Saturday, November 5, 2011

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்?



ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது.ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுறுத்தினால் எந்த நடவடிக்கைக்கும் பிரித்தானிய இராணுவ உதவியை அமெரிக்கா பெறும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள இராணுவ அதிகாரிகள் பிரித்தானிய கப்பல்கள், டொமாஹாவ்க் ஏவுகணை பொருத்தப்பட்ட நீர்மூழ்கிகளை எதிர்வரும் மாதங்களில் எங்கு நிலைகொள்ளச் செய்வது சிறப்பானது என ஆராய்ந்துவருவதாக டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.அதேவேளை இந்து சமுத்திரத்திலுள்ள பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள தீவான டியாகோ கார்ஸியாவிலிருந்து தகர்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அனுமதி கோரும் என பிரித்தானிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அத்தீவில் கடற்படைத் தளமொன்றை கொண்டுள்ள அமெரிக்கா அதை முந்தைய மத்திய கிழக்கு மோதல்களின் போது பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தாக்குதலொன்றை ஆரம்பிப்பதற்கு பராக் ஒபாமா தயங்குவதாகவும் ஆனால் ஈரானிய அணுசக்தி திட்டங்கள் தொடர்பான அதிகரித்து வரும் பதற்றங்கள் இந்நிலையை மாற்றிவிடும் எனவும் பிரித்தானிய அரசாங்க மற்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சவூதி ராஜதந்திரியொருவர் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதிலும் வாஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை கடந்தி கொல்வதற்கு இடம்பெற்ற சதியிலும் ஈரான் பின்னணியில் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டுமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு மேற்குப்புறத்திலுள்ள ஆப்கானிஸ்தனரில் 98,000 அமெரிக்க துருப்பினர் உள்ளனர். கிழக்கிலுள்ள ஈராக்கில் 43,500 அமெரிக்கப் படையினர் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 10,000 பிரித்தானிய துருப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் தயார்.
இதேவேளை நேற்று வியாழக்கிழமை லிபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அலி அக்பர் சலாஹி, மேற்படி செய்திகள் குறித்து கூறுகையில், எந்த அச்சுறுத்தலையும் ஈரான் தண்டிக்கும் எனக் கூறினார்.
“சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதில் துரதிஷ்டவசமாக, அமெரிக்கா தனது மதிநுட்பத்தை இழந்துவிட்டது. அது பலத்தில் மாத்திரமே தங்கியள்ளது.
ஆம் நாம் மோசமானதை எதிர்கெர்ள தயாராகவுள்ளோம். ஆனால் ஈரானுக்கு எதிராக மோதலில் ஈடுபடுவற்கு முன் அவர்கள் இரு தடவை சிந்திப்பார்கள் என நம்புகிறோம்’ என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலாஹி கூறினார்.
ஈரான் எப்போதும் இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. எனவே இது எமக்குப் புதிதல்ல. எட்டு வருடங்களாக இஸ்ரேலின் அச்சுறுத்தல் குறித்து நாம் கேள்விப்பட்டுவருகிறோம்.
எமது நாடு ஐக்கியமான ஒரு நாடு. எமது படைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. எமக்கு இந்த அச்சுறுத்தல்கள் புதியவை அல்ல. எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது நாட்டை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என துருக்கிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF