Tuesday, November 8, 2011

சூடுபிடிக்கிறது ஈரான் அணு ஆயுத தயாரிப்பு விவகாரம்!!!


ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி (ஐ.ஏ.இ.ஏ.,), இன்னும் ஓரிரு நாட்களில், ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதற்கான ஆதாரப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. “அவர்கள் அறிக்கையை வெளியிடட்டும்; அதன் பின் என்ன நடக்கும் என்பதை நாம் பார்ப்போம்’ என, ஈரான் தெரிவித்துள்ளது. 


இதற்கிடையில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு பெரும்பான்மையும் சாத்தியம் இருப்பதாக இஸ்ரேல் அதிபர் மிரட்டியுள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கியமான நாடான ஈரான், அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக, அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஈரானும் அதை மறுத்து வருகிறது.கடந்த செப்டம்பரில் இதுகுறித்து பேசிய ஐ.ஏ.இ.ஏ., தலைவர் யுகியா அமனோ, “ஈரான் ராணுவ ரீதியிலான அணுசக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவலையளிக்கிறது’ என்றார்.இதையடுத்து, அமெரிக்காவும் மேற்குலகும், ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என, ஐ.நா.,வுக்கு நெருக்கடி கொடுத்தன. இதனால், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த அறிக்கையை விரைவில் வெளியிடப் போவதாக ஐ.ஏ.இ.ஏ., அறிவித்தது.


இந்நிலையில், ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நாளை மறுநாள் நடக்க உள்ள உறுப்பு நாடுகளின் காலாண்டுக் கூட்டத்தில், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த ஐ.ஏ.இ.ஏ.,யின் அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், “ஐ.ஏ.இ.ஏ.,யின் இந்த முயற்சி, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக் கூடிய ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பு விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி விடும்; அதைத் தொடர்ந்து ஐ.நா., ஈரான் மீது கடுமையான தடைகளை விதிக்க நேரிடும்’ என ரஷ்யாவும், சீனாவும் கவலை தெரிவித்துள்ளன. இதனால், ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை வெளியீட்டுக்கு அவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹி நேற்று இதுகுறித்து கூறுகையில், “அந்த அறிக்கையில் இருப்பவை ஆதாரமற்றவை என, நான் கருதுகிறேன். இந்தப் போலி அறிக்கையை அவர்கள் வெளியிடட்டும்; அதன் பின் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்ப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.தனது அண்டை நாடுகள் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதைப் பொறுத்துக் கொள்ளாத இஸ்ரேல், ஈராக் மற்றும் சிரியாவில் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததைப் போல, தற்போது ஈரான் மீதும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளது.இதுகுறித்து இஸ்ரேல் அதிபர் சிமோன் பெரஸ், “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பெரும்பான்மையும் வாய்ப்பு உள்ளது’ என மிரட்டல் விடுத்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF