Saturday, November 26, 2011

இன்றைய செய்திகள்.

சரத் பொன்சேகாவை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படாவிட்டால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த அச்சுறுத்தலை அமெரிக்கா விடுத்துள்ளதாக தெ ஐலன்ட் செய்திதாள் தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாகவே கருதுகிறது.இந்தநிலையில் வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு இலங்கையின் கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வாரம் 3 வருட சிறைத்தண்டனை விதித்தது.
இதனையடுத்து அமெரிக்க இராஜதந்திரி ஒருவருக்கும் இலங்கையின் உயர்தர அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.தமது நாடு இலங்கையில் நடத்திய ஆய்வு ஒன்றில் சரத் பொன்சேகா விடுவிக்கப்படவேண்டும் என்றே பெரும்பாலான பொதுமக்கள் விரும்புவதாக இந்த சந்திப்பின்போது அமெரிக்கா இராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பை வழங்கவேண்டும்.இல்லையேல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வரும் என்றும் அமெரிக்க இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.இலங்கையின் உயர் அமைச்சருடன் அமெரிக்க தூதர் பெற்றீசியா புட்டினியஸே இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடாகியிருந்தது.
எனினும் கடைசி நேரத்தில் அவரின் பிரதிநிதி ஒருவரே –ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உயர் அமைச்சரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்க இராஜதந்திரி, இந்த பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நகர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருப்தி கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் மிக பெரும் சவால் : மாதுலுவே சோபித தேரர்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய சவால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.நீதியை நிலை நாட்டுவதில் இன, மத பேதங்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சகல மக்களுக்கும் சுயாதீனமான முறையில் நீதி அமுல்படுத்தப்பட வேண்டும்.காவல்துறை சேவையில் உயர் பதவி முதல் கடை நிலை வரையில் அரசியல் தலையீட்டுடன் கூடிய நியமனங்களே மேற்கொள்ளப்படுகின்றன.தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை முடக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான குற்றச் செயல்களுடன் ஒப்பீடு செய்யும் போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடுகள் தொடர்ந்தும் புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணுகின்றது : ஜீ.எல்.பீரிஸ்.
சில நாடுகள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் உலக நாடுகள், ஈழக் கோட்பாட்டாளர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உள்ளிட்ட சகல விடயங்கள் குறித்தும் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.வெளிச் சக்திகளின் அழுத்தங்கள் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் சர்வதேச சமூகம் தொனிப்பொருளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து சில நாடுகள் பின்பற்றும் கொள்கைகள் ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் புலம்பெயர் மக்களை தனிமைப்படுத்த வேண்டுமென அரசாங்கம் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் : கோத்தபாய குற்றச்சாட்டு.
நாடடில் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முயற்சிப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சிகளுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ சில நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.
கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ள போதும், நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் செயற்படுகின்றனர்.லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச கல்வி நிலையத்தில் நடைபெற்ற தேசிய நல்லிணக்க மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போது பாதுகாப்புச் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல்வாதிகள் புலிகளுக்கு நிகரான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி வருகின்றனர். இவர்களினால் அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித அடிப்படையுமின்றி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.இலங்கை சுயாதீனமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் வெளிநாடுகளின் ஆலோசனைகள் அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் மருத்துவ சிகிச்சை குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனியார் வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் பி.டபிள்யு. கொடிப்பீலி தெரிவித்துள்ளார்.
கைதி ஒருவருக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதி அளிப்பது குறித்து சட்ட மா அதிபரிடம் அறிவுரை பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கமறியல் கைதியாக இருந்த காலத்தில் சரத் பொன்சேகா தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அண்மையில் மேல்நீதிமன்றம் பொன்சேகாவிற்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சரத் பொன்சேகாவிற்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பது குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை துரதிருஷ்ட நடவடிக்கைகளில் ஒன்று என்கிறார் கெஹெலிய.
இலங்கையில் மும்மொழிக் கொள்கையை பிரகடனப்படுத்துவது துரதிருஷ்ட நடவடிக்கைகளில் ஒன்று என தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையை  2012ம் ஆண்டில் மும்மொழி நாடாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதென அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் தலை விரித்தாடிய பயங்கரவாதம் தோற்கடித்த பின்னர் எடுக்கப்பட வேண்டிய துரதிருஷ்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இலங்கை மக்கள் மும்மொழிகளிலும் சரளமாக தொடர்புகொள்ள கூடிய வழிமுறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதியதையடுத்தே இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்ததாக அவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மும்மொழி இலங்கை அமுலாக்கலுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 10ஆண்டு கால தேசிய திட்டத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.1956ம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் சிங்களம் மட்டுமே நாட்டின் அரச கரும மொழி என்ற தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றினார்.
அக் கொள்கை பிரகடனத்தில் இருந்து வந்த நிலையிலேயே நாட்டில் யுத்தம் ஓய்ந்துள்ள இத் தருணத்தில் மக்களிடத்தில் மொழிப் பிரச்சினை காணப்படுவதனால் தனிச்சிங்களச் சட்டத்தை விடுத்து மும்மொழியிலும் மக்கள் சரளமாக தொடர்பு கொள்ளக் கூடியவகையில் அடுத்த ஆண்டில் இருந்து இந்த மும்மொழிக் கொள்ளைத் திட்டத்தை இலங்கை அரசு உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தனிச் சிங்களச் சட்டத்தை விடுத்து மும்மொழியும் அரச கரும மொழியாக பிரகடனப் படுத்தப்பட வேண்டியது துரதிருஷ்ட வசமான நடவடிக்கை என்ற கோணத்திலேயே அமைச்சர் கெஹெலிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 12 பேர் பலி.
இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலையினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக நாட்டின் தென் பகுதிகளில் கடுமையான காற்று வீசி வருவதாகவும் மீனவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்பகுதியில் கடலுக்கு சென்ற ஐந்து மீன்பிடிப் படகுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களில் சுமார் 700 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 
இந்நிலையில், சீரற்ற காலநிலையினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனநாயக நாடுகளின் வரிசையில் இலங்கை 109ஆவது இடம் -மங்கள சமரவீர.
இலங்கையில் சர்வாதிகார நிலைமை ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
ஜனநாயக நாடுகளின் வரிசையில் இலங்கை 109ம் நிலையை பிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இந்த வரிசையில் சிம்பாப்வே 136ம் நிலையை வகிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். பெஸ்னியா 77ம் நிலையையும், மலாவி 82ம் நிலையையும், நைஜீரியா 93ம் நிலையையும், கொங்கோ 97ம் நிலையையும் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார். லிபியாவின் சர்வாதிகார ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் உலக நாடுகளில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் பிரவாகம் உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 
பொதுநலவாய நாடுகள் அங்கம் வகிக்கும் அநேகமான ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் ஜனநாயக வழியைத் தெரிவு செய்துள்ளன என்றும் அரேபிய நாடுகளிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ருவண்டா போன்ற நாடுகளிலும் தற்போது ஜனநாயகப் பாதைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத்பொன்சேகாவின் ஆதரவாளருக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.
இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளரான, அங்கவீனமான முன்னாள் இராணுவக்கப்டன் ஒருவருக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை(25.11.2011) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் கப்டன் கயான் பிரசாத் குமார விதானகே எனும் இந்நபர் கடந்த ஜுலை 21ஆம்திகதி பொன்சேகா தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது சிறை அதிகாரிகளின் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாக கொழும்பு குற்றவியல் பிரிவினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் குற்றம் சுமத்தப்பட்டவரை பிணையில் விடுதலை செய்யதோடு, இவ்வழக்கு விசாரணையை மார்ச் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் 3 சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.
கொழும்பு - தூத்துக்குடி சேவையில் ஈடுபடும் கப்பலை தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.
கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுவந்த எம்.டி ஸ்கொட்டியா பிரின்ஸ் கபபலை கொழும்புத் துறைகத்தில் தடுத்துவைக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு 3இல் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எம்.ஏ. ராசிக் அன் கம்பனி லிமிட்டட் என்ற நிறுவனத்தினர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் தாம் இந்தக் கப்பலுக்கு 478,173.23 அமெரிக்க டொலர்களுக்கு எரிபொருள் வழங்கியதாகவும் அதற்குரிய பணத்தினை இந்தக் கப்பலை சேவையில் ஈடுபடுத்தியோர் வழங்கவில்லையென்றும் இந்தப் பணத்தினைப் பெற்றுத்தர வேண்டுமெனக் கோரியே  இந்த வழக்கினை குறித்த நிறுவனம் தாக்கல் செய்திருந்தது.இந்தக் கப்பல் சேவையினை மும்பையிலுள்ள பிளமிங்கோ நிறுவனமே நடத்தி வந்தது. இந்த நிறுவனத்துக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிபதி டபிள்யூ.பி.டி.எல். ஜயதிலக முன்னிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிரேஷ்ட சட்டத்தரணி கே. பூபாலசிங்கத்தின் அனுசரணையுடன் சட்டத்தரணி தமயந்தி பிரான்சிஸ் மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்தார்.மனுதாரர் தரப்பு வாதங்களை செவிமடுத்த நீதிபதி, குறித்த கப்பலை தடுத்துவைக்குமாறு துறைமுக அதிகாரசபைக்கு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையினை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். 
சரத் பொன்சேகாவை பலவீனப்படுத்தவே அரசாங்கம் கூடுதல் முனைப்பு-விக்கிலீக்ஸ் தகவல்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பலவீனப்படுத்த அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டியது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சிங்கள வாக்குகள் சிதறிக்கப்படலாம் என ராஜபக்க்ஷ சகோதரர்கள் கருதியதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
சரத் பொன்சேகா அமைதியான முறையில் பதவியை ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென்றே அரசாங்கம் விரும்பியதாக அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.எனினும், சரத் பொன்சேகா வேறு விதமாக சிந்தித்து தீர்மானம் எடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க உள்துறை திணைக்களம் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த ஆர்வம் காட்டியதா இல்லையா என்பது தெரியவில்லை என புட்டீனாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 
ராஜபக்க்ஷக்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த தகவல்களை சரத் பொன்சேகா திரிபுபடுத்தி வெளியிட்டாரோ தெரியவில்லை என புட்டீனாஸ் தெரிவித்திருந்தார். உண்மை நிலைமை எவ்வாறு இருப்பினும் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தும் விவகாரம் இலங்கை அரசாங்கத்தை பெரிதும் பாதித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 
2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து அமெரிக்கத் தூதரகம் குறிப்புக்களை அனுப்பி வைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் மாற்றம் ஜேர்மன், பிரான்ஸ் தலைவர்கள் விருப்பம்.
ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலும், பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியும் ஐரோப்பிய ஒன்றியம் உருவாவதற்கு காரணமான ஒப்பந்தங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றனர். இம்மாற்றத்தால் நம்பகத்தன்மையைத் திரும்பப் பெறும் என்று சர்கோசி நம்புகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றியத்திற்கு இன்று கிடைக்கும் வசைமொழிகள் ஒழிய வேண்டும் எனவும் மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.இரு தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்புக்கான அடித்தளத்தை செம்மைப்படுத்த விரும்புகின்றனர். ஒன்றியத்தின் மீது இருந்த நம்பிக்கை இன்று தொலைந்து போனதால் இன்றைய சூழ்நிலை மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தான் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க இருவரும் முனைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மாற்றங்களின் விபரம் குறித்து இரு தலைவர்களும் தெரிவிக்கவில்லை. டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாள் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திற்குப் பிறகு மாற்றங்களின் விபரங்களை வெளிவரும்.ஐரோப்பிய மைய வங்கியான ECB எவ்விதச் சார்பும் இன்றி தனித்து இயங்க வேண்டும் என்று தான் விரும்புவதாகத் தெரிவித்த மெர்க்கெல், ECB மீது கொண்ட நம்பிக்கையை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம் என்று உறுதிபடக் கூறினார்.
பிரான்ஸ், ஜேர்மன் தலைவர்கள் தாம் நடத்திய இந்தக் கூட்டத்திற்கு இத்தாலியின் புதிய பிரதமரான மரியோ மாண்ட்டியையும் அழைந்து இருந்தனர். இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும். இதன் கடன் நெருக்கடி ஐரோப்பாவின் மீது மிகப்பெரிய சுமையாக அழுத்துகிறது.பல ஆண்டுகளாக இத்தாலி தன் கடனைத் தீர்க்க அரும்பாடுபட்டு வருகிறது. இத்தாலி தன் மீது விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது குறித்து மெர்க்கெல் பாராட்டினார். மரியோமாண்ட்டி, “கடுமையான பொதுநிதி வரையறைக்குள் யூரோ பத்திரங்களின் விற்பனை பலன் அளிக்கும்” என்றார், ஆனால் மெர்க்கெல் அதனை மறுத்தார்.
யூரோ பத்திரங்களின் விற்பனை கடனைக் குறைக்கும் என்று சிலரும், யூரோ மண்டலத்தின் உள்ள பதினேழு நாடுகளின் கடனையும் அதிகரிக்கும் என்று சிலரும் கூறுகின்றனர். எதிர்காலத்திற்கான பொதுநிதியை சிலரும் கூறுகின்றனர். எதிர்காலத்திற்கான பொதுநிதியை அதிகரிப்பது குறித்து எந்தத் திட்டமும் நடவடிக்கையும் இல்லாமல் பத்திரங்களை விற்பது பலன் தராது.இத்தாலியப் பிரதமரின் அழைப்பை ஏற்று சர்கோசியும், மெர்க்கெலும் உரோம் நகரத்திற்கு வருகை தந்து அந்நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி குறித்து பேச்சு வார்த்தை நடத்த இசைவு தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய ஜனாதிபதி மாளிகையை தரை மட்டமாக்கி விடுவோம்: வடகொரியா எச்சரிக்கை..
எங்களது கடல் எல்லைக்குள் உட்பட்ட பகுதியில் ஒரு குண்டு வெடித்தால் கூட தென் கொரியா ஜனாதிபதி மாளிகையை தரை மட்டமாக்கி விடுவோம் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. யெயோன்பியோங் தீவு சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதாகக் கூறி இரு நாடுகளுமே அதற்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
கடந்தாண்டு நவம்பரில் யெயோன்பியோங் என்ற தீவில் வட கொரியாவைச் சேர்ந்த கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தென் கொரியா கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன் இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்தனர்.இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்புக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தின் முதலமாண்டு நினைவு தினத்தையொட்டி தென் கொரிய கடற்படையினர், யெயான்பியோங் தீவுப் பகுதியில் நேற்று முன்தினம்(23.11.2011) போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர்.போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர் ஆகியவற்றை ஏவி தென் கொரிய ராணுவத்தினர் பயிற்சி மேற்கொண்டனர். இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட கொரியா மக்கள் ராணுவத்தின் தலைமை கமாண்டர் கூறுகையில், எங்கள் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தென் கொரியா ராணுவத்தினரின் ஒரு குண்டாவது வந்து விழுமானால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதற்கு பதிலடியாக தென் கொரியாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தரை மட்டமாக்குவோம். கடல் நெருப்பு என்ற பெயரில் எங்களின் தாக்குதல் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றார்.இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையால் அந்த பகுதியில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் பயங்கர சூறைக்காற்று: விமான நிலையத்தின் கூரை பறந்தது.
சீனாவில் வீசிய பயங்கரமான சூறைக்காற்றில் விமான நிலையத்தின் கூரை பறந்தது. எனினும் இந்த சம்பவத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை.சீனாவின் பீஜிங் நகரில் கடந்த 23ம் திகதி பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் பீஜிங் விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தின் கூரை பறந்து சென்று ஓடுபாதையில் விழுந்தது.
கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியையொட்டி இந்த கூரை வேயப்பட்டது. பிரிட்டன் கட்டட கலை வல்லுனர் நார்மன் போஸ்டர் இதை வடிவமைத்திருந்தார்.இந்த சம்பவம் நடக்கும் போது அந்த பகுதியில் விமானங்கள் ஏதும் இல்லாததால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.
தற்பொழுது இந்த கூரையை பழுது பார்க்கும் பணி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே விமான நிலையத்தில் 200 சதுர மீட்டர் கூரை காற்றால் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.இரண்டு முறை இந்த கூரை சேதமடைந்து விட்டதால் வேறு கூரை வேயலாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மியான்மர் நாட்டில் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றம்.
மியான்மர் நாடாளுமன்றத்தில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதா முதன் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.மியான்மரில் கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்து வந்தது. இந்த ஆட்சியில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு எதிராக “காவிப் புரட்சி” என்ற தலைப்பில் புத்த துறவிகள் போராட்டம் நடத்தினர். இவர்கள் ராணுவ ஆட்சியாளர்களால் அடித்து விரட்டப்பட்டனர்.மியான்மர் அரசின் இந்த போக்கை கண்டித்து சர்வதேச நாடுகள் மியான்மரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இதனால் மியான்மர் அரசு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ராணுவ ஆதரவாளர்கள் தான். பல உலக நாடுகள் மியான்மர் அரசு நடத்திய இந்த தேர்தலை ஏற்கவில்லை.
உலக நாடுகளின் நடவடிக்கைக்கு பயந்த மியான்மர் அரசு சிறிது, சிறிதாக சீர்திருத்த நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக போராட்டங்களை நடத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அயே மாவுங் கூறியதாவது: நாட்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் வேகமாக துவக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை போராட்டம் நடத்த அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்படி பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தலாம். போராட்டம் நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
போராட்டத்தின் போது கொடிகளை எடுத்துச் செல்லவும் அனுமதி உண்டு. அதேநேரத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, மருத்துவமனைகளில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை.ஆனாலும் இந்த மசோதாவுக்கு மியான்மர் ஜனாதிபதி தியென் சென்னிடம் இன்னும் ஒப்புதல் பெறவில்லை. அவர் கையெழுத்திட்ட பின் இந்த மசோதா அமுலுக்கு வரும். இவ்வாறு அயே மாவுங் கூறினார்.
போதை பொருள் கடத்தல் கும்பல்களிடையே மோதல்: 17 பேர் உடல் கருகி பலி.
மெக்சிகோ நாட்டில் இரண்டு வாகனங்களில் 17 பேர் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் அன்டோனியோ ரொசேல்ஸ்- சினலோவா பகுதி சர்வதேச போதை கடத்தல் கும்பல்களின் சொர்க்கமாக உள்ளது. இங்கிருந்து அண்டை நாடான அமெரிக்காவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.கடந்த 2006ம் ஆண்டு முதல் போதை கடத்தல் கும்பல்களுக்கிடையே நடக்கும் சண்டையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் அன்டோனியோ ரொசேல்ஸ் பகுதியில் இரண்டு வாகனங்கள் எரிந்த நிலையில் கிடந்தன. அந்த வாகனங்களில் 17 பேர் கருகிக் கிடந்தனர்.இவர்களில் சிலரது கைகள் விலங்கிடப்பட்டிருந்தன. இந்த சம்பவங்கள் போதை கடத்தல் கும்பல்களிடையே நடந்த சண்டையின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சினலோவா மாகாணத்தின் கவர்னர் மரியோ லோபஸ் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராயும் முயற்சியில் அமெரிக்கா.
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா என்பதை ஆராய்வதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.அமெரிக்கா வைக்கிங் திட்டம் மூலம் இரண்டு முறை செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியது. அப்போது செவ்வாயில் பாறை படிமங்கள் உள்பட விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.
அமெரிக்க விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய அட்லாஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை ரூ.12,500 கோடி(இந்திய ரூபாய்) செலவில் உருவாக்கினர்.இந்த விண்கலமானது கென்னடி விண்வெளி மையத்தின் கபே கனவெரல் விமானப்படை தளத்தில் இருந்து சனியன்று(26.11.2011) காலை 5 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது.
லிபியாவிலிருந்து நாடு திரும்பிய கனடா ராணுவத்தினற்கு பாராட்டு.
லிபியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பின்பு நாடு திரும்பிய கனடா வீரர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தன் மனைவி லாரீன் ஹார்ப்பருடன் கலந்து கொண்டார். கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் மெக்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பெயர்டு, லிபியாவுக்கான கனடா தூதர் சாண்ட்ரா மெக் கார்டெல் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்தினர்.
லிபியாவின் வெற்றிக்குக் காரணமாய் இருந்து அங்கு சென்று திரும்பிய போர் விமானங்கள் வானத்தில் பறந்தன. இந்த விமான அணிவகுப்பு அங்கு வந்தவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
CC-17 குளோப்மாஸ்டர், CC – 140 ஔரோரா, CC – 130J ஹெர்குலிஸ், CC – 130 ஹெர்குலிஸ் டேங்கர், CC – 150 போலாரிஸ், ஏழு CF – 18 ஜெட் விமானங்கள் மற்றும் CH – 124 கடலிரசு ஹெலிகாப்டர் ஆகியன இந்த விமான அணிவகுப்பில் கலந்து கொண்டன.கடாபியின் இராணுவத்தை வீழ்த்த கனடா இராணுவம் முழுவேகத்துடன் போரிட்டது. இந்த இராணுவப்பணிக்குத் தலைமை தாங்கிய லெப்டினட் கர்னல் சார்லஸ் பூச்சார்டு தான் மொத்த நேட்டோ படைகளையும் வழி நடத்தினார். இவருக்கு இவ்விழாவில் மெரிட்டோரியஸ் ஸெர்விஸ் க்ராஸ் என்ற விருது வழங்கி கௌரவித்தனர்.
புலம்பெயர்ந்தோரால் பிரிட்டனில் மக்கள் தொகை அதிகரிப்பு.
பிரிட்டனில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் எண்ணிக்கை பெருகுவதால் மக்கள் தொகை இன்னும் 25 ஆண்டுகளில் 77 பில்லியனாகப் பெருகும் என தேசியப் புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.இப்போது வந்து கொண்டிருக்கும் அதே எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோர் இனியும் பிரிட்டனுக்குள் வந்து கொண்டிருந்தால் இன்னும் 16 பில்லியனாக மக்கள் தொகை உயரும்.
பிறப்பு விகிதமும் வாழ்நாளும் பெருகுவதால் 2035ஆம் ஆண்டு 650,000 மக்களுக்கு பிரிட்டனில் குடியிருக்க இடம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலை வந்துவிடும்.இதனால் அதிகரிக்கப் போகும் எழுபது பில்லியன் மக்களுக்கு வீடு, போக்குவரத்து, கல்வி, உடல்நலம், மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்து வசதிகளையும் அரசு வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளில் அரசு இறங்க வேண்டும்.
2035ஆம் ஆண்டு 77,746,000 ஆகும் மக்கள் தொகை 2060ஆம் ஆண்டு 95 பில்லியனாகி விடும். அப்போது ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நாடான ஜேர்மனியைக் காட்டிலும் பிரிட்டனின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்.ஆனால் பிரிட்டனின் நில அளவு ஜேர்மனியை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நூறு ஆண்டுகளில் 137 பில்லியன் என்பது ஏறத்தாழ இரட்டிப்புத் தொகையாகும். கடந்த நூறு ஆண்டுகளில் மக்கள் தொகை 50 சதவீதமே உயர்ந்துள்ளது.
புலம்பெயர்ந்தோராக வருபவர் ஒருவரைக் கூட பிரிட்டனுக்குள் அனுமதிக்கவில்லை என்றால் மக்கள் தொகையின் அளவு எழுபது பில்லியனாக உயராது. பிரிட்டனில் குழந்தை பிறப்பும் வாழ்நாள் அதிகரித்தால் கூட 2035ஆம் ஆண்டில் 65,740,000 ஆகவே இருக்கும். இதுவும் 2110ஆம் ஆண்டில் 58 பில்லியனாகக் குறைந்துவிடும்.
புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100,000 ஆக குறைத்தால் இந்த பிரச்னை இருக்காது. சில ஆராய்ச்சியாளர் கருதுவது போல 150,000 ஆக்கினால் கூட சமாளித்துவிடலாம்.புலம்பெயர்ந்தோர் நிலைமையைக் கண்காணிக்கும் சர் ஆண்டு ரூ கிரீன் என்பவர் இதுகுறித்து கூறுகையில், தேசியப் புள்ளியியல் துறையின் தகவலின்படி மக்கள்தொகை பெருகாமல் இருக்க ஆண்டுக்கு 40,000 பேரை பிரிட்டனுக்குள் அனுமதிக்கலாம் என்றார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டி: பிராங்கோய்ஸ் பெய்ரோ அறிவிப்பு.
ஜனநாயக இயக்கக் கட்சியைத் தோற்றுவித்தவரும் முன்னாள் கல்வி மந்திரியுமான பிராங்கோய்ஸ் பெய்ரோ 2012ஆம் ஆண்டில் நடக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இவரது போட்டியால் தற்போதைய ஜனாதிபதி சர்கோசியின் வாக்குகள் குறையும். பிராங்கோய்ஸ் பெய்ரோ எதிர்வரும் டிசம்பர் மாதம் தன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார்.2002ம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மையக் கட்சிகளைச் சார்ந்து இருந்தார். அப்போதைய அரசில் கல்வி அமைச்சராக விளங்கினார். பின்பு DMP என்ற புதுக்கட்சியைத் தொடங்கினார்.
தற்பொழுது TFI தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இன்னும் ஐந்து ஆண்டுகள் இந்த நாட்டை சர்கோசியிடம் விட்டு வைக்கக் கூடாது. அதனால் நானே ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு சர்கோசியைத் தோற்கடிப்பேன் என்றார்.2012ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் இவருக்கு 7 சதவீதமும், சர்கோசிக்கு 26 சதவீதம், பிராங்கோய்ஸ் ஹோலண்டேக்கு 30 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவர் சர்கோசியின் UMP கட்சியின் வாக்குகளைப் பிரிக்கலாம் என்று கூறும் அரசியல் நோக்கர்கள் புலம்பெயர்தல் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் சர்கோசி காட்டி வரும் கடுமையான பழமைவாதப் போக்கில் அதிருப்தியுற்ற அவரது ஆதரவாளர்கள் இனி வரும் 2012ஆம் ஆண்டு தேர்தலில் பெய்ரோவுக்கு வாக்களிக்கக் கூடும் என்று வாக்குகள் பிரிவுதற்கான காரணத்தையும் எடுத்துரைக்கின்றனர்.
ஜேர்மனியில் நவீன நாஜித் தீவிரவாதி கைது.
நவீன நாஜி இயக்கத்தைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதியை ஜேர்மன் காவல்துறை அண்மையில் கைது செய்தது. இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களையும் தேடி வருகிறது.
ஜேர்மனி காவல் துறையினர், பிராண்டென்பர்க் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள போட்ஸ்டேம் மாவட்டத்தின் மிட்டெல்மார்க் என்ற ஊரில் வியாழக்கிழமையன்று(24.11.2011) 32 வயதுள்ள ஆண்ட்ரெ E என்ற இளைஞரைக் கைது செய்தனர்.இவன் நவீன நாஜிகளின் தேசிய சோசலிச ரகசிய இயக்கமான NSU இயக்கத்தை சேர்ந்தவன். தான் கொலை செய்த ஒன்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் ஒரு பெண் பொலிஸ் பற்றி பெருமையாகச் சித்தரிக்கும் ஒரு பிரச்சாரக் குறும்படத்தை 2007ஆம் ஆண்டில் தயாரித்து இருந்தான்.
மேலும் ஆண்ட்ரெ தனக்கும் தன் மனைவிக்கும் உரிமையான ரயில்வே சலுகைக்கட்டண அட்டைகளை சந்தேகிக்கப்பட்ட தீவிரவாதிகளிடம் கொடுத்திருந்தான். இவனுக்கு 2003ஆம் ஆண்டு இருந்து நவீன நாஜி இயக்கத் தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.தீவிர வலது சாரிச் சிந்தனையுடைய NSU என்ற நவீன நாஜி இயக்கத்தைக் குறித்து இதுவரை எப்படி காவல் துறை அறியாமல் இருந்தது என்று ஜேர்மன் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர்.
5 ஆயிரம் விளக்குகள் கொண்டு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட ஒளிப்படைப்பு.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தின் தோட்டம் முழுவதும் 5 ஆயிரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. இங்கிலாந்தின் பாத் நகரில் உள்ள ஹால்பர்ன் அருங்காட்சியகம் இதை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தது.
அருங்காட்சியகத்தின் முன் பகுதியில் உள்ள தோட்டத்தை மின்விளக்குகள் அமைத்து அலங்காரிக்கும் பொறுப்பை ப்ரூஸ் முன்ரோ என்ற கலைஞரிடம் ஒப்படைத்தது.இதற்காக கோரைப் புற்கள் போல மெலிதாக அக்ரிலிக் தண்டுகள் மற்றும் அதன் மேல் பகுதியில் பொருத்த கண்ணாடி பலூன்களை உருவாக்கினார் ப்ரூஸ்.
ஆப்டிகல் பைபர் இழைகளும் அதில் பொருத்தப்பட்டன. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட 5 ஆயிரம் விளக்குகளை தோட்டம் முழுவதும் நட்டார். பிரத்யேக புரொஜக்டரையும் அமைத்தார்.அதில் இருந்து வெளியேறும் பல வண்ண ஒளியை 5 ஆயிரம் விளக்குகளும் பிரதிபலிப்பதால் அருங்காட்சியக தோட்டம் ஜொலிக்கிறது. ஏராளமான மக்கள் இதை கண்டு ரசித்து வருகின்றனர்.
மைக்கேல் ஜாக்சனை கௌரவிக்கும் வகையில் ஆல்பம் வெளியிட முடிவு.
பொப் இசை சக்ரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் நினைவை போற்றும் வகையில் இம்மார்ட்டல் என்ற பெயரில் ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.அவர் பாடிய 20 பாடல்கள் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. வசீகரிக்கும் குரலாலும் அதிரடி நடனத்தாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன்.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் திகதி 50வது வயதில் இறந்தார். அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் இம்மார்ட்டல்(இறவாப் புகழ் கொண்டவன்) என்ற பெயரிலான ஆல்பம் வெளிவந்துள்ளது.அமெரிக்காவில் சோனி மியூசிக் குழுமத்தை சேர்ந்த எரிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. இதில் மைக்கேல் ஜாக்சனின் 20 பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன.
பிரபல பாடகர் ஜஸ்டின் டிம்பர்லே, பாடகி ரிஹானா ஆகியோரும் இதில் பாடியுள்ளனர். உலகின் பல நாடுகளிலும் கடந்த 18ம் திகதி தொடங்கி நேற்று வரை இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது.ஜாக்சன் இறந்த பிறகு வரும் 8வது ரீமிக்ஸ் ஆல்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 60 பாடல்களை ரீமிக்ஸ் செய்து நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எகிப்தின் புதிய பிரதமராக கமால் கான்சோரி நியமனம்.
எகிப்தில் 30 ஆண்டு கால முபாரக் ஆட்சி மக்கள் புரட்சி மூலம் வீழ்ந்ததை தொடர்ந்து ஆட்சி அதிகாரம் ராணுவ கவுன்சில் வசம் ஒப்படைக்கப்பட்டது.ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசியல் சட்டம் மாற்றப்பட்டத்தை தொடர்ந்து மீண்டும் கலவரம் வெடித்தது.
ராணுவ ஆட்சி பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய தாக்குதலில் 38 பேர் பலியாகினர். 2 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து ராணுவ கவுன்சில் அமைத்த மந்திரி சபை தனது பதவியை ராஜினாமா செய்தது.
இதனால் நாட்டில் குழப்ப நிலை ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதை தடுக்கும் வகையில் புதிய மந்திரி சபையை ராணுவ கவுன்சில் அமைக்கிறது. அதற்கு வசதியாக புதிய பிரதமராக கமால் கான்சோரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முபாரக் ஆட்சியின்போது கடந்த 1996 முதல் 1999-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தவர்.இவர் தலைமையில் விரைவில் புதிய மந்திரி சபை அமைக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலும் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டதற்கு ராணுவ ஆட்சியாளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF