Monday, November 28, 2011

இன்றைய செய்திகள்.

நாளைய எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு ஜ.ம.மு. தலைவர்கள் உட்பட பலரும் பங்கேற்பர்!- திஸ்ஸ அத்தநாயக்க.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சியினால் நாளை கொழும்பில் நடத்தப்படவுள்ள எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்று... .....அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
நாட்டை சீரழித்து பொதுமக்களைப் படுபாதாளத்தில் தள்ளும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இதனால் கட்சி பேதங்களை மறந்து எதிர்ப்புக் கூட்டத்தில் அனைவரும் பங்குபற்ற முன்வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பறிமுதல் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்தும் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நாளை செவ்வாய்க்கிழமை எதிர்ப்புக் கூட்டத்தினை நடத்தப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்ததுடன் இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏனைய கட்சிகளுக்கும் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனையும் ஐக்கிய தேசியக் கட்சி அழைத்திருந்தது.
இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு இழுத்தடிக்கப்படுதல் போன்ற விடயங்களும் எதிர்ப்புக் கூட்டத்திற்கான காரணங்களில் உள்ளடக்கப்பட வேண்டுமென்று மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக மக்கள் முன்னணியும் எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்குமென்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று மனோ கணேசனை அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றுக்காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொண்டார்.
இதன்போது எதிர்ப்புக் கூட்டத்திற்கான காரணங்களில் அரசியல் கைதிகளின் விடுதலை, இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவது என்பவற்றையும் இணைத்துக் கொள்வதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு மனோ கணேசன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள எதிர்ப்புக் கூட்டம் தொடர்பில் ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது,அரசியல் கைதிகளின் விவகாரம் நாட்டில் மேலோங்கியுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் எவ்விதமான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதைவிட அரசை விமர்சிப்பவர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறை வைக்கப்படுகின்றனர். குறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சிறை வைப்பானது அரசின் தனிப்பட்ட பழிவாங்கலேயாகும்.அதேபோன்று தான் புதிய பறிமுதல் சட்ட மூலத்தின் ஊடாக பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை பறிமுதல் செய்து அவற்றை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக்கப் போவதாக அரசு கூறுகின்றமை வேடிக்கையாக உள்ளது.ஏனென்றால் இன்று மின்சார சபை, போக்குவரத்து மற்றும் புகையிரதம் உட்பட இன்னோரன்ன அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தில் இயங்குகின்றன. இவற்றையே முறையாக நிர்வகித்துக் கொள்ள முடியாத அரசு எவ்வாறு தனியார் நிறுவனங்களை பாதுகாக்கப் போகின்றது. எனவே அரசாங்கம் போலித்தனமான காரணங்களைக் கூறி பொதுமக்களை வதைக்கின்றது.
வரவு செலவுத் திட்டமென்ற பெயரில் நாட்டு மக்களின் நிவாரண உதவிகளை அரசாங்கம் சூறையாடியுள்ளது. சர்வதேசத்திற்கு அடிபணியப் போவதில்லை என்று கூறிய அரசாங்கம் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கான நிவாரணங்களை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே பிரதான காரணமாகும்.
எனவே பொதுமக்கள் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஹைட்பார்க்கில் மேற்கொள்ளவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம் மட்டுமேயாகும். தொடர்ந்து ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார். 
இலங்கையில் நவம்பர் மாதம் வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக்கொள்ளும்! ஜனாதிபதி மகிந்த.
இலங்கையில் சில காலங்களுக்கு முன்னர் நவம்பர் 27ஆம்திகதி வருகிறதென்றால் அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்ளும் பிள்ளைகளை ஒருவாரத்திற்கே பாடசாலைக்கு அனுப்பவதற்கு பயப்படுவார்கள் ஆனால் இன்றைய நவம்பர் மறக்கமுடியாத பொன்நாளாக மாறியிருக்கிறது என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.தெற்கே அதிவெக நெடுஞ்சாலையினை  இன்று  திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார். 
அப்போதிருந்த அரசாங்கங்கள் அதனை அனுமதித்து சர்வதேசத்திற்கு காட்டினர். ஆனால் நாம் அதற்கு இம்முறை இடம்கொடுக்கவில்லை. நான் பிரதமராக இருந்தபோது மன்னார் - மடுவில் வீதி ஒன்றை அபிவிருத்தி செய்தேன். அதனை திறந்து வைக்க மடு செல்ல வேண்டுமானால் புலிகளிடம் அனுமதி பெறவேண்டும் என கூறினர். 
பாதையை அமைத்து, பிரதமர் ஒருவர் அதனை திறக்க புலிகளிடம் அனுமதி கோர வேண்டி ஏற்பட்டது. ஆனால் நான் அனுமதி கோரவில்லை. அங்கு போகவும் இல்லை. அப்படியான நாட்டில்தான் இன்று அனுமதி இன்றி செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது!– விமல் வீரவன்ச விமர்சனம்.
நாட்டின் கடன் சுமை வெகுவாக அதிகரித்துள்ளது என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனையில் கடன் சுமையை குறைப்பதற்கு ஏதேனும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டனவா?
இது தொடர்பில் எதிர்க்கட்சிகளும் கவனம் செலுத்தவில்லை.நாட்டின் மொத்தக் கடன் சுமை 5000 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.70களில் மொத்தக் கடன் சுமை 22 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தற்போது செலவு செய்வதில்லை.
அவர்களை விடவும் இலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செலவு செய்கின்றனர்.சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்ட போதிலும் நாட்டின் கடன் சுமையை குறைப்பது எவ்வாறு என்பது பற்றி எதிர்க்கட்சி கூட கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஜனாதிபதி திறந்து வைத்த அதிவேக வீதியில் இன்று வாகன விபத்து!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது வாகன விபத்து பதிவாகியுள்ளது.
இந்த வாகன விபத்து இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – காலியை ஒரு மணித்தியாலத்தில் இணைக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ என்ற இடத்தில் கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.மிக வேகமாகச் சென்ற கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த இருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஹொறன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அதிவேக நெடுஞ்சாலை இலங்கைக்கு புதிது என்பதால் அதில் பயணம் செய்யும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
70ஆயிரம் அமெரிக்க டொலர்களுடன் வந்த நைஜீரிய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.
நைஜீரிய பிரஜையொருவர் 70,000 அமெரிக்க டொலர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.20 மணியளவில் டுபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானத்தில் மேற்படி நபர் இந்தப் பணத்தொகையை கொண்டு வந்ததாகவும் இது தொடர்பில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நைஜீரிய பிரஜையிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, மாலபேயில் இயங்கும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு இந்தப் பணத்தொகையைத் தான் கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யசூசி அகாசி - மஹிந்த ராஜபக்ச இடையே அலரி மாளிகையில் சந்திப்பு.
இலங்கை வந்துள்ள ஜப்பானிய சமாதான தூதுவர் யசூசி அகாஷிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரிமாளிகையில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.இச் சந்திப்பின் போது  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெற்கு அபிவிருத்தி நெடுஞ்சாலையை திறந்து வைப்பதற்காக கடந்த சனிக்கிழமை ஜப்பானிய சமாதான தூதுவர் யசூசி அகாஷி இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு மலேசியாவில் பெண் ஓட்டுநர்கள் நியமனம்.
பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க மலேசிய வாகனங்களில் பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் அதிகரித்து வரும் கொலை, கற்பழிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.பெண்கள் பயம் இல்லாமல் எந்த நேரத்திலும் தனியாக பயணிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.தனியாக வரும் பெண் சுற்றுலா பயணிகளுக்கு பெண் ஓட்டுநர்கள் பெரிதும் உதவியாக இருப்பார்கள். இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் சிறிய ஹெலிகொப்டர் மரத்தில் மோதி விபத்து.
கனடாவில் லேப்ரடார் நகரத்தின் அருகே உள்ள காடுகளில் மரங்களின் மீது சிறிய ஹெலிகொப்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இருந்தாலும் ஹெலிகப்டரில் இருந்த 54 வயதுடைய ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
ராயல் நியூ ஃபௌண்லாந்து காவல் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஸ்டீபன் பிட்ஜெரால்டு என்பவர் இந்த விபத்து பற்றித் தெரிவிக்கும் போது, ஹெலிகொப்டரை ஓட்டி வந்தவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சோதனை முடிந்த பின்பு சில மணி நேரங்களில் வீடு திரும்பினார் என்றார்.
மேலும் தெரிவிக்கையில், லேப்ரடார் நகரத்திற்கு மேற்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ரோஸ் ஏரியின் அருகே இருந்த சிறுமரக்காடுகளின் மீது ஹெலிகொப்டர் பறந்த போது கனடிய நேரப்படி காலை 8.40மணிக்கு விபத்தில் சிக்கியதாக தெரிவித்தார்.போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜுலி லாரோக்ஸ் இந்த விபத்து குறித்து கூறுகையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
தீவிரவாதத்தை எதிர்த்து பிரான்ஸ் – நைஜீரியா கூட்டுமுயற்சி.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து பிரான்சும், நைஜீரியாவும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது.பிரான்ஸ் நாட்டின் தலைநகருக்கு வருகை தந்த நைஜீரியாவின் ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் 75,450 பில்லியன் யூரோவை கடனாகப் பெறும் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பிரான்சில் மூன்று நாட்கள் தங்கியிருந்த நைஜீரிய ஜனாதிபதி ஜோனாதன் இருநாடுகளும் இணைந்து பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்க்கும் என்று தெரிவித்தார்.
பிரான்சுடன் இணைந்து உலக வங்கியும் இந்த பேருந்துத் திட்டத்திற்கு நிதி உதவி செய்யத் தயாராக இருக்கிறது. இந்த 330 பில்லியன் யூரோ நிதி உதவி கிடைக்கும் போது 2014/2015ஆம் ஆண்டு லாகோஸ் மாநகரத்தின் பேருந்து போக்குவரத்து செம்மையாகி இருக்கும்.
லாகோஸ் மாநகரம் 15 பில்லியன் மக்களைக் கொண்டது. சஹாரா பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் இதுவும் ஒன்று. புகழ்பெற்ற வர்த்தகஸ்தலமும் ஆகும். எண்ணெய் ஏற்றுமதித் தொழிலிலும் சிறந்து விளங்குகிறது.ஆனால் இந்த ஊருக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மக்கள்தொகைக்கு ஏற்ப அமையவில்லை. 1980 ஆம் ஆண்டுகளில் காலத்திய பேருந்து போக்குவரத்து முறையே இப்போதும் இருந்துவருவதால் இதனை நவீனப்படுத்த நைஜீரியாவுக்கு பிரான்சும் உலகவங்கியும் உதவ முன்வந்துள்ளது.
இந்தோனேசியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: மூன்று பேர் பலி.
இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மகாகம் ஆற்றின் குறுக்கே 700 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது.தெங்கராங் மற்றும் சமரிங்டா ஆகிய 2 நகரங்களையும் இணைக்கும் விதமாக இந்த பாலம் அமைந்துள்ளது. எனவே இந்த பாலத்தில் எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நடைபெறும்.
இந்த பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பேருந்து, கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்தன.இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்தனர். ஆற்றுக்குள் விழுந்த ஏராளமானவர்கள் நீந்தி உயிர் தப்பினர்.
ஜேர்மனியை வந்தடைந்த அணு கதிர்வீச்சுக் கழிவுகள்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜேர்மனிக்கு ரயிலில் அனுப்பப்பட்ட கதிர்வீச்சுக் கழிவுகள் சனிக்கிழமை(25.11.2011) ஜேர்மனியை வந்தடைந்தன.சுமார் 20,000 பேர் ஜேர்மனியின் டேனென்பெர்கில் கூடி நின்று கோஷம் போடுவார்கள் என்று எதிர்பார்த்தது பொய்யாகிவிட்டது. எதிர்பார்த்ததை விட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.
இதற்குக் காரணம் ஜப்பானின் புகுஷிமா பேரிடருக்குப் பின்பு ஜேர்மன் அரசுதான் அணுசக்தியை இனி தடைசெய்யப் போவதாக அறிவித்ததால் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் அமைதி ஆகிவிட்டனர்.
டேனென்பெர்க் வந்திறங்கிய கதிர்வீச்சுக் கழிவுகள் அங்கிருந்த 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கோர்லெபென் என்ற ஊரில் சேமித்து வைக்கப்படும்.நார்மண்டியில் ரயில் புறப்பட்டதில் இருந்து டேனென்பெர்க் வந்து சேரும்வரை ஆங்காங்கே சிற்சில போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்றன. இதனால் ரயிலின் வேகமும் ஆங்காங்கே குறைந்தது.நியூன்கிர்சென் என்ற ஊரில் பேராட்டக்காரர்கள் ரயிலை மறித்தனர். அங்கு எஞ்சின் மாற்றுவதற்காக ரயில் ஐந்துமணி நேரம் நின்றது. அப்போது அங்கிருந்த தடத்தில் உள்ள கப்பிக்கற்களை போராட்டக்காரர்கள் அகற்றினர்.
கோர்லெபென் ஊருக்கு அருகில் உள்ள மெட்ஸிங்கெனில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சிற்சில இடங்களில் வன்முறை வெடித்தது. முகமூடி அணிந்த பத்துப்பேர், செங்கல் மற்றும் புகை குண்டுகளால் பொலிசாரைத் தாக்கினர்.ஆனால் இவர்களைக் காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. தப்பி ஓடிவிட்டனர் என்று AFP செய்திகள் தெரிவிக்கின்றன. முகம்தெரியாத நபர்கள் சிலர் இரண்டு கார்களுக்குத் தீ வைத்ததாகக் கூறினர்.
வற்புறுத்தி செய்யப்படும் திருமணங்கள் செல்லாது: அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம் அறிமுகம்.
விருப்பம் இல்லாதவர்களை வற்புறுத்தி செய்து வைக்கப்படும் திருமணங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம் உருவாகவுள்ளது.இந்த புதிய சட்டமானது மனித கடத்தல் மற்றும் நவீன அடிமைத்தனத்துக்கு எதிரான அரசாங்க முயற்சியில் ஒன்று என்று அவுஸ்திரேலியாவின் பெண்கள் தகுதிநிலை துறைக்கான அமைச்சர் கேட் எல்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் செய்ய வேண்டுமா இல்லையா என்பதற்கும், யாரை திருமணம் செய்வது என்பதை முடிவு செய்வதற்கான உரிமை ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு என்றும் அமைச்சர் கேட் கூறியுள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் 16 வயது பெண் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்வதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் அவரை லெபனான் அனுப்ப முயற்சி செய்தபோது அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு மாறாக நடக்கும் திருமணத்தை தடுக்க நீதிமன்றத்தை நாடியவுடன் இத்தகைய கட்டாய திருமணங்கள் குறித்த புகார்கள் வெளிச்சத்துக்கு வந்தன என்பது கவனிக்கத்தக்கது.
மத்திய அமெரிக்காவில் மூன்று நாட்களில் மட்டும் 700 முறை நிலநடுக்கம்: வீதிகளில் மக்கள் தஞ்சம்.
மத்திய அமெரிக்காவில் உள்ள எல்சல்வடார் நாட்டில் கடந்த மூன்று நாட்களுக்குள் 700க்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மத்திய அமெரிக்காவில் உள்ள எல்சல்வடார் நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 700க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் நில அதிர்வு ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.இந்த நில அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் ஒன்று புள்ளி 8 முதல் 4 புள்ளி 6 வரை பதிவாகியுள்ளன. இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக மலைப்பகுதிகளில் வீடுகள் சரிந்து விழுவதால் கிராம மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். 700க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் உணரப்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.எல்சல்வடார் நாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,150 பேர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகத்திற்கு வழி விட வேண்டும்: பிரிட்டன் உள்துறை அமைச்சர் அறிவிப்பு.
பிரிட்டனில் பொதுத் துறைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் எல்லைப்பகுதியில் உள்ள சோதனை மையப் பணியாளர்களும் பங்கேற்கின்றனர்.பொதுத்துறைப் பணியாளர்கள் சுமார் 2.6 பில்லியன் பேர் தங்கள் ஓய்வூதியங்களில் புகுத்தப்பட்ட மாற்றங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பயணிகள் 12 மணிநேரம் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.எனவே எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை மையங்களில் பணி முடக்கம் ஏற்படாமல் மாற்றுப்பணியாளரை நியமிக்கப்போவதாக பிரிட்டனின் புலம்பெயர்வுத்துறை அமைச்சர் டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாற்றுப்பணியாளருக்கு உரிய பயிற்சியளித்து பணியில் அமர்த்தப்படுவர். இதனால் வர்த்தகப்பணிகள் தடையின்றி நடைபெறும். பயணிகளும் தத்தம் பணிகளுக்குத் தாமதமின்றிச் செல்லலாம் என்று டேமியன் கிரீன் கூறியுள்ளார்.வேலை நிறுத்தத்தால் சுமார் 500 பில்லியன் பவுண்டு நஷ்டம் ஏற்படலாம் என்றும், பலர் வேலை இழப்பர் என்றும் அமைச்சர்கள் எச்சரித்தனர். தேவைப்படும் அளவிற்கு மாற்று ஏற்பாடுகள் பெரியளவில் செய்யப்படவில்லை என்பது அமைச்சர் கிறிஸ் பிரையண்ட்டின் கருத்தாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி இறந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை நிருபர் மரணம்.
அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடியை சுட்டுக் கொன்ற செய்தியை முதன் முதலாக வெளியிட்ட நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் டாம் விக்கர் காலமானார்.கடந்த 1963ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி அமெரிக்காவின் டீலே பிளாசா பகுதியில் காரில் சென்ற போது ஜனாதிபதி கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடைய காருக்கு பின் பிரஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் இருந்தவர் நியூயார்க் டைம்ஸ் நிருபர் டாம் விக்கர். பத்திரிகை வேலைக்கு புதியவர். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் பரபரப்படைந்தார் டாம்.அவரிடம் நிருபர்கள் வைத்திருக்கும் நோட்பேட் இல்லை. அதிபரின் நிகழ்ச்சி நிரல் குறித்து அளித்திருந்த அழைப்பிதழின் பின்பக்கமே அனைத்து தகவல்களையும் குறிப்பெடுத்தார்.உடனடியாக கைபேசியிலேயே பத்திரிகை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். சுமார் 2 பக்க அளவுக்கு அவர் கொடுத்த செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தன.
கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் நடந்த விடயங்கள் அனைத்தையும் தத்ரூபமாக அவர் விவரித்திருந்தார். நாவல் ஆசிரியராக விரும்பினார் டாம். அவர் எழுதிய நாவல்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் கென்னடி படுகொலை செய்திக்கு பின் அவர் உலகளவில் பிரபலமானார்.வெர்மான்ட் நகரின் ரோசெஸ்டர் பகுதியில் வசித்து வந்த டாம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். வடக்கு கரோலினாவில் ஏழை குடும்பத்தில் பிறந்து உலகளவில் பிரபலமான டாம் விக்கரின் மறைவுக்கு முக்கிய தலைவர்கள் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பு இல்லாத கறிகளுக்காக பன்றிகளுக்கு வினோத மருந்து: 100 பேருக்கு சிறை.
சீனாவில் மருந்து மூலம் பன்றிகளை இளைக்க செய்து அவற்றின் கறியை விற்றது தொடர்பாக 100க்கும் அதிகமானோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சீனர்கள் பன்றி கறியை விரும்பி உண்கின்றனர். இங்கு பல பண்ணைகளில் இறைச்சிக்காக பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் பன்றியில் அதிக கொழுப்பு இருப்பதால் விற்பனை குறைந்தது.
இதையடுத்து கொழுப்புகளை கறைய வைக்கும் மருந்துகளை பன்றிகளுக்கு பண்ணை உரிமையாளர்கள் கொடுத்து வந்தனர். கிளன்பூடரோல் என்ற மருந்து சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை பன்றிகளின் உடலில் செலுத்தி வளர்த்துள்ளனர். இந்த மருந்து மனிதர்களின் உடல்நலத்தை உடனடியாக பாதிக்கக் கூடியது.
இந்த மருந்து செலுத்தப்பட்ட பன்றிகள் கொழுக்காமல், இளைத்தே காணப்படும். அதன் இறைச்சியிலும் கொழுப்பு சத்து அவ்வளவாக இருக்காது. அந்த கறி அதிக விலையும் போகும்.பன்றி கறியை விற்பனைக்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் தருவார்கள். ஆனால் தடை செய்யப்பட்ட மருந்து பன்றி கறியில் கலந்திருப்பது தெரிந்திருந்தும் அதிகாரிகள் பலர் சான்று கொடுத்துள்ளனர்.
இந்த மோசடியை சீனாவின் ஹெனான் மாகாண அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளர்கள், 77 அதிகாரிகள் உள்பட 100க்கும் அதிகமானோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான லியூ ஜியாங் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் விளாடிமிர் புடின்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் மீண்டும் போட்டியிடுகிறார்.ரஷ்ய ஜனாதிபதியாக இரண்டு முறை பதவி வகித்த விளாடிமிர் புடின் மூன்றாவது முறை போட்டியிட முடியாது என்பதால் கடந்த முறை பிரதமர் தேர்தலில் போட்டியிட்டு பிரதமரானார்.
ஜனாதிபதியாக இவரது ஆதரவாளர் மெட்வடேவ் பொறுப்பேற்றார். மூன்றாவது முறை ஜனாதிபதியாகும் வகையில் சட்ட திருத்தம் இயற்றப்பட்டது.மாஸ்கோவில் நேற்று(27.11.2011) நடந்த ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சிக் கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலுக்குரிய வேட்பாளராக புடின் பெயர் அறிவிக்கப்பட்டது.தற்போதைய ஜனாதிபதி மெட்வடேவ் இதற்குரிய அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகும் வாய்ப்பு புடினுக்கு கிடைத்துள்ளது.
சிரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிப்பு.
கடந்த 8 மாதங்களாக சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து சிரியா மீது அரபு லீக் அமைப்பு மேலும் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது.எனினும் சிரிய ஜனாதிபதி பதவி விலக மறுத்து வருகிறார். ராணுவம், பொதுமக்களிடையே நடந்து வரும் மோதலில் பலர் பலியாகி வருகின்றனர், இதுவரை 3,500 பேர் பலியாகியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரபு லீக் அமைப்பின் அவசரக்கூட்டம் எகிப்தின் கெய்ரோவில் நேற்று(27.11.2011) நடைபெற்றது. இக்கூட்டத்தை அரபு லீக் பொதுச்செயலர் நபில்-இலராபி துவக்கி வைத்து பேசினார்.பின்னர் உறுப்புநாடான கத்தார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அகஹமத்பின்-ஜாஸிம் பேசுகையில், சிரியா மீது பொருளாதார தடை விதிப்பதாகவும், சிரியாவிற்கு சொந்தமான சொத்துக்கள், முதலீடுகள் அரபு லீக் உறுப்பு நாடுகளில் இருந்தால் அவற்றை முடக்கி வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறினார்.
இதன் பின் இந்த தடைகள் தடைகள் விதிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சிரியாவின் வர்த்தக ரீதியாக நெருங்கிய நட்பு நாடுகள் என்று கூறப்படும் ஈராக், லெபனான் நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தன. மொத்தம் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 19 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.இது குறித்து அரபு லீக் பொதுச்செயலர் நபில்-இலராபி கூறுகையில், சிரியா தொடர்ந்து வலியுறுத்தினால் பொருளாதார தடையை விலக்குவது குறித்து பரிசீலிப்போம். ஆனால் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர சிரியா உத்தரவாதம் தர வேண்டும் என்றார்.
மொராக்கோ பொதுத் தேர்தல்: எதிர்க்கட்சிகள் வெற்றி.
மொராக்கோ நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன.மேற்கு ஆப்ரிக்க நாடான ‌மொராக்‌கோ நாட்டில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது. ஆறாம் முகமது மொராக்‌கோ நாட்டின் மன்னராக இருந்தார்.
இந்நிலையில் அந்நாட்டின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்த சட்டம் கடந்த ஜூலை மாதம் கொண்டு வரப்பட்டு ஜனநாயக முறையில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதன்படி பாராளுமன்ற தேர்தல் கடந்த வெள்ளியன்று(25.11.2011) நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.இதில் முக்கிய எதிர்க்கட்சியான நீதி மேம்பாட்டு கட்சி(பி.ஜெ.டி) மொத்தம் 395 இடங்களில் 107 இடங்களை பிடித்தது. இதனுடன் கூட்டணி சேர்ந்த தேசிய வாத இஸ்திகூவால் கட்சி 60 இடங்களையும் பிடித்தது.
பி.ஜெ.டி கட்சியின் பொதுச்செயலர் அபிதில்லாஹ் பென்கிரேனி(60) மொராக்‌கோ நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.இவரது கட்சியில் தேசிய வாத இஸ்திகூவால் என்ற கட்சியும் கூட்டணி வைத்துள்ளதால் இக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என அபிதில்லாஹ் பென்கிரேனி கூறியுள்ளார்.
ஜனநாயக ஆதரவாளர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு.
தேர்தலை புறக்கணிக்கக் கோரிய ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த ஜனநாயக ஆதரவாளர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்டின் அபுதாபி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அகமது மன்சூர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் வளைகுடா தலைவர்களை கண்டித்தும், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலை புறக்கணிக்கக் கோரியும் வலை தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து அவர்கள் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட் உயர் நீதிமன்றம் அகமது மன்சூருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் அவரது ஆதரவாளர்களுக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.இவர்கள் அப்பீல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு சர்வதேச பொது மன்னிப்பு நிறுவனம் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜாக்சன் மரணத்திற்கு காரணமான மருத்துவருக்கு நாளை தீர்ப்பு.
மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான அவரது மருத்துவர் கன்ராட் முர்ரேவிற்கு என்ன தண்டனை என்பது நாளை(29.11.2011) அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் திகதி உலகப்புகழ் பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் அவரது பண்ணை வீட்டில் இறந்தார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வலிநிவாரணி மருந்தை அதிகம் உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என கூறினர்.
இதற்கு அவரது குடும்ப மருத்துவரான கன்ராட் முர்ரே(54) கொடுத்த ஆலோசனை தான் அவரது இறப்பிற்கு காரணம் என கூறப்பட்டு அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணையில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடந்த 7ம் திகதி லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என கூறி தீர்ப்பு வழங்கியது
இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான தண்டனை 29ம் திகதிக்கு ஒத்தி‌வைத்தது.இதைத் தொடர்ந்து முர்ரே மீதான தண்டனை விபரம் நாளை வெளியாகிறது. இதில் அவருக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும், 100 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.
பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்: அமெரிக்கா.
பாகிஸ்தானின் ராணுவ சோதனைச் சாவடி மீது நேட்டோ படை நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம்(26.11.2011) ஆப்கன் எல்லையை ஒட்டி உள்ள பாகிஸ்தானின் பைசாய் பகுதியில் உள்ள ராணுவ சோதனை சாவடி மீது நேட்டோ படை திடீரென குண்டுகளை வீசியும், ஹெலிகாப்டர்களில் இருந்து துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 28 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, பிரதமர் கிலானி, ராணுவ தளபதி கயானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எல்லை வழியாக ஆப்கனில் உள்ள நேட்டோ படையினருக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் கிலானி தலைமையில் அமைச்சரவை நேற்று அவசரமாக கூடியது. இதில் ராணுவ தளபதி கயானி உட்பட முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினர் 15 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும், உதவிகள் அனைத்தையும் நிறுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஆப்கனில் உள்ள நேட்டோ படை தளபதி ஜான் ஆலன், பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் தொடர்பு கொண்டு விவரம் கேட்டறிந்துள்ளார். இதுபோல் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முன்டர் பாகிஸ்தான் அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான அறிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், பாதிக்கப்பட்டுள்ள இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியை இந்த தாக்குதல் பயனற்றதாக்கி உள்ளதாக தெரிவித்தார்.தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியானது வருத்தமளிப்பதாகவும், இதுதொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் ஹிலாரி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
சிரியா மீது புதிய கட்டுப்பாடுகள்: கனடா வரவேற்பு.
அரபுநாடுகளின் கூட்டமைப்பு சிரியா மீது விதித்த கட்டுப்பாடுகள் துணிச்சலானவை என்று கனடாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜான் பேர்டு பாராட்டியுள்ளார்.
அரபு நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள 22 உறுப்பினர்களில் 19 பேர் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தக் கட்டுப்பாடுகள் அரபு நாடுகள் தம் முதலீட்டை நிறுத்துதல், மைய வங்கியுடன் வணிகத் தொடர்புகளை முறித்தல், சிரிய அரசின் சொத்துக்களை முடக்குதல், சிரியாவின் மூத்த அதிகாரிகளின் பயணத்தைத் தடை செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியன.சிரியாவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அதன் அண்டை நாடுகளுக்கும் ஒரு பாடமாக அமையும் என்று பெர்டு கூறினார். ஐ.நா.விடம் அரபு நாடுகளின் கூட்டமைப்பு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்படும்.
சிரியாவின் அடங்காத்தன்மையை பொறுப்பற்ற போக்கினையும் இனியும் ஏற்றுக்கொள்ள இயலாது. ஏற்கெனவே சிரிய ஜனாதிபதி பஷாரின் ராணுவத்தினர் நடத்திய வன்முறைத் தாக்குதலால் 3,500 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் அங்கு கனடாவைச் சேர்ந்தவர் எவரும் இருக்க வேண்டாம். உடனே தாய்நாடு திரும்ப வேண்டும் என்றும் கனடா அரசு தன் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்ட்ராஸ்கானின் தொலைபேசி தகவல்கள் திருட்டு.
சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவரது தொலைபேசி தகவல்களை சில நபர்கள் திருடியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இவர் தன் மனைவிக்கு அனுப்பிய குறுந்தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி கட்சியின் ஆட்கள் ஒட்டுக்கேட்டனர் என்று எட்வர்டு எப்ஸ்ட்டீன் நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸ் என்ற பத்திரிகையில் எழுதிய செய்திக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சின் உள்விவகாரதுறை அமைச்சர் கிளாடெ குயெண்ட், இந்தக் குற்றச்சாட்டு வெறும் கற்பனையே என்றார். டொமினிக் ஸ்ட்ராஸ்கான் தன் தொலைபேசியை ஏற்கெனவே தொலைத்துவிட்டார். ஒருவர் தொலைபேசியை தொலைத்தது அவர் பேரில் அவதூறு கிளப்புவதற்கான சதி கிடையாது என்று குயெண்ட் தெளிவுபடுத்தினார்.
மேலும் கூறுகையில், ஸ்ட்ராஸ்கான் மீது சுமத்தப்பட்டது பொய்க் குற்றச்சாட்டு என்றால் அவர் அதிகாரிகள் வழக்குத் தொடரலாம். நீதிமன்றத்தில் உண்மையை நிறுவலாம் என்றார்.சர்வதேச நிதியத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து இந்தக் குற்றச்சாட்டு காரணமாக வெளியேற்றப்பட்ட ஸ்ட்ராஸ்கான், உள்நாட்டு அரசியலிலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற இயலாது என்பதால் தடுமாறுகிறார்.
தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: ஜேர்மன் ஆதரவு.
தீவிரவாதிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தை ஒன்று தான் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்று ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் குயிடோ வெஸ்டர்வேலே தெரிவித்தார்.நண்பர்களுடன் பேசுவதை விட எதிரிகளுடன் பேசுவதால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதால் அடுத்த மாதம் நடக்கப்போகும் பெரிய சர்வதேசக் கருத்தரங்கிற்கு முன்பாக இந்த மாதமே தலிபான்களை ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் இணைத்து கொள்ள வேண்டும் என்று இவர் கருதுகின்றார்.
டிசம்பர் 5ம் திகதி அன்று ஜேர்மனியின் பான் நகரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்வரும் 2014ஆம் ஆண்டு நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வெளியேற்றிய பிறகு அந்நாட்டின் எதிர்காலம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கின்றனர். ராணுவத்தின் துணையால் இந்நாட்டில் வெற்றி பெற இயலாது என்று வெஸ்டர்வேலே நம்புகிறார்.தலிபான்கள் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் நேட்டோ படைகளுக்கு உதவும் அதிகாரிகளையும் அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் அடிக்கடி தாக்கி அழிக்கின்றனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தன் படைகளை இங்கு நிறுத்தியிருந்தாலும் தலிபான்கள் கடந்த பத்தாண்டுகளாகவே தங்களின் வன்முறைத் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.எதிர்வரும் 2014ஆம் ஆண்டு நேட்டோ படைகள் தங்கள் தாய்நாடு திரும்பிய பிறகும் ஜேர்மனி உள்நாட்டு ராணுவப் பயிற்சிக்காக ஆப்கானிஸ்தானில் தன் படைகளை நிறுத்தி வைக்கும் என்று ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் டெ மாய்ஜியரி தெரிவித்தார்.
வன்முறையை கைவிட்டால் தலிபான் தீவிரவாதிகளுக்கு ரூ.8000 நிதியுதவி.
வன்முறைகளை கைவிட்டால் தலிபான் தீவிரவாதிகளுக்கு மாதந்தோறும் ரூ.8,000(இந்திய ரூபாய் மதிப்புப்படி) நிதியுதவி வழங்கப்படும் என சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் உதவிப் படை அறிவித்துள்ளது.அவர்கள் மீதான படுகொலை வழக்குகள் அனைத்திலும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, இங்கிலாந்து தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன.
மதக் கொள்கைகளை கடைபிடிக்காதவர்களை தலிபான் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்று வருகின்றனர். மேலும் அமெரிக்க, இங்கிலாந்து வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் வன்முறையை கைவிட்டுவிட்டால் தலிபான்களுக்கு மாதம் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும். இங்கிலாந்து வீரர்களை கொன்ற வழக்கில் பொது மன்னிப்பும் வழங்கப்படும் என்று காபூலில் உள்ள சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் உதவி படை மேஜர் ஜெனரல் டேவிட் ஹூக் நேற்று அறிவித்தார்.இதுகுறித்து டேவிட் கூறுகையில், இந்த திட்டத்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இங்கிலாந்து வீரர்களின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வது கடினம்தான். ஆனால் அமைதி ஏற்பட வேண்டும் என்றால் இதை தவிர வேறு வழியில்லை என்றார்.
வன்முறையை கைவிட்டு அமைதி திட்டத்துக்கு முன்வரும் தலிபான்களிடம் விசாரணை நடத்த மாட்டோம். அதற்கு பதில் தீவிரவாத பாதைக்கு சென்றதற்கான காரணம் குறித்த கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை 2,700 தலிபான்கள் தேசிய ஒருங்கிணைப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்று டேவிட் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்கு ஆப்கனில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் நாளை எகிப்தில் பொதுத் தேர்தல்.
எகிப்து நாட்டில் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில் நாளை(29.11.2011) அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.30 ஆண்டு காலம் எகிப்து நாட்டை ஆண்டு வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததையடுத்து அவர் பதவி விலகினார். இந்த மக்கள் போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது.
முபாரக் பதவியை விட்டு வெளியேறியதும் இடைக்கால அரசு எதையும் அமைக்காத ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து நாடு முழுவதும் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
இதைத் தொடர்ந்து முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அறிவித்தது ராணுவம். ஆனாலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்பது தெரியவில்லை.
இதனால் ராணுவத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதலில் ராணுவம் பதவி விலகிவிட்டு, இடைக்கால அரசை அமைத்துவிட்டு, தேர்தலை நடத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
ஆனால் இதை ராணுவம் ஏற்க மறுத்து போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. மக்களை சமாதானப்படுத்தும் வகையில் 78 வயதான கமால் அல் கன்சூரியை இடைக்கால பிரதமராகவும் ராணுவம் நியமித்தது. இதையும் மக்கள் ஏற்கவில்லை.முன்னாள் சர்வதேச அணு சக்திக் அமைப்பின் தலைவரும் நோபல் பரிசு வென்றவருமான முகமது எல்பராடி தலைமையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவின் தகிரீர் மைதானத்தில் குழுமியுள்ளனர்.
இந்நிலையில் ராணுவத்தினருக்கும் ஜனநாயக உரிமை கோரும் அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.இதற்கிடையே நாளை அந்த நாட்டில் தேர்தலை நடத்தவுள்ளது ராணுவம். இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF