்டதாக கூறியுள்ளனர். ஆனாலும் தூரத்தில் இருந்து கருவிகளை கொண்டு தேடும் பணி தொடர்ந்து நடக்கும் என்று கூறினார்கள்.அதே நேரத்தில் கப்பலை முழுமையாக மீட்கும் பணியும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்த பணி முடிய 10 மாத காலம் வரை ஆகலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தி இல்லை: ஐ.நா சபை.
உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உலகில் உணவின் இருப்பு இல்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள், திட்ட அமலாக்கத்துக்கு இடையிலும் உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி முன்னேறியுள்ள நிலையிலும், மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. மக்கள்தொகைக்கு ஏற்ப உலகின் உணவு இருப்பு இருப்பதில்லை.அதாவது இன்றைய மக்கள்தொகைக்கு தேவையான உணவு உற்பத்தி, கையிருப்பு ஆகியவை தற்காலிகமானவை. ஆனால் உணவு உற்பத்தியில் நீடித்த நிலைத்தன்மையுடன் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைக்கவில்லை.இப்போதைய உலக வளர்ச்சி முறை நிலையற்றதன்மை கொண்டதாக இருக்கிறது. அதிலிருந்து மாற சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.
இப்போது உலகின் பல பகுதிகளில் நிலவும் பொருளாதார பிரச்னைகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக தொடங்க சிறந்த வாய்ப்பை அளித்துள்ளன.கடந்த 1990ம் ஆண்டில் சர்வதேச அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்தவர்கள் எண்ணிக்கை 46 சதவீதமாக இருந்தது. அது இப்போது 27 சதவீதமாக குறைந்துள்ள போதிலும், நிலையான உணவு பாதுகாப்பை உறுதி செய்யாமல் இதை தக்க வைக்கவோ, மேலும் குறைக்கவோ முடியாது.
தீவிரவாத தாக்குதல்: ஏமன் அமைச்சர் உயிர் தப்பினார்.
ஏமன் நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.ஏமன் நாட்டின் தகவல்தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் அலி அல் அம்ரானி.ஏமன் தலைநகர் சனாவில் நேற்று அமைச்சரவை கூட்டம் முடிந்து காரில் புறப்பட தயாரான போது தீவிரவாதிகள் அவரது காரை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர்.
இந்த தாக்குதலில் அம்ரானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார் என அவரது உதவியாளர் தெரிவித்தார். அமைச்சர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை.இதற்கிடையில் தெற்கு ஏமனில் நேற்று தீவிரவாதிகள் சென்ற 2 வாகனங்களை குறி வைத்து அமெரிக்க போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்களில் 4 பேர் ஏமனில் செயல்பட்டு வரும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் ஆவர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் இறக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறினர். இந்த இரு சம்பவங்களும் ஏமன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி.
கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுமையான பனிப்பொழிவுக்கு இதுவரை பெண்கள், முதியோர் உட்பட 66 பேர் பலியாகி உள்ளனர்.உக்ரைன் நாட்டில் தான் பனியின் பாதிப்பு அதிகம் உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தெருக்களில் வசிப்பவர்கள்.
கடும் பனிப்பொழிவையொட்டி, தெருக்களில் வசிக்கும் மக்களுக்காக 1500 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு சூடான டீ, உணவு வழங்கப்படுகிறது. 600 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.போலந்து நாட்டில் குளிருக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பலர் புளு, நிமோனியா காய்ச்சலால் இறந்துள்ளனர். ருமேனியாவில் 8 பேரும், பல்கேரியாவில் 5 பேரும், செர்பியாவில் 2 பேரும் குளிருக்கு உயிரிழந்துள்ளனர்.
சாலைகள், தண்டவாளங்களில் பனி படர்ந்து கிடப்பதால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மின்சார சேவை பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பனியில் சிக்கிய வாகனங்களை இராணுவ வீரர்கள் மீட்டு வருகின்றனர். கடும் பனி மூட்டம் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலேயே கனடாவின் ஓய்வுகால திட்டங்களே தான் சிறப்பானவை.
கனடாவில் ஓய்வுக்கால திட்டங்கள் சிறப்பாகவே உள்ளன என்று பொதுத்துறைக் கொள்கை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கனடாவின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஓய்வூதியச் சீர்திருத்தங்களை கடுமையாக எதிர்த்தனர்.
இதனால் இதற்குப் பதிலளிக்கும் வகையில் கேல்கரி பல்கலைக்கழகத்தின் பொதுத்துறைக் கொள்கைப் பள்ளியின் தலைவரான ஜேக் மின்ட்ஸ் தலைமையில் கனடாவின் ஓய்வுதியக் கொள்கையை ஆராய்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டது.அதில் ஐரோப்பிய நாடுகளை விட கனடாவின் ஓய்வூதியத் திட்டங்கள் மிக சிறப்பானவையே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இத்திட்டம் கனடாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய குடியரசுக்கட்சியின் இடைக்காலத் தலைவரான நிக்கோல் டர்மெல்(Nicole  Turmel) நம்முடைய முதியவர்கள் தங்களைப் பற்றி மட்டுமல்ல தங்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் பற்றியும் கவலைப்படுகின்றனர் என்றார்.ஓய்வு பெறும் வயதை 65 இல் இருந்து 67 ஆக உயர்த்தலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2030ம் ஆண்டில் முதியவர் பாதுகாப்புத் திட்டத்துக்கான செலவு 108 பில்லியனைத் தொடும் என்று அரசாங்கம் தெரிவித்தது.
இப்போது முதியவர்களுக்கான செலவு வெறும் 36.5 மில்லியன் மட்டுமே ஆகும். இந்தச் செலவு அதிகம் என்று கூறிய ஆளுங்கட்சிக்கு 2030ல் அரசு வருமானமும் அதிகமாகியிருக்கும் என்று எதிர்க்கட்சிகள் பதிலளித்தனர்.குறைந்த வருமானம் உடையவர்கள் முதியவரான பிறகு பல சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்கள் அரசு உதவியை எதிர்பார்த்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களின் ஓய்வுக்காலத்துக்காகச் சேமிக்கப் பழக வேண்டும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சிரியா மீது உடனடி நடவடிக்கை தேவை: வெஸ்ட்டர்வேலே வலியுறுத்தல்.
ஐ.நா பாதுகாப்புக் குழு சிரியா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேணடும் என ஜேர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ குஸ்டர்வேலே தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சிரியாவில் அப்பாவி பொதுமக்களின் நிலைமை மிகவும் மோசமாகியிருப்பதாகவும், முன்பு எப்போதும் இல்லாதபடி கொடுமையாக உள்ளதென்றும் கூறினார்.
மேலும் தற்போது சிரியாவில் ஒரு நாடகம் அரங்கேறி இருப்பதாகவும், இதனை உடனே ஐ.நா பாதுகாப்புக் குழு தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.திங்கட்கிழமை மட்டுமே 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் அப்பாவி பொதுமக்கள். ஹோம்ஸ் நகரத்தின் மையப்பகுதியில் இந்தக் கொடுமைச் சம்பவம் நடைபெற்றதாக சிரியாவில் தங்கியிருக்கும் மனித உரிமையாளர் ஒருவர் கூறினார்.
சிரியாவின் ஜனாதிபதி அசாத் உடனே தன்பொறுப்புகளைத் துணை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துவிட்டு பதவி விலக வேண்டும் என்று ஒரு தீர்மானம் வரையறுக்கப்பட்டது.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் 5400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இனப்படுகொலை சட்டம்: துருக்கி கடும் எதிர்ப்பு.
ஆர்மீனிய இனப்படுகொலையை மறுப்பவருக்குத் தண்டனை வழங்கும் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரான்சின் செனட் சபை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.ஆனால் இந்த எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டு சர்சோசி தலைமையிலான அரசு இச்சட்டத்தை இரண்டு வாரத்துக்குள் அமுல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
துருக்கியின் பிரதமர் எர்டோகன் இந்தச் சட்டம் இனப்பாகுப்பாட்டிற்கும், இனவாதத்திற்கும் நிகரானது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் இவர் கூறுகையில், இஸ்லாமிய அரசு இச்சட்டத்திற்காகவே பிரான்ஸ் அரசைத் கடுமையாக தண்டிக்கும் என்று கூறினார்.ஆர்மீனியர் பிரான்சின் புதிய சட்டத்தை ஆதரிக்கின்றனர். அதன் ஜனாதிபதி செர்ஸ் சர்கிஸியான் சர்கோசிக்கு எழுதிய கடிதத்தில் பிரான்ஸ் தன் பெருமையையும், ஆற்றலையும் திரும்பவும் உறுதி செய்துள்ளது. மனித மதிப்புகளின் மீதுள்ள பற்றினை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் எதிர்வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவே போட்டியிடுகிறார்.குடியரசு கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் தெரிவு நடைபெற்று வருகிறது.இக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் செல்வாக்கை அறிய ஒவ்வொரு மாகாணத்திலும் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி உட்பட 12க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். பல மாகாணங்களில் ரோம்னி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.எனவே தேர்தலில் மிட் ரோம்னி வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜென்டினாவுடன் மோதல்: இங்கிலாந்து போர்க்கப்பல் பாக்லாந்துக்கு விரைவு.
அர்ஜென்டினாவுக்கு அருகே இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான பாக்லாந்து தீவு உள்ளது. இந்த தீவுக்கு உரிமை கொண்டாடி அர்ஜென்டினாவும், இங்கிலாந்தும் சண்டையிட்டு வருகின்றன.கடந்த 1982ம் ஆண்டு அர்ஜென்டினா பாக்லாந்து தீவை கைப்பற்றி கொண்டது. இதனால் இங்கிலாந்து தாக்குதல் நடத்தி அந்த தீவை மீட்டது.சமீபகாலமாக அர்ஜென்டினா மீண்டும் பாக்லாந்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து- அர்ஜெண்டினா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அர்ஜென்டினா திடீரென தாக்கி விடக்கூடாது என கருதி இங்கிலாந்து பாக்லாந்தில் படையை குவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எஸ் டான்ப்லெஸ் பாக்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர நீர் மூழ்கி கப்பல்களும் அங்கு சென்றுள்ளன.அர்ஜென்டினாவுடன் மோதல் காரணமாகத் தான் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, வழக்கமான ரோந்து பணிக்காகத் தான் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது என்று பதிலளித்தனர்.
அமெரிக்காவில் ரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சா செடிகள்.
எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிமோதெரபி சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோருக்கு பசி எடுப்பதற்கான மருந்து கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.இது பரவலாக பயன்படுத்தப்படும் போதை மருந்து என்பதால் கஞ்சா பயிரிட, விற்க, வாங்க, வைத்திருக்க, பயன்படுத்த பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன.
அமெரிக்கா உட்பட சில நாடுகள் பிரத்யேகமாக லைசன்ஸ் பெற்று மருந்துக்காக சிலர் வளர்த்து வருகின்றனர். வளர்க்கப்படும் இடம் தெரிந்தால் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், போதை விரும்பிகளால் ஆபத்து நேரிடும் என்பதால் மிகமிக ரகசியமாகவே பயிரிடுகின்றனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஓக்லேண்ட் நகரில் வெளியுலகுக்கு தெரியாமல் ரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சா பண்ணையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஓக்லேண்ட் நகரில் ஒரு வீட்டின் உட்புற தோட்டத்தில் இத்தோட்டம் உள்ளது. சூரிய ஒளிக்கு வாய்ப்பு இல்லாததால், கண்ணை கூசும் பளிச் விளக்குகள் தோட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.ஆரம்பகால செடிகள், மொட்டு விடும் பருவம், அறுவடை பருவம் என பயிரின் பருவத்துக்கு ஏற்ப விதவிதமான விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மாத மின்கட்டணம் ரூ.2 லட்சம் ஆகிறதாம். ஏ.சி. வசதியும் செய்துள்ளனர்.
6-க்கு 6 அடி அளவுள்ள அறையில் 72 தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. தரத்துக்கு ஏற்ப ப்ளாக்பெர்ரி குஷ், ப்ளூ ட்ரீம், குஷ் பெர்ரி, எல்ஏ கான்பிடன்ஷியல் என பல்வேறு பெயர்களில் பயிரிடுகின்றனர்.அறுவடைக்கு பிறகு இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பெரும்பாலான மக்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.
ஈராக்கில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.
ஈராக்கில் பயங்கரவாத செயல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபட்ட 17 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இத்தகவலை அந்நாட்டு நீதித்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
இதேபோன்று கடந்த மாதம் 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் 51 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வரும் தலிபான்கள்: அமெரிக்கா குற்றச்சாட்டு.
தலிபான் இயக்கத்தின் தலைவர்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வலம் வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அமெரிக்க செனட் குழுக் கூட்டத்தில், அதன் துணைத் தலைவர் சக்ஸ்பி கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்து பேசிய அந்நாட்டின் புலனாய்வு முகமையின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறியதாவது, பாகிஸ்தானுடனான உறவு சவாலானதாக இருப்பினும், முக்கியத்துவம் வாய்ந்ததது.கடந்தாண்டு ஆப்கானிஸ்தானின் சில இடங்களில் இருந்து தலிபான்கள் வெளியேற்றப்பட்டாலும் தலிபான் தலைவர்கள் தொடர்ந்து பாகிஸ்தானில் மகிழ்ச்சியாக பாதுகாப்புடன் வலம் வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டுப் படைகளின் வெற்றிக்கு பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது.மேலும் பாகிஸ்தானில் அல்கொய்தா அமைப்பின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் மறைந்திருந்தபடியே தாக்குதல் நடத்துவதே அந்த அமைப்பின் திட்டம்.
அல்கொய்தாவுக்கு எதிரான பாகிஸ்தான் இராணுவத்தின் நடவடிக்கையானது வெளிநாடுகளின் இராணுவ நடவடிக்கையைவிட மிகக் குறைவானது.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா பேருதவியாக உள்ளது. எனவே இந்தியாவை தனது முக்கிய எதிரியாக தொடர்ந்து பாகிஸ்தான் கருதி வருகிறது என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF