Wednesday, November 23, 2011

மன்னார் கடற்படுக்கையில் தோண்டப்பட்ட கிணறுகளில் போதிய எரிவாயு வளம் இல்லை!


மன்னார் கடற்படுக்கையில் துளையிடப்பட்ட இரண்டு கிணறுகளில் இயற்கைவாயு கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும், அவற்றில் ஒன்றில் போதுமானளவு எரிவாயு வளம் இல்லை என்றும், அது பொருளாதார பெறுமானம் கொண்டதல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மன்னார் கடற்படுக்கையில் கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட மூன்று துண்டங்களில், இரண்டு இடங்களில் கிணறுகள் துளையிடப்பட்டன. இவற்றில் எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. 

இவற்றில் ஒரு கிணற்றில், 4000 மீற்றர் ஆழத்தில் ஹைட்ரோகாபன் படிவுகள் காணப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, இதில் 15 வீதம் மட்டும் பயன்பாட்டுக்குரியது என்றும், தொடர்ந்தும் சோதனைகளை நடத்தும் அளவுக்கு அதில் பொருளாதார பெறுமானம் கிடையாது என்றும் தெரியவந்துள்ளது. முதலாவது கிணற்றின் நிலைமையும் கூட மோசமாகவே உள்ளது என்றும், இதனால் கெய்ன் இந்தியா நிறுவனம் மூன்றாவது கிணற்றின் மீது கவனம் செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. 

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கம் எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது. அதேவேளை சிறிலங்கா அரசாங்கம் ரஸ்யாவின் கஸ்பரோம் நிறுவனத்தையும் எண்ணெய் வளஆய்வுக்கு அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மன்னாரில் எரிவாயு வளம் கண்டறியப்பட்டிருந்தால், பெற்றோலியத்துறை அபிவிருத்தி தொடர்பாக வரவுசெலவுத்திட்டத்தில் அதைப் பற்றி அரசாங்கம் குறிப்பிடாதது ஏன் என்று நேற்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF