Sunday, November 13, 2011
பெண்களின் இதயத்தை பாதிக்கும் தூக்கம் – ஆய்வு முடிவு!!!
இரவு வேளைகளில் தூங்குவது உடலுக்கு அளிக்கும் ஓய்வு. நாள்தோறும் வேலை செய்வதனால் களைத்த உடலுக்கும் மனதுக்கும் இரவு நேரத்தில் 7 மணிநேரம் வரை ஓய்வளித்தால்தான் மறுநாள் சுறு சுறுப்பாக பணியை தொடங்க முடியும்.ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. அதுபோலத்தான் நித்திரையும். அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.இரவு நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் நடுத்தர மற்றும் வயதானப் பெண்களுக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கின்றது அந்த ஆய்வு.
நடுத்தர வயதுப் பெண்களின் தூக்கத்திற்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர் தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள்.50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஏழரை ஆண்டுகாலம் பெண்களின் தூக்க நேரம் கண்காணிக்கப்பட்டது.இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான இஸ்கெமிக் ஸ்ட்ரோக் கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.
ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோர் முறையே 14 சதவீதம், 24 சதவீதம் மற்றும் 70 சதவீதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூக்கத்தைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF