Wednesday, November 16, 2011

இன்றைய செய்திகள்.

அரசாங்கத்தின் பறிமுதல் திட்டம் முதலீட்டாளர்களை பாதிக்கும்!- சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம்.
இலங்கையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தனியார் சொத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் சட்டமூலம் காரணமாக பாதிப்பான பின்விளைவுகள் ஏற்படும் என்று சர்வதேச நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. தரப்படுத்தலுக்கான சர்வதேச நிறுவனமான Moody  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்த சட்டமூலம் காரணமாக இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படலாம்.
இலங்கையின் தனியாரின் சொத்துக்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்ற தோற்றம் வெளியில் தெரியவேண்டும். எனினும் அரசாங்கத்தின் பறிமுதல் சட்டம் காரணமாக அந்த தோற்றப்பாடு மாற்றப்பட்டுள்ளது.எனவே அரசாங்கம் நிறைவேற்றிய பறிமுதல் சட்டமூலம் பிழையான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம், முதலீட்டாளர்களை கவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
பஸ்கட்டண அதிகரிப்புக்கு எதிர்பார்ப்பு-தனியார் போக்குவரத்து அமைச்சு.
பஸ் கட்டணங்களை இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாகவும் அதிகரிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியை எதிர்பார்த்திருப்பதாக தனியார் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.தேசிய போக்குவரத்து கொள்கையின் படி, டீசல் விலை 4 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே பஸ் கட்டணங்களை அதிகரிக்க முடியும். தற்புாது 3.5 சதவீதத்தால் மாத்திரமே டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதற்கான டீசல் விலை அதிகரிப்பு சதவீதத்தை 2வீதமாக மாற்றி அதை அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் விக்டர் சமரவீர தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பினைமேற்கொள்ளப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தமையும் பின்னர் தனியார் போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றுடன் கலந்துரையாடியதன் பின்னர் பஸ் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எமக்கு தம்மால் மானியம் வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஒரு மாதத்துக்குள் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்காக எழுத்துமூலம் உறுதியளிக்கப்பட்டதாகவும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதியே இறுதியாக பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தளங்கள் பதிவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் அழைப்பு.
வெளிநாட்டில் இயங்கி வரும் இணையத்தளங்கள், பேஸ்புக் பக்கங்கள், வலைப்பூக்கள் உள்ளிட்ட அனைத்து செய்தி சார் இணைய ஊடகங்களையும் பதிவுக்கு உட்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையர்கள் மற்றும் இலங்கை தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்திகளை பிரசுரம் செய்யும் இணையத்தளங்களை பதிவு செய்வதற்கு ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஊடக அமைச்சின் இந்தக் கோரிக்கையில் பல்வேறு குழப்ப நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறிப்பாக இலங்கை சார்பாக வெளிநாடுகளில் இயங்கி வரும் இணையத்தளங்களை எவ்வாறு வகையீடு செய்வது அவற்றை எவ்வாறு பதிவு செய்வது என்பது தொடர்பில் போதிய தெளிவு கிடையாது.
தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு குழப்ப நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இணையத்தளங்களை பதிவு செய்ய வேண்டியது இன்னமும் சட்டமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இணையத்தளங்களை பதிவு செய்வது குறித்து, முதல் கட்டமாக அரசாங்கம் வெறுமனே ஓர் கோரிக்கையை மாத்திரம் முன்வைத்துள்ளது.எதிர்காலத்தில் இந்தக் கோரிக்கை நிபந்தனைகளுடன் கூடிய சட்டமாக அமுல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இலங்கையர் உள்ளிட்டோர் கைது.
மலேசியாவிற்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இலங்கையர் உள்ளிட்ட கும்பல் ஒன்று தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு பெரும் அளவில் போதை பொருள் கடத்தப்படுவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அண்மையில் இரகசிய தகவல் கிடைத்திருந்தது.
அதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்ல தயாராக இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க 3 பயணிகள் வந்தனர். அவர்கள் 3 பேரும் வழக்கமான விமான நிலைய சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏற பஸ்சில் சென்றனர்.
விமானம் அருகே பஸ் சென்றபோது அவர்களிடம் விமான நிறுவனத்தின் பஸ் சாரதி ஒரு சூட்கேசை கொடுத்தார். விமான நிலையத்தில் மறைந்திருந்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதனைக் கண்டதுடன் உடனடியாக செயற்பட்டு, 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.விசாரணையின்போது அவர்களில் ஒருவர் இலங்கையர் என்றும் ஏனைய இருவரும் இந்தியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பெண்ணாவார். இவர்களுக்கு உடந்தையாக செயற்பட்ட தனியார் விமான நிறுவன பஸ் சாரதியும்  அதிகாரிகள் பிடியில் சிக்கினார்.அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சூட்கேசை சோதனை போட்டபோது அதில் சுமார் 61.2 கிலோ எடை கொண்ட போதை பொருள் இருந்தது. அது ஹெராயினா அல்லது எப்டெரினா என்பதை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
இதுதொடர்பாக 4 பேரிடம் நடத்திய விசாரணையில் இவர்களிடம் கிண்டியை சேர்ந்த இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள்தான் போதை பொருளை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தனர்.இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கிண்டியை சேர்ந்த குறித்த நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.இவர்களுக்கு போதை பொருள் கொடுத்தது யார்? இவர்கள் பின்னணியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் யார் என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
போதை பொருள் கடத்தலுக்கு தனியார் விமான நிறுவன பஸ் சாரதி உதவி செய்ததால் இது முதல் தடவையா? அல்லது இதற்கு முன்பும் பல முறை போதை பொருள் கடத்தப்பட்டதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.சென்னை விமான நிலையத்தின் பல அடுக்கு பாதுகாப்பை மீறி, விமானம் வரை அந்த போதைப்பொருள் சூட்கேஸ் வந்திருப்பதால், காதுகாப்பு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய விமான நிறுவனத்தின் பஸ் வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் போலி நாணயத்தாள்கள் அச்சிடல் அதிகரிப்பு! மத்திய வங்கி ஆளுநர்.
கடந்த காலங்களை விடவும் தற்போது இலங்கையில் அதிகளவில் போலி நாணயத்தாள் அச்சிடல் மற்றும் புழக்கத்தில் விடல் ஆகிய செயற்பாடுகள் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் போலி நாணயத்தாள் அச்சிடுதல் தொடர்பில் 62 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010ம் ஆண்டில் போலி நாணயத் தாள் அச்சிடல் தொடர்பில் 38 சம்பவங்களே பதிவாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது மிகவும் உயர்தரத்திலான நாணத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதாகவும் இவற்றை போலியாக தயாரிப்பது மிகவும் கடினமானது எனவும் இலகுவில் போலி நாணயத்தாள்களை அடையாளம் காணமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே போலி நாணயத்தாள்களை அச்சிட முயற்சிப்போரை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004ஆம் ஆண்டு 43 சம்பவங்களும், 2005ஆம் ஆண்டு 35 சம்பவங்களும், 2006ஆம் ஆண்டு 27 சம்பவங்களும், 2007ஆம் ஆண்டு 37 சம்பவங்களும், 2008ஆம் ஆண்டு 34 சம்பவங்களும், 2009 ஆம் ஆண்டு 52 சம்பவங்களும் கிடைத்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் போலி நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிடுவோருக்கு தண்டனை வழங்க சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சுவீகரிப்புச் சட்டமூலத்துக்கெதிரான மனுக்கள் ரத்து! உயர்நீதிமன்றம் தீர்மானம்..
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொள்ளாமல் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுப்பதற்கான அடிப்படை எதுவும் இல்லை என ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரதுங்கவின் தலைமையிலான நீதியரசர் குழுவே இந்த தீர்ப்பை அறிவித்தது.நுகேகொடை நாலந்தராம விகாரையின் விகாரதிபதி தீனியாவல பாலித்த தேரர், செவனகல சீனித்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் கரும்பு பயிர் செய்கையாளர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும்!- அமெரிக்கா.
இலங்கையில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூற வேண்டியது அவசியம். தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் வேறுபாடுகளை களைவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிப் பாதுகாப்பு இராஜாங்கச் யெலாளர்  றொபேட் ஸ்கோ் தெரிவித்துள்ளார். 
காலியில் நடைபெறும் 20 நாடுகள் பங்குபற்றும் கடல் எல்லைப்பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைத்த, அமெரிக்காவின் தெற்கு தென்கிழக்கு ஆசியாவுக்கான பாதுகாப்பு துணை செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடல் எல்லை பாதுகாப்பு தொடர்பிலான ஒத்துழைப்பு அவசியமானது. இந்தநிலையில், இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு குறித்து வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
அத்துடன் தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதையும் ஒபாமா நிர்வாகம் வலியுறுத்துவதாக றொபேட் ஸ்கோ் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் வெளியிடவேண்டும். அதுவே, உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த காத்திரமான பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைய இலங்கை அரசாங்கமும் பொதுமக்களும் கடுமையான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்றும் றொபேட் ஸ்கோ் சுட்டிக்காட்டினார்.இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் நேற்று திங்கட்கிழமை இந்தக் கலந்துரையாடல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதில் இந்தியா சீனா உட்பட்ட 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இலங்கையின் சட்டம் பாதாள உலகத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது! - ஹிருனிகா.
இலங்கையின் சட்டம் இன்று நியாயமான முறையில் செயற்படவில்லை. பணம், பாதாள உலகக்குழுக்கள் என்பவற்றின் மூலம் சட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா தெரிவித்துள்ளார். கொழும்பில் அடாவடித்தனம் மற்றும் பாதாள உலக குழுக்கள் இன்றி அரசியல் செய்யமுடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்தை, பாரதவின் மகளான ஹிருனிகா கண்டித்துள்ளார்.
இதேவேளை தமது தந்தையின் கொலை தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வந்த காவல்துறை அதிகாரி சமுத்திரஜீவ ஹெட்டியாராச்சி இடமாற்றம் செய்யப்பட்டமையையும் அவர் விமர்சித்துள்ளார்.
தமது தந்தையின் கொலை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என்று ஹிருனிகா குற்றம் சுமத்தியுள்ளார்.சட்டக்கல்லூரியின் மாணவி என்ற வகையில் தம்மால் தமது தந்தையின் கொலை சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சந்தேகநபர் என்று கூறமுடியும்.
இந்தநிலையில் இலங்கை மக்கள் எதனையும் சில நாட்களுக்குள் மறந்துவிடும் நிலை தொடர்கிறது என்று குறிப்பிட்ட அவர், தமது தந்தை மாத்திரம் அல்ல. சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் தொடர்பிலும் குற்றவாளிகள் நீதிக்கு முன் கொண்டு வரப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இலங்கையின் சட்டம் இன்று நியாயமான முறையில் செயற்படவில்லை. பணம்,பாதாள உலகக்குழுக்கள் என்பவற்றின் மூலம் சட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தாம் அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக குறிப்பிட்ட ஹிருனிக்கா,தற்போது அரசியல் பாதாள உலகக்குழுக்களுக்கு சமமாக சென்றுக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் ஜோக்கர்களாக உள்ளனர்
எனவே இது தாம் அரசியலில் பிரவேசிக்க சரியான தருணம் அல்ல என்று ஹிருனிகா கூறினார்.
இதேவேளை தமது தந்தையின் கொலை தொடர்பில் இலங்கைக்கு வெளியில் சென்று நீதியை கோரப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையை பர்மாவைப் போன்று தனிமைப்படுத்த முடியாது!– அமெரிக்க தூதுவர்.
இலங்கை அரசாங்கத்தை நல்லிணக்கம் தெளிவான கொள்கை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயங்களில் ஊக்கப்படுத்துவதே தமது சவால். அதனைவிடுத்து, இலங்கையை பர்மாவை போன்று தனிமைப்படுத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் பெற்றீசியா புட்டினீஸ் இந்த கருத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி இந்தக் கருத்தை அவர் இராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளுடனான நீண்ட கால போரின் பின்னர் இலங்கையின் நல்லிணக்கம், அரசியல் மாற்றம், பொருளாதார மீளமைப்பு, சர்வதேச உறவுகள் என்பவற்றுக்கு வழி ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் இவற்றை அடைவதற்கு இலங்கையை ஊக்கப்படுத்துவது அமெரிக்காவின் சவாலாக இருப்பதாக புட்டினீஸ் மேலும் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
துமிந்த சில்வாவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
முல்லேரியா பிரதேசத்தில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே துமிந்த சில்வாவைக் கைது செய்யுமாறு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அச்சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு அணு உலைகள் விற்பனையா: சீனா மறுப்பு.
பாகிஸ்தானுக்கு மேலும் 2 அணு உலைகளை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாகிஸ்தானில் மின் உற்பத்திக்காக அணு உலை தொழில்நுட்பத்தை வழங்க சீனா முன்வந்தது. அதன்படி பஞ்சாப் மாகாணம் சாஸ்மா பகுதியில் 2 அணு உலைகள் அமைக்க சீனாவுடன் 2009ம் ஆண்டு பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த மே மாதம் அணு உலை அமைக்கும் பணிகளை பிரதமர் யூசுப் ரசா கிலானி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளை நிறுவன பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக சீன தேசிய அணு கழகமும் பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
இதை சீன அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லீ வீமின் கூறுகையில், பாகிஸ்தானில் மேலும் 2 அணு உலைகளை சீனா அமைத்து தரும் திட்டம் எதுவும் இல்லை.அணு உலைகளை சீன நிறுவனம் அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளதாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணுமின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க, சர்வதேச அணு ஆராய்ச்சி கழகம் மற்றும் சர்வதேச விதிமுறைகளின் படிதான் சீனா உதவி செய்து வந்துள்ளது. அணுமின் உற்பத்தி நிலையம் அமைக்க முதலீடும் செய்துள்ளது.
கழிவறைக்கு பயன்படுத்தும் காகிதங்களில் ஒபாமாவின் புகைப்படங்கள்.
அமெரிக்க அதிபராக கடந்த 2009ல் பதவியேற்ற ஒபாமா அடுத்த ஆண்டு வரவுள்ள அதிபர் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்.அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று கழிவறை பேப்பர்களில் அவரது படத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
ஒபாமா டாய்லெட் பேப்பர் டாட் காம் என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளது. ஒரு ரோல் 10 டொலர். ஒபாமா ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டையும் சிறு தொழில்களையும் காப்பாற்ற இந்த டாய்லெட் பேப்பரை வாங்குங்கள் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் உள்ளாடை, செருப்புகளில் தலைவர்கள், சாமி படங்களை அச்சிட்டு விற்பது சகஜம். இதை மரியாதை குறைவாக அவர்கள் நினைப்பதில்லை.ஆனால் ஒபாமாவை கேவலப்படுத்தும் நோக்கிலேயே டாய்லெட் பேப்பரில் அவரது படத்தை அச்சிட்டுள்ளனர்.
ஐரோப்பிய யூனியனுடான ஒப்பந்தத்தை சீர் செய்ய வேண்டும்: கமரூன்.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்களைத் திரும்பவும் சீர் செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் பல விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றாலும் அதை விட்டு முற்றிலுமாக வெளியேறவும் இல்லை.ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டனின் பழமைவாதிகள் கருதுகின்றனர். கடந்த மாதம் 81 பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தி ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்வதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று கேமரூனிடம் வலியுறுத்தினர்.
பிரதமர் தமது வெளியுறவுக் கொள்கை குறித்து லண்டனில் ஒரு பெரிய உரையாற்றினார். இந்த உரையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 உறுப்பு நாடுகளும் தம்முள் எத்தகைய ஒன்றிணைப்பை எதிர்காலத்தில் விரும்புகின்றன என்ற வினாவை எழுப்புகின்றன. இந்த வினாவை எழுப்ப தமக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார யதார்த்தத்தை விட்டு விலகியதாகத் தமக்குத் தாமே வெளிப்படையாகத் தெரியாத ஒரு முடிவைத் தேடிக் கொண்டதாக இன்று ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது.இதற்கு என்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்பதை நாம் கேட்டறியலாம். ஒன்றியத்தை மறு வடிவமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும். இதில் தனது நாட்டின் நன்மையோடு மற்ற 26 நாடுகளின் நன்மையும் சேர்ந்திருக்கிறது. இந்த நாடுகளின் வளர்ச்சி, செல்வ வளம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் அக்கறை காட்டும் வகை மறுவடிவமைப்பு இருக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியங்களின் சீரமைப்பு பற்றிப் பேச்சுவார்த்தையில் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருக்கின்றனர். ஒன்றியத்தை விட்டுப் பிரிந்து செல்வது தனது நோக்கமல்ல நாமாகச் சீரமைக்காவிட்டால் அந்தப் பணி நமது ஒப்புதல் இல்லாமல் தாமாகவே காலப்போக்கில் நடந்துவிடும். இந்தச் செயலை சுங்கவரியில்லாத வர்த்தகத்தையும் சந்தையையும் எதிர்பார்ப்பவர்கள் நடத்தி விடுவார்கள்.பிபிசியின் அரசியல் செய்தி நிருபர் ராயின் பிராண்ட் நாங்கள் சந்தேகப் பிராணிகள் என்பதால் சந்தேகக்கண் கொண்டு பார்த்துச் சரிசெய்ய விரும்புகிறோம் ஒரே சந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் யூரோவை நிலைப்படுத்தும் முயற்சிகளில் நாம் காட்டும் கவனம் சிதறக்கூடாது.
லிபியாவில் பிரிட்டனின் தலையீடு குறித்துப் பேசிய பிரதமர் கடாபியின் ராணுவம் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கூறினார். அடுத்த ஆண்டு சோமாலியாவில் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்று நடத்தப்படும் என்றார்.பிரிட்டன் சுற்றுலாப்பயணிகளைத் தாக்கும் சோமாலியக் கொள்ளைக்காரர்கள் ஒடுக்கப்படுவர். ஏடன் வளைகுடா பகுதியில் பயணிக்கும் கப்பல்களை கொள்ளையரிடமிருந்து பாதுகாக்கப்படும் என்றும் கமரூன் தெரிவித்தார்.
மக்கள் நலன் கருதி அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஜோர்டான் மன்னர்.
நாட்டின் நலன் கருதி சிரியா அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஜோர்டான் மன்னர் வலியுறுத்தியுள்ளார்.சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இப்போராட்டங்களில் ராணுவ வன்முறைக்கு 3,500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா தெரிவித்து உள்ளது. தற்போது அரபு லீக்கில் சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.
இன்னும் மூன்று நாட்களில் அரபு லீக் ஒப்பந்தத்தை சிரியா நடைமுறைப்படுத்தாவிட்டால் சிரியா மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அரபு லீக் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபு லீக்கின் இந்த நடவடிக்கையால் கோபம் அடைந்த சிரியா அதிபர் அசாத் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரபு லீக் நாடுகள் வலியுறுத்தியும் கூட பிடிவாதம் காட்டமால், நாட்டின் நலனுக்கான அதிபர் பஷர் அல்-அசாத் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். உடனே எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புவி வெப்பமடைவதால் பகல் பொழுதின் வெப்பம் அதிகரிக்கும்: விஞ்ஞானி தகவல்.
புவி வெப்பமடைவதால் இனி பகற்பொழுதின் வெப்பம் 50 டிகிரியை எட்டும் என ஜேர்மனியின் கீல் பல்கலைகழக விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.கடலறிவியலுக்கான லீப்நிஸ் ஆய்வகத்தின் பேராசிரியர் மோஜிப் லத்தீஃப் ரேடியோ பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, ஐ.நா அதிகரித்து வரும் வெப்பம் குறித்தும் அதன் மோசமான விளைவுகள் குறித்தும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. பகல்வெப்பம் கூடுவதால் வயதானவர், நோயுற்றோர், நலிந்தவர் பெரிதும் அவதிப்படுவர், புனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி குறையும் என்றார்.ஐ.நா.வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இனிவரும் 90 ஆண்டுகளில் முதல் ஐந்து டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கலாம். இதனால் மத்திய ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவில் வறட்சி பெருகும்.
சுட்டெரிக்கும் சூரியனால் வெப்பமாகும் தண்ணீரால் கடல் கொந்தளிப்பு ஏற்படும். வறட்சியும் புயலும் பேரிழப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றது.ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மார்கெல் கூறுகையில், 2010ல் கேன்கனில் நடந்த கூட்டத்தில் புவி வெப்பமாவதைத் தடுக்கத் திட்டமிட்ட முயற்சிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை, இலக்கு நிர்ணயித்த செயல் திட்டங்களை நாம் உருவாக்கி விரைவுபடுத்த வேண்டும். சட்ட ரீதியான ஒப்பந்தங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
செய்தியாளரான மாஜி அதிபர் பில் கிளிண்டனின் மகள்.
அமெரிக்க மாஜி அதிபர் பில் கிளிண்டன்- அந்நாட்டின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தம்பதியனரின் மகள் செல்சியா கிளின்டன் ஆவார்.இவர் தற்பொழுது NBC(National Broadcasting Company) தேசிய ஒளிபரப்பு நிறுவனத்தில் சிறப்பு செய்தியாளர் பணியில் சேர்ந்துள்ளார்.
என்.பி.சி தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான "மேக்கிங் ஏ டிபரன்ஸ்"(Making A Difference) நிகழ்ச்சிக்காக செல்சியா சிறப்பு செய்திகளை தருவார் என்று தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.போற்றுதற்குரிய நற்செயல்களை செய்யும் தனிநபர்கள் பற்றியும் நிறுவனங்கள் பற்றியும் செல்சியா செய்திகள் வழங்குவார் என்றும் அவை நைட்லி நியூஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் எனவும் அந்நிறுவன தலைவர் ஸ்டீவ் கார்பஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செல்சியா கிளின்டன் ஒரு சிறந்த பெண்மணி. அவரது சேவையால் என்.பி.சி நிச்சயம் பயனடையும் என தான் நம்புவதாகவும், பணியில் அர்ப்பணிப்பு, தனித்திறமை ஆகியனவற்றால் செல்சியா என்.பி.சி.க்கு சிறப்பான செய்திகளை தருவார் என தாங்கள் நம்புகிறோம் எனவும் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் செல்சியாவின் முதல் நியூஸ் கவரேஜ் எப்போது ஒளிபரப்படும் என்பது குறித்தோ, அது எதைப் பற்றி இருக்கும் என்பது குறித்தோ என்.பி.சி., நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.31 வயதாகும் செல்சியா கிளிண்டன் தற்போது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ளார். சுகாதார படிப்பில் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஸ்டான்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பயின்றார். இதற்கு முன்னர் மெக்கின்சி அண்ட் கோ என்ற கல்சன்டிங் நிறுவனததில் பணியாற்றியுள்ளார்.இவை தவிர தனது தந்தையின் தொண்டு நிறுவனப் பணிகளையும் அமெரிக்கன் பேலேட் பள்ளியின் நிர்வாகப் பணிகளையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: பிரான்ஸ் உறுதிமொழி.
நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர்.இக்கொடுமையை எதிர்த்து பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெஸ்ன் ஜுப்பே குரல் எழுப்பினார்.
பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான டோட்டல் தன் கச்சா எண்ணெயை ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கும் நைஜீரியாவில் இருந்து பெறுகின்றது. இதனால் பிரான்சுக்கும் நைஜீரியாவிற்கும் இடையே நல்ல நட்புணர்வும் வியாபாரத் தொடர்பும் உண்டு.
பிரான்ஸ் தன் நட்பு நாடான நைஜீரியாவில் அமைதி நிலவ வேண்டுமென்று விரும்புவதால் அங்குள்ள  தீவிரவாதிகளை ஒழிப்பதில் முனைப்புக் காட்டுகின்றது.உளவுத் துறை உதவி, தகவல் பரிமாற்றம் ராணுவப் பயிற்சி என அனைத்து உதவிகளும் செய்ய பிரான்ஸ் தயாராக இருப்பதாக நைஜீரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒலுக்பெங்கா அஷிரு ஜுப்பே தெரிவித்தார்.
ஜுப்பே நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் அதிபர் குட்லக் ஜொனாதனைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பிறகு அளித்த பேட்டியில் அதிபர் ஜொனாதன், பிரான்ஸ் அதிபரின் மிகப்பெரிய உதவியும் நட்பும் ஐவரி தீவில் அமைதியை கொண்டு வர உதவியது. அவரது உதவியின்றி இதைச் சாதித்திருக்கத் தம்மால் இயலாது என்றார்.ஜுப்பே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான வடக்குப் பகுதியில் உள்ள கானோ நகருக்கு வந்து வன்முறையால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சாஹேலில் அல்கொய்தாவும், சோமாலியாவில் மக்ரெபும், கென்யாவில் அல் ஷபாபும், இங்கு வடக்கு நைஜீரியாவில் போகோவும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அதை தாம் ஒடுக்கப் போவதாகவும் உறுதியளித்தார்.தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் ஒரு நாகரீகத்திற்கும் மற்ற நாகரீகத்துக்கும் இடையிலானது அல்ல. ஒரு நாட்டுக்கும் அடுத்த நாட்டுக்கும் இடையில் நடப்பதும் அல்ல. வெறித்தனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலானது என்பதால் சர்வதேச சமூகம் மொத்தமாக இணைந்து தன் முழு பலத்துடன் எதிர்க்க வேண்டும் என்றார்.
சீனா போன்ற பொருளாதார பலம் பெற்ற நாடுகளுடன் வியாபாரம் செய்வதே நல்லது: கனடா அமைச்சர்.
கனடா தன் பொருட்களுக்கான சந்தையை தேடி ஆசியா கண்டத்தின் வளர்ந்த நாடான சீனாவிற்கு வந்திருப்பதாக கனடா நிதியமைச்சர் ஜிம் ஃபிளாஹெர்ட்டி தெரிவித்தார்.
ஒரு நாள் கனடாவின் எண்ணெய் நுகர்வோரில் மிகப்பெரிய பங்கை சீனா வகிக்கும் என்று தெரிவித்தார்.சீனாவின் சந்தையைப் பலரும் குறி வைத்திருப்பதாகக் கூறிய CTV பீஜிங் பிரிவின் தலைவர் பெண் ஒ ஹாரே பைனே, 2030ல் அமெரிக்காவிடம் பெரிய எண்ணெய்ச் சந்தையாக சீனா விளங்கப் போகிறது என்றார்.
ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவும் எண்ணெய் உற்பத்தியில் தீவிரமாக இருப்பதனால் சீனாவின் சந்தைக்கு நல்ல போட்டி உண்டு.கனடா எண்ணெயை ஆல்பெர்ட்டாவில் இருந்து பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்குக் கொண்டு வந்து பின்பு சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்குத் தேவையான கட்டமைப்பை கனடா உருவாக்க வேண்டும். இயற்கை எரி வாயுவையும் கனடா சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறது.
அமெரிக்கா கனடாவில் தன்னுடைய பைப்-லைன் திட்டத்தைத் தாமதப்படுத்துகிறது. இதனால் கனடா வேறு சந்தையைத் தேடுகிறது. வளர்ந்த நாடுகளை விட வளர்ந்து வரும் நாடுகளே நல்ல சந்தைக் களமாக விளங்கும் என்று கிரேக் மைக்கேல் கருதுகிறார்.பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடுகளிடம் வியாபாரம் செய்யாமல், சீனா போன்ற பொருளாதார பலம் பெற்ற நாடுகளுடன் வியாபாரம் செய்வதே நல்லது என்று இவர் CTV செய்தி சேனலுக்குப் பேட்டியளித்தார்.
துருக்கியில் இன்று நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பீதி.
துருக்கியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கியதால் பீதி ஏற்பட்டது. துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள வான் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் குலுங்கியது. அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். அதிர்ச்சியில் உறைந்த மக்கள் நிலநடுக்கம் என்பதை அறிந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக காண்புலி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக 2 முறை சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மொல்ல காசிம் என்ற கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் உயிர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.கடந்த மாதம் இதே வான் மாகாணத்தில் 7.2 ரிக்டர், 5.7 ரிக்டர் அளவுகளில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 644 பேர் பலியாகினர். சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். 2 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
ஈரான் மீதான பொருளாதார தடைகள் அந்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன: ஒபாமா.
ஈரானின் அணு ஆயுதச் செயல்பாடுகளை முடக்குவதற்காக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், அந்நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என ஒபாமா தெரிவித்துள்ளார்.ஈரானின் சில குறிப்பிட்ட நிறுவனங்கள், கப்பல் கம்பெனிகள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஐ.நா.வும் இதுவரை நான்கு முறை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரான் மத்திய வங்கி உள்ளிட்ட சில முக்கிய அமைப்புகள் மீது மேலும் தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளால் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு வேகத்தில் எவ்விதத் தடையும் ஏற்படவில்லை என்பது சமீபத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜன்சி வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.ஈரான் மீதான புதிய தடைகள் அப்பகுதியில் மேலும் சீர்குலைவையே ஏற்படுத்தும் என ரஷ்யாவும், சீனாவும் கூறி வருகின்றன. இதனால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீதான தடைகள் குறித்த கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
ஹவாய் தீவில் இம்மாதம் 12 மற்றும் 13ம் திகதிகளில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஆகியோரை 13ம் திகதி தனித்தனியாகச் சந்தித்து ஈரான் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரினார். ஆனால் இரு நாடுகளும் தங்களது ஈரான் கொள்கையை மாற்றிக் கொண்ட அறிகுறி தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹவாய் தீவில் ஒபாமா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து நாங்கள் எதையும் ஆலோசிக்கவில்லை.எனினும் அணு ஆயுதங்கள் ஈரானிடம் இருப்பது அப்பகுதிக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் ஆபத்து. ஈரான் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகள் அந்நாட்டிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அந்நாடு வழிக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.
இத்தாலியில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் மரியோ மோன்டி.
இத்தாலியில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் பொருளாதார நிபுணர் மரியோ மோன்டி(68) தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தாலியை மீட்க பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாலியல் புகார், நிர்வாகத் திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது கணக்கு மீதான வாக்கெடுப்பில் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் கடந்த சனிக்கிழமை அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக பொருளாதார நிபுணர் மரியோ மோன்டியை தேர்வு செய்ய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஒப்புதல் அளித்தது.
அவரது பெயரை அதிபர் ஜியார்ஜியோ நபோலிட்டனோவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய அமைச்சரவையை விரைவில் அமைக்குமாறு மோன்டியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில் ரோமில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மரியோ மோன்டி, நாட்டின் நிதிநெருக்கடி பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், இத்தாலி விரைவில் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் என்றும் உறுதியளித்தார்.
ஆப்கனின் பாதுகாப்பு விவரங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்: தலிபான்கள் அறிவிப்பு.
ஆப்கனில் இந்த வாரம் நடக்க உள்ள அரசு மற்றும் மூத்த பழங்குடியினத் தலைவர்கள் இடையிலான மாநாடு குறித்த பாதுகாப்பு விவரங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு அரசு மற்றும் மூத்த பழங்குடியினத் தலைவர்கள் இடையிலான மாநாடு(லோயா ஜிர்கா) நடந்தது. அதில் அதிபர் ஹமீத் கர்சாய் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக அவர் அதிலிருந்து தப்பி விட்டார்.இந்நிலையில் தலிபான்கள் தங்கள் இணையதளத்தில் இந்த வாரம் 16ம் திகதி நடக்க உள்ள லோயா ஜிர்கா பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில் ராணுவத்தின் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், பாதுகாப்புத் துறை பற்றிய துல்லியமான விவரங்கள் அடங்கியுள்ளன.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆப்கன் இடையிலான உறவு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கனில் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கலந்தாலோசிக்க அரசு திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.தலிபான்களின் இந்த தகவலை ஆப்கன் அரசு மறுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள வரைபடங்கள், ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் கூறியுள்ளது.
இந்த மாநாட்டின் மீது தலிபான்கள் நிச்சயம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவர்கள் ஏன் இதை முன்கூட்டியே வெளியிட்டிருக்க வேண்டும்? எனவும் ஆப்கன் அரசு கேள்வி எழுப்பியுள்ளது.வரைபடங்களில் இடம் பெற்றுள்ள ஆப்கனில் உள்ள அமெரிக்கப் படைத் துணைத் தளபதி கர்டிஸ் ஸ்கேபரோடியின் கையெழுத்து போலி என நேட்டோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. தலிபான்கள் வெளியிட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அனைத்தும் உண்மைதான். வரைபடங்களில் உள்ள விவரங்கள் கடந்தாண்டு விவரங்களை ஒத்துள்ளன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இவை அனைத்தும் போலி என்றால் தலிபான்களுக்கு எதிர்ப்பு பிரசாரம் தீவிரமடைய வாய்ப்பு உண்டு. உண்மையென்றால் ஆப்கன் பாதுகாப்பு படைக்குப் பெரிய சவால் காத்திருக்கிறது.
நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் யுனெஸ்கோ: கத்தார் நாடு உதவிக்கரம்.
யுனெஸ்கோவின் கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவியை அதிகரிக்கப் போவதாக கத்தார் நாடு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு முழு உறுப்பினர் அந்தஸ்தை யுனெஸ்கோ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களது நிதியுதவியை நிறுத்தப் போவதாக அறிவித்தன. இதனால் யுனெஸ்கோவின் கல்வித் திட்டங்களுக்கான பட்ஜெட்டில் 6.5 கோடி டொலர் துண்டு விழுந்தது.இக்கல்வித் திட்டங்கள் ஐ.நா.வின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்குத் திட்டத்தின் கீழ் செயல்படுபவை. இந்நிலையில் யுனெஸ்கோவின் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க கத்தார் முன்வந்துள்ளது.
கத்தார் மன்னரின் மனைவி மூசா பின் நசீர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியுதவி நிறுத்தப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். புத்தாயிரம் இலக்கு 2015ல் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில், தனது குறிக்கோளுக்கு அனைத்து உறுப்பினர் நாடுகளும் ஆதரவு தரும்படியும் அவர் கோரியுள்ளார்.புத்தாயிரம் இலக்கின் தொடக்கக் கல்விப் பிரிவின் சிறப்பு ஆலோசகராக மூசா பின் நசீர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபு லீகில் இருந்து சிரியா வெளியேற்றம்: வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் கண்டனம்.
அரபு லீகில் இருந்து வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து சிரியா தனது கடும் கண்டனத்தையும் கோபத்தையும் தெரிவித்துள்ளது.சிரியா அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக அந்நாட்டில் எழுந்துள்ள மக்கள் போராட்டங்கள், ராணுவ வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றன.இதற்குக் கண்டனம் தெரிவித்த அரபு லீக் ஒரு ஒப்பந்தத்தையும் தயாரித்தது. அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதாக கூறிய அதிபர் அசாத் அதற்கு மாறாக ராணுவ வன்முறையை மேலும் தொடர்ந்தார்.
இதனால் கடந்த வார இறுதியில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த அரபு லீக் கூட்டத்தில் சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இம்மாதம் 16ம் திகதிக்குள்(நாளை) ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் பொருளாதார, அரசியல் தடைகளை சிரியா சந்திக்க நேரிடும் என அரபு லீக் எச்சரித்தது.
இந்நிலையில் இதுகுறித்து சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல் முவாலெம் கூறுகையில், சிரியாவை அரபு லீகில் இருந்து நீக்கியது சட்டவிரோதம். இது ஒரு அபாயகரமான நடவடிக்கை. அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் அரபு லீக் இவ்வாறு நடந்திருக்கிறது. சிரியாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் வீழ்ந்து விடும். சிரியா லிபியா அல்ல என்றார். எனினும் டமாஸ்கசில் உள்ள சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாட்டுத் தூதரகங்கள் தாக்கப்பட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF