Sunday, November 20, 2011

இன்றைய செய்திகள்.

கடற்படையை பலப்படுத்த இந்தியாவிடம் போர்க்கப்பல்களை கொள்வனவு செய்கிறது இலங்கை.
போர் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட போதும் கடற்படையைப் மேலும் பலப்படுத்தும் நோக்குடன் இந்தியாவிடம் இருந்து இரண்டு கரையோரப் பாதுகாப்புக்கான போர்க் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. காலியில் பாதுகாப்பு அமைச்சு நடத்திய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த கடற்படை அதிகாரிகளுடன், அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பான கேள்வி அறிவித்தல் சில மாதங்களுக்கு முன்னரே இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றும், எனினும் இந்தியத் தரப்பு இந்த விடயத்தை நகர்த்தும் வேகம் மிக மந்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.கப்பல்களை விற்பதற்கான அனுமதியை அமைச்சரவையிடம் இருந்து இந்திய அரசு பெறவேண்டி இருப்பதால் இந்தத் தாமதங்கள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
கடற்கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் பயங்கரவாதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக் கடற்படையின் பலத்தை மேலும் விருத்தி செய்ய வேண்டி இருக்கிறது என்றும் கூறும் கோத்தபாய, நட்பு நாடுகள் உதவினால் ஆழ்கடல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய கடற்கலங்களை இலங்கையால் பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தின் மொத்தப் பரப்பிலும், எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பு நடவடிக்கையில் இலங்கையால் பெருமளவு பங்களிப்பை வழங்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.எனினும் இது தொடர்பாக இந்திய தரப்புடன் பேசுவதற்குரிய தகுதிவாய்ந்த ஒரு உயர் அதிகாரியை குறித்த மாநாட்டிற்கு இந்தியா அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஸானா நபீக்கிற்கு சவுதியில் மன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம்.
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2005ம் ஆண்டு மே மாதம் நான்கு மாத சிசு ஒன்றை கொலை செய்த குற்றத்திற்காக ரிஸானாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரிஸானாவிற்கு மன்னிப்பு பெற்றுக் கொள்ளும் நோக்கில் உயர்மட்டக் குழுவினர் அண்மையில் சவுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, ரிஸானாவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.கொலையுண்ட சிசுவின் குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கைப் பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பெற்றோரிடமிருந்து மன்னிப்பு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சிசுவின் பாட்டனார் உள்ளிட்ட தரப்பினர் சாதகமான முறையில் பதிலளித்துள்ளதாகவும், மன்னிப்பு கிடைக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அரேபிய செய்தி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.இஸ்லாமிய ஷஹரிய சட்டத்தின் பிரகாரம் கொலையுண்ட சிசுவின் பெற்றோர் இருவரும் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே ரிஸானாவை காப்பாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரிஸானாவை விடுதலை செய்யும் முயற்சிகளில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய ரயில் பாதைகள் அமைக்க திட்டம்-போக்குவரத்து அமைச்சு.
புதிய ரயில் பாதைகள் அமைக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலும், பாணந்துறையிலிருந்து ஹொரணை வரையிலும், மாகோவிலிருந்து திருகோணமலை வரையிலும், மதவாச்சியிலிருந்து திருகோணமலை வரையிலும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரி வீ. ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
குருநாகலிலிருந்து ஹபரண ஊடாக தம்புள்ளவரைக்கும், வெல்லவாயவிலிருந்து பிபிலை ஊடாக பதுளை வரைக்கும் மேலும் இரு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த ரயில்வே அதிகாரி, போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதியமைச்சர் றோஹண குமார திசாநாயக்க ஆகியோரின் ஆலோசனைகளின் பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தங்கம் என கூறி உலோகத்துண்டுகளை விற்பனை செய்த நபர்கள் கைது!
தங்க முலாம் பூசப்பட்ட உலோக துண்டுளை தங்கம் என்று கூறி, விற்பனை செய்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர்கள் தங்க முலாம் பூசப்பட்ட 955 கிராம் நிறையடைய உலோக துண்டுளை ஆறு இலட்ச ரூபாவிற்கு காத்தான்குடியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
போலி நகைளை கொள்ளவனவு செய்த நபர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்டையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை சோதனையிட்​ட போது தங்க முலாம் பூசப்பட்ட மேலும் இரண்டு கிலோகிராம் உலோக துண்டுகளும் சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சந்தேக நபர்ளை இன்று பொலன்னறுவை மாவட்ட நீதவான் முன்னலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 18 சர்வதேச விமான நிறுவனங்கள் சேவையில்!- பசில் ராஜபக்க்ஷ.
இலங்கையில் 18 சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் சர்வதேச ஒத்துழைப்புகள் தொடர்பான பிரதியமைச்சர் இப்ராஹிம் இஸ்மையில் இப்ராஹிம் கடந்த 17 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் தன்னை சந்தித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார உறவுகளை விரிவுப்படுத்துவது தொடர்பில் ஆராய இரண்டு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.சுற்றுலாத்துறையை மேன்படுத்துவதன் மூலம் இரண்டு நாடுகளும் பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்  தென்னாப்பிரிக்க பிரதியமைச்சர் இதன் போது கூறியுள்ளார். 
ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட்டிருக்க வேண்டும்!கோதபாய கருதியதாக விக்கிலீக்ஸ் தகவல்!
இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டிருக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய கருதியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 
2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்க்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் இந்தத் தகவல்களை அனுப்பி வைத்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க நியாயமான மற்றும் தொழில்சார் தகுதியுடைய ஓர் அரசியல்வாதி எனவும் அவரே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருக்க வேண்டுமெனவும் கோதபாய கருதியதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு அஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது என ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் தெரிவித்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, தாம் ரணிலிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த நடவடிக்கைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் பொன்சேகாவும் ஜே.வி.பியுமே அவற்றுக்கு பொறுப்பு எனவும் ரணில், தம்மிடம் தெரிவித்ததாகவும் ஜே.வி.பி கட்சி மிகவும் ஆபத்தானது என கோதபாய எச்சரிக்கை விடுத்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கரு ஜயசூரிய தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்!- ஐ.தே.கவின் முன்னாள் உறுப்பினர்கள் கோரிக்கை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகி, அப்பதவியினை கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சியில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் எனவும் உடனடியாக கட்சி பொதுச் சபைக் கூட்டப்பட்டு தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய தலைமைத்துவம் எடுக்கும் தீர்மானங்களினால் கட்சி நாளுக்கு நாள் வீழ்ச்சிப் பாதையில் செல்வதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார். 
இலங்கை வரவுசெலவுத்திட்டம் 2012 - சம்பள உயர்வை விட செலவுகளை குறைப்பதே நோக்கம்!- பசில்.
இலங்கையில் நாளை 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிதியமைச்சர் என்ற வகையில் இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.இதன்போது சம்பள உயர்வுகளை காட்டிலும் வாழ்க்கை செலவுகளை குறைக்கும் திட்டங்களே உள்ளடக்கப்படவுள்ளன என்று அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வைத்தியர்கள் உட்பட்ட அரச சேவையினர் சம்பள உயர்வை கோரி வருகின்றனர்.இந்தநிலையில் அமைச்சர் பசில் ராஜபக்சவின் கருத்து, அரச சேவையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதேவேளை இலங்கையின் வரவுசெலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரில் செலவுகளை குறைக்கும் வகையிலேயே கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைத்து வரும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இன்னும் தவணை கொடுப்பனவுகள் கிடைக்கவேண்டியுள்ளன.எனவே அதனை நோக்காக கொண்டே 2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டமும் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துமிந்த சில்வாவை கைதுசெய்ய எவ்வித நடவடிக்கைகளும் இல்லை! ஆங்கில செய்தித்தாள்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் நீதிமன்றினால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைதுசெய்ய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று இலங்கையின் ஆங்கில செய்தித்தாள்கள் சுட்டிக்காட்டியுள்ளன.பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர, கடந்த ஒக்டோபர் 8 ஆம் திகதி முல்லேரியாவில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை தொடர்பின் சந்தேகநபரான துமிந்த சில்வா, தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தநிலையில் அவரை கைதுசெய்ய இன்டர்போலின் உதவியை இதுவரை இலங்கையின் பொலிஸார் நாடவில்லை என்று செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.கடந்த 15 ஆம் திகதி, நடைபெற்ற இந்தக்கொலை தொடர்பான விசாரணையின் போது, துமிந்த சில்வாவை கைதுசெய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அத்துடன் இச்சம்பவம் தொடர்பான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரணில் பாதாள உலகக் குழு உறுப்பினருடன் லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தினார்!– மேர்வின்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருடன் லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.களனி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான குடு லால் என்பவருடன் ரணில் நான்கு மணித்தியாலயம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.அதன்போது என்ன விடயம் பேசப்பட்டது என்பதனை ரணில் விக்ரமசிங்க அம்பலப்படுத்த வேண்டும்.ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகயை ஈடு செய்ய போதைப் பொருளைக் கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதா? அல்லது சஜித் பிரேமதாசவை தீர்த்துக் கட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடு லால் என்பவரை தாம் பாதாள உலகக் குழு உறுப்பினராக கருதுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.குடு லால் என்பவருக்கும் ரணிலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.போதைப் பொருள் வர்த்தகர் என ஐக்கிய தேசியக் கட்சியினால் மேடைகளில் முத்திரை குத்தப்பட்ட நபருடன் கட்சித் தலைவர் என்ன பேசினார்?
இது தொடர்பில் ரணில் விளக்கமளிக்க வேண்டும் அல்லது கை விலங்குடன் என்னிடம் வரவேண்டும். நான் அவரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, குடு லால் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.குடு லால் லண்டனுக்கு தப்பிச் செல்வதற்கு சகல ஏற்பாடுகளையும் அமைச்சர் மேர்வின் மேற்கொண்டதாக கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனத்தைச் சேர்ந்தவன் என்றவகையில் வேதனைப்படுகிறேன்! - அர்ஜுன ரணதுங்க.
சிங்கள இனத்தவர் என்ற வகையில் நாம் எவ்வளவு மிலேச்சதனமானவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உதயமாகியுள்ளதாகவும் இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மனிதருக்கு இன்று நேரும் நிலைமைகள் இலங்கையர் என்ற வகையில் அதிருப்தி அளிக்கின்றது என்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நான் வேதனைப்படுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
தொடர்ச்சியாக ஏகாதிபத்திய ஆட்சியை மேற்கொள்ள முயற்சித்தால் சதாம் ஹூசெய்ன் மற்றும் லிபிய தலைவருக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டை மீட்டெடுத்தமைக்கான பரிசாக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட் வீரர்களை ராணுவத்திலும் சமூகத்திலும் சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்.
நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் வீரர்களை ராணுவத்திலும், சமூகத்திலும் சேர்க்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. நேபாளத்தில், மாவோயிஸ்ட்கள் புரட்சிக்குப் பின், ஜனநாயக பார்லிமென்ட் அரசியல் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மாவோயிஸ்ட்கள் மற்றும் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை என்ன செய்வது என்பது பற்றி, பல ஆண்டுகளாக குழப்பம் நீடித்து வந்தது. நவம்பர் 1ம் திகதி, அந்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடி, இவ்விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வந்தனர்.
மொத்தமுள்ள 19 ஆயிரம் மாவோயிஸ்ட் வீரர்களில், 6,500 பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவர் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த முடிவில் குறிப்பிடப்பட்டன. இதற்கான பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக துவங்கின.
ஏசியான் மாநாட்டில் ஒபாமாவும், வென் ஜியாபோவும் சந்தித்து பேசினர்.
ஏசியான் மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவும், சீனப் அதிபர் வென் ஜியாபோவும் சந்தித்துப் பேசினர். இதில் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் கரன்சி மதிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.ஏசியான் மாநாட்டில் ஒபாமாவும், வென் ஜியாபோவும் சந்தித்துப் பேசுவது குறித்து முன்பே திட்டமிடப்படவில்லை. எனினும் நேற்றிரவு உணவுக்கு முன் இருவரும் சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பின் போது, சீனக் கரன்சியின் மதிப்பு உயர்த்தப்படுவது குறித்தும், தென்சீனக் கடல் எல்லை தகராறுகள் பற்றியும் ஒபாமா பேசினார். அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில் அடுத்தாண்டு முதல் அமெரிக்கக் கடற்படை குவிக்கப்படும் என்ற ஒபாமாவின் அறிவிப்புக்குப் பின் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.இந்த திடீர் சந்திப்பின் போது, புகைப்பட மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர், அச்சுப் பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பாகிஸ்தானிற்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கத் தவறினால் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கத் தயங்கமாட்டோம் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கத் துருப்புகளின் மீது, தலிபான், ஹக்கானி உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானை மறைவிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாலேயே அமெரிக்கா மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆசிய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் லிப்பெர்ட் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களினால் சுற்றியுள்ள பிராந்தியங்கள் பாதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவது அந்நாட்டின் கடமையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தனது நாட்டு எல்லைக்குள் இருந்து செயல்பட்டு வரும் தலிபான், ஹக்கானி போன்ற பயங்கரவாதக் குழுக்களை ஒடுக்குவது பாகிஸ்தானின் கடமையாகும். இக்குழுக்களினால் ஆப்கானிஸ்தானுக்கும், அங்கு அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கும் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தவறும்பட்சத்தில், அமெரிக்கா எவ்வித நடவடிக்கையையும் எடுக்கத் தயங்காது. ஆனால் அத்தகைய சூழ்நிலைக்கு இடங்கொடுக்காமல் ஒத்துழைப்பைத் தருவதே பாகிஸ்தானுக்கு நல்லது.
பாகிஸ்தானை மறைவிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதக் குழுக்களினால் ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான கூட்டுப்படைகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தனது நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக ஆப்கானிஸ்தான் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு ஆதரவு தரவேண்டியது பாகிஸ்தானின் நியாயமான கடமையாகும்.
மேலும் அத்தகைய சூழல் உருவாக, தலிபான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களை நீடிக்க விடக்கூடாது. இந்த பயங்கரவாதக் குழுக்களின் தொடர்புகளினால் அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் பாகிஸ்தான் அரசுக்கும், மக்களுக்குமே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் பாகிஸ்தானின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. எனவே இந்தப் பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவை நிலைபெற பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவே அமெரிக்கா விரும்புகிறது.
அணு ஆயுத வல்லமை பெற்ற நாடு என்பதாலும், பயங்கரவாதக் குழுக்களினால் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாலும் இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தானுடனான உறவு எங்களுக்கு முக்கியமானதாகும். அதேபோல இந்தயா-பாகிஸ்தானுக்கிடையிலான பிரச்னைகளின் தீர்வும் இப்பிராந்தியத்தின் நலனைச் சார்ந்ததுதான்.
சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது அணு ஆயுதப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நீடித்த நிலையான, நாட்டுக்கு அமைதி தரக்கூடிய ஜனநாயக ரீதியிலான தலைமையை கொண்ட அரசு பாகிஸ்தானில் அமைவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.
இந்தாண்டுக்கான கன்பூசியஸ் அமைதி விருது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வழங்கப்படுகின்றது.
சீனாவில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மனித உரிமை ஆர்வலர் லியூ ஷியாபோவுக்கு, கடந்தாண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.சீன அரசு அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, நோபல் பரிசுக்கு மாற்றாக, "கன்பூசியஸ் அமைதி விருது" என்ற விருதை உருவாக்கியது. கடந்தாண்டுக்கான கன்பூசியஸ் அமைதி விருதுக்கு, தைவான் முன்னாள் துணை அதிபர் லியான் சான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் இந்த அறிவிப்பு, அவருக்குத் தெரிவிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. அதனால், விருது வழங்கும் விழாவுக்கு அவர் வரவில்லை. அவருக்குப் பதிலாக, ஒரு சிறுமிக்கு அந்த விருது வழங்கப்பட்டது. சானுக்குப் பதிலாக அந்தச் சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன், அந்தச் சிறுமி சானுக்கு என்ன உறவு முறை என்பது பற்றி, சீனா விவரங்களை வெளியிடவில்லை.
இந்நிலையில், இந்தாண்டுக்கான கன்பூசியஸ் அமைதி விருது, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுக்கு வழங்கப்படுவதாக, விருதுக் குழு அறிவித்தது. லிபியாவில் ஐ.நா.தீர்மானத்தின்படி, குண்டுவீச்சு நடந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளதாக குழு உறுப்பினரும், கவிஞருமான கியாமோ டாமோ தெரிவித்தார்.
அமைதி விருது பற்றிய அறிவிப்பு புடினுக்கு தெரிவிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் விருதுக் குழு கலைக்கப்படும் என, சீன பண்பாட்டுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், புடினுக்கான விருதை அறிவித்த டாமோ, புதிய நிர்வாகக் குழு ஒன்றைத் தான் அமைத்துள்ளதாகவும், விருது வழங்கும் விழா நடக்கும் எனவும் கூறியுள்ளார்.
உலக வல்லரசு நிலையை விட்டுக்கொடுக்காது அமெரிக்கா: பனெட்டா.
எக்காரணத்திற்காகவும் உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா விட்டுக் கொடுக்காது என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் அமெரிக்காவின் புவியியல் முன்னுரிமைகளின்படி, பாதுகாப்புக்கு குந்தகம் நேரிடும்படியான செயல்களுக்கு, அமெரிக்கா ஒரு போதும் இடம் கொடுக்காது.
பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா படைகளை குவித்து வருகிறது. இந்நிலையில், உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை, அமெரிக்கா எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது.உலக நலன் மற்றும் உலகளாவிய பொறுப்புகளுடன் கூடிய ஒரு நாடு, உலகளாவிய நிலையில் வலுவான ராணுவம் கொண்ட ஒரு நாடு என்ற முறையில், அமெரிக்கா, உலக பாதுகாப்புக்காக தொடர்ந்து செயல்படும் என பனெட்டா தெரிவித்தார்.
வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை பிரிட்டன் தடை செய்துள்ளது.
வெளி நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதத்தில், அவர்களின் வேலைகான பட்டியலில் பல பிரிவுகளை பிரிட்டன் குறைத்து விட்டது.
இதனால், ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் பிரிட்டனுக்குச் செல்ல இயலாத நிலை உருவாகும். ஐரோப்பிய யூனியன் அல்லாத இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி பிரிட்டனுக்குச் செல்கின்றனர். இவர்களுக்கான வேலைகள் பட்டியல் "ஷார்டேஜ் ஆக்குபேஷன் லிஸ்ட்” என அழைக்கப்படுகிறது.
இந்தப் பட்டியலில் உள்ள வேலைகளுக்கான மிகத்திறன் வாய்ந்த நபர்கள், இரண்டாம் நிலை (டயர் 2) விசா மூலம் பிரிட்டனுக்குச் செல்லலாம். இந்நிலையில், இப்பட்டியலில் இடம் பெற்றிருந்த, உயர்நிலைக் கல்விப் பிரிவில் உயிரியல் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான பேச்சு மற்றும் மொழி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், கண் மருத்துவர்கள் ஆகிய பணியிடங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கம், புலம்பெயர்தல் பற்றிய ஆலோசனைக் குழுவின் (எம்.ஏ.சி.,) பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குடியேற்றத் துறை அமைச்சர் டமியன் க்ரீன் கூறுகையில்,"இதுபோன்ற திறன் வாய்ந்த வேலைகளுக்கான ஆட்கள் இனி பிரிட்டனில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் மூலம் வெளியாட்களை நம்பியிருக்கும் நிலை குறையும்” என்றார். இந்தத் திருத்தத்தால் இனி, ஆண்டுக்கு 40 ஆயிரம் ஊழியர்கள், பிரிட்டனுக்குச் செல்ல இயலாத நிலை உருவாகும்.
சீனாவில் ஏற்பட்ட கெமிக்கல் விபத்தில் 14பேர் பலி.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோக் மாகாணத்தில் உள்ள கெமிக்கல் ஆலையில் தீடிரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொலிசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மேலும் தகவல்களை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.சீனாவில் கெமிக்கல் ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம், ஜியாங்சி மாகாணத்தில் நடந்த விபத்து ஒன்றில் 3 பேர் கொல்லப்பட்டனர்.கடந்த வாரம் யுனான் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் நடந்த விபத்தில் 34 தொழிலாளர்கள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் கடாபியின் மகன் கைது.
லிபியப் புரட்சிப் படைகளால் கொல்லப்பட்ட முகமது கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் தெற்கு லிபியாவில் இன்று கைது செய்யப்பட்டார். இதனை இன்று தேசிய இடைக்கால கவுன்சில் அறிவித்தது.லிபியாவை ஆட்சி செய்த கடாபி அங்கு புரட்சி எழுந்ததால் தப்பியோடினார். பின்னர் அவர் கிளர்ச்சியாளர்களிடம் பிடிபட்டு துப்பாக்கி சண்டையில் பலியானார்.
அவரது மகன் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் அண்டை நாடுகளில் அகதியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் லிபியாவின் தெற்கு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக லிபியாவின் இடைக்கால கவுன்சிலின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.இவர் மீது மனித உரிமை மீறல் தொடர்பாக கடந்த ஜூன் 27ம் திகதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்.
எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.17 நாள் கடும் போராட்டத்துக்குப் பிறகு முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து ஆட்சி ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பின்பு எதிர்வரும் 28ந் திகதி புதிய ஐனாதிபதி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அரசியல் சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய ராணுவ ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.ராணுவம் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள விரும்புகிறது. தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அரசு விரும்பவில்லை என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.
மேலும் முபாரக் பதவி விலகி ராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. முன்பு இருந்ததை விட மிகவும் கீழ்நிலையில் உள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை(18.11.2011) தொழுகை முடிந்ததும் தலைநகர் கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு திரண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், உடனே பாராளுமன்ற தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டங்களை நடத்தினர்.இதே போன்று எகிப்தில் 2-வது பெரிய நகரமான அலெக் சாண்ட்ரியாவிலும் நேற்று போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் இளைஞர்கள் வீதிகளில் திரண்டனர்.இதனால் எகிப்தில் மீண்டும் பதட்டம் நிலவுகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இம்ரான் கானின் செல்வாக்கு அதிகரிப்பு.
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் தென்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.தற்போது இவரது கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில் லாகூரில் அவரது கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இவரது கட்சியில் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர். இதனால் இம்ரான் கானின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.இங்கிலாந்தில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் அதிபர்களாகவும், வர்த்தகர்களாகவும் உள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தான் முஸ்லிம் லிக்(நவாஸ்) கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இவர்கள் இம்ரான் கட்சியின் மீது மதிப்பு மரியாதை வைத்துள்ளதாகவும், அவரது கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தற்பொழுது நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.அடுத்த மாதம் லண்டனுக்கு வரும் இம்ரான்கானுக்கு வரவேற்பு அளித்து கௌரவிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் அதிரடி தாக்குதல்: தீவிரவாதிகள் 35 பேர் பலி.
பாகிஸ்தான் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் 35 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும் பாகிஸ்தான் மீது நம்பிக்கை இல்லாமல் ஆளில்லா உளவு விமானங்கள் டிரோன் மூலம் அமெரிக்காவே நேரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் வடமேற்கில் உள்ள குர்ரம், ஒரக்ஸாய் உள்பட பல மலைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
உஷாரடைந்த பாகிஸ்தான் வீரர்கள் பதிலடி கொடுக்க தொடங்கினர். தகவல் அறிந்து ராணுவ ஹெலிகாப்டர்களிலும் வீரர்கள் வந்து வான்வழி தாக்குதல் நடத்தினர்.தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்கள் மீது குண்டு வீசினர். இதில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனி சிரியாவை சீர்படுத்த இயலாது: பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு.
சிரியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் இருப்பதாக துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹமத் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பேயிடம் தெரிவித்தார்.அதற்கு ஜுப்பே இனி சிரியாவை சீர்படுத்த இயலாது, அந்த நாட்டின் பிரச்னை குறித்து ஐ.நா தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
910 கி.மீ எல்லையை சிரியாவுடன் பொதுவாக துருக்கி கொண்டுள்ளது. சிரியாவின் ஜனாதிபதி ஆசாத்தின் படைகள் விடுதலைக்காக போராடும் போராளிகளை ராணுவம் கொண்டு தாக்குவதால் அவர்களும் திரும்பத் தாக்குகின்றனர்.இதனால் உள்நாட்டு போர் ஏற்படும். இந்தப் படுகொலைகளை இப்போதே நிறுத்த அரபு நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றார். ஆனால் ஆஷாத் அரபுலீகின் எந்த கட்டுப்பாட்டையும் ஏற்க முடியவில்லை.
அப்பாவி பொதுமக்கள் அதிபரின் ராணுவத்தால் உயிரிழக்கும் கொடுமை ஏற்பட்டுள்ளது. எட்டு மாதங்களாக நடந்து வரும் இந்தப் போராட்டம் இப்போது உச்சநிலையை எட்டி வருகிறது.
இந்நிலையில் சிரியா ஜனாதிபதியிடம் அமைதிகாக்க வேண்டும் என்று பேசிச் சரி செய்வது இயலாத காரியமாகும் என்று அங்காராவில் ஜுப்பே அஹமத்திடம் கூறினார். ஜுப்பே தன் நாட்டு மக்களை பிரான்சுக்குத் திரும்புமாறு ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளார்.
அங்காரா இனி சிரியாவுக்கு மின்சாரம் தர முடியாது என்று மறுத்துவிட்டது. சிரியாவுடனான எண்ணெய் கண்டறியும் கூட்டு முயற்சியிலிருந்தும் விலகி விட்டது.துருக்கியும், பிரான்சும் சிரிய ஜனாதிபதி செய்வது தவறு என்ற ஒத்த கருத்துடன் உள்ளன. ஐ.நா பாதுகாப்பு குழு சிரியாவின் பிரச்னையில் சர்வதேசச் சமூகம் தலையிடுவது குறித்து முடிவு செய்யும் என்று ஜுப்பே கூறினார்.
ஜேர்மனியிடம் ஆலோசனை கேட்ட தென்கொரியா.
தென் கொரியா, வடகொரியாவுடன் இணைய முடிவு  செய்துள்ளதால் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண ஆலோசனை வழங்குமாறு ஜேர்மனியிடம் உதவி கேட்டுள்ளது.இரண்டு கொரியாவும் 1953 முதல் பிரிந்து கிடக்கின்றன. இவற்றில் வடகொரியா சர்வாதிகாரியாக விளங்கிய இரண்டாம் ஜிம் ஜோங் என்பவரின் ஆட்சியில் மிகவும் சுரண்டப்பட்டு பின்தங்கி விட்டது. தென்கொரியா அண்மைக் காலங்களில் பொருளாதார ரீதியில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஜேர்மனியும் தாம் இணையும் போது இது போன்ற வேறுபாடுகளுடன் தான் இருந்தன. கிழக்கு ஜேர்மனி வறுமை மலிந்த கம்யூனிச நாடாகவும், மேற்கு ஜேர்மனி பொருளாதாரச் சிறப்பு மிக்க நாடாகவும் விளங்கியது.
1989ல் பெர்லின் சுவரை இடித்து இரண்டு நாடுகளும் ஒன்றாயின. 1 பில்லியன் யூரோ இந்த நாடுகளின் இணைப்புக்காக செலவிடப்பட்டாலும் இந்த இருபதாண்டுகளாகவே இன்னும் எதிர்பார்த்தபடி திட்டங்கள் நிறைவடையவில்லை.ஜேர்மனியின் இத்தகைய அனுபவங்களின் அடிப்படையில் தென்கொரியா இந்நாட்டிடம் தமது இணைப்பிற்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுள்ளது. இதற்கான முதல் கூட்டம் இந்த வாரம் நடந்தது. மீண்டும் 2012ல் அடுத்த கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் சிரியப் போராளிகளை சந்திக்கிறார்.
பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் திங்கட்கிழமை(21.11.2011) அன்று லண்டனில் சிரியாவில் போராட்டம் நடத்தும் போராளிகளின் தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும் சிரியா தேசியக் குழுவினரையும், தேசிய ஒருங்கிணைப்புக் குழுவினரையும் சந்தித்து பேசுகிறார். உலகத் தலைவர்களின் அதிருப்திக்கு ஆளாகி வரும் சிரியாவின் ஜனாதிபதி ஆசாத் மீது அதிகரித்து வரும் வெறுப்பு காரணமாகவே இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.பலர் ஆசாத்துக்கு எதிராக போராடத் தொடங்கி விட்டனர். இந்தப் போராளிகள் பிரிட்டன் பிரதமரின் ஆலோசகர்களையும் டவுனிங் தெருவில் சந்திக்கின்றனர்.
அரபு லீகு அமைதித் திட்டம் ஒன்றை சிரியாவிற்காக உருவாக்கியுள்ளது. ஏனெனில் இதுவரை ஆசாத் ராணுவம் 3500 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளது. இன்னும் 12 பேரும் அண்மையில் கொல்லப்பட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். சிரியாவின் அண்டை நாடான ஜோர்டான் அரசர் அப்துல்லாவும் சிரிய ஜனாதிபதி ஆஷாத்தை பதவி விலகுமாறு வற்புறுத்தியுள்ளார்.வெளிநாட்டு நிருபர்களை சிரியா தன் நாட்டுக்குள் அனுமதிக்காததால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நடந்த வன்முறைகள் பற்றி முழுத் தகவலும் கிடைக்கவில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF