Saturday, November 12, 2011

இன்றைய செய்திகள்.

சுற்றுலா வீசாவில் வந்து கல்முனையில் ஆடை வியாபாரம் செய்த 6 இந்தியர்கள் கைது!
சுற்றுலா விசாவில் இலங்கை வந்து கல்முனை நகரில் வீதியோரங்களில் ஆடை வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 6 இந்தியர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை – மல்வத்தை முகாம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதன் பொருட்டு கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை இன்று கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்முனை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கக் கட்டிகளுடன் தமிழகத்தில் இருவர் கைது!
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 4.5 கோடி பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் சென்ற கார் சுங்கத்துறை அதிகாரிகளால் தமிழகத்தில் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு நாகப்பட்டினம் வழியாக தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணியை அடுத்த பரவை பகுதியில் அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனர்.
இதில் சோதனை நடத்தப்பட்டதில் காரின் சீட்டிற்கு அடியில் தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 15 கிலோ 600 கிராம் எடை கொண்ட 156 தங்கக் கட்டிகள் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் காரில் வந்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இக்கார் கோடிக்கரை அருகிலிருந்த கொடைக்காடு கிராமத்திலிருந்து சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கடல் எல்லையை பலப்படுத்த தீர்மானம்! கரையோர பாதுகாப்புத் திணைக்களம்.
இலங்கை கடல் பிராந்திய எல்லையின் ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கு அமைய மேலும் ஐந்து ரோந்து படகுகளை கடற்படையிடம் இருந்து பெறவுள்ளதாக திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் ரியர் அட்மிரல் தயா தர்மபிரிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வட பிராந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு இழுவைக் கப்பல்கள் போன்றவற்றின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகள் தீரும் வரை இலங்கைக்கு வரமாட்டேன்! மஹிந்தவின் அழைப்பிற்கு மன்மோகன் பதில்.
இலங்கைத் தமிழர்களின் மீள் குடியமர்வு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும் வரை இலங்கைக்கு வர மாட்டேன் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மாலைதீவில் சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக தமிழகத்தின் தினமலர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவ் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான, சார்க் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள மாலைதீவு சென்ற பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துப் பேசினார். காலை 9.30 மணி யளவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ச, மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.அதற்கு அவர், இலங்கைத் தமிழர்கள் மீள் குடியமர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் தீர்வு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் நல்ல தீர்வு ஏற்படும் வரை இலங்கைக்கு வர இயலாது என உறுதிபடத் தெரிவித்தாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிரித்தானிய வீசா பெற முயன்ற இருவர் கைது.
பிரித்தானியாவுக்கு செல்வதற்கென போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வீசா பெற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கையிலுள்ள பிரித்தானிய எல்லை முகவர் நிலைய குற்ற விசாரணை திணைக்களத்தினர இவ்விருவரையும் கைதுசெய்துள்ளனர்.
போலியான தகவல்களை சமர்ப்பித்தால் எதிர்வரும் 10 வருடங்களுக்கு பிரித்தானியா செல்ல முடியாது என்பதுடன் சட்ட நடவடிக்கைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டி வரும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
சட்ட விதிகளை மீறி பிரித்தானியாவுக்குள் செல்வதற்கு யாரையும் அனுமதிகக்கப் போவதில்லை.
சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானிய எல்லை முகவர் நிலையத்தின் பணிப்பாளர் கிளயாரி முர்வே  தெரிவித்துள்ளார்.பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் போலியான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் போலி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து பிரித்தானிய வீசாவைப் பெற முயன்ற இலங்கையர் இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 
நாங்கள் செய்துள்ள சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்!- ராஜபக்ச பேட்டி.
தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். ஜெயலலிதாவும் இதை நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மாலைதீவில் நடைபெறும் 17வது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த ராஜபக்ச அங்கு டைம்ஸ் நவ் டிவிக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்ற அச்சம் தனக்குள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு வரவேற்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
அந்த பேட்டியின் முழு விவரம்:
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணம் வசூலித்து வருவதாகவும், மீண்டும் தலை தூக்க முயற்சிக்கிறார்கள் என்றும், போராளிகளின் உணர்வுகளை அப்படியே தக்க வைக்க முயற்சிப்பதாகவும் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. அது உங்களுக்கும் தெரியுமா?
பதில்:  இங்கிலாந்திலும் சரி, கனடாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, அல்லது உலகின் பிற நாடுகளிலும் சரி, விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் பணம் வசூலிக்கிறார்கள், ஒருங்கிணைய முயற்சிக்கிறார்கள், இரகசியமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இதை நாங்கள் அறிவோம்.
எங்களிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் மூலம் இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அனுதாபிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். மீண்டும் போரில் குதிக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். புலிகளின் பிரசாரம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. 
கேள்வி:  தமிழர் பகுதிகளில் மறு குடியமர்த்தல், மறு சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து பேசி வருகிறீர்கள். இது தொடர்பாக உங்களுக்கு உதவி வரும் நட்பு நாடான இந்தியா, இதுகுறித்த நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைந்துள்ளதா?
பதில்:  நாங்கள் என்ன செய்து வருகிறோம் என்பதை அங்கு வந்து பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவும் சரி, பிற நாடுகளும் சரி எங்களது பணிகளைப் பார்த்து சென்றுள்ளனர். அனைவருக்கும் இதில் திருப்தியே.
கேள்வி:  தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா இலங்கை விவகாரத்தில் தீவிர அக்கறை காட்டுகிறார். அவர் உண்மை நிலையை அறிய இலங்கைக்கு வர விரும்பினால் நீங்கள் வரவேற்பீர்களா?
பதில்:  கண்டிப்பாக, நிச்சயம் வரவேற்போம். அவர் தாராளமாக வந்து அங்கு என்ன நடக்கிறது, உண்மை நிலவரம் என்ன என்பதை நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தமிழர் பகுதிகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். இதை ஜெயலலிதாவும் நேரிலேயே அறிந்து கொள்ளலாம்.
கேள்வி:  சீனா, இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து அங்கு ஆழமாக நிலைபெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்தியாவுடனான இலங்கையின் உறவில் மாற்றம் வருமா?
பதில்:  நான் ஆரம்பத்திலிருந்தே ஒன்றை உறுதியாக சொல்லி வருகிறேன். இந்தியா எங்களது தொப்புள் கொடி உறவு. இந்தியாவுக்குப் பிறகுதான் சீனா. இந்தியா எங்களது உறவினர் என்றால் சீனா எங்களது நண்பர். நாங்கள் மட்டுமல்ல ஐரோப்பிய யூனியனும் கூட சீனாவின் உதவியை நாடுகிறது.
எங்களது நாட்டில் துறைமுகம், விமான நிலையம், மின் நிலையம் ஆகியவை அமைக்கும் பணியில் ஈடுபட நாங்கள் முதலில் இந்தியாவைத்தான் நாடினோம். இந்தியாவுக்குத்தான வாய்ப்பளித்தோம். ஆனால் இந்தியா முன்வராததால்தான் சீனாவிடம் சென்றோம்.
எங்களைப் பொறுத்தவரை இந்தியாதான் முதலில். பின்னர்தான் சீனா. சீனா மட்டுமல்ல, அமெரிக்காவும் கூட இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ளது.
சீனாவுடனான எங்களது நட்பால், இந்தியாவுடனான உறவு கெடாது. அதற்கான வாய்ப்பில்லை. அதற்கான உறுதிமொழியை நாங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே கொடுத்துள்ளோம் என்றார் ராஜபக்ச.தமிழக மீனவர்களை தொடர்ந்து வெறித்தனமாக இலங்கைக் கடற்படை தாக்குவது குறித்தோ, கச்சதீவு பிரச்சனை குறித்தோ  மேற்படி ஊடகத்தினால் கேள்வி ஏதும் கேட்கப்படவில்லை.
பாரத கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடத்தப்பட்டார்!- சிங்கள ஊடகம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரியந்த எனப்படும் தபர கட்டா என்ற நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். அவர் மின்னேரியா பிரதேசத்தில் மறைந்திருந்த போது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலபொட என்னும் வேறு பெயரும் இருந்ததாகக் குறிப்பிடப்படும் இச் சந்தேகநபருக்கு பல்வேறு படுகொலைச் சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவருடன் இருந்த மற்றுமொரு நபரையும் இனந்தெரியாதோர் கடத்திச் சென்றுள்ளனர்.பாரத மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தபர கட்டா என்பவரே என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நோர்வே சமாதான முயற்சி மீளாய்வு அறிக்கைக்கு இலங்கையர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்!– திவயின.
இலங்கையில் நோர்வே மேற்கொண்ட சமாதான முயற்சி குறித்த மீளாய்வு அறிக்கை தயாரிப்பதற்கு இலங்கையர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான குழுவினர் இந்த 208 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை தயாரித்துள்ளனர்.
இந்த அறிக்கை தயாரிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய இலங்கையர்களின் பெயர்களை அந்நாட்டு அரசாங்கம் வெளியிடவில்லை.ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் நோர்வே இவ்வாறான ஒர் அறிக்கையை எதற்காக தயாரித்தது என்பது இன்னமும் புலனாகவில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து பாதுகாப்பு தரப்பினரிடம் எவ்வித தகவல்களையும் நோர்வே பெற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வில் இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன.
ஆசிய-பசிபிக் நாடுகளுடனான உறவை மேம்படுத்துவோம்: கிளிண்டன்.
இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகளுடனான உறவை மேம்படுத்துவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
ஹவாயின் ஹோனலுலுவில் நடைபெற்ற கிழக்கு மேற்கு மையக் கருத்தரங்கில் வியாழக்கிழமை அவர் பேசியது: ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் “கிழக்கு(நாடுகளை) நோக்கியப் பார்வை” என்ற கொள்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, மலேசியா, மங்கோலியா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக உலகின் முக்கியமான ஜனநாயக நாடுகளான இந்தியா, இந்தோனேசியா ஆகியவற்றுடன் வலுவான, பயனுள்ள நட்பை உருவாக்க விரும்புகிறோம்.
உலகின் பாதி மக்கள்தொகை ஆசிய கண்டத்தில் உள்ள நிலையில் இங்குள்ள பல நாடுகள் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகின்றன. அதேசமயம் இயற்கை பேரழிவு, அணு ஆயுதப் பரவல் உள்ளிட்ட பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றன.
21-ம் நூற்றாண்டில் ஆசிய-பசிபிக் பகுதி, பொருளாதார ரீதியில் கேந்திர முக்கியத்துவமானதாகத் திகழும். எனவே இப்பகுதிகளில் உள்ள நாடுகளுடனான உறவை மேம்படுத்த பாதுகாப்பு மற்றும் ராணுவ ரீதியான உடன்பாடு, முதலீட்டை அதிகரித்தல், தூதரக ரீதியான உறவை வலுப்படுத்தல், ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை பரவலாக்குதல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள ஒபாமா நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
அடுத்த வாரம் ஹோனலுலுவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் நாடுகளின் தலைவர் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும் என்றார் ஹிலாரி.
சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள திபெத்தியர்கள், விடுதலைக்காகப் போராடி வருவது குறித்து ஹிலாரி கிளிண்டன் பேசியது: வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் சீனாவை வரவேற்கிறேன். அதேசமயம் சீனா பின்பற்றும் மனித உரிமை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் தேவை.
சீனாவை எதிர்த்து திபெத்தியர்கள் தீக்குளித்து உயிரிழக்கின்றனர். வழக்குரைஞர் சென் குவாங்செங் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக சீனாவின் நாணயமான யுவான் மதிப்பை செயற்கையாக குறைத்து வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது. சீனாவின் இத்தகைய கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.
யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை சேர்த்ததால் நிதி உதவிகள் ரத்து.
யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை சேர்த்ததால் அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்தி விட்டது. அதனால் யுனெஸ்கோவின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாசார ஒத்துழைப்புக்கான அமைப்பு யுனெஸ்கோ. இந்த அமைப்பில் கடந்த மாதம் பாலஸ்தீனம் சேர்க்கப்பட்டது.
இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் யுனெஸ்கோவுக்கு வழங்கி வந்த நிதியுதவியை இருநாடுகளும் நிறுத்திவிட்டன. இதனால் பல்வேறு நாடுகளில் யுனெஸ்கோ செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் யுனெஸ்கோ தூதர்கள் கூட்டம் பாரிசில் நேற்று நடந்தது. இதில் பேசிய டைரக்டர் ஜெனரல் இரினா பொகோவா, யுனெஸ்கோவின் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் இறுதியில் நிதியுதவி வழங்கும். பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது.அதனால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே யுனெஸ்கோவின் பல்வேறு திட்டங்கள் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன என்றார்.
சோமாலியாவில் பஞ்சம்: வறுமையில் வாடும் பிஞ்சுக் குழந்தைகள்.
சோமாலியாவில் அண்மைக் காலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக பல இலட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக உணவு உற்பத்தி வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது.இதனால் அகதிகள் உட்பட நாட்டின் வறுமையான பல மக்கள் உணவுப் பற்றாக் குறையால் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தடுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு உரிய நடவடிக்கை எடுத்த போதிலும் போஷாக்குக் குறைபாட்டினால் சிறு பிள்ளைகள் இறந்து போவதை முற்றாக தடை செய்ய முடியவில்லை.இரண்டு மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக் குறைவால் கஷ்டப்படுகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் போஷாக்குக் குறைவால் உயிர் பிழைப்பது அசாத்தியம் எனப் பெற்றோரினால் கைவிடப்பட்ட ஏழுமாதக் குழந்தையை சுகாதார நிறுவனத்தினால் சிகிச்சை செய்து ஆரோக்கியம் பெற்ற சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றதென தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுபோன்று பலரும் சுகாதார நிறுவனத்தினால் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சோமாலியாவுக்கு மக்கள் நலன்புரி சேவைகளுக்காகப் பெறும் நிதி பற்றாக் குறையாக இருக்கிறதென தெரிவிக்கப்படுகின்றன.
சோமாலியாவின் பஞ்சம் கூடியவரை குறைக்கப்பட்டாலும், மக்கள் இன்னும் உணவுப் பற்றாக் குறைவால் நாள்தோறும் இறப்பை எதிர்நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது.மின்ஹாஜ் கெடி பாராஹ் என்ற குழந்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் தங்களது பெற்றோர்களால் குழந்தை உயிர் பிழைப்பது சாத்தியம் இல்லை என நம்பிக்கை இழந்தனர்.குழந்தையைப் பொறுப்பேற்றவர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரனையோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக சுகம் பெற்று பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிகிச்சைக்கு முன்னர் 3 கிலோ கிராம் நிறை இருந்த மின்ஹாஜ் ஆரோக்கியம் பெற்ற பின்னர் 8 கிலோவுக்கும் அதிகமான பாரம் கொண்டவராகவும் அவரது தோற்றத்தில் பொழிவும் அழகும் பிரதிபலித்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான்கான் கட்சியில் இணையும் பாகிஸ்தான் முன்னாள் மந்திரி.
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி ஷாமுக மது குரோஷி. சமீபத்தில் இவர் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.அதை தொடர்ந்து ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மேலும் முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக் - இ- இன்சாப் கட்சியில் சேர திட்டமிட்டுள்ளார்.
அதற்கான அறிவிப்பை வருகிற 27ந் திகதி கஷ்மோரில் நடை பெறும் இம்ரான்கான் கட்சி பொதுக் கூட்டத்தில் வெளியிடுகிறார். அதை தொடர்ந்து அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.குரேஷியுடன் மற்ற கட்சி தலைவர்கள் சலீம் சபியுல்லா, சர்தார் அவாயிஸ்கான் லெகரி மற்றும் பலர் இம்ரான்கான் கட்சியில் சேருகின்றனர்.
ஆப்கனில் விதவைத் தாயையும், அவரது மகளையும் கல்லால் அடித்து தண்டனை நிறைவேற்றம்.
ஆப்கானிஸ்தானின் மத்தியில் உள்ள கஸ்னி பிராந்தியத்தில் தலிபான்கள் விதவைத் தாய் ஒருவரையும் அவரது மகளையும் கல்லால் அடித்து பின்னர் மிக கொடுமையாக தாக்கி சுட்டுக் கொன்றுள்ளனர்.
இளம் விதவை ஒருவரும் அவரது மகளும் வாழ்ந்துவந்த வீட்டுக்குள் தடாலடியாக நுழைந்த தலிபான் ஆயுததாரிகள், வெளி ஆண்களுடன் உறவு வைத்துள்ளதாக அந்தப் பெண்கள் மீது குற்றம் சாட்டியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்கள் அப்பெண்களை வீட்டை விட்டு வெளியில் இழுத்துப் போட்டு கல்லால் அடித்தும், பின்னர் துப்பாக்கியால் சுட்டு சாகடித்தும் இருந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அந்த ஆயுததாரிகளைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அப்பகுதியின் காவல்துறைத் தலைமையதிகாரி அலுவலகத்துக்கும், பிராந்திய ஆளுநரின் அலுவலகத்துக்கும், ஆப்கானிய உளவுத்துறையின் முக்கிய அலுவலகம் ஒன்றுக்கும் வெறும் சில நூறு மீட்டர் தூரத்திலே இப்படி ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது.
திருமண பந்தத்துக்கு வெளியில் உறவு வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் தரும்படி கஸ்னியின் மதத் தலைவர்கள் அண்மையில் பத்வா எனப்படும் மத ஆணைகளைப் பிறப்பித்திருந்தனர் என்று கூறப்படுகிறது.இந்த நகரைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆப்கானிய அரசு அதிகாரிகள் திணறிவருகிறார்கள் என்றே தெரிகிறது.
இந்தப் பிராந்தியத்தில் தலிபான்கள் தமது தரப்பில் ஆளுநர் ஒருவரையும், நீதிபதிகளையும் வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.இந்த ஊரில் உள்ள வானொலி நிலையங்கள் சிலவற்றில் தற்போது தலிபான்களின் பிரச்சாரப் பாடல்கள் ஒலிப்பதாகவும் சொல்கிறார்கள்.கஸ்னியைச் சுற்றிய இடங்களில் கிளர்ச்சிக்காரர்கள் வெளிப்படையாகவே உலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறைவு பெற்றது சார்க் மாநாடு: முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்.
தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. இதில் பல முக்கியமான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
8 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடு மாலத்தீவுகளின் அட்டு நகரில் வியாழக்கிழமை தொடங்கி இருநாள் நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, இலங்கை அதிபர் ராஜபட்ச, நேபாள பிரதமர் பாபுராம் பட்டராய், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், மாலத்தீவுகள் அதிபர் முகமது நசீத் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தெற்காசிய நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமாக வர்த்தகத்தில் வரியல்லாத பிறதடைகளையும், உபரி வரிகளையும் நீக்குவது, தடையற்ற வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறின.மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் மாநாட்டை நடத்திய நாடான மாலத்தீவுகளின் அதிபர் நசீத் இதனை அறிவித்தார்.
அவர் கூறியதாவது, நமது உறுப்பு நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக, வரியல்லாத பிற தடைகளை நீக்குவது, உபரி வரிகளைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். இது தொடர்பாக சார்க் நாடுகளின் அமைச்சர்கள் குழு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.வளர்ச்சி குறைந்த நாடுகளுடனான வர்த்தகத்தில் வரிவிதிப்பு தடைகளை பெருமளவில் குறைப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இதனை வரவேற்கிறோம்.
உறவுப் பாலம் அமைப்போம் என்ற மையநோக்குடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், சார்க் நாடுகளிடையே மூலதன பரிமாற்றத்தை அதிகரிப்பது தொடர்பாக நிதியமைச்சர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவது என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிராந்திய ரயில்வே ஒப்பந்தம், மோட்டார் வாகன ஒப்பந்தம் ஆகியவற்றில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தெற்காசிய அஞ்சல் அமைப்பை ஏற்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் போதும், கடற்கொள்ளை போன்ற அசம்பாவிதங்களின் போதும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும், விரைவில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இயற்றப்பட்டுள்ளது என்று நிறைவு உரையில் மாலத்தீவு அதிபர் நசீத் தெரிவித்தார்.இப்போது நடைபெற்றது 17-வது சார்க் மாநாடு. அடுத்த மாநாடு நேபாளத்தில் 2012-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டின் உள்துறை அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.
மெக்சிகோ நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட ஏழு பேர் பலியாயினர்.மெக்‌சி‌கோ நாட்டின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் பிரான்சிஸ்‌கோ பிளாக்மோரா. இவர் சம்பவத்தன்று மெக்சிகோ நகரில் இருந்து குர்னவாகா என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரை கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பு துண்டிக்‌கப்பட்டது. இதனையடுத்து அமைச்சரை தே‌டும் பணி நடைபெற்றது.இவ்விபத்தில் அமைச்சர் பலியானது உறுதி செய்யப்பட்டது. அவருடன் பயணம் செய்த ஹெலிகாப்டர் பைலட் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பலியாயினர்.
யூரோவைப் பாதுகாக்க வேண்டும்: ஜேர்மன் அதிபருக்கு ஒபாமா, கமரூன் வலியுறுத்தல்.
வீணாகக் குழப்பிக் கொண்டிராமல் விரைவாக யூரோவைப் பாதுகாக்க வேண்டும் என்று ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மார்க்கெலிடம் ஒபாமாவும், கமரூனும் தெரிவித்துள்ளனர்.இத்தாலியைத் தொடர்ந்து பிரான்சும் அடுத்ததாக ஸ்பெயினும் கடனில் மூழ்கப் போவதால் விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது. பிரான்ஸ் அதிபர் சர்கோசியிடமும் அமெரிக்க, பிரிட்டன் தலைவர்கள் பேசினர்.
பிரிட்டன் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருந்தாலும் இன்றைய நிலை கடினமாகத் தான் இருக்கிறது. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதனை உங்களிடம் நான் மறைக்க இயலாது என்று பிரிட்டனின் பிரதமர் தம் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, பிரிட்டன் தரைவர்கள் ஜேர்மனி மீது அதிக கோபத்துடன் இருக்கின்றனர். இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளின் கடன் நெருக்கடியை மீட்டெடுக்க ஜேர்மன் உடனடியாக ஒரு டிரில்லியன் யூரோவைத் திரட்ட வேண்டும். ஆனால் ஜேர்மனி இந்த முயற்சியில் தீவிரம் காட்டாதது அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது.நேற்றிரவு இத்தாலி பாராளுமன்றம் அதன் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோனியை பதவி விலகுமாறு தீர்மானம் நிறைவேற்றியது. கிரீஸ் நாட்டிலும் பழைய பிரதமர் பதவி விலகி விட்டார். புதிய பிரதமராக லூகாஸ் பப்படெமோஸ் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு: புதிய நாஜி படையினருடன் தொடர்பு.
ஜேர்மனியில் அண்மைக்காலங்களாக புதிய நாஜிப் படையினர் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.இறைச்சிப் பண்டங்கள் விற்கும் கடைகளுக்கு வந்து குண்டுகளை வெடிக்கச் செய்தும், கொள்ளையடித்தும், சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கியால் கொலை செய்தும் திரும்பியுள்ளனர்.பொலிஸாரைத் தாக்கி அவர்களிடமிருந்து துப்பாக்கிகளை திருடியுள்ளனர். சிதைந்து போன கட்டங்களில் புதைந்து கிடக்கும் துப்பாக்கிகளையும் திருடியுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் 2000 முதல் 2006 வரை ஆறு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இறந்து போன ஒன்பது பேரில் எட்டுப்பேர் துருக்கியப் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் மட்டும் கிரேக்கர். பட்டப்பகலில் இக்கொலைகளை நியூரெம்பெர்க் முதல் ரோஸ்டோக் நகரம் வரை உள்ள இறைச்சித் திண்பண்டக் கடைகளில் செய்துள்ளனர்.
இத்தனை கொலைகளுக்கும் இடையிலான நூலிழைத் தொடர்பாக இருப்பது சைலன்சர் பொருத்தப்பட்ட செக் நாட்டுப் பிஸ்டல் ஒன்று தான். இந்த வாரம் இந்தத் துப்பாக்கி சிவிகாவு அடுக்குமாடி வீடுகளின் அருகே கிடந்தது. இதன் பக்கத்தில் வேறு ஐந்து கைத்துப்பாக்கிகளும் ஒரு இயந்திரத் துப்பாக்கியும் இருந்தன.
1998 ஜனவரி மாதம் தூரிங்கா ஹிமாத்ஷுஸ் நடத்திய குழாய் வெடிகுண்டு ஒன்றின் போது இது பிடிபட்டது. அந்தக் குழுவினரிடம் நடத்திய விசாரணையில் தான் நியோ நாஜிப் படையினர் இக்குழுவினருடன் இணைந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தக் கொலைகளை மூவர் செய்துவருவதாக ஜேர்மன் காவல் துறையினர் கருதுகின்றனர். அதில் இருவர் ஆண்கள் ஒருவர் பெண் ஆவர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF