இந்நாட்டு வாகனங்களுக்குத் தரம் குறைந்த பெற்றோலை மீண்டும் பயன்படுத்தக் கூடிய அபாயம் நிலவுவதாகவும், விடுக்கப்பட்டுள்ள கேள்விப் பத்திரம் குறித்து கனியவள அமைச்சரிடம் இன்று (21.11.2011) அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தரம்குறைந்த பெற்றோல் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கப்படுமாயின் விலை குறிப்பிடப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமைய வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது : ரணில் விக்ரமசிங்க.
நாடாளுமன்றில் ஜனநாயக நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.இந்த நிலைமைகளை நாம் அனுமதிக்கமாட்டோம், மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படாத ஒர் வரவு செலவுத் திட்டமாக இதனைக் கருத வேண்டும்.
அரசாங்கம் முன்வைத்த ஏதேனும் ஓர் நல்ல திட்டத்தை முடிந்தால் கூறட்டும், நல்ல திட்டங்கள் முன்வைத்தால் ஐக்கிய தேசியக் கட்சி அறத்கு பூரண ஆதவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
இவ்வாறான நிலைமைகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ, மங்கள சமரவீர, ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க, நிரோசன் பெரேரா, அஜித் பெரேரா, ரோசி சேனாநாயக்க, அனோமா கமகே உள்ளிட்ட பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை நிவாரண உதவி.
ஒரு இலட்சம் குடி நீர் போத்தல்களும் 500தண்ணீர் தாங்கிகளுமுள்ள இந்த உதவிப்பொருட்கள் பாங்கொங்கிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தினூடாக கையளிக்கப்படவுள்ளன. மேலதிகமாக வெளிவிவகார அமைச்சும் தேயிலை சபையும் இணைந்து 1300 கிலோகிராம் தேயிலையை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் நன்கொடை மூலமும் இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் தேசிய வர்த்தக சம்மேளனம் என்பனவும் மேற்படி நிவாரணப் பொருட்களுக்கு பங்களிப்புச் செய்துள்ளன. அண்மையில் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், சுமார் 600பேர் உயிரிழந்ததுடன் 5மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர். பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்கும் பாரிய இழப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சவப்பெட்டியுடன் இருங்கள் என்கிறார் மேர்வின்! இலட்சத்துடன் இருங்கள் என்கிறார் ஜனாதிபதி மகிந்த! ஊடகவியலாளர்கள் குழப்பத்தில்???
இவ்வறிக்கையில், போர்க்குற்றம் சாட்டப்பட்டதாக குறிப்பிடபப்டும் இராணுவத்தினர் மற்றும் உயரதிகாரிகளின் பெயர்ப்பட்டியலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகளின் பெயா்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.பாதுகாப்பு செயலாளர் கோதபாய மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் சர்வதேச அழுத்தங்களி்ல் இருந்து தம்மை பாதுக்காத்துக் கொள்ளும் ஒரு முயற்சியே இதுவென தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதை பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை எவ்விதமான குழப்பங்களையும் விளைவிக்காது கேட்டுக் கொண்டிருந்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு விரலைத் தூக்கியதன் பின்னர் சகலரும் எழுந்து குழப்பத்தை விளைவித்து வெளிநடப்புச் செய்துவிட்டனர்.கட்சிக்குள் அவ்வாறான ஒற்றுமை இருக்கவேண்டும். அதேபோல, நாட்டினை மேம்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஆலோசனை வழங்கவேண்டும்.
அரசாங்க ஊழியர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அடுத்த வருடத்திலிருந்து 10 சதவீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஸவுக்கு இணையான ஆளுமைமிக்க தலைவர் இலங்கையில் இல்லை என்ற சிந்தனைகள் மேலோங்கிக் காணப்படுகின்ற நிலையில் அவருக்கு சவாலாக இருப்பார் என எதிர்க் கட்சிகளால் சரத் பொன்சேகாவையும் அவருக்கு விசவாசம்மிக்க இராணுவ அதிகாரிகளையும் பழி வாங்கும் திட்டம் ஜனாதிபதி மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோருக்கு இருப்பதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டராங்களில் இருந்த தெரியவருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதபதி மகிந்த ராஜபக்ஸவின் வெற்றி தொடார்பில் பலரும் சந்தேகம் வெளியட்டமை குறிப்பிடத்தக்கது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை மையமாக வைத்து ஊடகங்கள் அரசிற்கு எதிரானசெய்திகளை பிரசுரிக்கும் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டியினை தயார் செய்யுமாறு நேற்று ஞாயிற்றக்கிழமை(20.11.2011) மேர்வின் சில்வா மரண அச்சுத்தல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு 12.2 மில்லியன் ரூபா வரை வட்டியில்லாக்கடன் வழங்கும் திட்டத்தையும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கருத்தும் முரண்பட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பாராளுமன்றத்தை கொலன்னாவையாக மாற்றும் நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளியோம்!- ரணில்.
பாராளுமன்றத்தை கொலன்னாவையாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். (நாளை) இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் வரவுசெலவுத்திட்ட விவாதத்திலும் கலந்துகொள்வோம். தாக்குதல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளுடன் இணைந்து அடுத்த வாரம் கொழும்பில் எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற அவர ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போது, எமது உறுப்பினர்கள் சபை மத்தியில் வெட்கம், வெட்கம் என்ற பதாகைகளை காண்பித்த வண்ணம் இருந்தனர்.உண்மையில் நாட்டில் இடம்பெறும் விடயம் அனைத்தும் வெட்கப்படும் விடயங்கள் தானே எனவே, ஆச்சரியப்பட வேண்டியதில்லை.இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தனது உரையில், இறந்த இராணுவ வீரருக்கு 3 ஆவது குழந்தை பிறந்தால் கொடுப்பனவு வழங்கப்படுமெனத் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட பாலித ரங்கே பண்டார எம்.பி. அப்படியானால் சரத் பொன்சேகாவின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார். இதனால் கோபமுற்ற ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துவேன் எனக் கூறினார்.இதன் பின்னரே தண்ணீர்ப் போத்தல்களாலும், புத்தகங்களாலும் ஆளும் தரப்பு எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தினார்கள். எனது கால்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. நடப்பதற்கு கஷ்டப்படுகின்றேன். பெண் எம்.பி.க்கள் மீதும் தாக்குதல் நடத் தப்பட்டது. ஜனாதிபதியின் முன்பாக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை வெட்கம் என கூறாது என்னவென்று வர்ணிப்பது. நாட்டின் வெள்ளை வான் கடத்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள சூழ்நிலையில், இன்று சட்டத்தை உருவாக்கும் பாராளுமன்றமே அநீதியின் இடமாக ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் இடமாக மாறியுள்ளது.பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொள்ள நாம் தயார்.
ஆனால், தேர்தல் நடந்தால் தமது ஆனம் பறிபோய்விடுமே என அஞ்சிய ஆளும் தரப்பினரே எம் மீது தாக்குதல்களை நடத்தினர்.ஜனாதிபதி கூறும் ஜனநாயகம் இது தானா, உண்மையை பேசினால் தாக்குதல் நடத்துகின்றனர்? எனது காலிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஐ.தே.கட்சி ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், நல்ல விடயங்கள் என்று என்ன இடம்பெற்றுள்ளன.
ஜனநாயகம் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளனவா?. மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா, அரசியல் தீர்வு வழங்கப்பட்டுள்ளதா? எதுவுமே இல்லை. எனவே, எம்மால் எவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கமுடியும். பழைய லிபியாவின் கடாபியின் அராஜகமே பாராளுமன்றத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது.அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோவைகளை சோதனையிடும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது. ஆனால், இதனை மீறி எம்.பி.க்களான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன, திஸ்ஸ அத்தநாயக்கா ஆகியோரின் கோவைகளை சோதனை செய்த பொலிஸார் அவையனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புமைகளை மீறும் செயலாகும். பாராளுமன்றத்தை கொலன்னாவையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது.இதற்கெதிராக கொழும்பில் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி அடுத்த வாரம் நடத்தப்படுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அனைத்து ஐ.தே.கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு.
வரவு செலவுத் திட்டம் சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து பையை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கதாகும்.வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்ததன் பின்னர் எம்.பி.க்களுக்கான உணவகத்தில் நிதியமைச்சினால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பங்கு பற்றினர்.
அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா. சம்பந்தன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ச மற்றும் அமைச்ர்களான திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இந்த விருந்துபாரத்திலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளவில்லை என்பதுடன் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களும் இந்த தேநீர் விருந்துபாரத்தில் பங்கேற்கவில்லை.
அரச ஊழியர்களுக்கு 10 % சம்பள அதிகரிப்பு : 2012 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி.
இவர்களுக்கான அடிப்படைச் சம்பளம் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படும். இவ்வதிகரிப்பு இரு கட்டங்களாக அமுல்படுத்தப்படும். ஒவ்வொரு அரச ஊழியரும் 2500 ரூபா சம்பள உயர்வு பெறுவதை இத்திட்டம் உறுதிப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான சாரம்சம்:
1. நடமாடும் மொழி ஆய்வுக்கூடங்களை உருவாக்க 100 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு
2. பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் 750 ரூபா கொடுப்பனவு
3. 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவு 700 ரூபாவால் அதிகரிப்பு
4. சமுர்த்தி கொடுப்பனவு 210 ரூபா முதல் 615 ரூபா வரை பெறுவோருக்கு 750 ஆக அதிகரிப்பு – 900 ரூபா பெறுவோருக்கு 1200 ஆக அதிகரிப்பு
5. ஆரம்ப பாடசாலைகள், தர்ம பாடசாலைகளுக்கு உதவுவதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
6. புராதன சமய தலங்களைச் சூழ்ந்து காணப்படும் பாடசாலைகள், மகப்பேற்று நிலையங்கள், குடிநீர் பாதைகளுக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
7. 25 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் சிரேஷ்ட கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மோட்டார் கார் கொள்வனவுக்கு வட்டியில்லாக் கடன்
8. குறைந்த வருமானம் பெறுவோருக்கு சட்ட ரீதியில் உதவ 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
9. புதிய கலை கேந்திர நிலையத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
10. ஆராய்ச்சி, விதை அபிவிருத்தி மற்றும் விரிவாக்கலை உருவாக்க 200 மில்லியன் ரூபா மூலதனம்
11. மரக்கன்று மற்றும் சமையல் எண்ணெய் மீதான செஸ் வரி அதிகரிப்பு
12. தெங்கு,பனை மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதான வரி நீக்கம்
13. கால் நடை உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் மீதான செஸ் வரி விலக்களிப்பு
14. திவி நெகும ஊக்குவிக்கக் கடன் திட்டம்
15. கரையோரப் பாதுகாப்புக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு
16. கிராம நகரங்களை இணைக்கும் பாதை வலையமைப்பினை நிர்மாணிப்பதற்கு 170 மில்லியன் ரூபா 5 வருடங்களில் செலவிட எதிர்பார்ப்பு
17. 48 சதவீத குடிநீரைச் சேமிப்பதோடு 680 மில்லியன் ரூபா முதலீடு
18. 5 மில்லியன் குடும்பங்கள் மின்சாரத்தை நுகர்வதற்கு 34 ஆயிரத்து 187 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
19. பஸ், லொறி டயர்கள் மீதான இறக்குமதித் தீர்வை 50 சதவீதம் குறைப்பு.
மியான்மர் இடைத்தேர்தலில் போட்டியிட சூச்சி முடிவு.
மியான்மர் நாட்டில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட ஜனநாயக கட்சி தலைவர் அவுங் சான் சூச்சி திட்டமிட்டுள்ளார்.மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்தது. கடந்த 1990ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் அவுங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது.
ஆனால் சூச்சியை ஆட்சியில் அமரவிடாமல் அவரை வீட்டு சிறையில் அடைத்தது ராணுவ அரசு. கடந்த 22 ஆண்டுகளில் சூச்சி 15 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் சூச்சி அரசியலில் ஈடுபட முடியாத அளவுக்கு விதிமுறைகளை அமல்படுத்தியது ராணுவ அரசு. இதனால் தேசிய லீக் கட்சி அந்த தேர்தலை புறக்கணித்தது. இதையடுத்து ராணுவம் ஆதிக்கம் பெற்ற அரசு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
தேர்தல் முடிந்த பின் சூச்சி வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அடுத்த மாதம் மியான்மர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மியான்மரில் ஜனநாயக நடைமுறைகள் தலைகாட்டுவதால் இடைத்தேர்தலில் போட்டியிட சூச்சி விருப்பம் தெரிவித்துள்ளார்.மியான்மர் பாராளுமன்றத்தில் தற்போது 48 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் நடைபெற்றால் அதில் போட்டியிட தேசிய லீக் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சூச்சி கடந்த வாரம் வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவுங் சான் சூச்சியின் கவுரவம் பாதிக்கப்படும் என தேசிய லீக் கட்சி தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு சூச்சி பதிலளிக்கையில், அரசியல் நடத்த வேண்டுமென்றால் கவுரவத்தையெல்லாம் பார்க்கக் கூடாது என்றார்.இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட தேசிய லீக் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாக பதிவு செய்து கொண்டுள்ளது.
எகிப்தில் மக்கள் போராட்டம்: அமைச்சர்கள் பதவி ராஜினாமா.
எகிப்தில் ராணுவத்துக்கு எதிராக நடைபெற்ற தொடர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அமைச்சரவை கலைக்கப்பட்டது.எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹோசினி முபாரக் மக்கள் எதிர்ப்பு காரணமாக பதவி விலகினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பின் வழிகாட்டு நெறிகள் அடங்கிய ஆவணம் ஒன்றை ராணுவம் வெளியிட்டது.இதில் ராணுவத்துக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மக்கள் கடந்த 3 நாட்களாக தாகிர் சதுக்கத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் எகிப்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டிற்கு யூரோ வேண்டாம்: லீ பென்.
நலிந்து வரும் செலவாணியான யூரோ பிரான்ஸ் நாட்டிற்கு இனி தேவையில்லை என மரினா லீ பென் கூறியுள்ளார்.இவர் பிரான்ஸ் நாட்டின் தீவிர வலது சாரிக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் 2012ம் ஆண்டுக்கான பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.மேலும் மரினா கூறுகையில், யூரோ நம்முடைய பொருளாதாரத்தை மூச்சுத் திணற வைக்கின்றது, தொழில்துறையை அழிக்கின்றது, வேலை வாய்ப்பை ஒழிக்கின்றது, இதற்கும் மேலாக பிரான்சை இமாலயக் கடனில் மூழ்கடிக்கின்றது.
எனவே இந்தச் செலாவணியை நாம் புறக்கணிக்க வேண்டும். யூரோ அழிவதைப் நாம் பார்க்க வேண்டுமே தவிர யூரோவால் நாம் அழிந்து போகக் கூடாது என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.தேசிய முன்னணிக் கட்சியை தோற்றுவித்த ஜான்-மேரி லீ பென் என்பவரின் மகளான அதிபர் வேட்பாளர் மரீனா லீ பென் யூரோ புறக்கணிப்போடு பின்வரும் வேறு சில மாற்றங்களையும் தன் பேச்சில் சுட்டிக்காட்டினார்.
அவை புலம்பெயர்ந்து வருவோருக்குத் தடை, உலகமயமாக்கலை எதிர்த்து வணிகத் தடைகளை ஏற்படுத்துதல், குற்றங்களின் கடுமையாக நடவடிக்கை எடுத்தல் ஆகியனவாகும்.மரீனா லீ பென் கட்சிக்கு பொறுப்பேற்ற பிறகு மக்கள் ஆதரவு அக்கட்சிக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த முதல் சுற்றுத் தேர்தலில் ஆதரவு 16 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது ஆறுமாதத்துக்கு முன்பிருந்த ஆதரவைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்காகும். இதனால் சர்கோசியின் மைய வலது UMP கட்சிக்கு லீ பென் சரியான போட்டியாக உருவெடுத்து வருகிறார். சமீப வாரங்களாக லீ பென்னுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. முதல் சுற்றில் 27 சதவீதத்துக்கு 2 புள்ளி என்றும் அடுத்த கணக்கெடுப்பில் 34 சதவீத ஆதரவுக்கு மூன்று புள்ளி உயர்ந்திருப்பதாகவும் தெரியவந்தது. இவருக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சர்கோசியின் UMP கட்சியின் தலைவர் ஜான் ஃபிராங்கோய்ஸ் கோப் கூறுகையில், சர்கோசி முதலில் தேசிய முன்னணி பிரச்சாரம் செய்கின்ற அச்சுறுத்தலை அடியோடு போக்க வேண்டும். இதுவே அவருக்கு இந்தத் தேர்தலின் முக்கிய சவால் என்றார்.ஏனெனில் லீ பென் தன் கருத்துக்களை முன் வைப்பதில் மிகுந்த திறமைசாலி. அவர் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களாக இருந்தாலும் கூட அவர் மீது மக்களுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டிருப்பதை மறுக்க இயலாது என்று ஃபினான்ஷியல் டைம்ஸ் என்ற பத்திரிக்கைக்குப் பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் வறுமையில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்: ஆணையர்கள் எச்சரிக்கை.
தனது பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்கும் முயற்சியில், பிரிட்டன் சிறுவர்கள் மத்தியில் வறுமையை இன்னும் அதிகரிக்கும் என்று சிறுவர்கள் நல ஆணையர்கள் எச்சரித்துள்ளனர்.இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்குரிய ஆணையர்கள் கூறுகையில், இந்த பொருளாராதார சிக்கல்களானது சிறுவர்கள் சேவைகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றனர்.மேலும் அவர்கள் கூறுகையில், நலத்திட்ட மாற்றங்கள் பல குடும்பங்களை வறுமையில் தள்ளும். சிறுவர்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குவர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி, பெற்றோருக்கு வேலையும் முறையான சம்பளமும் வழங்குவதுதான் என்றனர்.
அரசு புள்ளிவிவரப்படி குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் அதாவது 2.6 பில்லியன் பேர் வறுமையில் வாழ்வதாகத் தெரிகிறது. ஆனால் மற்றொரு புள்ளிவிவரம் மூன்றில் ஒருவர் அதாவது 3.8 பில்லியன் பேர் என்று காட்டுகிறது.இந்த 3.8 பில்லியன் ஏழைக் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்பது ஆபத்தான உண்மையாகும். பெற்றோருக்கு உறுதி செய்யப்பட்ட வேலையும் சம்பளமும் வழங்கினால் மட்டுமே குழந்தைகளின் ஏழ்மையை போக்க முடியும் என்று பணி மற்றும் ஓய்வூதியத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குழந்தை உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தில் பிரிட்டன் கையெழுத்திட்டு இருபது ஆண்டுகளாகிவிட்டன. இந்த ஒப்பந்தம் குழந்தை உரிமைகளை மேம்படுத்துவதாகும்.ஆனால் இப்போது வெளியிடப்பட்ட நான்கு நாட்டு ஆணையர்களின் அறிக்கை இன்னும் பிரிட்டன் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேறவில்லை என்பதையே உணர்த்துகிறது என்பதைக் கூறிய செய்தி தொடர்பாளர், இந்த முன்னேற்றப் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபடும் என்று உறுதி அளித்தார்.
தாய்லாந்தில் கடும் வெள்ளம்: பலி எண்ணிக்கை 602ஆக உயர்வு.
தாய்லாந்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பருவ மழை தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து மழை, சூறாவளி, புயல் அடித்ததால் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
தொடர்ந்து பெய்த மழையால் தலைநகர் பாங்காக் முற்றிலும் ஸ்தம்பித்தது. போக்குவரத்து, மின்சாரம், குடிநீர், உணவு கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.ராணுவத்தினரும் தீயணைப்புப் படையினரும் பொது மக்களும் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் பலர் மூழ்கி பலியாயினர். பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல நகரங்களில் வெள்ளம் இன்னும் வடியாததால் இயல்புநிலை திரும்பவில்லை. இதற்கிடையில் வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.பாங்காக்கில் மட்டும் சில இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. சாலைகளை சீரமைக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசும் ஈடுபட்டுள்ளது.
ஸ்பெயின் பாராளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சி வெற்றி.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் 44 சதவீத ஓட்டுகள் பெற்று எதிர்கட்சி ஆட்சியை பிடித்தது.ஸ்பெயினில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் சோசலிஸ்ட் கட்சியும், எதிர்க்கட்சியான மரியானா ராஜேயின மக்கள் கட்சியும் போட்டியிட்டன.ஸ்பெயினில் பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் வளர்ச்சியின்மை, வறுமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
தேர்தலின் போது பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் எதிர்க்கட்சியான பாப்புலர் கட்சி 44 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான சோசலிஸ்டு கட்சிக்கு 29 சதவீத ஓட்டுகளே கிடைத்தன.இதை தொடர்ந்து 350 இடங்கள் உள்ள பாராளுமன்றத்தில் மக்கள் கட்சிக்கு 186 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் கட்சி தலைவர் மரியானோ ராஜோய் பிரதமர் ஆகிறார்.
மக்கள் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மாட்ரிட் உள்ளிட்ட பல நகரங்களில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கொடிகளை அசைத்தபடி தங்கள் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து கூறினர்.சோசலிஸ்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் பிளாங்கோவும் வெற்றி பெற்ற பாப்புலர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்த மாதம்(டிசம்பர்) பாராளுமன்ற கூடும்போது புதிய பிரதமராக ராஜோய் பதவி ஏற்பார்.
லிபியாவில் கடாபியின் முன்னாள் உளவாளி கைது.
லிபியாவில் முன்னாள் ஜனாதிபதி கடாபி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது.இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரது மகனும், கமாண்டருமான சயீப் அல் இஸ்லாம் புரட்சி படையினரால் நைஜர் நாட்டு எல்லையில் கைது செய்யப்பட்டார்.
இவரை தொடர்ந்து கடாபியின் தலைமை உளவாளி அப்துல்லா அல்-சனூச்சி(வயது 62) நேற்று லிபியாவின் தென்பகுதியில் உள்ள ஷபா நகரில் கைது செய்யப்பட்டார்.கடாபியின் மைத்துனரான அப்துல்லா அவரது நம்பிக்கைக்குரிய வலது கரமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட அப்துல்லா தற்போது இடைக்கால அரசினால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தலிபான்கள் குறித்து எழுதிய 11 வயது சிறுமியின் பெயர் சர்வதேச குழந்தைகள் விருதுக்கு பரிந்துரை.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் மகளிர் பள்ளிகளை தலிபான்கள் தடை செய்துள்ளது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த 11 வயது சிறுமி மலாலா யூசுப்ஸாய் எழுதியுள்ளார்.இதற்காக அவரது பெயரானது சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 2011ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு 42 நாடுகளில் இருந்து 93 பேர் போட்டியிட்டனர். அதில் இருந்து யூசுப்ஸாயின் பெயர் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஸ்வாட் பள்ளத்தாக்கில் மகளிர் பள்ளிகளுக்கு தலிபான்கள் தடைவிதித்ததால் மலாலா யூசுப்ஸாய் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டார்.இதுகுறித்து தனது கோபத்தையையும், வேதனையையும் பிபிசி உருது ஓன்லைனில் அவர் எழுதியுள்ளார்.
பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்.
வெளியே செல்வதற்கு முன், தங்களை அழகுபடுத்திக்கொள்ளவதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, இன்னுமா அலங்காரம் முடியவில்லலை, சீக்கிரம் தயாராகக் கூடாதா? என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் லண்டனில், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்.
லண்டனில் உள்ள "டிராவலாஜ்” என்ற நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. முகச்சவரம், சிகையலங்காரம், முகத்தில் கிரீம்களைத் தடவுதல், தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுக்க ஒரு நாளைக்கு 81 நிமிஷங்களை ஆண்கள் செலவிடுகின்றனராம். அதுவே பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும், ஆடைகளை தேர்வுசெய்வதற்கும் 75 நிமிஷங்கள்தான் எடுத்துக் கொள்கின்றனராம்.
குளிப்பதற்கு ஆண்கள் 23 நிமிஷங்களும், பெண்கள் 22 நிமிஷங்களும் செலவிடுகின்றனராம். ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.இதே நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், பயணத்தின்போது ஆண்கள் கொண்டு செல்லும் பேக்கில் சராசரியாக 156 பவுண்ட் மதிப்புள்ள டூத் பிரஷ், பேஸ்ட், சீப்பு, முகச்சவரத்துக்கான ரேஸர், பல்வேறு வகையான கிரீம்கள், லோஷன்கள் உள்ளிட்ட பொருள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்: அணு உலைக்கு பாதிப்பில்லை.
ஜப்பானில் நேற்று காலை 10.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அணு உலைக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை.ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானார்கள்.மேலும் புகுஷிமா அணு உலையும் வெடித்து அதில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜப்பானில் தொடர்ந்து அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இபாரகி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்ததுடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சிறிது நேரம் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே அப்பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலைக்கு எந்த பாதிப்போ, ஆபத்தோ ஏற்படவில்லை என அரசு அறிவித்துள்ளது. மேலும் சுனாமி ஏற்படவில்லை. சேதமதிப்பு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மத்தியதரைக்கடல் பகுதியில் கனடாவின் கப்பல் படை.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மத்தியதரைக்கடல் பகுதியில் கனடா தனது கப்பல்படை ஒன்றை காவலுக்காக நிறுத்தும் என்று கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் மெக்கே தெரிவித்துள்ளார்.லிபியாவில் சண்டை நடைபெற்ற நேரத்தில் கனடாவின் சார்பில் HMCS வான்கூவர் என்ற கப்பல்படை அனுப்பப்பட்டிருந்தது. தற்பொழுது இது நேட்டோவின் ஆபரேஷன் ஆக்டிவ் எண்டேவர் என்ற போர் நடிவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது.
ஆபரேஷன் ஆக்டிவ் எண்டேவர் என்பது மத்திய தரைக்கடல் பகுதியில் நடைபெறும் தீவிரவாத எதிர்ப்புப் பணியாகும். இந்தப் பணிக்காக இப்போது கனடா விரைந்து செல்லும் போர்க்கப்பல்களை அனுப்ப முடிவுசெய்துள்ளது.சிரியாவின் மீது அரபுநாடுகளின் கூட்டமைப்பு எடுத்த முடிவை கனடாவின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆமோதித்தனர். சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளைத் தடை செய்வது குறித்து விமர்சித்தனர்.
சிரியாவில் நடப்பது குறித்து நேட்டோவின் செயலரும், உறுப்பினர்களும் அக்கறையோடு இருந்தாலும் இன்னும் அதன் பங்கு குறித்து முடிவாகவில்லை என்று நேட்டோவின் துணைப் பொதுச் செயலர் ஜேம்ஸ் அப்பாத்துரை தெரிவித்தார்.லிபியாவில் நேட்டோ நடத்திய போரை முன்மாதிரியாகக் கொண்டு சிரியாவிலும் அத்தகைய இராணுவத் தலையீட்டை நிகழ்த்த முடியாது என்று லிபியாவின் நேட்டோ போர்ப் பணிகளை மேற்பார்வையிட்ட லெஃப்டினென்ட் ஜெனரல் சார்லஸ் போக்கார்டு தெரிவித்தார். ஒன்று போல மற்றொன்று இருப்பதில்லை என்று உறுதியாகக் கூறினார்.
சர்வதேசச் சமூகம், சிரியாவில் செய்ய வேண்டியது என்ன? என்று அமெரிக்காவின் செனட்டர் மெக்கெயினைக் கேட்டபோது சிரியா தேசியக் குழுவின் எதிர்ப்பை உணரவேண்டும் என்றார். மேலும் இது குறித்து துருக்கி நாட்டு அதிகாரிகளோடு ஒபாமாவின் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். இப் பேச்சு வார்த்தைகளில் மற்ற நாட்டு அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர் என்றார்.கனடாவின் அமைச்சர் மெக்கே, ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு முடிவெடுத்தால் மட்டுமே சிரியா மீது தாக்குதல் நடத்த இயலும் என்றார்.
நியூயோர்க் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த முயன்ற இளைஞர் கைது.
அமெரிக்காவின் நியூயோர்க் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அல்கொய்தா அமைப்புக்கு ஆதரவாளரான 27 வயது இளைஞர் ஒருவர் நியூயோர்க்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பொருள்களுடன் அரசு அதிகாரிகள், ராணுவத்தினர் உள்ளிட்டோரை குறிவைத்து செயல்பட முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேயர் மிச்சேல் ப்ளூம்பர்க் இதனைத் தெரிவித்தார். டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஸ் பிமெண்டல் என்ற இளைஞரை கைது செய்ததாகவும்அவர் கூறினார்.நியூயோர்க்கின் புறநகரில் சில காலம் வசித்து வந்த அவர், தற்போது நியூயோர்க் நகருக்கு குடிபெயர்ந்ததாக நியூயோர்க் காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லி கூறியுள்ளார்.
இவர் மீது கடந்த 2009ம் ஆண்டு முதலே கண்காணிப்பு இருந்ததாகவும், அல்குவைதா அமைப்பின் பிரசாரத்தால் அதில் ஈர்க்கப்பட்ட அவர், ஆப்கன், ஈராக் உள்ளிட்ட இடங்களில் இருந்து திரும்பும் அமெரிக்க ராணுவத்தினர், தபால் துறை, ராணுவத்துறையினரைக் குறிவைத்து குண்டுகள் வைப்பதற்கும் கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டி செயல்படுத்த முனைந்த போது கைது செய்யப்பட்டதாகவும் ப்ளூம்பர்க் கூறினார்.
நவீன நாஜிப் படையினரால் கொல்லப்பட்டோருக்கு நினைவஞ்சலி.
நவீன நாஜிப் படையினரால் 2007ம் ஆண்டில் ஒரு பெண் காவல் அதிகாரியும், 2000ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுக்குள் துருக்கியைத் தாய்நாடாகக் கொண்ட எட்டு பேரும், கிரேக்கர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.இவர்களுக்கு ஜேர்மனியில் நினைவஞ்சலி நடந்தது. இவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று ஜேர்மனியின் சட்ட அமைச்சர் சபீனா லியூத்யூசெர் தெரிவித்தார்.
நவீன நாஜிகளால் தான் இந்தப் பத்துப் பேரும் கொல்லப்பட்டனர் என்ற தகவல் அண்மையில் தான் தெரியவந்தது. இதன் பின்பு நாஜி ஆதரவு பெற்ற தீவிர வலது சாரிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சி(NPA) மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இக்கட்சியைத் தடைசெய்ய பொதுமக்கள் விரும்புகின்றனர்.இதுகுறித்து பாராளுமன்றத் தலைவர் லேம்மர்ட் கூறுகையில், சிறையில் உள்ள நவீன நாஜிக் குற்றவாளிகளுக்கும், தேசிய ஜனநாயகக் கட்சிக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்பதை அறிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நவீன நாஜிகள் குறித்து ஜேர்மனியின் பிரதமரோடும், அதிபரோடும் பன்டெஸ்டாக் பாராளுமன்றக் கீழவை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்றும் லேம்மர்ட் குறிப்பிட்டார்.தேசிய ஜனநாயகக் கட்சியைத் தடை செய்ய 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். 22 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாக அண்மையில் நடந்த ஊடக ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆனால் ஒரு அரசியல் கட்சியைத் தடைசெய்வதற்கு அரசியலமைப்பு நீதிமன்றத்தை நாட வேண்டும் என்பதால் இது எளிதான செயல் அல்ல. 2003ல் இம் முயற்சி நடந்த போது தோல்விதான் ஏற்பட்டது.மீண்டும் இந்தத் தோல்வி ஏற்பட்டால் அது அந்தக் கட்சிக்கு பெரிய வெற்றியைத் தந்து விடும் என்று உள்துறை விவகாரங்களுக்கான பாராளுமன்றக் குழுத்தலைவர் உல்ஃகாங் போஸ்பக் கூறினார்.
கராச்சியில் குண்டுவெடிப்பு: இரண்டு பேர் உடல் சிதறி பலி.
பாகிஸ்தான் கராச்சி நகரில் மிகப் பழமையான சினிமா திரையரங்கு ஒன்றில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாயினர். பத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.கராச்சி லீ மார்க்கெட் பகுதியில் உள்ளது குமார் திரையரங்கு. இது மிகப் பழமையானது. இதில் ஆபாச படங்கள் வெளியிடப்பட்டு வருவதால் மிகவும் பிரபலமானது.
இந்த திரையரங்கில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 2 பேர் பலியாயினர். பத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இடைவேளையின் போது குண்டு வெடித்ததால் உயிர் சேதம் அதிகரிக்கவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு பழி வாங்கவே இங்கு குண்டு வைக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.