Sunday, November 27, 2011

இன்றைய செய்திகள்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது.சரத் பொன்சேகாவின் இரு மகள்மாரினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட உள்ளது.உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் we the people வீ த பீபல் என்னும் முறைமையின் கீழ் அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
ஒரு மாத காலத்திற்குள் 25,000 ற்கும் மேற்பட்ட கையொப்பங்கள் திரட்டப்பட்டால் குறித்த மகஜர் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் பதிலளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்த மகஜரில் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ரணில் கட்சித்தலைமைக்காக மீண்டும் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிட உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைமைப் பொறுப்பு குறித்த யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இதன் போது கட்சித் தலைமைப் பொறுப்பை பெற்றுக் கொள்வதற்காக போட்டியிட உள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமைப் பதவிக்காக வேறும் நபர்கள் போட்டியிட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும். 
எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இந்த செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கட்சி செயற்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பொதுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒருவர் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டால் அவர் தற்போது வகித்து வரும் பதவியை துறக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி நண்பர் என்ற அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு தீர்ப்பளிக்கவில்லை! நீதிபதி தீபாலி விஜயசுந்தர.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் ஜனாதிபதி தமது நண்பர் என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்கவில்லை என்று நீதிபதி தீபாலி விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.வெள்ளைக்கொடி வழக்;கில் சரத் பொன்சேகாவுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை தீபாலி விஜயசுந்தர வழங்கினார். இதனையடுத்து அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இது குறித்து தகவல் தந்துள்ள தீபாலி, தமக்கும் தமது மகளுக்கும் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு சட்டத்தரணி என்ற வகையில் அவரை தமக்கு தெரியும். அதனைத் தவிர அவர் தமது குடும்ப நண்பர் என்று கூறப்படுவது உண்மையல்ல.பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை கூறலாம். ஆனால் எதற்கும் ஆதாரங்கள் தேவை.
ஒருவர் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டால், குற்றத்தின் தன்மையை பொறுத்து 5 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கமுடியும்.எனினும் தாம் சரத் பொன்சேகாவுக்கு மூன்று வருட தண்டனையையே வழங்கியதாக குறிப்பிட்ட தீபாலி விஜயசுந்தர, இதனை எவ்வாறு பக்கசார்பான தீர்ப்பு என்று கூறமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.
வெள்ளைக்கொடி தீர்ப்பின்போது சரத் பொன்சேகாவை விடுவித்த மூன்றாவது நீதிபதியான வராவௌவின் கணணி, சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து கருத்துரைத்த நீதிபதி தீபாலி விஜயசுந்தர, வழமையாக தமது கணணிகள் முடங்கிப்போகும் நிலை இருந்ததாக குறிப்பிட்டார்.இதேவேளை இந்த வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி வராவௌ 14 நாட்கள் விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீரற்ற காலநிலையால் இதுவரை 19 போ் மரணம்! 43 பேர் காணாமல் போயுள்ளனர்!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43 பேர் காணமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இலங்கையின் தென்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட காலநிலை சீர்கேட்டை அடுத்து கடலுக்கு சென்ற 33 மீனவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலநிலை சீர்கேடு காரணமாக இதுவரை 19 பேர் மரணமானதாக கணக்கிடப்பட்டுள்ளதுடன் 1200 வீடுகள் சேதமடைந்துள்ளன. 41 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் தொடர்ந்தும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரூபாவின் பெறுமதி இறக்கம்! திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையில் பனிப்போர்.
ரூபாவின் பெறுமதி இறக்கம் தொடர்பில் திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் மரபு ரீதியான கடமைகளை திறைசேரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.ரூபாவின் பெறுமதி இறக்கம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆலோசனை கோரப்படவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய, திறைசேரியினால் ரூபாவின் பெறுமதி இறக்கம் பற்றி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அந்நிய செலவாணி கொடுக்கல் வாங்கல் பற்றி தீர்மானம் எடுக்கும் மத்திய வங்கிக்கு இந்தத் தீர்மானம் தலையிடியை எற்படுத்தியுள்ளது.முக்கிய ஏற்றுமதியாளர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து திறைசேரி ஆணையாளர் பீ.பி. ஜயசுந்தர, ரூபாவின் பெறுமதியை இறக்க தீர்மானித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், ரூபாவின் பெறுமதியிறக்கம் இறக்குமதியாளர்களை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த வரவு செலவுத் திட்ட யோசனையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பற்றிய அறிவிப்பு திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையில் பனிப்போரை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு.
இலங்கையின் முதலாவது நெடுஞ்சாலையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் விஷேடமாக ஜப்பானிய சமாதானத் தூதுவர் யசூசி அகாசி கலந்துகொண்டார்.அத்துடன் வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அதிக எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். 
இதேவேளை இந்த வீதியூடான பொது பஸ் போக்குவரத்தும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெற்கு அதிவேக வீதியானது கொழும்பு கொட்டாவையிலிருந்து காலி பின்னதுவ வரை 152 கிலோமீற்றர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியில் கட்டணம் செலுத்தியே பயணிக்க முடியும். இதேவேளை இந்த வீதியூடாக பயணிப்பதற்கு முச்சக்கர வண்டி-மோட்டார் சைக்கிள்- உழவு இயந்திரம்- சைக்கிள்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதசாரிகளும் இந்த வீதியூடாக செல்ல முடியாது.
நாட்டில் முதற் தடவையாகவே இவ்வாறான அதிவேக வீதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பயணிக்க முடியும்.அத்தோடு இந்த வீதியில் பயணிப்பதற்காக 8 இடங்களில் மாத்திரமே நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களிலிருந்து பயணிக்கும் தூரங்களுக்கான கட்டணங்கள் நான்கு வகையாக அறவிடப்படவுள்ளது.
இதேவேளை இந்த வீதிகளில் பொது மக்கள் நுழையாத வகையில் வீதியில் இரண்டு பக்கமும் வேலிகள் போடப்பட்டுள்ளதுடன் வீதி தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவுள்ளது.இந்த வீதியானது போக்குவரத்துக்காக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்னர் கடந்த 20 ஆம் திகதி பொது மக்கள் மற்றும் பாதசாரிகள் பார்வைக்காக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாத்தறை மாவட்டத்தில் மினி சூறாவளி: பலர் பலி.
மாத்தறை மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளியுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பலர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மினி சூறாவளியால் பாடசாலை கட்டடம் உள்ளிட்டவை சேதமடைந்தாதாகவும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து கணிப்பிடப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாத்தறை மாவட்ட இணைப்பாளர் தெரிவித்திருந்தார்





மைக்கேல் ஜாக்சனை கௌரவிக்கும் வகையில் ஆல்பம் வெளியிட முடிவு.
பொப் இசை சக்ரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் நினைவை போற்றும் வகையில் இம்மார்ட்டல் என்ற பெயரில் ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.அவர் பாடிய 20 பாடல்கள் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. வசீகரிக்கும் குரலாலும் அதிரடி நடனத்தாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன்.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் திகதி 50வது வயதில் இறந்தார். அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் இம்மார்ட்டல்(இறவாப் புகழ் கொண்டவன்) என்ற பெயரிலான ஆல்பம் வெளிவந்துள்ளது.அமெரிக்காவில் சோனி மியூசிக் குழுமத்தை சேர்ந்த எரிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. இதில் மைக்கேல் ஜாக்சனின் 20 பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன.
பிரபல பாடகர் ஜஸ்டின் டிம்பர்லே, பாடகி ரிஹானா ஆகியோரும் இதில் பாடியுள்ளனர். உலகின் பல நாடுகளிலும் கடந்த 18ம் திகதி தொடங்கி நேற்று வரை இந்த ஆல்பம் வெளியாகியுள்ளது.ஜாக்சன் இறந்த பிறகு வரும் 8வது ரீமிக்ஸ் ஆல்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது 60 பாடல்களை ரீமிக்ஸ் செய்து நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் மாற்றம் ஜேர்மன், பிரான்ஸ் தலைவர்கள் விருப்பம்.
ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலும், பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியும் ஐரோப்பிய ஒன்றியம் உருவாவதற்கு காரணமான ஒப்பந்தங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றனர். இம்மாற்றத்தால் நம்பகத்தன்மையைத் திரும்பப் பெறும் என்று சர்கோசி நம்புகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றியத்திற்கு இன்று கிடைக்கும் வசைமொழிகள் ஒழிய வேண்டும் எனவும் மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்புக்கான அடித்தளத்தை செம்மைப்படுத்த விரும்புகின்றனர். ஒன்றியத்தின் மீது இருந்த நம்பிக்கை இன்று தொலைந்து போனதால் இன்றைய சூழ்நிலை மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தான் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க இருவரும் முனைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மாற்றங்களின் விபரம் குறித்து இரு தலைவர்களும் தெரிவிக்கவில்லை. டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாள் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திற்குப் பிறகு மாற்றங்களின் விபரங்களை வெளிவரும்.
ஐரோப்பிய மைய வங்கியான ECB எவ்விதச் சார்பும் இன்றி தனித்து இயங்க வேண்டும் என்று தான் விரும்புவதாகத் தெரிவித்த மெர்க்கெல், ECB மீது கொண்ட நம்பிக்கையை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம் என்று உறுதிபடக் கூறினார்.
பிரான்ஸ், ஜேர்மன் தலைவர்கள் தாம் நடத்திய இந்தக் கூட்டத்திற்கு இத்தாலியின் புதிய பிரதமரான மரியோ மாண்ட்டியையும் அழைந்து இருந்தனர். இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும். இதன் கடன் நெருக்கடி ஐரோப்பாவின் மீது மிகப்பெரிய சுமையாக அழுத்துகிறது.
பல ஆண்டுகளாக இத்தாலி தன் கடனைத் தீர்க்க அரும்பாடுபட்டு வருகிறது. இத்தாலி தன் மீது விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது குறித்து மெர்க்கெல் பாராட்டினார். மரியோமாண்ட்டி, “கடுமையான பொதுநிதி வரையறைக்குள் யூரோ பத்திரங்களின் விற்பனை பலன் அளிக்கும்” என்றார், ஆனால் மெர்க்கெல் அதனை மறுத்தார்.
யூரோ பத்திரங்களின் விற்பனை கடனைக் குறைக்கும் என்று சிலரும், யூரோ மண்டலத்தின் உள்ள பதினேழு நாடுகளின் கடனையும் அதிகரிக்கும் என்று சிலரும் கூறுகின்றனர். எதிர்காலத்திற்கான பொதுநிதியை சிலரும் கூறுகின்றனர். எதிர்காலத்திற்கான பொதுநிதியை அதிகரிப்பது குறித்து எந்தத் திட்டமும் நடவடிக்கையும் இல்லாமல் பத்திரங்களை விற்பது பலன் தராது.
இத்தாலியப் பிரதமரின் அழைப்பை ஏற்று சர்கோசியும், மெர்க்கெலும் உரோம் நகரத்திற்கு வருகை தந்து அந்நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி குறித்து பேச்சு வார்த்தை நடத்த இசைவு தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 19 பேர் உடல் சிதறி பலி.
ஈராக் மார்க்கெட்டில் 3 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 19 பேர் உடல் சிதறி இறந்தனர்.ஈராக்கில் ஜனாதிபதி சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபின் நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்கா தலைமையிலான படைகள் ஏற்றிருந்தன.
டிசம்பர் இறுதிக்குள் ஈராக் ராணுவம் போலீசாரிடம் பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைத்துவிட்டு படைகளை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதன்படி அமெரிக்க வீரர்கள் படிப்படியாக தாய்நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு சர்வதேச நாடுகள் அச்சம் தெரிவித்துள்னன.
முக்கிய நகரான பாஸ்ராவில் மார்க்கெட் பகுதியில் நேற்று 3 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. முதல் 2 குண்டுகள் வெடித்த தகவல் அறிந்து ராணுவத்தினரும் போலீசாரும் மார்க்கெட்டுக்கு விரைந்து சென்றனர்.பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக் கொண்டிருந்த போது 3வது குண்டு வெடித்தது. இதில் 19 பேர் உடல்சிதறி இறந்தனர். அவர்களில் பலர் ராணுவ வீரர்கள், போலீசார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்.
ரஷ்யாவில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 4ம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஒப்புதலை ரஷ்யாவின் மேல் சபை வழங்கியுள்ளது.ரஷ்யாவில் தற்போதைய ஜனாதிபதியாக டிமிட்ரி மெட்வடேவ் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் திகதியை மேல்சபை உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி‌குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2008ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. அதே போன்று இம்முறையும் 4ம் திகதி ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது.இத்தேர்தலில் தற்போது பிரதமராக உள்ள விளாடிமிர் புடின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து: 6 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்.
சீனாவின் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் அப்பகுதியில் குடியிருந்த 6 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சீனாவின் குவாங்சோ மாகாணத்தில் பான்யு மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று முன்தினம்(24.11.2011) வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வண்டிகளில் வந்த 90 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் ரசாயன ஆலையில் இருந்து வெளியேறிய ஹைட்ரஜன் குளோரைடு என்ற நச்சு வாயு காற்றில் கலந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் இந்த நச்சு காற்று அங்கே பரவியுள்ளதால் மக்கள் வீடு திரும்பவில்லை.
ஈரானில் அமெரிக்க உளவாளிகள் 12 பேர் கைது.
அமெரிக்காவின் உளவாளிகள் 12 பேர் ஈரானில் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி தெரிவித்தார்.அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. அணு உலை நிறுவும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி கழகமும் கூறிவருகிறது. ஆனால் ஈரான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து பொருளாதார தடைகளை பல நாடுகள் விதித்துள்ளன.பரபரப்பான சூழ்நிலையில் ஈரான் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளை முடிவு செய்யும் அமைப்பு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. இதில் செல்வாக்கு மிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி பங்கேற்றார்.
அதன்பின் பர்வேஸ் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்காவை சேர்ந்த சிஐஏ உளவாளிகள் ஈரானுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதுவரை 12 சிஐஏ ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.ஆனால் அவர்கள் எங்கு கைது செய்யப்பட்டனர், அவர்கள் இப்போது எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் இந்திய அரசின் முடிவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.கடந்த வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பன்மைக் குறியீடு(மல்டி பிராண்ட்) சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவானது. ஒருமைக் குறியீடு(சிங்கிள் பிராண்ட்) வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க-இந்திய வர்த்தக சபையின் தலைவர் ரான் சோமர்ஸ் கூறியது: அரசின் இந்த முடிவால் இந்திய நுகர்வோர் பயன் அடைவார்கள். அதிகளவில் அன்னிய நேரடி முதலீடுகள் குவியும்.
குறிப்பாக விளைப் பொருள்கள், அறுவடை, பதப்படுத்துதல், சேமிப்பு, சந்தையிடல் போன்ற துறைகளில் அதிக முதலீடு கிடைக்கும். உணவுப் பொருள்கள் விலை உயர்வு, பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். அவற்றை கட்டுப்படுத்துவதும் எளிதாக இருக்கும்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் இந்திய விவசாயிகளுக்கு அதிக சந்தை வாய்ப்பு கிடைக்கும். விளைப்பொருள்களின் தரம் உயர்வதுடன், விரும்பும் பொருள்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இந்திய நுகர்வோருக்கு கிடைக்கும் என்றார் அவர்.
வாடிக்கையாளர்கள், விவசாயிகள், இந்திய அரசு என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசின் முடிவால் பலன் அடைவார்கள் என்று வால்மார்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும், முதன்மை செயல் அதிகாரியுமான டோ மேக் மில்லன் கூறினார்.பன்மைக் குறியீடு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால், இந்திய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வால்மார்ட் நிறுவனத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ருமேனியாவின் மன்னராக பதவியேற்கிறார் சார்லஸ்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ்(63). பட்டத்து இளவரசரான இவர் ராணி எலிசபெத்துக்கு பிறகு மன்னராக முடிசூட தயாராக உள்ளார்.
ஆனால் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் இவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் மன்னராக மக்களிடம் அதிக ஆதரவு உள்ளதாகவும், இவரையே அடுத்த மன்னராக்க ராணி எலிசபெத் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் ஐரோப்பாவில் உள்ள ருமேனியா நாட்டின் அடுத்த மன்னர் ஆகும் வாய்ப்பு சார்லசுக்கு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து ஐரோப்பிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ருமேனியாவில் ஆட்சி செய்த விலாட் தி இம்பேலர் மன்னரின் வழித்தோன்றலான மைக்கேல் தற்போது அந்நாட்டின் மன்னராக பதவி வகிக்கிறார். அவருக்கு 90 வயது ஆகிறது. அவருக்கு வாரிசு இல்லாததால் விரைவில் பதவி விலக உள்ளார்.
இதற்கிடையே சார்லசின் தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கொள்ளுப்பாட்டி ராணி விக்டோரியா விலாட் தி இம்பேலரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த ரத்த உறவை வைத்து சார்லஸ் ருமேனியாவின் மன்னராக பதவி ஏற்கலாம் என கருதப்படுகிறது.அவ்வாறு அவர் ருமேனியா நாட்டின் மன்னராகும் பட்சத்தில் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிரால் உறைந்து போன எஜமானரை காப்பாற்றிய நாய்.
ஜப்பானில் உள்ள நாயியே நகரை சேர்ந்தவர் யோஷிமசா சோமா. 81 வயதான இவர் தனது வீட்டில் லேப்ரடார் ரெட்ரிஎவர் என்ற 7 வயது ஆண் நாயை செல்லமாக வளர்த்து வந்தார்.எங்கு சென்றாலும் அதையும் தன்னுடன் அழைத்து செல்வார். கடந்த 15ந் திகதி மாலை இவர் தனது 3 வயது பேத்தி சுகாய் கிமுராவுடன் ஒரு காரில் வெளியே புறப்பட்டு சென்றார்.
தன்னுடன் நாய் லாப்ரடாரையும் அழைத்து சென்று இருந்தார். பின்னர் யோஷிமசா சோமா வீடு திரும்பும் போது லராவுசு என்ற இடத்தில் ஆற்றங்கரையில் ரோட் டோரம் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
எனவே அவரால் வெளியே வர முடியவில்லை. இதற்கிடைய இரவு சூழ்ந்ததால் கடும் பனி கொட்டியது. இதனால் காருக்குள் இருந்த யோஷிமசாவும், அவரது பேத்தி சுகாய் கிமுராவும் கடும் குளிரால் நடுங்கிய படியே மயங்கினர்.
ஆனால் அவரது கன்னத்தில் நாய் லாப்ரடார் தனது நாக்கினால் நக்கி சூடுபடுத்தி காப்பாற்றியது. இதற்கிடையே அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கவிழ்ந்து கிடந்த காரை கண்டுபிடித்து அதில் மயங்கி கிடந்த தாத்தா, பேத்தி இருவரையும் மீட்டனர்.நன்றியுடன் தனது எஜமானரை காப்பாற்றிய நாய் லாப்ரடாருக்கு பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு போராட்டக்காரர்களுக்கு அரசு நெருக்கடி.
கனடாவில் எட்மாண்டன், மொன்றியல் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுத்தனர்.மேலும் எட்மாண்டன் போராட்டக்காரர்களை வெளியேற்றி விட்டு அவர்கள் ஆக்கிரமித்திருந்த மெல்க்கோர் பூங்காவிற்கு கம்பிவலையில் வேலி அமைத்து விட்டனர்.
அந்த இடத்தை விட்டு அகல மறுத்த மூன்று இளைஞருக்கு 280 டொலருக்கும் அதிகமாக அபராதம் விதித்தனர்.போராட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் ஆனி பர்ஸி, இந்த 42 நாட்களில் இளைஞர்கள் ஒரு சமூகமாக உருவாகிவிட்டனர். இனி இவர்கள் வேலையில்லாத இளைஞர்களின் நன்மைக்காகவே 99 சதவிகிதம் போராடுவர் என்ற எட்மண்டன் ஆக்கிரமிப்பாளர் பற்றி எடுத்துக் கூறினர்.
மேலும் இந்த போராட்டக்காரர்கள் மீது கிரிமினல் குற்றங்களைச் சுமத்தி இவர்களைப் பேச விடாமல் அவர்களே அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு எடுப்பதை விட்டு விட வேண்டும் என்றார்.
மொன்றியலில் விக்டோரியா பூங்காவை ஆக்கிமித்திருந்த இளைஞர்களை காவல்துறையினர் வெளியேற்ற முயன்றனர். டொரண்டோ, ஒட்டாவா, எட்மாண்டன் என அனைத்து நகரங்களிலும் நகராட்சி அலுவலர்கள் பெரியளவில் நடந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் காலி செய்து விட்டனர்.
சில போராட்டக்காரர்கள் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினர், வேறு சிலர் அந்த இடத்தை விட்டு அகல மறுத்தனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பொதுவாக போராட்டக்காரர்களிடம் இருந்து நல்ல மரியாதையும் ஒத்துழைப்பும் கிடைத்ததாக மொன்றியல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மாலி நாட்டு தீவிரவாதிகளால் இரு பிரெஞ்சு நபர்கள் கடத்தல்.
ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்த பிரெஞ்சு நிலவியலாளர் இருவரை மாலி பாலைவனப் பகுதியில் வியாழக்கிழமையன்று ஆயுதமேந்திய ஏழு பேர் கடத்திச் சென்றனர்.இந்த ஆட்கடத்தல் முறை அல்கொய்தாவின் ஆட்கடத்தல் முறையை ஒத்துள்ளது. ஆனால் இதுவரை அந்த இயக்கத்தினர் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
இந்தக் கடத்தல் நடைபெற்ற இடம் அல்கொய்தா தீவிரவாதிகளின் புழக்கம் அதிகம் உள்ள இடமாகும். ஒரு மணியளவில் மாலி பாலைவனப் பகுதியின் ஹொம்போரி என்ற கிராமத்தில் இருந்த விடுதி ஒன்றில் ஆயுதமேந்திய ஏழு தீவிரவாதிகள் புகுந்ததாக நகராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பும் இதுபோன்ற ஆட்கடத்தல் இப்பகுதியில் நடந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நைஜரில் கடத்தப்பட்ட சாஹேலைச் சேர்ந்த பிரெஞ்சு பயணிகள் ஆறு பேரில் நால்வர் இன்னும் மக்ரெட் நாட்டில் உள்ள அல்கொய்தா இயக்கத்தினர் பிடியில் தான் சிக்கியுள்ளனர்.
சகாரா பாலைவனத்தின் தென்புறத்தில் உள்ள சாஹேல் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலையும், ஆட்கடத்தலையும் நடத்தினர். மாலி, அல்ஜீரியா, நைஜர் நாட்டில் தான் இந்த கொடுமைகள் நடக்கின்றன.
நைஜரில் பிடித்து வைத்துள்ளவர்களை மீட்கும் பணியில் ஒரு பிரெஞ்சு இராணுவ அதிகாரி ஈடுபட்ட போது அவர் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டார். அவரது தோள்களில் குண்டுபாய்ந்தது.இதற்கு மறுநாள் தான் அந்த பகுதியில் நடைபெறும் சிமெண்ட் வேலைக்காக வந்திருந்த இநத இரண்டு நிலவியலாளரை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் மீண்டும் கலவரம்: ராணுவம் நியமித்த பிரதமரை ஏற்க மக்கள் மறுப்பு.
எகிப்து நாட்டில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக கலவரம் மூண்டதால் அவர் பதவி விலகினார்.இதைத் தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ஜனாதிபதி முபாரக்கின் கீழ் பிரதமராக இருந்த கமால் கன்ஜோரி தலைமையில் அரசு அமைக்க ராணுவம் அவரை நியமித்தது.
ஆனால் அவரை தெரிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் இன்று மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டனர்.இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. போராட்டக்கார்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தும் கலைத்தனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
நியூசிலாந்து நாட்டில் ஆளுங் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு.
நியூசிலாந்து நாட்டில் இன்று பொது தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 30 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்படும்.இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜான் கேய் தலைமையிலான ஆளுங்கட்சி அதிக இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.
பாகிஸ்தானில் வெள்ளம்: 50 லட்சம் பேர் பாதிப்பு.
பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையால் அங்குள்ள சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சுமார் 8 லட்சம் வீடுகள் இடிந்து 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவல்கள் ஐ.நா.சபையும், பாகிஸ்தான் அரசும் கூட்டாக நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இங்கு பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்களுக்கு ஐ.நா.சபையின் உலக உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களும், குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.அதற்காக ரூ.315 கோடி நிதி திரட்டப்பட்டு இருப்பதாகவும், மேலும் ரூ.345 கோடி நிதி தேவைப்படுகிறது என்றும் ஐ.நா. அதிகாரி  ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் படையினர் மீது நேட்டோ அதிரடி தாக்குதல்: 28 பேர் பலி.
பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் நேட்டோ படையினர் ஹெலிகாப்டர் மூலம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 28 பேர் பலியாகினர்.
இதற்கு பதிலடியாக ஆப்கனில் உள்ள நேட்டோ படையினருக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பாகிஸ்தான் வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நேட்டோ படையினர் முகாமிட்டுள்ளனர். ஆப்கனிலும், பாகிஸ்தான் - ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பாய்ஜாய் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து வந்த நேட்டோ படையினரின் ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இதில் 28 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். இவர்களில் ஒருவர் கப்டன், மற்றொருவர் மேஜர். நேட்டோ படையினரின் இந்த திடீர் தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக ஆப்கனில் உள்ள நேட்டோ படையினருக்குத் தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பாகிஸ்தான் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மீண்டும் பெஷாவருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேட்டோ படையினர் நம்புவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக நேட்டோ செய்தி தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் ஆப்கனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்புள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இது போன்ற சம்பவங்களால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு, சமீபகாலமாக சீராக இல்லை. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் படையினர் மீது நேட்டோ படையினர் நடத்திய தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
2012ல் ஏமனில் பொதுத் தேர்தல்: துணை ஜனாதிபதி அறிவிப்பு.
ஏமன் நாட்டின் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே பதவி விலகியதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி நடைபெற உள்ளதாக துணை ஜனாதிபதி அப்தர்ப் மன்சூர் ஹாதி தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த 69 வயது அலி அப்துல்லா சலே பதவி விலக கோரி ஜனவரி மாதம் முதல் மக்கள் போராட்டம் நடத்தினர்.
துனிஷியா, எகிப்து, லிபியா ‌போன்ற நாடுகளை தொடர்ந்து ஏமனிலும் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அரபு கூட்டமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து உறுப்பு நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து அதிபர் சலே பதவி விலக ஒப்புக்கொண்டு கடந்த 23ம் திகதி சவுதி மன்னர் முன்னிலையில் ஒப்புதல் கடிதம் அளித்தார்.
இதனையடுத்து புது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் திகதி அறிவிக்‌கப்பட்டது.
அதுவரையிலான இடைக்கால அரசிற்கு ஜனாதிபதியின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த முகம்மது பஹிந்தாவா என்பவர் தலைவராக நியமி்‌க்கப்பட்டுள்ளார் என்று துணை ஜனாதிபதி அப்தர்ப் மன்சூர் ஹாதி தெரிவித்துள்ளார்.
தலாய்லாமாவின் வருகையால் பேச்சுவார்த்தையை ரத்து செய்த சீனா.
புத்த மத துறவியான தலாய்லாமா இந்தியாவில் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசவிருக்கிறார் என்ற விடயத்தினால் அதிருப்தி அடைந்த சீனா இந்தியாவுடன் நடத்தவிருந்த முக்கிய பேச்சில் பங்கேற்காமல் தள்ளி போட்டுள்ளது.
திபெத்தில் வாழும் புத்த பிட்சுகள் தனி உரிமைக்காக போராடி வரும் தலாய்லாமா என்றாலே சீனாவுக்கு எப்போதும் கடும் வெறுப்பாகத்தான் இருக்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவை சந்திக்கவிருக்கிறார் என்றதும் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து புத்த துறவிகள் பங்கேற்கும் 4 நாள் விழா டெல்லியில் வரும் புதன்கிழமை துவங்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வெளியுறவு துறை அமைச்சகமும் இணைந்து நடந்துகிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து அதிருப்தி அடைந்த சீனா தனது குமுறலை தெரிவிக்கும் விதமாக இருநாடுகள் மூத்த அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு தடைபட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் பெய்ஜீங்கில் அந்நாட்டு உயர் அதிகாரிகளுடனான பேச்சு நடத்தினார்.
இதனையடுத்து 15ம் கட்ட பேச்ச வார்த்தை நாளை(திங்கட்கிழமை) நடப்பதாக இருந்தது. ஆனால் எவ்வித காரணம் தெரிவிக்காமல் இந்த பேச்சு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய - சீன தரப்பில் யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். இருப்பினும் இன்னும் எதிர்காலத்தில் இருதரப்பினருக்கும் வசதியாக ஒரு நாள் நிர்ணயிக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
நியூசிலாந்து பொதுத் தேர்தல்: ஆளும் கட்சி அமோக வெற்றி.
நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து தற்பொழுது பிரதமராக பதவி வகிக்கும் ஜான் கீ 2வது முறையாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
121 உறுப்பினர்களைக் கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்றத்துக்கு சனிக்கிழமை(26.11.2011) பொதுத் தேர்தல் நடைபெற்றது.
நேற்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் தேசிய கட்சி 60 இடங்களைக் கைப்பற்றியது. எனினும் பெரும்பான்மைக்கு 1 இடம் குறைவாக இருந்தது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஏசிடி மற்றும் யுனைடெட் பியூச்சர் ஆகியவை தலா 1 இடங்களைப் பிடித்தது.
புதிய அரசு அமைவதற்கு இந்த இரு கட்சிகளிடமும் ஆதரவு கேட்கப்படும் என ஜான் கீ தெரிவித்துள்ளார். இப்போது தேசிய கட்சி தலைமையிலான ஏசிடி மற்றும் யுனைடெட் பியூச்சர் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை எச்சரிக்கும் பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்றிரவு(26.11.2011) நடைபெற்றது. பிரதமர் யூசுப் ரசூல் கிலானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என பிரதமர் கிலானி இதை வர்ணித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பொருட்கள், ராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகளை பாகிஸ்தான் அடைத்து விட்டது.
மேலும் பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF