Tuesday, November 8, 2011
பல்லி போல ஏறும் சுவரில் ரோபோ!
எந்த பிடிமானமும் இல்லாமல் பல்லி போல ‘ப்பச்சக்’ என்று கவ்விப் பிடித்தபடி சுவரில் ஏறும் ரோபோவை கனடா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மருத்துவம், வானியல் உள்பட பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
புதிது புதிதாக பல்வேறு ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கனடாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்திலும் இதுதொடர்பான ஆராய்ச்சி நடந்து வந்தது. பல்லி போல சுவரில் ஏறும் ரோபோவை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் தொழில்நுட்பம் பற்றி அவர்கள் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத ஏராளமான ரோமங்கள் போன்ற அமைப்புகள் பல்லியின் பாதத்தில் உள்ளன. இவை ‘சீட்டா’ எனப்படுகின்றன. சமதள பரப்புக்கும் இந்த ரோமங்களுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்பு விசை காரணமாகத்தான் செங்குத்தாகக் கூட பல்லி நடக்கிறது.
இந்த ஈர்ப்பு விசை அடிப்படையில்தான் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. முடியைவிட ஏறக்குறைய 10ல் ஒரு மடங்கு சிறிதான மிகமிக நுணுக்கமான முடி போன்ற அமைப்புகள் இந்த ரோபோவின் கீழ்ப்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. தொப்பி போல பகுதிகள் உருவாக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான ரோமங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் ரோபோ நடக்கிறது. செங்குத்தாக நடக்கும் ரோபோக்கள் ஏற்கனவே உள்ளன. வெற்றிடம் ஏற்படுத்தி நடத்தல், பசைத் தன்மையை உருவாக்குதல் ஆகிய தொழில்நுட்பங்களே இதுவரை பயன்படுத்தப்பட்டன. அடிப்பகுதியில் ரோமங்களை பொருத்தி, ‘பல்லி’ தொழில்நுட்பத்தில் ரோபோ உருவாக்கியது இதுவே முதல் முறை. இந்த ரோபோவின் எடை 240 கிராம். இதன் மீது 110 கிராம் எடை ஏற்றி வைத்தாலும் நகரும் திறன் உடையது. உயரமான கட்டிடங்களை ஆய்வு செய்வது, கட்டிட சுவர்களை கழுவுவது, குழாய்களில் நீர் கசிவை கண்டுபிடிப்பது போன்ற பணிகளுக்கு இந்த வகை ரோபோக்கள் உதவும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF