Monday, November 14, 2011

இன்றைய செய்திகள்.

நட்டமடையும் அரச நிறுவனங்களின் தலைவர்களது பதவிகளுக்கு ஆபத்து.
நாட்டில் தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களின் தலைவர்களது பதவிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக நட்டத்தை எதிர்நோக்கி வரும் 115 அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திணைக்களம், சபைகள், அரசாங்க நிறுவனங்கள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வருவோருக்கான ஒன்லைன் விஸா கட்டணம் குறைப்பு.
இலங்கைக்கு வரும் சார்க் நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடமிருந்து விசாக் கட்டணமாக பத்து அமெரிக்க டொலர்களையும் ஏனைய நாட்டு பிரஜைகளுக்கு 20 அமெரிக்க டாலர்களையும் அடுத்த வருடம் முதல் அறவிடவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஒன்லைன் மூலம் இலங்கை விசா பெறுவதற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்பட்டன. அதனை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு சலுகை : கரு ஜயசூரிய.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவலாக குடும்ப கூட்டமைப்பு அரசியல் அமைந்துள்ளதாகவும் இந்த நிலைமை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கருத்துக்களை அறியாமல் திடீரென நட்டமடையும் நிறுவனங்களை சுவீகரிக்கும் சட்டத்தை அரசாங்கம் அவசரமாக நிறைவேற்றியமை ஆபத்தான நிலைமையின் முன் அறிகுறியாக கருதப்பட வேண்டும்.
ஆளும் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையின் ஊடாக அரசாங்கத்தின் வலுவான ஓர் செய்தி சொல்லப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.காவல்துறையின் புலனாய்யுப் பிரிவிக்கு மேலதிகமாக ஆறு இராணுவ புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியினர் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் என பல்வேறு தரப்பினர் தொடர்பிலும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் இரண்டு நாசகாரி கப்பல்கள் கொழும்பில்.
ஜப்பானின் சுயபாதூப்பு கப்பல்களான Samidare DD-106  மற்றும் Umigiri DD-158  ஆகிய இரண்டு நாசகாரி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. Samidare DD-106 என்ற நாசகாரி கப்பலில் 180 படைவீரர்கள் பணியாற்றுகின்றனர்.
Umigiri DD-158  என்ற நாசகாரி கப்பலில் 190 வீரர்கள் பணியாற்றுகின்றனர்.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லெண்ணத்தை மையமாகக்கொண்டு வந்துள்ள இரண்டு கப்பல்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளை தவறாக எடைபோட்டது அனைத்துலக சமூகம்!- அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலர் ஆர்மிரேஜ்.
சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் நடந்தேறிய சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார்.சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பான மீளாய்வு அறிக்கையை ஒஸ்லோவில் வெளியிடும் நிகழ்வில் பேசும் போதே ஆர்மிரேஜ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபராக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க, மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் காணப்பட்ட 'தனிப்பட்ட விரோதப் போக்கு', புலிகளின் தலைவர் பிரபாகரன் போதிய நுண்திறனற்றிருந்தமை, அவர் சிறந்த தீர்மானம் எடுக்க முடியாதவராக இருந்தமையால் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அன்ரன் பாலசிங்கத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சியில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எவ்வாறு வெற்றியைப் பெற்றுக் கொண்டது போன்ற பல சுவாரசியமான தகவல்களை றிச்சார்ட் ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார்.
அன்ரன் பாலசிங்கம் பயங்கரவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்த போதும், அமெரிக்காவுக்கு அவரை அழைப்பதில் தனது நற்பெயரைப் பயன்படுத்திக் கொண்டதாக ஆர்மிரேஜ் குறிப்பிட்டுள்ளார்.
அன்ரன் பாலசிங்கத்தை அமெரிக்காவுக்கு அழைப்பதற்கான அனுமதியை இராஜாங்கத் திணைக்களம் வழங்கியிருந்த போது, சிறிலங்காவில் இராணுவ நிலைகள் தாக்கப்பட்டன.  இதனால் அன்ரன் பாலசிங்கத்தின் அமெரிக்கப் பயணத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகள் அத்துடன் முடிவுக்கு வந்தன.
அப்போது சிறிலங்கா அதிபராகக் கடமையாற்றிய சந்திரிகா குமாரதுங்கவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் போதிய ஒத்துழைப்பின்மை, தனிப்பட்ட விரோதம் ஆகியன நிலவியதுடன், பிரபாகரன் இந்த விடயத்தில் போதியளவு அறிவைக் கொண்டிராமை, மோசமான தீர்மானம் எடுத்தமை போன்றன சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளுக்குப் பெரிதும் முட்டுக்கட்டையாக அமைந்திருந்தன என்று ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.
முன்னரங்க நிலைகளுக்கு என்னை அழைத்துச் சென்ற ஜெனரல் சரத் பொன்சேகா உலங்குவானூர்தி நின்ற இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையிலும், பின்னர் இருவரும் உலங்குவானூர்தியில் பயணித்த போதும், பின்னர் முன்னரங்க நிலையில் நின்றவாறும் அரசியற் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையாது என்றும், ஆனால் இராணுவப் பிரச்சினை ஒன்றுக்கு இராணுவத் தீர்வு உள்ளது என்றும் என்னிடம் கூறினார்.
இந்த இருவிடயங்களிலும் உள்ள வித்தியாசத்தைத் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போது அனைத்துலக சமூகம் கோபத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாகியிருந்தமைக்கு தீவிரவாதம் என்ற ஒரேயொரு விடயமே பிரச்சினையாக இருந்தது.
அனைத்துலக சமூகத்தின் பெரும்பகுதி தீவிரவாதத்தை முழுமையாக விடுதலைப்புலிகளே பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதியிருந்தனர் என்றும் ஆர்மிரேஜ் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் இவ்வாறான கருத்து நியாயமற்றது - மேலோட்டமானது என்றும் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக சமூகத்தின் மத்தியில் சிறிலங்கா தொடர்பாக மிகவும் குறைந்த அக்கறையும் புரிந்துணர்வுமே இருந்துள்ளன.சிறிலங்கா விடயத்தில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதிலும், இங்கு இடம்பெற்ற பிரச்சினைகள், குழப்பங்கள் போன்றவற்றைத் தெளிவுபடுத்துவதிலும் நோர்வே பெரும் பங்காற்றியிருப்பதாகவும் ஆர்மிரேஜ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நோர்வேயின் முயற்சியைத் தான் வியந்து பாராட்டுவதாகவும், மிலிந்த மொறகொட தனக்குள்ள தனிப்பட்ட தகைமையுடன் இங்கிருந்திருந்தால், ஏன் நானும் கூட வேலையற்ற குடிமகனாகவே இருந்திருக்க வேண்டும் என ஆர்மிரேஜ் மேலும் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் சுவீகரிக்கப்பட்ட சொத்துக்கள் உரிமையாளர்களிடம் மீளளிக்கப்படும்!- ஜோன்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சுவீகரிக்கப்பட்ட சொத்துக்களை மீளவும் உரிமையாளர்களிடம் வழங்கும் என பதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.அவசரமான சட்ட மூலமொன்றின் மூலம் அரசாங்கம் நட்டமடையும் சொத்துக்களை சுவீகரித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்களை திடீரென சுவீகரித்து கொண்ட நடவடிக்கை ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை குறித்து தற்போது வெளிநாட்டு விஜயம் செய்துள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதன் பின்னர் இது தொடர்பில் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிசானாவின் பெற்றோர் சவூதி பயணம்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப் பெண் ரிசானா நாபீக்கின் பெற்றோர் சவூதி அரேபியாவிற்கு இன்று பயணம் செய்ய உள்ளனர்.ரிசானாவின் பெற்றோருடன் இலங்கை அரசாங்க அதிகாரிகளும் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்படுத்தல் மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் நிசாங்க விஜேரட்ன ஆகியோரும் ரிசானாவின் பெற்றோருடன் பயணம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரிசானா தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் நாளைய தினம் பெற்றோரும் இலங்கை அதிகாரிகளும் ரிசானாவை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும் 18ம் திகதி மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலான உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் ரிசானாவை பார்வையிடச் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படாது! ஜனாதிபதி.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படாது. அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இதன் போது அது பொதுமக்களுக்கான ஆவணமாக இருக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம் இறுதிக்கட்டப் போரின் போது மனித உரிமைகளை யார் மீறியிருந்தாலும் அவர்களை காப்பாற்ற போவதில்லை என்றும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.இந்திய என்.டி.டி.வி. க்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
செவ்வியின் போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவினால் போர்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று பயம் கொண்டுள்ளீர்களா? என்று கேட்கப்பட்டபோது,
நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றங்களை உறுதிப்படுத்துமானால் எவரையும் தாம் பாதுகாக்க போவதில்லை என்று ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளார். அத்துடன் தாம் எவருக்கும் அரணாக இருக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.எதிர்வரும் 19 ஆம் திகதி நல்லிணக்க ஆணைக்குழு, அதன் இறுதியறிக்கையை தம்மிடம் கையளிக்கும் என்றும், அதன்பின்னர் தாம் அதனை இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்படாது எனவும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இதன்போது அது பொது மக்களுக்கான ஆவணமாக இருக்கும் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.அதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் கருத்துரைத்த ஜனாதிபதி, இலங்கையின் உள்ளக பிரச்சினைகள் குறித்து உள்நாட்டிலேயே பேச்சுக்கள் நடத்தப்படவேண்டும்.
தாம் இனப்பிரச்சினை தீர்வுக்காக குழு ஒன்றை அமைத்துள்ள போதும் அந்தக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தமது அங்கத்தவர்கள் பெயர்களை அனுப்பவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சீனா நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு.
சீன நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு நிலக்கரிசுரங்கத்தில் கடந்த 12-ம் திகதி 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
சுமார் 600 அடி தொலைவில் பணியாற்றி கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் சி்க்கினர். உடனடியாக மீட்புப்படையினர் வரவ‌ழைக்கப்பட்டனர். இதில் துவக்கத்தில் 19 பேர் உடல்கள் மீட்கப்பட்டன.தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட போது அதிகளவில் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் இது ‌போன்று அடிக்கடி நிலக்கரி சுரங்க விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் 2433 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். இந்தாண்டு 2631 பேர் பலியாகியுள்ளனர். சட்டவிரோத சுரங்க தொழில் நடப்பதும், தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் ஊழியர்களை பணியில் அமர்த்துவதும் விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
தொலைபேசி ஒட்டுக்கேட்டது தொடர்பான நீதி விசாரணை தொடங்குகிறது.
நியூஸ் ஆஃப் தி வல்டு (News of the World) என்ற பத்திரிக்கை தொலைபேசி ஒட்டுக்கேட்ட குற்றத்தில் சிக்கியதால் அலுவலகத்தை மூடும் நிலை ஏற்பட்டது. இப்போது இந்த குற்றச்சாட்டு மீதான விசாரணை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி லெவிசன் முன்னிலையில் தொடங்குகிறது.நீதி விசாரணையின் இரண்டு முக்கிய அம்சங்களை லெவிசன் தெரிவித்துள்ளார். முதலாவது, பத்திரிகைத் தொழிலில் இருக்க வேண்டிய பண்பாடு, நடைமுறை மற்றும் தர்மம். இரண்டாவது, ஒட்டுக்கேட்டதனால் ஏற்பட்ட குற்ற விளைவுகள்.
பிபிசி நிருபரான பீட்டர் ஹண்ட் “இந்த விசாரணை நம் நாட்டில் பத்திரிகைத் தொழில் நடக்கும் விதத்தை மாற்றியமைக்கும்” என்றார். நீதிபதி லேவிசனின் கூறுகையில் எந்த விதமான “குற்றப் புலனாய்வில் தலையிடாது விசாரணையை” நேரில் வீடியோ எடுத்து இணைய தளத்தில் வெளியிடுகின்றனர்.
அடுத்த வாரத்திற்குப் பிறகு சாட்சி விசாரணை தொடங்கும். இந்த விசாரணையில் முக்கிய சாட்சிகளாக கொலை செய்யப்பட்ட இளம்பெண் மில்லி டெனலரின் குடும்பத்தினரும் காணாமல்போன பெண் மேடலீன் மெக்கானின் குடும்பத்தினரும் விசாரிக்கப்படுவர்.News of India இளம்பெண் மில்லி டௌலரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட விவகாரம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக அந்தப் பத்திரிகையின் இணைப்பிதழ் வெளியீடு நிறுத்தப்பட்டது. 
கனடாவிற்கு எடுத்துச்செல்லும் கந்தஹார் நினைவுச்சின்னம்.
கந்தஹாரில் உயிரிழந்த 158 கனடா வீரர்களுக்கு அவர்களைப் புதைத்த இடங்களில் நிறுவப்பட்ட பளிங்குக் கல்வெட்டு பதிக்கப்பெற்று கனடாவுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றை அரசு தீர்மானிக்கும் இடத்தில் மீண்டும் வைக்கப்படும்.
ஒட்டாவா பகுதியில் புதிய நினைவிடத்தை நிறுவ பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நகரின் கிழக்கு மூலையில் பீச்உட் கல்லறைத் தோட்டத்தில் ஏற்கெனவே பல படைவீரர்களின் கல்லறைகள் இருப்பதனால் அந்த இடத்தில் கந்தஹாரில் உயிர்நீத்த கனடா வீரர்களுக்கும் நினைவிடம் எழுப்பக்கூடும்.
இப்போது இவை கனடாவின் தலைமை அலுவலகமான இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு பின்புறத்தில் அதிகமான நடமாட்டம் இல்லாத பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கனடாவிற்கு இடம்மாற்ற செய்ய அரசு முடிவு செய்ததாக லெய்டினென்ட் கர்னல் மார்க் ஃபிலிண்ட்ட் தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை வீரர்களின் நினைவு நாளன்று நினைவுக் கல்வெட்டுகளைப் பதித்தெடுக்கும் பணி தொடங்கியது. பதித்தெடுத்த ஒவ்வொரு கல்வெட்டையும் கவனமாக மர அடுக்குகளில் வைத்தனர்.மீண்டும் கனடாவில் பொருத்தமாக நிறுவுவதற்காக ஒவ்வொரு கல்வெட்டின் அளவும் குறித்து வைக்கப்பட்டது. 158 கல்வெட்டுகளும் கனடாவிற்கு அனுப்பப்படும் என்றாலும் ஒன்று மட்டும் கந்தஹாரை விட்டு நகராது.
நேட்டோ பயிற்சி பணிக்கு கந்தஹார் வந்திருந்த கப்டன் ராபி பீரென்ஃபெங்கர் மற்றும் சார்ஜண்ட் ராபர்ட் ஷாட் ஆகியோரது இராணுவ வாகனம் வரும் வழியில் அவர்களைத் திசை திருப்புவதற்காக கலகக்காரர்கள் பெரிய பாறை ஒன்றை போட்டு வைத்து இருந்தனர். இந்தச் சம்பவம் 2003ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் நடைபெற்றது.இந்தப் பாறை காபூலுக்கு அனுப்பப்பட்டு அங்கு கனடா வீரர்களின் உயிர்த் தியாகத்துக்கு நினைவுச்சின்னமாக நிறுத்தப்படும். இந்தப் பாறை மிகவும் முக்கியமானது என்றார் லெஃப்ட்டினென்ட் கர்னல் ஃபிலிண்ட்ட்.
பிரிகேட்டியர் சக் லமாரெ இத்தகைய போர் பணிகளில் இந்த நினைவுக் கல்வெட்டுகளின் இடமாற்றம் மிகவும் முக்கியமானது. கடந்த பத்தாண்டுகளாக இங்கு ஆஃப்கானிஸ்தானில் தங்கியிருந்த வீரர்களின் ஆயிரம் பேர் தாய்நாட்டுக்குக் கிளம்பிவிட்டனர். இந்த சமயத்தில் இவர்கள் இந்தக் கல்வெட்டுகளைப் பதித்தெடுத்து செல்வது மிகவும் நெகிழ்ச்சியானதாகும் என்றார்.
கனடா வீரர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பியதும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் பாராட்டு அவர்களின் வீரத்துக்காக மட்டுமல்ல தியாகத்துக்காவும் தான்.கந்தஹார் விமானத்தளத்திலிருந்து 200 பேர் விமானங்களையும், 1800 கப்பல்களையும், 1000 இராணுவ வாகனங்களையும் தம் தாய்நாட்டிற்குக் கொண்டு போய்விட்டனர். டிசம்பர் மாதத்தில் கந்தஹார் இராணுவத் தளத்திலிருந்து கனடா ராணுவம் முற்றிலுமாக விடைபெற்றுவிடும்.
சிரியா தூதுவர் பதிலளிக்க வேண்டும்: பிரான்ஸ்.
கடந்த சனிக்கிழமை சவுதி டமாஸ்கஸ் மாநகரத்தில் சிரியா நாட்டைச் சேர்ந்த போராளிகள் சிலர் தூதரகத்திற்கு வந்து கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்த பொருட்களுக்குச் சேதம் விளைவித்தனர். இதற்கு சிரியா தூதுவர் பதிலளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் சவுதி அரேபியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் மட்டுமல்லாது, அலெப்போ, லடாகியா போன்ற ஊர்களிலும் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. அராபியர் லீக் என்ற அரபு நாடுகளின் கூட்டமைப்பு சிரியா நாட்டை தன் கூட்டமைப்பில் இருந்து அண்மையில் வெளியேற்றியது.
பஷார் அல் அஸாத்தின் ராணுவத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களை சிரியா ஒடுக்க முயன்றதால் சிரியாவை அரபுக் கூட்டமைப்பு வெளியேற்றிவிட்டது. இதில் கோபமடைந்த சிரியா அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தூதரகங்களுக்குச் சேதம் விளைவித்தது.
சவுதி அரசு சிரியாவின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தது. அரபுக் கூட்டமைப்பு பஷாரின் ராணுவ நடவடிக்கையை ஒடுக்க நினைக்கிறது. ஆனால் சிரியா இவ்வகையான வன்செயல்கள் மூலமாக சர்வதேசச் சமூகத்திற்கு அச்சுறுத்தல் எற்படுத்த முனைகிறது.சிரியாவில் நடைபெறும் ஒடுக்குதலைக் கண்டித்துச் சில மாதங்களாக பிரான்ஸ் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்புக் குழுவில் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
சிரியாவின் சர்வதேச ஒப்பந்தங்களை நினைவூட்ட அதன் தூதரான லமியா ஷக்கூரை பிரான்ஸ் தன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தது.சிரியாவின் அதிபரான பஷார் அல் அஸாத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமையன்று திரண்டனர். இவர்கள் சிரியாவை வெளியேற்றியதைத் திரும்பப் பெறுமாறு அரபு கூட்டமைப்பை வலியுறுத்தினார்.
உரமாகும் விளையாட்டு உடை மற்றும் காலணிகள்.
பூமா என்ற ஜேர்மன் நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான உடைகளையும், காலணிகளையும் தாயரித்து விற்பனை செய்கின்றது. இதன் உரிமையாளர் பிரான்ஸ் கோச் ஆவார்.அண்மையில் இவர் வெளியிட்டுள்ள செய்தியில், அதாவது இனி அவர் நிறுவனம் தயாரிக்கும் காலணி, பை மற்றும் உடைகள் பழையதாகி விட்டால் அவற்றை குப்பையில் போட்டு எறித்து விடாமல் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து உரமாக்கலாம். சுற்றுச் சூழலுடன் இணைந்து செல்லும் போக்குடையனவாய் அவருடைய நிறுவனத் தயாரிப்புகளைத் திட்டமிட்டுள்ளார்.
அவை தொழில்நுட்பச் சிறப்பும், உயிரியல் தன்மையும் உடையனவாய் விளங்கும். ஒன்று அவற்றை மறுசுழற்சி மூலமாக மீண்டும் புதுப்பிக்கலாம், அல்லது கார் உயர்களாக மாற்றலாம்.
பழைய காலணிகளையும், உடைகளையும், காரட், உருளைக்கிழங்கு தோல், முட்டை ஓடு போன்ற மக்கும் குப்பைகளோடு சேர்த்துவிட்டால் அவை மக்கி மண்ணுக்கு உரமாகிவிடும்.சென்ற ஆண்டு கோச் நிறுவனம் ஐந்தாண்டு உழைப்புடைய கிளவர் லிட்டில் பேக் என்ற பையைத் தயாரித்தது. இந்தப் பையை மறுபயன்பாட்டில் காலணி வைக்கும் பெட்டியாகப் பயன்படுத்தினார்.
இதில் 65 சதவீதத்துக்கும் குறைவான காகிதமே பயன்பட்டது. தண்ணீர், டீசல், எரிபொருள் சிக்கனமும் இந்தப் பை தயாரிப்பில் கருத்தில் கொள்ளப்பட்டது. ஜேர்மன் நுண்ணுயிரியல் அறிஞரும் உடை வடிவமைப்பாளருமான அங்கெ டொமாஸ்கெ பாலைப் பயன்படுத்தி தொழில்திறன் பெற்ற நூலைத் தயாரித்தார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹாரி பாட்டர் படத்தில் நடித்த எம்மா வாட்சனும் இத்தாலிய உடை வடிவமைப்பாளர் அல்பெர்த்தா ஃபெரெட்டியும் இணைந்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத துணிகளில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அறிமுகம் செய்தனர்.
ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு தடை: இஸ்ரேல் பிரதமர்.
ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் ‌வேண்டுகோள் விடுத்துள்ளார்.வளைகுடா நாடான ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தி‌னை மறைமுகமாக நிறைவேற்றி வருவதாகவும் இதற்காக யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையும் ஈரானை எச்சரித்துள்ளது.
ஐ.நா.விலும் ஈரான் மீது தடைவிதிக்க பரிசீலித்துவருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் அரசின் வாராந்திர மந்திரிசபை கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ கலந்து கொண்டு பேசுகையில், ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட வேண்டும், ஐ.நா. சர்வதேச சமூகம் ஆகியன அணு ஆயுத திட்டத்தை நிறுத்துமறு ஈரானை வலியுறுத்த வேண்டும்.
சர்வதேச அணுசக்தி முக‌மை மீண்டும் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தீவிர கண்காணிக்க வேண்டும். ஈரானின் இந்த செயல் சர்வதேச சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார். இதற்கிடையே இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஈரானின் அணு ஆயுதம் குறித்தும், சர்வதேச அணுசக்தி முகமை தலையிட கோரி விவாதம் நடத்தி எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக இஸ்ரேல் சபாநாயகர் அலி லர்ஜானி கூறினார்.
சர்வதேச விமானக் கண்காட்சி துபாயில் துவங்கியது.
சர்வேதேச விமான கண்காட்சி ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடான துபாயில் துவங்கியது. முதல் நாளிலயே 50 விமானங்களை முன்பதிவு செய்தது துபாய் அரசு.ஆண்டு தோறும் விமான கண்காட்சிகள் ஆசிய, ஐரோப்பா போன்ற நாடுகளில் தான் நடைபெறுவது வழக்கம். இம்முறை ‌வளைகுடா நாட்டில் நடந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாடான துபாயில் நேற்று கோலாகலமாக துவங்கியது.
இங்கு பல்வேறு நாடுகளின் விமான தயாரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் காண்காட்சி நடந்தது. மொத்தம் 5 நாட்கள் (17-ம் தேதி வரை) நடக்கும் இந்த கண்காட்சியில், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் விமானங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்து. முன்னதாக விமான சாகச நிகழ்‌ச்சிகள் நடந்தன.
பின்னர் அமெரிக்காவின் 777 ரக போயிங்க் விமானங்களை வாங்க துபாய் அரசு முடிவு செய்து அதற்கான ஆர்டரினை கொடுத்து. இதன் ‌‌மொத்த மதிப்பு 18 பில்லியன் டாலராகும். மொத்தம் 30 முதல் 50 விமானங்களை வாங்க ஆர்ட் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், அராப் எமிரேட்ஸ் தலைவர் ஷேக் அகமது பின்-மக்தும், போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளிட‌ையே நேற்று கையெழுத்தானது.
அமெரிக்காவில் மேயராக தேர்வு செய்யப்பட்ட 18 வயது பள்ளி மாணவன்.
அமெரிக்காவில் 18 வயது பள்ளி மாணவன் ஒருவன் மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்டான். அமெரிக்காவின் லோவா மாகாணத்திற்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த 11-ம் திகதி நடந்தது.இதில் அர்டாலி என்ற மாநகராட்சி மேயர் பதவிக்கு அங்குள்ள ஹாம்டன் டூமவுன்ட் என்ற பள்ளியில் படித்து வந்த ஜெர்மிமின்னிர்,18 மாணவன் மேயர் வேட்பாளராக போட்டியிட்டான். இதில் 24 ஒட்டுகள் ‌பெற்று மேயராக ‌தேர்வு செய்யப்பட்டார்.
இம்மாணவனை எதிர்த்து போட்டியிட்டவரும் தற்போது மேயராக இருந்தவருமான வெர்ஜில் ஹோமர் வெறும் 8 ஓட்டுக்கள் ‌மட்டுமே பெற்றார். இதனை அம்மாகாணத்தின் ‌கே.ஐ.எம்.டி. என்ற டி.வி.சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இது குறித்து மேயராக தேர்வு செய்யப்பட்ட மாணவன் ஜெர்மிமின்னீர் கூறுகையில், எனது தந்தை நான் பிறப்பதற்கு முன்பு இம்மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர். தற்போது நான் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றார். அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் திகதி மேயராக பதவி‌ ஏற்கவுள்ளார். நான்கு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் ஜெர்மி மின்னீர்.
பாகிஸ்தானின் பயங்கரவாத குழுக்களை தடுத்து நிறுத்துவோம்: இம்ரான் கான்.
தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுவது முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும் என பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தாரிக்-இ-இன்சாஃப் எனும் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கூறினார். 
சி.என்.என்-ஐபின் தொலைக்காட்சியில் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாகிஸ்தானிலிருந்து எந்த பயங்கரவாதக் குழுவும் இயங்கக்கூடாது. இதனை உறுதி செய்யும் விதத்தில் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும்.
இன்றிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை இந்தப் பாதையில்தான் சென்றாக வேண்டும். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தானிலிருந்து எந்த பயங்கரவாதக் குழுவும் இயங்கக்கூடாது என்பதை கொள்கை அளவில் ஏற்போம். ஏனெனில், உலகம் மாறிக்கொண்டு இருக்கிறது. ஆப்கன் விடுதலைக்கான புனிதப் போரின் போது இந்த பயங்கரவாதக் குழுக்கள் உருவாயின. ஆனால் இப்போது அவை பயனற்றவை ஆகிவிட்டன. 
இந்தியா மீது வெறுப்புடன்தான் நான் வளர்ந்தேன். நான் வளர்ந்தது லாகூரில். 1947-ல் நடந்த பிரிவினையின் போது ஏற்பட்ட கணக்கற்ற கொலைகளும் ரத்த வெறியும் இந்தியா மீது கடும் வெறுப்பை உண்டாக்கியது. ஆனால், கிரிக்கெட்டுக்காக இந்தியாவில் பயணம் செய்தபோது, இங்கிருந்தவர்கள் காட்டிய அன்பினாலும் நட்பினாலும் என்னுடைய வெறுப்பு மாயமாய் மறைந்தது.
இந்தியா-பாகிஸ்தான் உறவின் மையப்புள்ளி காஷ்மீர்தான். பயங்கரவாதமோ அல்லது ராணுவ நடவடிக்கையோ காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க உதவாது என்றார் இம்ரான் கான். 2008-ம் ஆண்டு நடந்த மும்பைத் தாக்குதல் சம்பவங்களுக்குக் காரணமான ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபிஸ் சயீத்தின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவீர்களா என்று கரண் தாப்பர் கேட்டபோது, நேரடியாக பதில் சொல்வதை இம்ரான் தவிர்த்தார்.
நான் பாகிஸ்தானில் வாழ்கிறேன் பஞ்சாப் ஆளுநர் சல்மான் தசீர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவனை கதாநாயகன் என்கிறார்கள் மக்கள். சட்டத்தின் ஆட்சியே இல்லாத ஒரு நாட்டில், கதாநாயகனாக ஆவதில் எந்த அர்த்தமும் இல்லை. இங்கு (பாகிஸ்தானில்) வாழ்க்கை மிகவும் மலிவாகப் போய்விட்டது. எனவே, என்னால் கொள்கையளவில் மட்டுமே பேச முடியும் என்று பதில் அளித்தார் இம்ரான் கான்.
ஈரான் ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள ராணுவ தளத்தில் சனிக்கிழமை குண்டுவெடித்தது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். 23 பேர் பலத்த காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பித் கானே என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்தின் அணு ஆயுத இருப்புக் கிடங்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை என்று அந்நாட்டு ராணுவ கமாண்டர் ஷரீப் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் ஏதாவது அரசியல் சதியாக இருக்கலாம் என்று ஈரானில் தகவல் கிளம்பியுள்ளது.ஆனால் இதை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ஹுசைன் மறுத்துள்ளார். அணு ஆயுதக் கிடங்கில் குண்டுகளை இடமாற்றம் செய்யும்போது அவை வெடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிரியாவில் பொதுமக்கள் மீதான தாக்குதல்: அரபு லீக் அமைப்பில் இருந்து நீக்கம்.
சிரியாவில் போராட்டக்காரர்களை ராணுவம் தொடர்ந்து கொன்று வருகிறது. இதை கண்டித்து அரபு லீக் அமைப்பில் இருந்து சிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது.அரபு நாடுகள் லீக்கில் சிரியாவும் இடம்பெற்றுள்ளது. சிரியாவில் ஆட்சி மாற்றம் கோரி உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறது.
அவர்களை ராணுவம் கொன்று வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 3,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து சிரியாவில் மாற்று அரசு அமைக்க வழிவிட வேண்டும், கலவரத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், நகர்ப்புறங்களில் இருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்த வேண்டும், மக்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அரபு லீக் வலியுறுத்தியது. அதை சிரிய அதிபர் நிராகரித்துவிட்டார்.இந்நிலையில் கெய்ரோவில் அரசு லீக் தலைவர்களின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் சிரியா பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் சிரியாவின் அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் கத்தார் பிரதமர் ஹமத் பின் ஜசேம் அல்தானி கூறுகையில், அமைதி நடவடிக்கைகளுக்கு முன்வராத சிரியாவை சஸ்பெண்ட் செய்ய அரபு லீக் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்த சஸ்பெண்ட் 16ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பொருளாதார தடையும் விதிக்கப்படுகிறது என்று அறிவித்தார்.அமைதி நடவடிக்கைகளை சிரிய அதிபர் பஷார் எடுக்கும் வரை சஸ்பெண்ட் முடிவும், பொருளாதார தடையும் அமலில் இருக்கும் என்று அரபு லீக் தெரிவித்துள்ளது.
இரண்டு அணு உலைகளை சீனாவிடம் இருந்து வாங்க பாகிஸ்தான் திட்டம்.
இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் படைத்த 2 அணு உலைகளை சீனாவிடம் இருந்து வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.இந்தியாவுக்கு வழங்குவது போல தங்களும் அணு தொழில்நுட்ப உதவிகள் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகளிடம் பாகிஸ்தான் கேட்டது.
ஆனால் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என்று கூறிவிட்டதால் பாகிஸ்தானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை தருவதற்கு மற்ற நாடுகள் மறுத்துவிட்டன.மேலும் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் லிபியா, வடகொரியா போன்ற நாடுகளுக்கு அணுஆயுத தொழில்நுட்பங்களை ரகசியமாக கொடுத்த விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு அணு தொழில்நுட்பம் வழங்க அமெரிக்க மறுத்துவிட்டது.
இதற்கிடையில் பாகிஸ்தானில் நிலவும் கடும் மின்சார பற்றாக்குறையை போக்க அணு உலை தொழில்நுட்பத்தை வழங்க சீனா முன்வந்தது. அதன்படி பஞ்சாப் மாகாணம் சாஸ்மா பகுதியில் 2 அணு உலைகள் அமைக்க சீனாவுடன் கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டது.
கடந்த மே மாதம் சாஸ்மா பகுதியில் அணு உலைகள் அமைக்கம் பணிகளை பிரதமர் யூசுப் ரசா கிலானி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளை நிறுவன பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக சீன தேசிய அணு கழகமும் பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.
மியான்மர் இடைத் தேர்தலில் போட்டியிட சூச்சி முடிவு.
மியான்மர் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் அவுங் சான் சூச்சி, இடைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.இதன் மூலம் மீண்டும் அவர் ஜனநாயக அரசியலில் அதிகாரபூர்வமாக ஈடுபட முடியும். மியான்மரில் 1990களில் நடந்த பொதுத் தேர்தலில் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சி பெரும் வெற்றி பெற்றது.
ஆனால் அப்போதைய ராணுவ அரசு அக்கட்சியினர் பதவியேற்க விடாமல் தடுத்து ராணுவ ஆட்சியைத் தொடர்ந்தது. சூச்சி வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ராணுவ ஆட்சி அனைத்துக் கட்சிகளும் தங்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ள வற்புறுத்தியது. இதை சூச்சி எதிர்த்தார்.மேலும் கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலையும் அவரது கட்சி புறக்கணித்தது. அதனால் தேர்தல் ஆணையம் என்.எல்.டி.யின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நெருக்கடியால் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் சில நாட்களில் சூச்சி விடுவிக்கப்பட்டார். இதனால் மியான்மரில் ஜனநாயக ரீதியிலான அரசியலுக்கு வழி ஏற்படும் என்ற நம்பிக்கை உருவானது.
புதிய அதிபர் தெய்ன் செய்ன் அனைத்துக் கட்சிகளும் 2008ல் ராணுவ ஆட்சி உருவாக்கிய புதிய அரசியல் சாசனத்தை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாய சட்டத்தை நீக்கிவிட்டார்.இந்நிலையில் என்.எல்.டி செய்தித் தொடர்பாளர் நியான் வின் நேற்று அளித்த பேட்டியில்,"என்.எல்.டி விரைவில் பதிவு செய்து கொள்ளும். வரும் இடைத் தேர்தலில் சூச்சி போட்டியிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
மியான்மர் பார்லிமென்ட்டில் தற்போது 40 இடங்கள் காலியாக உள்ளன. எனினும் எப்போது இடைத் தேர்தல், எந்தத் தொகுதியில் சூச்சி போட்டியிடுவார் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று அளித்த பேட்டியில்,"மியான்மர் உண்மையில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் நிறைய உள்ளன” என்றார்.
ஆய்வுக் கூடத்தில் தயாராகும் இறைச்சி.
இறைச்சிக்காக கோழி, ஆடு, மாடுகளை கொல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக ஆய்வு கூடத்திலேயே இறைச்சியை தயாரிக்கும் முயற்சியில் நெதர்லாந்து விஞ்ஞானிகள் முயற்சித்துள்ளனர்.
நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்தில் இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள மார்க் போஸ்ட் என்ற விஞ்ஞானி கூறியதாவது: உயிரினங்களை கொல்லாமலேயே ஆய்வுக் கூடத்தில் இறைச்சியை தயாரிக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.
விலங்குகளின் உடலில் இருந்து எடுக்கப்படும் செல்களில் இருந்து இந்த இறைச்சி தயாரிக்கப்படுகிறது. இந்த இறைச்சி உற்பத்தி மூலம், விலங்கினங்கள் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
செல்களில் இருந்து தயாரிப்பதால் குறைந்த அளவு இறைச்சியை தயாரிக்கவே 3 லட்சத்து 45 ஆயிரம் டொலர்கள் செலவாகும். மிகவும் அதிக செலவுதான். ஆனால் இப்படி தயாரிக்க முடியும் என்பதற்கு ஒரு சான்றாக மட்டுமே இதை கொள்ள வேண்டும்.மீல் மேக்கர் போல் அல்லாமல் இந்த இறைச்சி உண்மையான இறைச்சியாக இருக்கும். வருங்காலத்தில் இந்த இறைச்சி தயாரிப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம்.
ஈரானின் அச்சுறுத்தால் குறித்து இஸ்ரேல் பிரதமரிடம் கனடா பேச்சு.
ஈரானின் அணு ஆயுதத் தளங்களைத் தாக்குவதற்கு இஸ்ரேலியத் தலைவர்கள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரிடம் விசாரிக்கப் போவதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மெக்கே தெரிவித்தார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாஹு அடுத்த வாரம் கனடா வருகிறார். அப்போது அவர்களிடம் ஈரான் தாக்குதல் குறித்து கேட்கப் போவதாக கந்தஹார் செய்தியாளர்களிடம் மெக்கே தெரிவித்தார்.
காபூலுக்கு ஒரு நாள் வருகையையாக மெக்கே வந்திருந்த போது இஸ்ரேல் – ஈரான் அணு ஆயுதப் பிரச்னைகளின் தீவிரம் கூடியும் குறைந்தும் வருவதால் நிலைமைகள் மாறக்கூடும் என்றார்.சர்வதேச அணுசக்தி அமைப்பான IAEA ஈரான், ரகசியமாக அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தியுள்ளது என்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை கடுமையாக மறுக்கும் ஈரான், இச்செய்தி அமெரிக்காவும் அதன் அணிநாடுகளும் கட்டிவிட்ட கட்டுக்கதை என்று சாடியது.
ஈரானின் அணு ஆயுதப் பரிசோதனை மிரட்டல் இஸ்ரேலின் வாழ்வியல் உரிமையை பாதிக்கின்றது என்று மெக்கே கருதுகிறார். இஸ்ரேலின் நட்பு நாடான கனடா எகுத் பராக்கிடம் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்தும். இஸ்ரேலை ஈரானின் அணு ஆயுதத் தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கும் எண்ணத்தையும் பிரதிபலிக்கும்.
காபூலில் இருந்தபோது, மெக்கே ஆஃப்கனின் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர்களைச் சந்தித்தார். சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையின் தளபதி ஜெனரல் ஜான் ஆரனையும் சந்தித்தார். இந்தச் சந்திப்புகளில் போன மாதம் நடந்த தற்கொலைத் தாக்குதலில் இறந்து போன முதல் கனடா அதிகாரியான கப்டன் பைரன் கிரஃப் குறித்து கேட்டறிந்தார்.
தலிபான்கள் தலைநகரில் இடையூறும் துன்பமும் விளைவிக்க முயல்கின்றனர் என்பதை இந்தத் தற்கொலைத் தாக்குதல் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார். தலிபான்கள் தலைநகர் தவிர்த்த பிற இடங்களில் இருப்பதால் தலைநகர்த் தாக்குதலால் அவர்களுக்கு இழப்பு அதிகம் இருப்பதில்லை. எனவே தலைநகரில் இருக்கும் நம்முடைய வீரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.
கனடாவின் போர்ப் பணி முடிவுற்றாலும் சுமார் 950 ராணுவப் பயிற்சியாளர் மட்டும் 2014 வரை நேட்டோவின் ராணுவப் பணியின் சார்பில் ஆஃப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தங்கி இருப்பர். கனடாப் பயிற்சிப் படையினர் சிறு சிறு குழுக்களாக அணிவகுத்து வடக்கில் மஜர்-இ-ஷரிஃப் என்ற இடத்திலும் மேற்கே ஈரான் எல்லையின் அருகே ஹெராத் என்று ஊரிலும் தங்கியிருக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு போராட்டம் குறித்து தலைவர்கள் கருத்து.
பிரிட்டனின் துய பவுல் தேவாலயத்தின் அருகே வேலையில்லா இளைஞர்கள் கூடாரம் அமைத்துத் தங்கி இருப்பது குறித்து தொழில்துறைச் செயலர் வின்ஸ் கேபிள் தன் அனுதாபத்தை வெளியிட்டார்.
இது குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இளைஞர்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து போராடுவதன் நியாயங்களை உணர்ந்துள்ளேன். இந்தக் கடுமையான பொருளாதார நெருக்கடிக் காலத்திலும் சிலர் மென்மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். பலர் அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படுகின்றனர்.இதனால் நிறுவனங்களில் நிர்வாகப் பணிகளில் உள்ளவர்களின் சம்பளத்தைக் குறைக்கச் சட்டம் கொண்டுவரப்படும் என்றார். நிறுவனங்களின் பேராசையே இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இந்தப் போராட்டங்கள் ஆக்கப் பூர்வமானவை அல்ல என்றார். ஆனால் உழைப்பாளர் கட்சியின் தலைவர் எட்மிலிபாண்ட் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை இந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன என்றார்.அரசு அடுத்த ஆண்டில் இருந்து சம்பள அமைப்பை எளிமைப்படுத்தவும், பங்குதாரர்களுக்கு புதிய அதிகாரத்தை வழங்கவும், உயரதிகாரிகளின் சம்பளத்தைக் கட்டுப்படுத்தவும் ஆலோசித்து வருவதாக வின்ஸ் கேபின் தெரிவித்தார்.
பிரதமருக்கு இந்த இளைஞர்கள் நகரத்தின் நடுவே கூடாரமிட்டுப் போராட்டம் நடத்துவதில் விருப்பமில்லை. தூய பவுள் தேவாலயத்தின் அருகே கூடாரம் இடுவதும் சரியெனத் தோன்றவில்லை. அவர் போராட்டம் என்பதை நீங்கள் நின்றோ, நடந்தோ நடத்த வேண்டுமே தவிர ஓரிடத்தில் கூடாரமிட்டு உட்கார்ந்து கொண்டோ படுத்துக் கொண்டோ நடத்தக்கூடாது என்றார்.
நவீன நாஜித் தீவிரவாதிகள் பற்றிய விசாரணை.
ஜேர்மனில் ஒரு பெண் பொலிசைக் கொன்ற மூவரும் யூதர்களுக்கு எதிரான நவீன நாஜித் தீவிரவாதத்தை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் வந்திருப்பதால் விசாரனை எல்லை விரிவடைந்து வருகிறது.
2004ல் துருக்கியர் அதிகம் குடியிருந்த கோலோன் நகரத்தின் தெரு ஒன்றில் ஒரு ஆணி குண்டு (nail bomb) வெடித்தது. அதற்குச் சில வருடங்களுக்கு முன்பு 2000ல் டூஜெல்டோர்ஃபில் நகரத்தின் ரயில் நிலையத்தில் ரஷியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த யூதர்கள் தாக்கப்பட்டனர்.
இவ்விரண்டு சம்பவங்களும் இப்போது தீவிரமாக விசாரிக்கப்படுவதாக நியூ ரெயின் ஸேதுங் நாளிதழ் செய்தித் வெளியிட்டுள்ளது. 2007ல் பெண் பொலிஸ் கொல்லப்பட்ட போது அதற்கு முன்பு இருந்த ஒன்பது கொலைகளையும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இத்துடன் சேர்ந்துப் புலன் விசாரணை நடத்தினர். இந்த ஒன்பது கொலைகளில் இறந்தவர்கள் சாதாரண பொதுமக்களாக உணவுப் பண்டம் விற்பவர், கடைக்காரர் போன்றுார்.
ஆனால் இவர்கள் அனைவரும் வெளிநாட்டவர் ஆவர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வங்கிக் கொள்ளையைத் தொடர்ந்து தன்னையே எரித்துக் கொண்ட உவே B, உவே M என்ற இருவரின் தங்குமிடத்தை பொலிஸ் ஆராய்ந்த போது அங்கு துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களோடு மூன்றாவதாக இருந்த பெண்ணை காவல்துறையினர் கொலை, கொலைமுயற்சி, தீவிரவாத தொடர்பு போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். இவள் பெயர் பியாட்டெ.
பியாட்டெயும் மற்ற இரண்டு ஆண்களும் கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஜீனாவைச் சேர்ந்தவர்கள். 1990 முதல் தூரிங்கர் ஹீமட்ஸ்ஷீட்ஸ் என்ற தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள், என்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. 1997ல் இவர்கள் கடித குண்டுகளை அனுப்பியதாக Der Spiegel என்ற இணையதளம் தெரிவித்தது. 1998ல் பியாட்டெக்குச் சொந்தமான கார் பழுது நீக்கும் நிலையத்தில் ஐந்து குழாய் வெடிகுண்டுகளும் வெடி மருந்துகளும் கிடைத்தன. ஆனால் இந்தப் பெண்ணும் மற்ற இரண்டு ஆண்களும் தப்பித்துவிட்டனர்.
தூரிங்கெர் ஹீமாட்ஷுட்ஸ் என்ற அமைப்பு ஓர் உளவு நிறுவனமாகச் செயல்பட்டு வந்தது. இதன் பணி அரசியலமைப்புப் பாதுகாப்பாகும். அரசு அதிகாரிகளுக்கும் சந்தேகப்படும் குற்றவாளிகளுக்கும் இடையில் யாதொரு தொடர்பும் கிடையாது என்று இந்த அமைப்பு தெரிவித்தது. 2000ல் தூரிங்கியா அலுவலகத்தின் தலைவரான தாமஸ் சிப்பெல் ஃபோக்கஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்த மூவரும் இந்த அமைப்பில் தகவலாளிகளாக பணியாற்றியதாகத் தகவல் எதுவும் இல்லை என்றார்.
பசுமைக் கட்சியின் செய்தித் தொடர்பாளராக மோனிகா லாசர், வலது சாரித் தீவிரவாதிகளான இந்தக் குற்றவாளிகளை ஏன் இத்தனை வருடங்களாக கண்டுபிடிக்கவில்லை. துப்புத் துலக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று அரசை நோக்கி கடுமையான வினாக்களை எழுப்பினார்.
இந்தியாவின் 12 பொருட்கள் மீதான் தடையை பாகிஸ்தான் நீக்கியது.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் சுமுகம் அடைவதற்காக இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களில் 12 பொருட்கள் மீதான தடையை பாக். நீக்கியுள்ளது.காஷ்மீர் உள்ளிட்ட அரசியல் பிரச்னைகள் காரணமாக இந்தியா உடனான வர்த்தகத்தில் பாக். சுணக்கம் காட்டி வந்தது. இருப்பினும் பல்வேறு வர்த்தக நலன்களை அளிக்கும் மிக வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை இந்தியா 1996லேயே பாகிஸ்தானுக்கு அளித்து விட்டது.
இருதரப்பும் தொடர்ந்து இதுகுறித்து நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு வர்த்தகமும் சுமுகமாக நடக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் இந்தியாவுக்கு மிக வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்க பாக். முடிவு செய்தது.
இச்செய்தியில் குழப்பம் ஏற்பட்ட போதிலும் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தார். இந்நிலையில், வர்த்தகம் சுமுக நிலை அடைவதற்காக சில பொருட்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என பாக். வர்த்தக அமைச்சகம் அந்நாட்டு உயர் அமைப்பான பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டியிடம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம் கலந்தாலோசித்த கமிட்டி இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 12 பொருட்கள் மீதான தடையை நீக்க ஒப்புதல் தெரிவித்தது. இத்தகவலை வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தடை நீக்கப்பட்ட பொருட்களில், இயந்திரங்கள், தோல் மற்றும் ஜவுளிக்கான மூலப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
அபெக் மாநாட்டில் ஒபாமா துவக்க உரையாற்றினார்.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி நிலவிரும் சூழ்நிலையில் ஆசிய பசிபிக் மண்டலத்தைச் சேர்ந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை எட்ட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.அபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் ஹவாய்ல் துவங்கியது. அதிபர் ஒபாமாவின் சொந்த மாகாணமான ஹவாயில் இந்த மாநாடு நடக்கிறது.
21 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டை அமெரிக்க துவக்கி வைத்து அதிபர் ஒபாமா பேசினார். அப்போது பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில் ஐரோப்பிய மண்டலத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆசிய பசிபிக் மண்டலத்தில் அவ்வாறு இல்லை.குறிப்பாக ஆசிய நாடான சீனாவின் யுவான் கரன்சி, டாலருக்கு எதிராக அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது. இந்த சூழ்நிலையில் ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான பொருளாதார வளர்ச்சியினை எட்ட வேண்டும் இதற்காக நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் வலுப்பெற வேண்டும் என்றார்.
நேபாளில் மிகப்பெரிய அமைச்சரவை அமைக்கப்பட்டது.
நேபாளில் முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். நேபாளில் ஐக்கிய நேபாள் காங்கிரஸ்- மாவோயிஸ்ட் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.பிரதமராக பாபுராம் பட்டாரை உள்ளார். இவரது அமைச்சரவையில் முன்னர் 46 ‌பேர் இருந்தனர். நேபாளில் மொத்தம் 19 மாகாணங்கள் உள்ளன. சமீபத்தில் சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பினார் பிரதமர்.
அப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாயின. இதைத்தொடர்ந்து மேலும் மூன்று பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். தற்போது பிரதமர் பாபுராம் பட்டாரையின் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
இது நாட்டின் அமைச்சரவை வரலாற்றில் முதன்முதலாக அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 1996-ம் ஆண்டு ஷெர்பகதூர்துபே பிரதமராக இருந்த போது 48 பேர் அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது..
உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் பொருளாதார தடைகள் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளர் அரபு லீக்.
அரபு லீக்கில், சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களில், அரபு லீக் ஒப்பந்தத்தை சிரியா நடைமுறைப்படுத்தாவிட்டால், சிரியா மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அரபு லீக் எச்சரிக்கை விடுத்துள்ளது.அரபு லீக்கின் இந்த நடவடிக்கையால் கோபம் அடைந்த சிரியா அதிபர் அசாத் ஆதரவாளர்கள், டமாஸ்கசில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தை நேற்று தாக்கி சேதப்படுத்தினர். 8 மாதங்களாக சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இப்போராட்டங்களில் ராணுவ வன்முறைக்கு 3,500 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.
சிரியாவில் அமைதியைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரபு லீக் ஒரு ஒப்பந்தத்தை தயாரித்தது. அதன்படி உடனடியாக ராணுவ வன்முறையைக் கைவிட வேண்டும். சிரியாவில் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டு வாரங்களில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் பேச்சு நடத்த வேண்டும். வெளிநாட்டு ஊடகங்களை சிரியாவுக்குள் அனுமதிக்க வேண்டும்.
முதலில் இந்த ஒப்பந்தத்திற்கு சிரியா ஒப்புக் கொண்டது. கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட மறுநாளே, ராணுவம் மீண்டும் மக்கள் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியது. இதனால் அரபு லீக்கில் இருந்து சிரியாவை நீக்கக்கோரி மக்கள் போராடத் துவங்கினர். இந்நிலையில், நேற்று முன்தினம், எகிப்து தலைநகர் கெய்ரோவில், அரபு லீக் கூடியது. மொத்தம், 22 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. சிரியாவில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலை குறித்தும், சிரியா அரபு லீக்கின் ஒப்பந்தத்தை மீறியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இறுதியில், சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்தை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. லீக்கில் மொத்தம் உள்ள, 22 நாடுகளில்,சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு, 18 நாடுகள் ஆதரவாகவும், மூன்று நாடுகள் எதிராகவும் ஓட்டளித்தன. ஈராக் மட்டும் ஓட்டளிக்கவில்லை. இந்த முடிவை அறிவித்த கத்தார் பிரதமர் ஹமாத் பின் ஜாசேம் அல் தானி, சிரியாவின் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களில் (நவம்பர் 16ம் திகதிக்குள்) ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரபு லீக்கின் இந்த முடிவு வெளியான உடன், சிரியாவில் அதிபருக்கு எதிராகத் திரண்ட மக்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஆனால், தலைநகர் டமாஸ்கசில் உள்ள சவுதி அரேபியத் தூதரகம் மீது அதிபர் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த முடிவை ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை வரவேற்றுள்ளன. சிரியா மீது அரபு லீக் உடனடியாகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என்றாலும், தற்போதைக்கு அந்நாட்டிற்கு ஒரு கடும் எச்சரிக்கையை மட்டும் விடுத்தால் போதுமானது என்று கருதியதால் தான், மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.
அரபு லீக்கிற்கான சிரிய தூதர் யூசுப் அகமது கூறுகையில் அரபு லீக் ஒப்பந்தத்தை சிரியா ஏற்கனவே நடைமுறைப்படுத்தி விட்டது. அதன் பின்னும், 125 பொலிசார் போராட்டத்தில் பலியாகியுள்ளனர். இந்த நீக்கம் சட்டவிரோதமானது. இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது. இந்த முடிவு, லிபியாவை போல சிரியாவிலும் அன்னிய ஊடுருவலுக்கு வழிவகுக்கிறது என்றார்.
இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தாலி அரசியலில் கடந்த 20 ஆண்டுகளாக செல்வாக்குடன் இருந்தவரும், செக்ஸ் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியவரும், பிரதமருமான சில்வியோ பெர்லுஸ்கோனி, 75, தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதிபர் மாளிகையின் முன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள், "கோமாளியே(பபூன்) வீட்டுக்குப் போ' எனக் கோஷமிட்டு அவரது ராஜினாமாவை சந்தோஷத்துடன் கொண்டாடினர். 
யூரோ மண்டலத்தில் அயர்லாந்து, போர்ச்சுகல், கிரீசை அடுத்து இத்தாலியும் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்தக் கடன் 120 சதவீதமாகிவிட்டது.
இதனால், சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,) ஐரோப்பிய யூனியன் ஆகியவை, இத்தாலி கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பரிந்துரைத்தன. பிரான்சின் கேன்ஸ் நகரில் சமீபத்தில் நடந்த ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில், இத்தாலியின் சிக்கன நடவடிக்கைகள், ஐ.எம்.எப்.,பால் கண்காணிக்கப்பட ஒப்புக் கொள்ளப்பட்டது.சிக்கன நடவடிக்கைகளுக்கான பட்ஜெட் மசோதா, கடந்த 9ம் திகதி பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால், ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எட்டு பேர், தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், பெர்லுஸ்கோனி பார்லிமென்டில் பெரும்பான்மை இழந்தார்.
இதையடுத்து, அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு கட்சியே அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியது. பட்ஜெட் மசோதா, செனட்டில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட பின், தான் பதவி விலகுவதாகவும், அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிற்கப் போவதில்லை எனவும் பெர்லுஸ்கோனி அறிவித்தார்.தொடர்ந்து, நேற்று முன்தினம், பட்ஜெட் மசோதா, செனட்டில் தாக்கலாகி நிறைவேறியது. சொன்னபடி, பெர்லுஸ்கோனி உடனடியாக அதிபர் கியார்கியோ நபோலிடனோவிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
அதிபர் மாளிகைக்குள் அவர் செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள், வெளியே கூடியிருந்தனர். அவரை நோக்கி, "கோமாளியே வீட்டுக்குப் போ' எனக் கோஷமிட்டனர். சிலர் அவரது கார் மீது நாணயங்களை அள்ளி வீசினர்.
ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் கொடுத்த பெர்லுஸ்கோனி, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, மாளிகையின் பக்கவாட்டு வாசல் வழியாக வெளியே சென்றார். மக்கள் தன்னை அவமானப்படுத்தியது குறித்து பேசிய அவர் நான் மிகவும் கசப்புணர்வுடன் உள்ளேன் என்றார்.
இத்தாலி அரசியலில், ஊழல், செக்ஸ் புகார்களுக்கு பெருமளவில் புகழ் பெற்றிருந்த இந்த கோடீஸ்வரரின் அரசியல் வாழ்க்கை, கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தது. ஊழலை இத்தாலியில் பெருமளவில் அறிமுகப்படுத்திய பெர்லுஸ்கோனியின் பதவி விலகல் மிகவும் வருந்தத்தக்க விதத்தில் அமைந்துவிட்டது.
மூன்றாவது முறையாக 2008ல் அவர் பிரதமர் பொறுப்பேற்ற உடன், சீர் குலைந்த நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவாவது காப்பாற்றுவார் என மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் நிலைமையோ அதற்கு நேர் மாறாக இருந்தது. அவரது மூன்றாவது ஆட்சி பல செக்ஸ், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியது. பொருளாதார நிலைமை மேலும் மேலும் மோசமானது. இதனால் தான் மக்கள் அவர் எப்படியாவது வெளியேறினால் சரிதான் என வெளிப்படையாகப் பேசத் துவங்கினர் ராஜினாமாவின் போது மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.ஐரோப்பிய யூனியனின் முன்னாள் கமிஷனர் மரியோ மோன்ட்டி, அடுத்த பிரதமராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கூட்டணிக் கட்சிகள் இவருக்கு இதுவரை எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
சீனாவில் நாளொன்றிற்கு 10 ஆயிரம் விவாகரத்துக்கள் நடைபெறுகின்றன.
சீனாவில் நாள்தோறும் 10,000 தம்பதிகள் விவாகரத்துப் பெற்று வருகின்றனர். கம்யூனிச நாடுகளில் ஒன்றான சீனாவில் பொருளாதாரம் சிறந்த வளர்ச்சியைக் கண்டு வருகிறது. 
ஆனால் சீனர்களின் வாழ்க்கை முறை குடும்ப பண்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் 9 மாத காலத்தில் 28 லட்சம் தம்பதியர் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளதாக சீன பொதுவிவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டை இது 12 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த 5 ஆண்டுகளில் விவாகரத்துப் பெறுவோரின் எண்ணிக்கை 7 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெருநகரங்களில் இது 30 சதவீதமாக உள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF