Wednesday, November 9, 2011

ஞாபக மறதியிலிருந்து விடுபடுவதற்கு!!

1288860067 41 Immunotherapy Drug Gammagard May Stop Alzheimer's
பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதி. சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை. காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது.


இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும். மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும். மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல். இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும். 


இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும். முதலாவது குறுகிய கால நினைவாற்றல். பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை. அடுத்த வகை அண்மைக் கால நினைவாற்றல். இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு. ஞாபக மறதிக்கு பல காரணங்கள் உள்ளன.


மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு மற்றும் தலையில் அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. குடிப்பழக்கம், வலிப்பு, பார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால, அண்மைக் கால நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம். நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக அல்சைமர் நோய் என்று அழைக்கிறோம். முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர். புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும். 


ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுவது, பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும். தனி மனித ஆளுமை, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சமூக பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பு முறை: ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வயதாகும்போது படிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறது. புதிதாக எதுவும் உருவாவதில்லை. வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது. 


சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம். அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம். அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம். செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும் விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம். முக்கியமாக, மறதிக்காக கவலைப்பட கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF