Sunday, November 6, 2011

இன்றைய செய்திகள்.

சீனா நிறுவன காணியில் வேறு ஹோட்டல் நிர்மாணம்.
சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்துக்கு (CATIC)  ஒதுக்கிய 7 ஏக்கர் காலிமுகத்திடல் காணியை Sheraton  என்ற ஹோட்டல் நிர்வாகத்துக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  சீன நிறுவனத்திடம் இருந்து பெற்ற இந்த காணியை குறித்த ஹோட்டல் நிர்வாகத்துக்கு கையளிக்கும் வகையில் உடன்படிக்கை ஒன்று விரைவில் செய்துக்கொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே சீன நிறுவனத்துக்கு குறித்த காணியை விற்பனை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டு பின்னர் அதனை 99 வருட குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.இதனை குறித்த சீன நிறுவனம் ஆட்சேபித்தது.இதனையடுத்து அந்த நிறுவனத்திடம் இருந்து காணியை பெற்று ளூநசயவழn ஹோட்டல் நிர்வாகத்துக்கு அதனை வழங்க தீhமானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலிமுகத்திடல் காணியை இழந்த சீன நிறுவனமும் தற்போது கொழும்பில் வேறு காணித்தொகுதியை தேடிக்கொண்டிருக்கிறது.ஏற்கனவே காலிமுகத்திடலின் முன்னால் உள்ள பகுதியில் சங்ரி லா ஹோட்டல் நிர்மாணத்துக்காக 10 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 600 அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு மூடுவிழா.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் 600 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் அரச சார்பற் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நிறுவனங்கள் நிதியின்மை காரணமாகவே மூடப்பட்டதாக தெரிவிக்கப்படடுள்ளது.
இலங்கையில் சுமார் 1300 அரச சார்பற்ற நிறுவனங்கள் தம்மை பதிவுசெய்துள்ளன.இதற்கிடையில் உரிய நடைமுறைகளை பின்பற்றத் தவறிய பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைச் செய்திகளை வெளியிடும் இணைய தளங்கள், ஊடகங்கள் ஊடக அமைச்சில் பதிவு செய்யுமாறு உத்தரவு.
இலங்கை செய்திகளை வெளியிடும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள், இலங்கை ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டுமென அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இலங்கை தேசம் பற்றியோ அல்லது அதன் மக்கள் பற்றியோ செய்திகளை வெளியிடும் இணைய ஊடகங்கள் ஊடக அமைச்சில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய வகையிலும், ஊடக ஒழுக்கக் கோவைக்கு புறம்பான வகையிலும் சில செய்தி இணையத்தளங்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே, குறித்த இணையத்தளங்களை நெறிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கி வரும் இலங்கை சார் இணையத்தளங்கள் ஊடக அமைச்சில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றது : பெசில்.
எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நட்டமடையும் நிறுவனங்களை தேசிய மயப்படுத்தல் குறித்து எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விடயம் குறித்து உலக வங்கி பிரதிநிதிகளுக்கு அண்மையில் விளக்கமளிக்கப்பட்டது.
ஆடைக் கைத்தொழிற்சாலைகளுக்கு பாரியளவில் அரசாங்கம் சலுகைகளை வழங்கிய போதிலும் அவை உரிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சார்க் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மாலைதீவு செல்லும் மஹிந்த.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.மாலைதீவின் ஆந்ரா தீவுகளில் நடைபெறவுள்ள 17ம் சார்க் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நாளை மறுதினம் இந்த விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்.
எட்டு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிற்கு இலங்கை விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றமை விசேட அம்சமாகும்.
பிள்ளைகளுடன் சேர பெற்றோர்கள் இனிமேல் கனடா செல்ல முடியாது.
கனடாவில் வாழும் பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ சேர்ந்து வாழ்வதற்காக இனிமேல் எவரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கனேடிய குடியேறல்துறை அமைச்சர் ஜேசன் கென்னி நேற்று அறிவித்தார்.
அதற்குப் பதிலாக புதிய விஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். அதனடிப்படையில், கனடாவில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக் கூடிய வீஸா வழங்கப்படும். அந்த வீஸாவைக் கொண்டு ஒரு தடவையில் அவர்கள் 2 வருடங்கள் வரை கனடாவில் தங்கியிருக்க முடியும்.
வருடாந்தம் 17 ஆயிரம் கனேடிய டொலர்கள் வருமானம் ஈட்டுவதுடன் தனியார் மருத்துவ காப்புறுதியையும் கொண்டிருப்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிக்கு மட்டுமே இந்த புதிய விஸா வழங்கப்படும் என்றும் கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர்.வருடாந்தம் கனடாவுக்கு வரும் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியின் எண்ணிக்கையை புதிய நடவடிக்கையின் கீழ் அதிகரிக்கவும் தமது அரசு முடிவு செய்துள்ளதாக ஜேசன் கென்னி தெரிவித்தார்.
கடந்த வருடம் 15,300ஆக இருந்த இந்த எண்ணிக்கை 25,000 வரை உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.கனடாவில் உள்ள தமது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளுடன் இணைவதற்காக என தற்போது 180,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று கூறும் கனேடிய அதிகாரிகள், அதனைக் குறைப்பதற்காகவே புதிய முறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
2040 இல் மட்டக்களப்பின் 20 சதவீத மக்கள் கடல்நீரால் பாதிக்கப்படுவர்.
2040ம் ஆண்டளவில் இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் மக்களில் 20 சதவீதமானோர் கடல் நீர் பெருக்கு காரணமாகப் பாதிப்படைவர் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இது குறிப்பிட்டுள்ளது.அதேநேரம் நீர்கொழும்பின் 15 சதவீத மக்களும் கடல்நீர் காரணமாக பாதிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 70 சதவீதமான மக்கள் கரையோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் வசிக்கின்றனர்.இவர்கள் கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளப் பெருக்கு, நீர் பற்றாக்குறை, சூறாவளி, வரட்சி போன்றவற்றால் பாதிப்படைந்து வருவதாக மொரட்டுவ பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு என வாங்கிய 3 மின்பிறப்பாக்கிகள் திடீர் மாயம்.
யாழ்.மாவட்டத்தின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மின்சார சபைக்கு 10 மின் பிறப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்பட்டபோதும் இதுவரையில் 7 மின் பிறப்பாக்கிகளே வந்து சேர்ந்துள்ளன மீதி 3 மின் பிறப்பாக்கி களுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.குடாநாட்டில் தொடரும் மின் தட்டுப்பாட்டை சீராக்க முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.
யாழ்.குடாநாட்டுக்கு தற்போது 50 மெகாவோட் மின்சாரம் அதி உச்ச பாவனை நேரத்தில் தேவைப்படுகிறது. இலங்கை மின்சார சபையினால் 8 மெகா வோட் மின்சாரமும் அக்றிக்கோ நிறுவனத்தினால் 10 மெகா வோட் மின்சாரமும் நொதேன் பவர் நிறுவனத்தினால் 18 மெகா வோட் மின்சாரமும் இப்போது வழங்கப்படுகின்றது.
நொதேன் பவர் நிறுவனமானது 30 மெகா வோட் மின்சாரம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ள போதிலும் 18 மெகா வோட் மின்சாரத்தையே வழங்குகிறது என்று மின்சார சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.அதே போன்று அக்ரிகோ மற்றும் மின்சார சபையினால் கூட குறித்தளவு மின்சாரத்தை வழங்குவது கடினமாகவே உள்ளது."மூன்று நிறுவனங்களினதும் மின்பிறப்பாக்கிகள் பழுதடைந்தால் அது பற்றி இரவில் தான் எமக்கு அறியத்தருகின்றனர். இதனால் முன்னறிவித்தல் இன்றி தாம் மின் வெட்டை நடைமுறைப்படுத்தவேண்டி இருக்கின்றது'' என்கிறார் மின்சார சபை அதிகாரி ஒருவர்.
இந்த மின் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய 10 மின் பிறப்பாக்கிகள் வெளிநாட்டில் கொள்வனவு செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும் அதில் 7 மின்பிறப்பாக்கிகள் மட்டுமே தற்போது யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய மின்பிறப்பாக்கிகள் எங்கே என்பது தொடர்பில் எதுவித தகவலும் இல்லை என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மூன்று மின்பிறப்பாக்கிகளும் வந்து விட்டனவா? என்று கேட்டதற்கு அதிகாரிகள் இல்லை என்று பதிலளித்தனர்.
இலங்கையில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி கூடியுள்ளது.
இலங்கை அரசாங்கம் பெண் ஊழியர்களுக்கு சிறந்த சம்பளம் கொடுப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று உரிமைகள் சார்ந்த நடவடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆண் பெண் இருவருக்கும் இடையிலான வருமான இடைவெளி தொடர்பான சர்வதேச பொருளதார தரப்படுத்தலில் இலங்கை 15 இடங்களால் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது
இதனையடுத்து இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த தரப்பட்டியலில் இலங்கை 2010 ஆம் ஆண்டு 16 வது இடத்தில் இருந்ததுதற்போது 31 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.இதன்படி கடந்த 5 வருடங்களில் இலங்கையில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடைவெளி அரசியல் சுகாதாரம் வருமானம் என்பவற்றில் பாரியளவில் அதிகரித்துள்ளதுபோரி;ன் காரணமாக பல குடும்பங்களின் தலைமைப்பொறுப்பை பெண்கள் ஏற்றுள்ளார்கள் எனினும் அவர்கள் குறைந்த வருமானத்தையே பெற்றுவருவதாக சர்வதேச பொருளதார தரப்படுத்தல் சுட்டி குறிப்பிட்டுள்ளது.
அண்டார்டிகாவில் ராட்சத பனிப்பாறை.
பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் ராட்சத பனிப்பாறை ஒன்று உருவாகி வருகிறது. பைன் தீவு அருகே 880 சதுர கிலோ மீட்டர் சுற்று அளவுக்கு இது பரவி உள்ளது.இந்த பனிப்பாறை இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு(2012) தொடக்கத்திலோ முழுமையாக வளர்ச்சி அடையும்.
இந்த தகவலை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ராட்சத பனிப்பாறை முழுமையாக வளர்ச்சி அடையும் பட்சத்தில் அது ஜேர்மனி தலைநகரம் பெர்லின் அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முஷரப் மீது ஷூ வீச முயற்சி.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கியுள்ளார்.இந்த நிலையில் லண்டன் அருகேயுள்ள லூடன் நகரில் அங்கு தங்கியுள்ள காஷ்மீர் மக்களின் கூட்டம் நடந்தது. அதில் முஷரப் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இவரது பேச்சை கேட்டு ஆவேசமடைந்த ஒரு நபர் தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி அவர் மீது வீச முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது.உடனே அங்கு பாதுகாப்புக்கு வந்த பொலிசார் அந்த நபரை பிடித்து கூட்டம் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே அதே கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு நபர் முஷரப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். எனவே அவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 6ந் திகதி வால் தாம்ஸ்ஸ்டோவ் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய முஷரப் மீது ஒரு நபர் ஷூ வீசினார்.ஆனால் அது அவர் மீது படவில்லை. அதே போன்று தற்போது இச்சம்பவம் இரண்டாவது முறையாக நடந்துள்ளது.
பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் திருட்டு போகும் அபாயம்: அமெரிக்கா எச்சரிக்கை.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் திருடு போகும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக சாலை வழியே அணு ஆயுதங்களை பாகிஸ்தான் எடுத்துச் செல்கிறது. இது மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இவ்விதம் எடுத்துச் செல்லும் அணு ஆயுதங்களை தீவிரவாதிகள் திருடிச் செல்லும் ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது என்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த மே மாதம் அமெரிக்க கடற்படை பாகிஸ்தானின் அபோதாபாத் நகருக்குள் நுழைந்து சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொன்றது. அதிலிருந்தே பாகிஸ்தான் வசமுள்ள அணு ஆயுதங்களை அமெரிக்கா அழிக்க முற்படும் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறப்பு உத்தி வகுக்கும் பிரிவின்(எஸ்பிடி) தலைவருக்கு அந்நாட்டு அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை பாதுகாப்பாகவும், பத்திரமாக வேறிடத்துக்கு - அதாவது அமெரிக்காவுக்கு தெரியாத வகையில் மாற்றுமாறு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் எஸ்பிடி பிரிவுக்கு ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் காலித் கித்வாய் தலைவராக உள்ளார். இவர் நாட்டில் உள்ள அணு ஆயுதங்கள், மிகவும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டிய கருவிகள் ஆகியவற்றை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்விதம் அணு ஆயுதங்களை ராணுவ பாதுகாப்போடு கொண்டு செல்லாமல், சிறிய சரக்கு வேன்களில் ஜன சந்தடி மிக்க சாலைகள் வழியாகக் கொண்டு செல்கின்றனர். இவ்விதம் கொண்டு செல்லும் அணு ஆயுதங்கள் அந்தந்த நகரையே அழித்துவிடும் சக்திவாய்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல அணு ஆயுதங்களை எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளதாகவும், இது மிகவும் கவலையளிக்கிறது என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கருதுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ கருத்து எதையும் பென்டகன் தெரிவிக்க மறுத்துவிட்டது.பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் பத்திரமாக உள்ளதாக அமெரிக்கா கருதுவதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் 12-க்கும் மேற்பட்டவர்களுடன் பேச்சு நடத்தி அதனடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஜிஹாதி அமைப்பும் அணு ஆயுதங்களை பறித்துச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எஸ்பிடி கருதுகிறது. ஆனால் அபோதாபாத்தில் அமெரிக்க படைகள் நுழைந்து பின்லேடனைக் கொன்ற பிறகு, அணு ஆயுதங்களை அமெரிக்காவே அழிக்க முயலலாம் என்று தனது கவலையை எஸ்பிடி தலைவரிடம் ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி வெளியிட்டுள்ளார்.அமெரிக்கா மற்றும் இந்திய புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரியாமல் அணு ஆயுதங்கள் வேறிடங்களுக்கு மாற்றப்படும் என்று கயானிக்கு எஸ்பிடி தலைவர் கித்வாய் உறுதியளித்துள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
அணு ஆயுதங்கள் திருடப்பட்டால் நியூயோர்க் நகரில் இரட்டைக் கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றோ அல்லது மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்றோ பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மேலை நாட்டு புலனாய்வு அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்த மத துறவிகளை தூண்டி விடுவது தலாய்லாமா தான்: சீனா குற்றச்சாட்டு.
திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து அந்நாட்டில் இதுவரை 11 புத்த மதத் துறவிகள் தீக்குளித்துள்ள நிலையில் தலாய்லாமா தான் தீக்குளிப்பைத் தூண்டி விடுகிறார் என சீனா குற்றம்சாட்டியுள்ளது.அதேநேரம் திபெத்தியர்களின் குறைகளைத் தீர்க்க சீனா மாற்று வழிகளைத் தேட வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இதுவரை 11 புத்த மதத் துறவிகள் திபெத்தை சீனா விடுவிக்க வேண்டும் எனக் கோரி தீக்குளித்துள்ளனர். இவர்கள் அனைவருமே 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் இருவர் பெண் துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் தீக்குளிப்பு திபெத்தில் தொடர் ஆர்ப்பாட்டங்களைத் துவக்கியுள்ளது. ஆனால் சீன அரசு அந்த ஆர்ப்பாட்டங்களை பல்வேறு வழிகளில் அடக்கி வருகிறது. ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியில் வரவிடுவதில்லை.இந்நிலையில் சீன அரசு நடத்தி வரும் “க்ளோபல் டைம்ஸ்” பத்திரிக்கை தீக்குளிப்பில் ஈடுபட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தர்மசாலாவில் தலாய்லாமா சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.
திபெத் பிரிவினைவாதிகள்(பிரதமர் லோப்சங் சங்காய்) தீக்குளித்தோரின் முடிவை ஆதரித்தனர் எனக் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்டு,"திபெத் பிரச்னையில் சீனா மாற்றுக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் திபெத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என சீனாவை அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.
இறந்த தாயுடன் 2 நாட்கள் வாழ்ந்த 3 வயது சிறுமி உயிருடன் மீட்பு.
நியூசிலாந்தில் இறந்த தாயுடன் 2 நாட்களாக இருந்த 3 வயது பெண் குழந்தையை உறவினர்கள் மீட்டனர். நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வசித்தவர் லாரன்சில் பெரி(28).
ஷைலா சில்பெரி என்ற 3 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். லாரன்சில் அடிக்கடிஇ தனது தாய் மற்றும் சகோதரரிடம் போனில் பேசுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக லாரன்சில் யாருக்கும் போன் செய்யவில்லை.நேற்று லாரன்சில் பெரிக்கு அவரது சகோதரர் பீட்சில்பொரி போன் செய்தார். ஆனால் யாரும் போன் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பீட்சில்பொரிஇ லாரன்சில்சின் பக்கத்து வீட்டில் வசித்து தனது நண்பருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.
பக்கத்து வீட்டுக்காரர் லாரன் சில்சின் வீடு அருகே சென்ற போது பிணவாடை வீசியுள்ளது. இதில் சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்த உள்ளே தாளிடப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தார்.
அப்போது லாரன்சில் பெரி இறந்து கிடந்தார். தாய் இறந்ததை அறியாத ஷைலா பெரி, அவரது அருகில் மயங்கி கிடந்தாள். லாரன்சில் இறந்து 2 நாட்களாகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வீட்டை சோதனையிட்ட போது உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. தாய் இறந்ததை அறியாத சிறுமி ஷைலா, பிரிட்ஜில் இருந்த வெண்ணெய், ரொட்டி, பால் ஆகியவற்றை எடுத்து சாப்பிட்டது தெரிந்தது.பிண நாற்றத்தில் மயங்கிய நிலையி்ல் மீட்கப்பட்ட ஷைலா மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டாள். நல்ல உடல்நலத்துடன் இருந்த லாரன்சில் திடீரென இறந்த காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடனமாடி தனது பெற்றோரை காப்பாற்றும் 6 வயது சிறுமி.
உடல் நிலை சரியில்லாத தனது பெற்றோரை வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார் சீனாவை சேர்ந்த ஆறு வயது சிறமி Huang Doudou. 
பள்ளிக்குச் சென்று பாடபுத்தகத்திலும், விளையாட்டிலும் கவனத்தை செலுத்த வேண்டிய வயதில் படிப்புடன் சேர்த்து தனது குடும்ப பாரத்தையும் சேர்த்து சுமக்கின்றார் Huang Doudou. வேலைக்குச் சென்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் இவரது பெற்றோருக்கு இடது காலில் காயம் உண்டானது. இதனால் இவர்களால் பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளிமுடிந்து வீடு திரும்பிய பிறகு இரவு 11மணி வரை இரவு நேர விடுதியொன்றில் நடனமாடி பணம் சம்பாதிக்கிறார். வீட்டிலிருந்து தனது அம்மாவின் உதவியுடன் 1 மணி தியாளங்கள் பேருந்தில் பயணம் செய்து இரவு விடுதிக்கு செல்கிறார்.
மூன்று சுற்றுக்கள் வீதம் நாளொன்றிற்கு நடனமாடி மாதம் £80 சம்பாதிக்கின்றார். இரண்டு அறைகள் மட்டும் உள்ளடக்கிய இவர்களது வீடு வறுமையின் தோற்றத்தை பிரதிபலிக்கின்றது. முடக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த பெற்றோர்கள் Huang Doudou சிறுமியின் வருமானத்தை தான் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ஹஜ் யாத்திரை நாளையுடன் முடிகின்றது.
முஸ்லிம்களின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரை நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இதை முன்னிட்டு சவூதி அரேபியாவில் உள்ள அராஃபத் பகுதியில் 25 லட்சம் ஹஜ் புனிதப் பயணிகள் குவிந்துள்ளனர்.
மக்காவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அராஃபத் பகுதியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அராஃபத் மதினா பகுதியில் தான் நபிகள் நாயகம் தனது கடைசி பிரசங்கம் செய்தார்.
ஹஜ் பயணிகள் மக்காவில் உள்ள மினாவில் மதச் சடங்குகளை முடித்து விட்டு மதினா நோக்கிப் புறப்படுவர். அராஃபத் பகுதியில் கூடுவது புனிதப் பயணத்தின் உச்சகட்டமாகும். இது பக்ரீத் பண்டிகையுடன் முடிவடைகிறது.உடல் ஆரோக்கியமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வேண்டியது கடமையாக கருதப்படுகிறது.
இந்தியா-ரஷ்யா இடையிலான புதிய விசா ஒப்பந்தம் டிசம்பர் 1ல் இருந்து அமுல்படுத்தப்படும்.
இந்தியா, ரஷ்யா இடையிலான எளிமைப்படுத்தப்பட்ட விசா நடைமுறை டிசம்பர் 1ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 2010 டிசம்பர் 21ல் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் இந்தியா வந்திருந்திருந்தார்.
அப்போது இரு நாடுகளுக்கிடையிலான எளிமைப்படுத்தப்பட்ட விசாவுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழு தொழில் பிரமுகர்கள், தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைப்புகளின் உறுப்பினர்கள், அறிவியல், பண்பாடு, படைப்புக் கலை இவற்றில் ஈடுபட்டுள்ளோர், பள்ளிக் குழந்தைகள், பிற மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போன்றோர் எளிமைப்படுத்தப்பட்ட விசாவைப் பெற முடியும்.
குறிப்பாக இதற்கு முன் விசா வழங்குவதற்கு 14 நாட்கள் அவகாசம் எடுக்கப்பட்டது. இனி 3 நாட்களில் விசா கிடைக்கும் எனவும் சுற்றுலா வந்த போது ஆவணங்களைத் தொலைத்து விட்டால் மிக விரைவில் உரியவர்கள் தங்கள் தாய்நாடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தம் கடந்த ஜூன் 12ம் திகதி பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவில் ஒப்புதல் பெற்றது. இதையடுத்து உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் லுகாஷேவிச் நேற்று அளித்த பேட்டியில் இந்த ஒப்பந்தம், ரஷ்யாவில் டிசம்பர் 1ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது எனத் தெரிவித்தார்.
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் 67 பேர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு நைஜீரியாவில் இரவு நேரத்தில் நடந்த அலையலையான வெடிகுண்டுகள் வீச்சிலும், துப்பாக்கிச் சூட்டிலும் 67 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதற்கு எவரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் வடக்கு நைஜீரியாவின் பழைமைவாத இஸ்லாமியக் குழுவான போகோ ஹராம் குழுவினரே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்று தெரிவித்தனர்.வடக்கு நைஜீரியாவில் குண்டுகளை வைத்து இதுபோன்ற நாச நடவடிக்கைகள் அவர்கள் ஈடுபடுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரேக்க வாக்கெடுப்பில் பிரமதர் பப்பாண்டிரியோ வெற்றி.
கிரேக்க நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டு பிரமதர் ஜார்ஜ் பப்பாண்டிரியோ வெற்றி பெற்றார்.ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரேக்கம், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகளும், சர்வதேச செலாவணி நிதியமும் (ஐஎம்எப்) கூட்டாக கடன் வழங்கி, கடன் பொறியிலிருந்து மீட்க முடிவு செய்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் அளிக்கும் நிதி உதவியைப் பெறுவதா அல்லது யூரோ பணப் புழக்கத்தைக் கைவிட்டு, சொந்தமாக கரன்சிகளை அச்சடித்துக் கொள்வதா என்ற பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி அதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் பப்பாண்டிரியோ வெற்றி பெற்றார்.இதனிடையே சனிக்கிழமை காலை நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் பப்பாண்டிரியோவுக்கு ஆதரவாக 153 வாக்குகள் கிடைத்தன. இவருக்கு எதிராக 145 வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா நிதியுதவி அளிக்காது: கனடா பிரதமர்.
ஐரோப்பிய நாடுகளுக்காக கனடா தன் நிதியை IMF ல் சேர்க்காது என்று கனடா பிரதமர் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில்  நடைபெற்ற ஜி 20 மாநாடாட்டில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பெர் கலந்துகொண்டார்.இம்மாநாட்டிற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ரிவெரா நதியின் கரையோற கட்டிடத்தில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கனடா பிரதமர் கூறியதாவது, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் தலைவர்களின் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.
ஐரோப்பாவில் நிறைய வளங்களும், இராணுவ பலமும் இருப்பதால் அதுவே தனது பொருளாதார பிரச்சினையைத் தீர்க்கும். பின்னதாக நாட்டின் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதன் மூலம் வங்கியமைப்பு சீர்பெறலாம். கிரீஸ் நாட்டில் நடக்கும் அரசியல் பொருளாதார சீர்கேடுகள் முடிவுக்கு வரும். இதற்காக கனடா தன் நிதியை IMFல் சேர்க்காது என்றார்.
தற்பொழுது கிரீஸில் நிறைய உள்நாட்டுப் பிரச்சினைகள் தோன்றி இருப்பதால், முன்பு தீர்மானித்தபடி 1.4 டிரில்லியனை பிணைய நிதியாகத் திரட்டுவது ஆபத்தானதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கனடாவின் CTV தலைவர் ராபர்ட் ஃபைப் கூறியதாவது, உயர் மட்டத் தலைவர்களுக்கு ஜி20 கூட்டத்தால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் இணைந்து எந்தவொரு முடிவையும் எட்டவில்லை கூட்டம் மந்தமாக நடைபெற்றது.முன்னதாக கடன் பிரச்சினைக்காக கிரீஸிற்குத் திட்டமிட்டதைப் போல, கடனில் மூழ்கிவரும் இத்தாலிக்கும் அதன் கடன்களைத் தீர்க்க ஐரோப்பியத் தலைவர்கள் திட்டம் வகுத்துக் கொடுத்தனர் என்றார்.
மீண்டும் விசாரணைக்கு வரும் தொழிற்சாலை தீ விபத்து.
ரசாயணத் தொழிற்சாலையில் நடந்த விபத்து தொடர்பான வழக்கு இன்னும் நான்கு மாதங்கள் நடைபெறும் என்று நீதிமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த 2001ல் தோலோஸ் என்ற ஊரில் கிராண்டே பரோய்ஸ்ஸெ என்ற தொழிற் பேட்டையில் AZF என்ற ரசாயணத் தொழிற்சாலையில் தீ வைத்து ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தொழிற்சாலையில் இருந்த கிடங்கில் முந்நூறு டன் அளவு அம்மோனியம் நைட்ரேட் இருந்ததால், அங்கு நடந்த தீ விபத்தின் போது அந்த ரசாயணம் எரிந்து புகை பரவியது. இதனால் அந்த ஊரில் 2500 மக்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் இருந்த 30000 வீடுகளும் எரிந்து சாம்பலாயின.பின்னதாக இந்த வழக்கு தோலோஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்டோர் தங்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தை நிரூபிக்க இயலாததால் வழக்குத் தோல்வியடைந்தது. அந்த நிறுவனமும், நிறுவனத் தலைவர் செர்கே பீக்லினும் விடுதலை பெற்றனர்.
திரும்பவும் 2009 ல் பிரெஞ்ச் நீதிமன்றத்தில் (FP) இத் தீவிபத்து தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு இப்போது விசாரணைக்கு வருகிறது. வழக்கு மன்றத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்ததைப் பார்த்த சிறப்பு மன்ற நீதிபதி, மக்களின் உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்த மன்றம் தமது பெரிய பொறுப்பை உணர்ந்து செயல்படும் என்று உறுதிபடக் கூறினார்.
அரசுத் தரப்பில் உள்ள வக்கீல் கூறியதாவது, இந்த ரசாயணத் தொழிற்சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படவில்லை என்பதால் தீ விபத்து ஏற்பட்டது என்றார். ரசாயணத் தொழிற்சாலை தரப்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித அலட்சியமும், குறைபாடும் இல்லை என்றும் இது ஒரு எதிர்பாராத விபத்தே என்று மறுத்துரைத்தனர்.இந்த விசாரனையில் 2700 வாதிகளும், அறுபது வழக்கறிஞர்களும் 200க்கும் மேற்பட்ட சாட்சிகளும் பங்கு பெறுகின்றனர். இன்னும் நான்கு மாதங்கள் இந்த வழக்கு விசாரணை நீடிக்கும். பின்பு தீர்ப்பு வழங்கப்படும்.
தீ விபத்து ஏற்பட்ட நிறுவனம் பாதிக்கப்பட்ட பதினாறாயிரம் பேருக்கு 2 பில்லியன் யூரோவை இழப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளது. இந்த விபத்து நியூயார்க்கில் செப்டம்பர் 11ம் திகதி அன்று நடைபெற்ற விபத்தை ஒட்டி நடைபெற்றதால் தீவிரவாதத் தாக்குதல் என்று முதலில் அஞ்சப்பட்டது.பிறகு காவல் துறையினர் இந்த விபத்துக்கும் தீவிரவாதத்துக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று உறுதியாகத் தெரிவித்து அப்பகுதி வாழ் மக்களின் அச்சத்தை விலக்கினர்.
ஜி20 மாநாடு குறித்து கருத்து வெளியிட்ட ஜேர்மானிய அதிபர் ஏஞ்சலா மெர்கெல்.
தற்பொழுது நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பேசிய தலைவர்களின் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கூட்டம் கடன்பட்ட நாடுகளுக்கான மீட்பு நிதியைத் திரட்டத் தேவையான முயற்சிகளை உள்ளடக்கிய கூட்டமாக கருதப்பட்டது.
ஆனால் தற்பொழுது ஓர் உடன்பாடு ஏற்படாத நிலையிலேயே முடிவுற்றதாக ஜேர்மானிய அதிபர் ஏஞ்சலா மெர்கெல் தனது கருத்தை தெரிவித்தார். தொழில்துறையில் வளர்ந்து வரும் நாடுகளில் எதுவும் ஐரோப்பிய பிணைய நிதிக்குத் தம் பங்களிப்பைத் தர முன்வரவில்லை.இதற்கு முக்கிய காரணம் கிரீஸ் நாட்டில் வெள்ளிக்கிழமை பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமாகும். அதன் பின்பு கிரீஸ் எடுக்கும் முடிவுகளைத் தெரிந்து கொண்டு மற்ற நாடுகள் தமது பங்களிப்பை வழங்கலாம் என்றார்.
பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூன், சர்வதேச நிதியமைப்பின் பணி பிரச்சினையில் இருக்கும் நாடுகளைக் காப்பாற்றுவது தவிர செலாவாணிய அமைப்பை தாங்கி நிற்பதல்ல என்றார். மேலும் இந்த ஜி20 கூட்டத்தில் நடந்த மிக மோசமான செயல் என்னவென்றால், யாரும் ஒத்துக்கொண்டார்களா இல்லையா என்பதை உணராமலேயே ஒரு தொகையை பிணைய நிதியாக முடிவு செய்ததுதான் என்றார்.
பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி இந்தப் பிரச்சினையை தீர்க்க பிப்ரவரி மாதம் வரை தேவைப்படலாம் என்றார். மேலும் ஜேர்மனின் அதிபர், Der Spiegel என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் நிதிச் சந்தையை ஒழுங்குபடுத்தியதன் விளைவுகள் திருப்திகரமாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.இன்னும் பல விடயங்கள் முடிவு செய்யப்படாத நிலையில் வங்கி விடயத்தில் மட்டும் அனைவரும் ஒருமித்த கருத்துடையவராய் இருந்தனர். உலகத்தின் 29 பாரிய வங்கிகளும் தங்களின் நிதி முதலீட்டைப் பெருக்காமல் தொழில் முதலீடுகளில் இறங்கக்கூடாது என்பதை ஜி20 வலியுறுத்தியது.
பெனசிர் புட்டோ கொலை வழக்கில் 7பேர் மீது குற்றச்சாட்டு.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், இரு பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மீது பாக். கோர்ட் குற்றம்சாட்டியுள்ளது. பாக்.முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ 2007 டிசம்பர் 27ம் திகதி ராவல்பிண்டியில் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.
இதில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு கோர்ட்டில் இவ்வழக்கு நடந்து வருகிறது.நேற்று நடந்த விசாரணையில், ராவல்பிண்டி முன்னாள் பொலிஸ் தலைவர் சவுத் அஜீஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் சூப்பிரின்டென்ட் குர்ரம் ஷாஜத் ஆகிய இருவர், பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த ஹஸ்னய்ன் குல், ரபாகத் உசேன், ஷெர் ஜமான், அயட்ஜாஸ் ஷா மற்றும் அப்துல் ரஷீத் ஆகிய ஐவர் என, மொத்தம் ஏழு பேர் மீது நீதிம்னறம் குற்றம்சாட்டியுள்ளது.
பெனசிருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கவில்லை என முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரிகள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது ஜாமினில் உள்ளனர்.இதையடுத்து, விசாரணை வரும் 19ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பெனசிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறியது குறித்து முன்னாள் அதிபர் முஷாரபுக்கு கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF