நாட்டில் புதிய அரசியல் தலைமைத்துவம் ஒன்றின் அவசியம் எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சிங்களம் மட்டும் என்ற சட்டமூலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்களும் ஏனைய இன சமூகங்களும் இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டனர்.
அத்துடன், தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் சம சந்தர்ப்பம் கோரும் சிறுபான்மையின மக்களுக்கு இந்த சட்டம் பெரும் தடையாக அமைந்தது.தமிழர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நாம் சட்டங்களை கொண்டு வந்தோம்.
அடையாளத்துவ அரசியலினால் பிரச்சினைகள் அதிகமானதே தவிர தீர்வுகள் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.சொர்க்கம் எவ்வாறு இழக்கப்பட்டது என்பதே இலங்கை அரசியல் முரண்பாடுகள் தொடர்பில் அமெரிக்க மாணவர்கள் கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் என அவர் தெரிவித்துள்ளார்.சுதந்திரத்திற்கு முன்னர் மேற்குலக நாடுகள் இலங்கையை ஆட்சி செய்த காலங்களில் நாடு பெரும் பின்னடைவுகளை எதிர்நோக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி பதவிப் பிரமாண தினத்தை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்.
அனுராதபுரம், ருவன்வெலிமாஹாசேயா, ஜயஸ்ரீமா போதி உள்ளிட்ட முக்கிய பௌத்த மத தளங்களில் வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.சுமார் ஓராண்டு காலம் தொடர்ச்சியாக பக்தர்களுக்கு பகல் போசனம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.நாளை மறுதினம் இந்த இலவச பகல் போசன விருந்துபசாரம் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
சிங்கள வர்த்தகங்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் -விமான நிலையத்தில் ரணில்.
1974ம் ஆண்டு சிங்கள வர்த்தகர்களின் சொத்துக்கள் சுவீகரிக்கப்படாமல் இருந்தால் இன்று உலக தரத்திலான சிங்கள வர்த்தக சமூகமொன்று உருவாகியிருக்கும்.சிங்கள வர்த்தகர்களின் நிறுவனங்களை எந்த வழியிலாவது பாதுகாக்க வேண்டும். நட்டமடையும் சொத்துக்களை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சில தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, கயந்த கருணாதிலக்க, டொக்டர் ஜயலத் ஜயவர்தன, லக்ஸ்மன் கிரியல்லா, டி.எம். சுவாமிநாதன், அகில விராஜ், பாலித தெவரப்பெரும, ஆH.யோகராஜன் ஆகியோர் சென்றிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ரணிலை வரவேற்கும் விசேட நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்க முடியாது – நீதவான்.
கொழும்பு மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்க முடியாது என கொழும்பு மாவட்ட நீதவான் ரஸ்மி சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தீர்ப்பு அளிக்கப்பட்டால் கட்டிடத் தொகுதியில் நபர்கள் மகிழ்ச்சி ஆரவாத்தையோ எதிர்ப்பையோ வெளிப்படுத்தக் கூடும் என காவல்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.எனினும், கலக நிலைமைகள் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் திறன் காவல்துறையினருக்கு காணப்படுவதாக நீதுவான் குறிப்பிட்டுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளைய தினம் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது.தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் குழப்ப நிலைமைகள் ஏற்படக்கூடும் என காவல்துறையினரின் கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொள்ளவில்லை.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்புக் கமராக்கள்.
நவம்பர் மாதம் 27ஆம் திகதி திறக்கப்படவுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிசிடி எனப்படும் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டு மீறல்களைக்கண்காணிப்பதற்காகவும் விபத்துக்களை குறைத்தல் மற்றும் ரிக்கெட் விற்பனை என்பவற்றை கண்காணிக்கவே இக்கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து பொலிஸ் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தையொட்டி, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 680 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாவை தொடக்கம் காலி மாவட்டத்தின் பின்னதுவ வரையான 8 நுழைவாயில்களில் பாதுகாப்பு கமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கண்காணிப்புப் பணிப்பாளர் பி.டி.கே.பண்டார தெரிவித்தார்.தெற்கு அதிவேக வீதியில் இடம்பெறும் போக்குவரத்துக் குற்றச் செயல்களை இனங்காண பாதுகாப்பு கமராக்கள் பெரிதும் துணைபுரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளளார்.
நாட்டின் நெடுஞ்சாலைகளின் பாவனையாளர்களுக்காக 1989 எனும் துரிய தொலைபெசி சேவையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. விபத்து சேவை, தீயணைப்பு படையினர், அம்பியூலன்ஸ் சேவை மற்றும் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக் கொள்ள இந்த துரித தொலைபேசி இலக்கம் உதவும் எனவும் சுமார் 500 உத்தியொகத்தர்களுடன் நவீன கார்கள், மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ், பௌசர்கள், தீயணைப்பு வாகனங்கள் என்பவற்றைக் கொண்டதாக இப்பிரிவு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண போக்குவரத்துச் சட்டங்களை விட அதிவேக போக்குவரத்துச் சட்டவிதிகள் வித்தியாசமானவை என்பதால் விசேட போக்குவரத்துப்பிரிவு அவசியம் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தில் முன்னாள் போராளிகள் 680 பேர் விடுதலை.
அத்துடன், இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்று, இரண்டு வருட பூர்த்தி என்பவற்றை குறிக்கும் முகமாகவும் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமலேயே தாம் இணையத்தளங்களை முடக்கியதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மேற்கண்டாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது:
இரட்டைக் குடியுரிமையுடைய இலங்கையர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இலங்கைப் பிரஜையாக இருந்து பின்னர் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களுக்கு இந்த விசேட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தினால் விசேட அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்சமயம் அவர் வெளிநாட்டில் சிகிச்சைபெற்று வருவதால், அவரை கைது செய்வது தொடர்பாக சட்டமா அதிபர் ஈவா வனசுந்தரவிடம் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஆலோசனை பெறத் தீர்மானித்துள்ளார்.இது தொடர்பாக ஆலோசனைப் பெற சட்டமா அதிபர் ஈவா வனசுந்தரவை பொலிஸ்மா அதிபர் சந்திக்கவுள்ளார்.
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் கல்லில் பிணைத்து எறிந்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பல இடங்களிலும் புனர்வாழ்வு பெற்று வருபவர்களில் 680 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்றியே இணையத்தளங்கள் முடக்கப்பட்டன - ஊடக அமைச்சர் கெஹலிய.
உரிமை கோராதவர்களினால் பல இணையத்தளங்கள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் நாட்டின் இறைமை பாதுகாப்பை கருதி அவற்றை அரசாங்கம் முடக்கியதாக ரம்புக்வெல கூறினார் .அத்துடன், சட்ட ஏற்பாடுகள் இல்லாமலேயே குறித்த இணையத்தளங்கள் முடக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சில ஆக்கங்களை அகற்றியதாக கூகுல் இணைய நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் அது தொடர்பான தகவல்களை கூகுல் தெரிவிக்கவில்லை.தமக்கு உயர்பீடத்தில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சில ஆக்கங்களை அகற்றியதாக கூகுலின் பொதுமக்கள் தொடர்பு முகாமையாளர் ஸ்டிவன் ரொசென்தல் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமையுடைய இலங்கையர்களுக்கு விசேட அடையாள அட்டை.
கிராம சேவகர் அல்லது பிரதேச செயலாளர்களின் ஊடாக தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள விண்ணம் செய்ய முடியும்.இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களுக்கு அடையாள அட்டை விநியோகம் செய்யும் நோக்கில் தனியான அலகு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் இரட்டைக் குடியுரிமை உடையவர்களுக்கு இலங்கைப் பிரஜைகள் என்பதனை உறுதி செய்வதற்கான எந்தவொரு ஆவணமும் வழங்கப்படவில்லை எனவும் முதல் தடவையாக இவ்வாறு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இரட்டைக் குடியுரிமையுடைய பலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற நிலையில் இவர்கள் குறித்த அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்களா என்பது கேள்விக்குறியே அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
துமிந்தவை எவ்வாறு கைது செய்வது?! பொலிஸ்மா அதிபர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை.
இதேவேளை, துமிந்த சில்வா எம்.பியை கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெறுவதா அல்லது சிகிச்சையின் பின்னர் நாடு திரும்பும்போது விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்வதா என்பது தொடர்பாக இதுவரை எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.
முல்லேரியா சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் எம்.பி. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை 15 பேர் அடங்கிய சந்தேகநபர்களின் பெயர்ப் பட்டியலில் சேர்க்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குப் பணிப்புரை விடுத்துள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம், துமிந்த சில்வா எம்.பியை உடன் கைதுசெய்யுமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலில் வீசினோம்! பாதாளக் குழு தலைவர் சமிந்த அதிர்ச்சித் தகவல்.
இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்த குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணையின் போதே தமது தலைமையிலான குழுவே எக்னெலிகொடவின் சடலத்தை கடலில் வீசியதாக தெரிவித்ததாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொலன்னாவயில் படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலைகள் தொடர்பாக தெமட்டகொட சமிந்த கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நம்பிக்கைக்குரிய ஒருவராவார்.தான் புதைத்த சடலம் யாருடையதென்று தனக்குத் தெரியாது என்றும், அன்று மாலையில் ஹில்டன் விடுதியில் ஒரு விருந்தின் போதே, அது ஒரு இணைய ஊடகவியலாளரினது சடலம் என்று தனது முதலாளி (துமிந்த சில்வா) கூறியதாகவும், அதன்பின்னரே அது பிரகீத்தினுடையது என்று தெரிந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
துமிந்த சில்வாவின் பணிப்பின் பேரில் பல சடலங்களை தான் இவ்வாறு கடலில் வீசியதாகவும் தெமட்டகொட சமிந்த கூறியுள்ளார். சடலங்களை சாக்குப் பைகளில் சுற்றி கனமான கிரனைட் கற்களை கட்டி கடலில் வீசி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு முறை சடலங்களை புதைக்கும் போதும், பெரியமுதலாளியின் (கோத்தபாய ராஜபக்ச) உத்தரவின் பேரிலேயே இதைச் செய்வதாக தனது முதலாளி (துமிந்த) கூறுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இவர்கள் என்னை எப்படியாவது கொல்லப் போகிறார்கள். நாம் கொலைகளைச் செய்தோம், போதைப்பொருட்களைக் கடத்தினோம்- இது உண்மை. இவை ஒன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. முதலாளி எம்மைக் கேட்டுக் கொண்டதால் செய்தோம்.
இந்த விபரங்களை வெளிப்படுத்துங்கள். சிலநாட்களில் என்னை கொன்று விட்டால், இந்த விபரங்கள் புதைக்கப்பட்டு விடும்.“ என்றும் இலங்கைப் பொலிஸ் அதிகாரிகளிடம் தெமட்டகொட சமிந்த கூறியுள்ளதாகவும் ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, ஜெனிவாவில் சித்திவதைகளுக்கு எதிரான மாநாட்டில், இலங்கைப் பிரதிநிதியாகப் பங்கேற்ற முன்னாள் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ், பிரகீத் எக்னெலிகொட வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படுவதும், அவரது விடுதலைக்காக நடைபெற்று வரும் பரப்புரைகளும் மோசடியான ஒரு செயற்பாடு என்றும் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், எக்னெலிகொட எங்கு தப்பிச் சென்றார் என்பது குறித்து எந்த விரிவான தகவல்களையும் மொகான் பீரிஸ் வெளியிடவில்லை.
இந்தநிலையில், மொகான் பீரிஸ் கூறுவது போல, தனது கணவர் வெளிநாடு ஒன்றில் ஒழிந்து கொண்டிருப்பாரேயானால், தங்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கமாட்டார் என்று அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மொகான் பீரிசின் அறிக்கை தம்மைக் கவலையடையச் செய்துள்ளதாகவும், சில தூதரகங்கள் இது குறித்து இலங்கைப் பொலிஸ் மற்றும் ஜனாதிபதி செயலகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்: அமெரிக்கா.
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லீயான் பென்னடா கருத்து தெரிவித்துள்ளார்.தனியார் நிறுவனம் நடத்திய பொது நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், அமரிக்காவிற்கு வளரும் நாடுகளிலிருந்து போர் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் அமரிக்காவிடம் பசிபிக் பகுதியில் போதுமான அளவுக்கு பாதுகாப்புகளும், ஏவுகனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுரைப்படுத்தபட்டுள்ளதாக அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், சீனாவிடம் ராணுவத்தின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக கூறினார். மேலும் சீனாவிடம் தொலைவிலுள்ள இலக்குகளை விரைவில் தாக்க கூடிய ஏவுகனைகள் உள்ளதாக கூறினார்.
வெளியுறவுச் செயலாளரின் இந்த கருத்தை அமெரிக்க அதிபர் பிராக் ஒபாமாவும் வழிமொழிந்துள்ளார். ஆனால் அதிபர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் கருத்தை பென்டகன் செய்தியாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே சமசர உறவு இதுவரை ஏற்படவில்லை என்று கூறிய அவர், அப்படியிருக்கும் போது எப்படி போர் அபாயம் விடுக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.அமெரிக்காவின் இந்த கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை இந்தியாவிடமிருந்து எந்த ஒரு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. உலக நாடுகளில் அமைதியை விரும்பும் இந்தியா மீது அமெரிக்காவின் கருத்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ இடையே பாரிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு.
அமெரிக்கா, மெக்சிகோ இடையே பாரிய போதைப்பொருள் கடத்தல் சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு marijuana என்ற 17 டன் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அமெரிக்காவையும் மெக்ஸிக்கோவையும் இணைக்கும் இந்த ரகசிய சுரங்கப் பாதை 2500 அடி நீளமானது.அமெரிக்காவின் சாண்டியோகா தொழிற்பூங்கா ஒன்றில் இருந்து மெக்ஸிக்கோவின் எல்லை நகரமான Tijuana ஐயும் இணைக்கின்றது.
இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்: நவாஷ் ஷெரீப்.
பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை எனக்கூறி இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சமீபத்தில் மூன்று இந்து டாக்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 11 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கொல்லப்பட்ட டாக்டர்களின் குடும்பத்தினரை சந்தித்து முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீப் ஆறுதல் கூறினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், பாகிஸ்தானில் முஸ்லிம்கள் ஒரு அங்கம் என்றால், இந்துக்களும் ஒரு அங்கம் தான். மைனாரிட்டி மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் அந்த அரசு தோல்வியடைந்து விட்டது என்று பொருள். பாகிஸ்தானில் உயிருக்குப் பாதுகாப்பில்லை எனக் கூறி நீங்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம். பாகிஸ்தான் பாதுகாப்பான நாடு. உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு நீதி கிடைக்கும் என நாங்கள் உறுதியளிக்கிறோம் என்றார்.
ஜப்பானில் அரிசியில் கதிரியக்க பாதிப்பு: தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை.
ஜப்பானில் புகுஷிமா அணு உலைக் கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் அணு கதிரியக்க கசிவு ஏற்பட்டது. இது அந்த பகுதிகளில் பரவியது.இந்த நிலையில் புகுஷிமாவில் விவசாய பண்ணையில் விளைந்த அரிசியில் கதிரியக்கம் அபாய அளவுக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து இந்த பகுதியில் விளைந்த அரிசியை வியாபாரம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கலாமா என்பது குறித்து ஜப்பானிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
உலகம் முழுவதும் புது விதமான ஒயின் அறிமுகம்.
பிரான்சின் போஜலைஸ் பகுதியில் கேமே ரக திராட்சை விளைகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் போஜலைஸ் நுவோ ஒயின் உலக புகழ் பெற்றது.ஆண்டுதோறும் நவம்பர் 3-வது வியாழக்கிழமை விற்பனைக்கு விடுவார்கள். பரபரவென விற்று தீரும்.
சூரியன் உதிக்கும் நாடு என்பதால் ஜப்பானில் இந்த ரிலீஸ் விசேஷம். தலைநகர் டோக்கியோவில் உள்ள பாரில் நுவோ ஒயின் இன்று அறிமுகமானது.ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜப்பானில் மட்டும் 60 லட்சம் பாட்டில் இறக்குகிறார்கள். சிறிய பாட்டில் விலை ரூ.330.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் பதவி ராஜினாமா.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த ஆண்டு மே 2ம் திகதி ஒசாமா பின்லேடனைக் கொல்வதற்கு அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசை ராணுவம் கைப்பற்றிவிடுமோ என்று அஞ்சிய அந்நாட்டு அதிபர் ஜர்தாரி அமெரிக்காவிடம் உதவி கேட்டு ரகசியக் கடிதம் எழுதியதாகவும் அந்தக் கடிதத்தை எழுதியது ஹுசைன் ஹக்கானிதான் என்றும் தகவல் வெளியானது.
அக்டோபர் 10ம் திகதியிட்ட பைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் பாகிஸ்தானிய வர்த்தகரான மன்சூர் இசாஜ் என்பவர் எழுதிய கட்டுரையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.அந்தக் கடிதம் அமெரிக்க ராணுவ தளபதி அட்மிரல் மைக் முல்லெனுக்கு மே மாதம் அனுப்பப்பட்டது என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சர்ச்சையில் தான் தொடர்புபடுத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஹுசைன் ஹக்கானி தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளார்.பாகிஸ்தானின் தேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் புதன்கிழமை பேசிய அந்நாட்டுப் பிரதமர் யூசுப் கிலானி, தூதராக இருந்தாலும் சரி வேறு எவராக இருந்தாலும் சரி, அவர் இஸ்லாமாபாத்துக்கு வந்து தனது நிலையை விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஹுசைன் ராஜினாமா செய்துள்ளார்.
ஈரானின் நற்பெயரை சீரழிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றம்.
அமெரிக்காவுக்கான சவுதி தூதரைக் கொல்ல முயற்சி செய்தது தொடர்பான விசாரணைக்கு ஈரான் ஒத்துழைக்கும் படி கோரி, சவுதி அரேபியா ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.வாஷிங்டனில் உள்ள சவுதி அரேபிய தூதர் அடெல் அல் ஜுபைரை கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக ஈரான் நாட்டை சேர்ந்த மன்சூர் அர்பாப்சைர் என்பவரை அமெரிக்க பொலிசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என கூறி சவுதி அரேபியா ஐ.நா சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட உள்ளது.இந்த தீர்மானத்துக்கு ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். ஈரானுடைய நற்பெயரை சர்வதேச அளவில் சீரழிக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.இதன் ஒரு கட்டமாகத் தான் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஈரானுக்கான ஐ.நா தூதர் முகமது கசாய், ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் - கயானி திடீர் சந்திப்பு.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி திடீரென சர்வ வல்லமை கொண்ட பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி கயானியை நேற்று சந்தித்து பேசினார்.சமீபத்தில் நடந்த இரண்டாவது சந்திப்பு என்பதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்படத்தக்கது.
அமெரிக்க அரசுடன், பாகிஸ்தான் அரசு சில ரகசியத் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தொடர்ந்து பரபரப்பு இருக்கிறது. இதை ராணுவத் தளபதி கயானி விரும்பவில்லை.அதே போல அமெரிக்காவின் சொல்படி கேட்கும் நிர்வாகமாக அரசு இருக்கிறதோ என்ற கருத்து பயங்கரவாத ஆதரவு சக்திகளிடம் வந்து விட்டது. இந்த சந்திப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி மற்றும் தளபதி கயானி ஆகிய மூவரும் நாட்டின் பாதுகாப்பு பற்றிய முக்கிய ஆலோசனை நடத்தினர் என்று மட்டும் அரசு அறிக்கையாக வெளியிடப்பட்டது.பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கயானி விரும்பவில்லை. கடந்த வாரம் அதிபர் சர்தாரி ஒரு முக்கிய விருந்தளித்தார். அதில் கயானி மட்டும் அல்ல முப்பெரும் படைகளின் தலைவர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
அமெரிக்க ஆதரவுப் பிரமுகரான மன்ர் இயாஸ் மூலம், அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி முல்லனுக்கு ரகசியமாக அதிபர் சர்தாரி ஒரு மகஜரை கொடுத்தனுப்பினார். இது தான் தற்போதைய நெருடலுக்கு காரணம். இது விஷயமாக நடந்தது என்ன என்று கேட்டறிய அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதர் மைக் முல்லனை அழைத்திருக்கிறது அரசு.
இது பாகிஸ்தான் அரசை பெரும் பரச்னைக்கு உள்ளாக்கிய விஷயமாக உருவெடுத் திருக்கிறது. ராணுவத்திற்கும், சர்தாரி தலைமையிலான நிர்வாகத்திற்கும் இடையே கசப்பு அதிகரித்து வருவதை அடுத்தடுத்து வரும் சம்பவங்கள் காட்டுகின்றன.
ஆசிய, பசிபிக் பகுதியில் அமெரிக்க படைகள் நீடிக்கும்: ஒபாமா திட்டவட்டம்.
ஆசிய, பசிபிக் பகுதியில் அமெரிக்க ராணுவ தளங்கள் நீடிக்கும் என்று அதிபர் ஒபாமா நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் ஒபாமா 2 நாள் பயணமாக அவுஸ்திரேலியா சென்றிருந்தார். நேற்று முன் தினம் அவரது முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே ராணுவ ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அதன்படி வடக்கு அவுஸ்திரேலிய பகுதியில் 250 அமெரிக்க போர் கப்பல்களுடன் ராணுவதளம் அமைக்கப்படும். இந்த ஒப்பந்தத்திற்கு சீனா அதிருப்தி தெரிவித்தது.இந்நிலையில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா நேற்று பேசினார். அப்போது கூறியதாவது: பசிபிக் கடல் பகுதியில் சக்திமிக்க படையாக அமெரிக்க ராணுவம் உள்ளது.
அமெரிக்க பொருளாதார நிலையை முன்னேற்ற எவ்வளவு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஆசிய, பசிபிக் பகுதியில் அமெரிக்க ராணுவ தளங்கள் நீடிக்கும். இங்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதிக்கம் இருக்கும். அவுஸ்திரேலிய வடக்கு கடல் பகுதியில் போர் விமானங்கள், கப்பல்களுடன் ராணுவ தளம் அமைக்கப்படும்.
அமெரிக்க ராணுவ செலவு குறைப்பு நடவடிக்கைகள் இருப்பது உண்மை. ஆனால் ஆசிய, பசிபிக் பாதுகாப்பை விட்டுக் கொடுப்பதாக அது இருக்காது. இந்த பகுதிக்கு அமெரிக்கா முன்னுரிமை கொடுக்கிறது. எப்போதுமே ஆசிய, பசிபிக் நாடாக அமெரிக்கா இருக்கும். அதில் சந்தேகமில்லை என்றார்.
பாகிஸ்தானில் அமெரிக்க விமானம் தாக்குதல்: 16 தீவிரவாதிகள் பலி.
பாகிஸ்தானில் அமெரிக்க விமானம் நடத்திய தாக்குதலில் தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 16 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் தெற்கு வாஸிரிஸ்தான் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக அமெரிக்க ராணுவ பரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவர்களை அழிப்பதற்காக அமெரிக்கா தனக்கு சொந்தமான ஆறு விமானங்கள் மூலம் அப்பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தலிபான் அமைப்பை சேர்ந்த 16 பேர் பலியானதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்ற பின்னர் இப்பகுதியில் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது என்றும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட தாக்குதல் நடந்துள்ளது என்றும் இப்பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் மறைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அப்துல் நசீர் மற்றும் அப்துல் முக்லீஸ் தலைமையில் இரு தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன என தலிபான் அமைப்பே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புது வித சர்ச்சையில் சிக்கியுள்ள இத்தாலி நிறுவனம்.
இத்தாலி நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலி நாட்டை சேர்ந்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் பெனிட்டன். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தன்னுடைய வர்த்தகத்தை விளம்பரப்படுத்துவதற்காக கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து பத்திரிகை மற்றும் தனது இணையதளத்தில் புதுமையான விளம்பரங்களை வெளியிட்டு வந்துள்ளது.இந்த விளம்பரங்களால் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸை முத்தம் தரும் புகைப்படத்தை வெளியி்ட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியும் ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் ஆகியோர் மேற்கண்டவாறு முத்தம் தரும்படியும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.தற்போது சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் மற்றும் அமெரி்க்க அதிபர் ஒபாமா முத்தம் தருவது போன்று படத்தை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தி்ன் இத்தகைய விளம்பரத்தை நிறுத்த வேண்டுமென இத்தாலியின் கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனம் கண்டித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.
இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ மோன்டி பதவியேற்பு.
இத்தாலி புதிய பிரதமராக மரியோ மோன்டி நேற்று பதவியேற்றார். பொருளாதார சீர்திருத்தம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகிறது.ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் இத்தாலி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி நிதிநெருக்கடியை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.பெர்லுஸ்கோனி பதவி விலகுவதுடன் சில அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால்தான் கடன் வழங்க முடியும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்திருந்தது.
இதனால் அவர் பதவி விலகினார். இதையடுத்து ஐரோப்பிய யூனியனின் முன்னாள் ஆணையராக இருந்த மரியோ மோன்டி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.எனினும் இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநெருக்கடியை தீர்ப்பது தொடர்பான திட்டம் இன்று அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிதிநெருக்கடியைத் தீர்க்க உடனடியாக பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இதன்படி நிதிநெருக்கடியிலிருந்து விடுபட்டு பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மோன்டி தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் இடைக்கால அரசு அமைக்க தீவிரவாத அமைப்புகள் ஒப்புதல்.
பாலஸ்தீனத்தில் இடைக்கால அரசு அமைக்க தீவிரவாத அமைப்புகளான பதா, ஹமாஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இதன்மூலம் இரு தீவிரவாத அமைப்புகளிடையே கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்த பகை முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் மத்தியஸ்துடன் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பிரதமர் சலாம் பாயத்தை இடைக்கால அரசிலிருந்து விலக்கி வைக்க பாலஸ்தீன அரசின் அதிபரும், பதா இயக்கத்தின் தலைவருமான மஹ்மூத் அப்பாஸ் ஒப்புக் கொண்டதையடுத்து இந்த உடன்பாடு ஏற்பட்டது.
அடுத்த வாரம் கெய்ரோவில் பதா தலைவர் அப்பாஸம், ஹமாஸ் தலைவர்களும் சந்தித்துப் பேச உள்ளனர். இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.எனினும் சில பிரச்னைகளில் இரு அமைப்புக்கும் இடையே ஆழமான இடைவெளி உள்ளதால் பேச்சுவார்த்தை சவாலானதாக அமையும் என்று தெரிகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பதாவும், காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பு வலுவுடன் உள்ளன.
ஆக்கிரமிப்புப் போராளிகளை வெளியேற்ற முயற்சி.
ஆக்கிரமிப்புப் போராட்டம் நடத்தும் வேலையில்லா இளைஞர்கள் அரசு நிலத்தில் பல மாதங்களாக கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர்.இவர்களைச் சட்டப்படி வெளியேற்ற வேண்டும் என்று வான்கூவர் நகரத்தின் வழக்கறிஞர் பென் பார்க்கின் கூறினார்.
இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆனி மெக்கன்சியிடம் இந்த இளைஞர்கள் விதிமுறை மீறலில் ஈடுபட்டதால் இவர்களை உடனடியாக ஆக்கிரமிப்பு இடங்களை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இடைக்காலத் தீர்ப்பு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.ஒரு இளம்பெண் அதிக அளவில் போதை மருந்து உட்கொண்டதனால் இறந்து போனது பெரிய அளவில் தற்போது விவாதிக்கப்படுகிறது. போராளிகள் நகர் நிர்வாகியிடம் இருந்து கூடாரம் அமைக்க அனுமதி பெறவில்லை.
மேலும் கூடாரம் அமைத்த இடத்தை இவர்கள் குப்பை மேடாக்கி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் குப்பை, எச்சில் தட்டு, போன்றவை சிதறிக்கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் எலித்தொல்லை அதிகமாகிவிட்டது.அந்தப் பகுதியில் அழகுக்காக வளர்க்கப்பட்ட செடிகளும் புல்வெளியும் பாழாகிவிட்டன என்று பென் பார்கின் தன் வழக்கின் நியாயங்களை எடுத்துரைத்தார்.
போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறவில்லை மாறாக கூடாரம் அமைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம் என்பது வழக்கறிஞரின் வாதமாகும்.எதிர்தரப்பு வழக்கறிஞரின் வாதம் முடிந்தபிறகு மீண்டும் பெண் பார்கின் வியாழக்கிழமை வாதாடுவார். போராளிகளின் வழக்கறிஞர் இந்த வழக்கை உரிமைப் போராட்டமாக எடுத்து வாதிடுவார்.
உலகம் முழுக்க இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரிய நிறுவனங்களின் பேராசை காரணமாகவே இன்று இளைஞர்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகின்றனர் என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பார்.இந்தச் சூழ்நிலையை வரப்போகும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மேயருக்கு எதிராகப் பயன்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பிரான்ஸ் தன் சிரியா தூதரைத் திரும்பப் பெற்றது.
சிரியா நாட்டில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு தூதரை அந்நாடு திரும்ப அழைத்துக் கொண்டது.அதிபர் பாஷர் அல் அஸாத்தின் ஆதரவாளர்கள் யூனைட்டெட் அராப் எமிரேட்ஸ் மீது புதன்கிழமை கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.
வன்முறைத் தாக்குதலுக்குள்ளான அலெப்போ, லடாக்கியா போன்ற பண்பாட்டு மையங்களையும் நகரங்களில் உள்ள தூதரக அலுவலகங்களையும் மூடப்போவதாக பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே அறிவித்துள்ளார். இதனால் பிரான்ஸ் நாட்டின் சிரியா தூதுவரும் தாய்நாடு திரும்புவார்.
அரபு லீகின் வற்புறுத்தலால் செவ்வாய்க்கிழமை அன்று சிரியா அதிகாரிகள் இனிமேல் வன்முறைத் தாக்குதல் நடக்காது என்று உறுதி அளித்தனர். ஆனால் அடுத்த நாளே அரபு தூதரகத்தின் சுவரை ஆசாத் ஆதரவாளர்கள் அசிங்கப்படுத்தி விட்டனர். இஸ்ரேலின் ஏஜெண்ட்டுகள் என்று இவர்களைத் தாக்கி சுவரில் கிறுக்கியிருந்தனர்.பாதுகாப்புக் காரணங்களால் தாய்நாடு திரும்பிச் சென்ற அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஃபோர்டு இன்னும் சில வாரங்களில் சிரியா திரும்புவார் என்று வாஷிங்டன் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
சிரியாவின் நிலவரத்தைப் பற்றி விவாதிக்க ஜுப்பே வியாழன், வெள்ளி துருக்கி வருகிறார் என்று அனட்டோலியா செய்தி வெளியிட்டுள்ளது. இவர் துருக்கியின் அதிபர் அப்துல்லா குல்லையும் பிரதமர் ரெசெப் தய்யிப் எர்டோகனையும் சந்திப்பார்.அசாத்தின் நட்புநாடாக விளங்கும் துருக்கி டமாஸ்கசுக்கு எதிராக அபராதம் விதித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜுப்பே தனது அதிருப்தியை துருக்கி அதிபரிடம் தெரிவிப்பார்.
மேலும் துருக்கியின் எல்லைப்பகுதியில் உள்ள குர்திஸ்தானில் நடைபெறும் PKK ஆயுதப் போராளிகளின் போராட்டத்தை ஒடுக்க ஃபிரான்சுடன் துருக்கி ஏற்படுத்திய ஒப்பந்தத்தை குறித்தும் விவாதிப்பார்.இந்த வகையில் பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஜுப்பே சிரியாவில் ஆசாத்தின் ஆதரவை ஒடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்.
கராச்சியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி.
கராச்சியில் தற்கொலை தீவிரவாதிகள் வெடிகுண்டு வேனை மோத விட்டு நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியானார்கள்.கராச்சியில் நேற்று இரவு 10 மணிக்கு வெடிகுண்டு நிரப்பிய வேன் வருவதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது. அதில் தற்கொலை படை தீவிரவாதிகள் 3 பேர் இருந்தனர். அவர்கள் வெடிகுண்டு ஜாக்கெட் அணிந்து இருந்தனர்.
கராச்சி கடற்கரை சாலையோர பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பொலிஸ்காரர்கள் துரத்திச் சென்று மடக்க முயன்றனர். ஆனால் தீவிரவாதிகள் வேனை நிறுத்தாமல் மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.
இதில் வேன் சுக்கு நூறாக சிதறியது. வேனில் இருந்த தீவிரவாதிகளும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பொலிஸ்காரர்ளும் உடல் சிதறி பலியானார்கள்.இதன் அருகில் பொழுதுபோக்கு பூங்காவும், ஹோட்டலும் இருக்கிறது. சற்று தள்ளி குண்டு வெடித்ததால் மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தீவிரவாதிகள் ஹோட்டல் அல்லது ஒரு விழாவில் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வந்து இருக்கலாம் என்று பொலிசார் கருதுகிறார்கள்.குண்டு வெடித்த இடத்தில் தற்கொலை படையினர் அணியும், வெடிகுண்டு ஜாக்கெட் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இங்கு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணிக்கு திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.
கமாண்டோக்கள் விரைந்து சென்று சோதனை நடத்தினர். மாளிகை அருகே உள்ள சாலையில் அனாதையாக ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கி இருந்தது. அவற்றை வீரர்கள் கைப்பற்றினர்.மேலும் 16வது ஸ்டீரிட் மற்றும் சட்டத் துறை அலுவலக பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த உளவுத் துறை அதிகாரிகளும், துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தத்தை கேட்டனர்.
அத்துடன் மர்ம நபர்கள் வெள்ளை மாளிகையின் மேற்கு பக்கம் நோக்கி 2 வாகனங்கள் வேகமாக சென்றதையும் கவனித்துள்ளனர். ஆனால் வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்தனர்.இந்நிலையில் மாளிகையின் ஒரு கண்ணாடியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதும், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி குண்டு விழுந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பரபரப்பு அடைந்த அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் 2 நாட்களாக யாரும் கைது செய்யப்படவில்லை.இந்நிலையில் பென்சில்வேனியாவில் ஆஸ்கார் ஆர்டெகா என்ற 21 வயது வாலிபரை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று சுற்றிவளைத்தனர். அவரிடம் பென்சில்வேனியா பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவை பார்த்து ஒருபோதும் பயப்படவில்லை: ஒபாமா.
வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா சீனாவை பார்த்து ஒருபோதும் பயப்படவில்லை என்று அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் கூடுதலாக ராணுவ முகாம்கள் அமைத்து ஆயுதங்களை குவிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு சீன பிரதமர் வென் ஜியாபோ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் ஹவாய் தீவில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா அவுஸ்திரேலிய தலைநகர் கேன்பெராவுக்கு நேற்று வந்தார்.
இங்கு பிரதமர் ஜூலியா கில்லார்டை சந்தித்து, அவுஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவ முகாம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.பின்னர் ஒபாமாவும் கில்லார்டும் பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஆசிய பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியாவில் அமெரிக்க படைகள் குவிக்கப்படுகிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஒபாமா பதில் அளிக்கையில் கூறியதாவது: சீனாவை பார்த்து அமெரிக்கா பயப்படவில்லை. சர்வதேச சட்டதிட்டங்களின்படி சீனா செயல்பட வேண்டும். வல்லரசு நாடாக இருக்கும் போது சீனாவை பார்த்து அமெரிக்கா பயப்படுகிறது என்று சொல்வது தவறானது.அவுஸ்திரேலியா -அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்தவே கூடுதல் படைகள் இங்கு குவிக்கப்படுகின்றன. இங்கு அமெரிக்க முகாம்களை நிரந்தரமாக அமைக்கும் திட்டமில்லை.இருநாட்டு வீரர்கள் ராணுவ பயற்சி, ஆசிய பகுதி பாதுகாப்பு குறித்த பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்றார்.
ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், ஆசிய பசிபிக் பகுதியில் சீனா வரம்பு மீறி செயல்படுகிறது. குறிப்பாக ஆசிய பசிபிக் கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது.இதற்கு இந்த பகுதியில் உள்ள சிறிய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அவுஸ்திரேலியாவில் அமெரிக்கா படைகள் குவிக்கப்பட வேண்டும் என்று அந்த நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுவும் படைகள் குவிப்பதற்கு ஒரு காரணம் என்றார்.
குடிகார பெற்றோர்களிடம் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்.
ஜேர்மானிய குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்குப் பெற்றோர் குடிப் பழக்கம் உள்ளவராகவோ, போதைப் பொருள் பயன்படுத்துபவராவோ இருக்கின்றனர் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.ஜேர்மானியக் குழந்தைகளில் 2 பில்லியன் பேர் குடிகாரப் பெற்றோருடன் சிரமப்படுகின்றனர். 60000 பேர் போதைப் பொருள் பயன்படுத்தும் பெற்றோருடன் இருக்கின்றனர்.
ஜேர்மனி போதை நுகர்வின் அரசு நிபுணர் மெட்டில்டா டிக்மான்ஸ் இதுகுறித்து கூறுகையில், கர்ப்பிணிப் பெண்களின் போதைப் பழக்கத்தால் கர்ப்பத்திலிருக்கும் போது பாதிக்கப்படும் குழந்தைகள், பிறந்து வளர்ந்து வரும் போது பொறுப்பான தாயின் ஆதரவில்லாமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் வறுமையாலும் சமூகம் விலக்கி வைப்பதாலும் ஆதரவின்றித் தவிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும் ஜேர்மனியாரில் 30 சதவீதம் ஆண்களும் 50 சதவீதம் பெண்களும் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இவர்களை நல்வழிப்படுத்த தேசிய அளவில் வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்பது வருந்தத்தக்கது.இதனால் சிறையில் இருப்பவர் நிலைமை, வெளியில் இருப்பவர் நிலையை விட மிகவும் மோசமாக இருக்கிறது. இவர்களுக்கு அதிகமாக நோய்த்தாக்குதல் ஏற்பட்டு வாழ வழியின்றிச் சிரமப்படுகின்றனர்.
ஜேர்மனியில் கன்னாபிஸ் என்றழைக்கப்படும் கஞ்சாப் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஹெராயின், கொக்கேய்ன், எல்.எஸ்.டி மாத்திரை போன்றவற்றின் பயன்பாடு 2008க்குப் பிறகு குறைந்து விட்டது.2010ல் சட்டவிரோதமான போதைப் பொருட்களை பயன்படுத்தியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1237. சென்ற ஆண்டை விட 7 சதவீதம் குறைவு என்றாலும் இவர்களின் பலர் ஹெராயினை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதால் தான் இறந்தனர்.
ஈரானை அழிக்க பங்கர் குண்டுகளை சேகரிக்கும் அமெரிக்கா.
ஈரானின் அணு ஆயுதக் கனவுகளை தரைமட்டமாக்கும் வகையில் அதன் அணு ஆயுத கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களைத் தகர்ப்பதற்காக அமெரிக்கா பங்கர்களை அழிக்கும் குண்டுகளை ஆயத்தப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மிக அபாயகரமான இந்த குண்டுகள் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகுந்த பாதுகாப்புடன் கூடிய, எந்த வகையான ரகசிய இடங்களையும் கூட தரைமட்டமாக்கி விடும் தன்மை படைத்தவை.
Massive Ordnance Penetrator எனப்படும் இந்த வகை குண்டுகளை அமெரிக்கா தனது அதி நவீன B-2 குண்டு வீச்சு விமானத்தில் பொருத்தக் கூடிய வகையில் ஆயத்தப்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.அணு ஆயுத கட்டமைப்புகள், ஆயுதக் கிட்டங்கிகள் என ஈரானின் முக்கிய நிலைகளை அழித்தொழிப்பதற்காகவே இந்த வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இஸ்ரேல்தான் இந்த வேலைகளைச் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஈரான் அணு ஆயுத திட்டங்களை ஆரம்ப நிலையியேலே அழித்து விட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாகவும், தாக்குதலை நடத்தி ஈரானை நிலைகுலையச் செய்ய அது முயல்வதாகவும் தகவல்கள் கூறின.இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஈரான் மீது யாராவது கைவைத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது.
இந்த நிலையில்தான் அமெரிக்கா, பங்கர் அழிப்பு குண்டுகளை தயார்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுகளை வாங்குவதற்காக போயிங் நிறுவனத்துடன் அமெரிக்க விமானப்படை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாம்.முதலில் 20 குண்டுகள் வாங்கப்படவுள்ளதாம். அதில் முதல் டெலிவரி கடந்த செப்டம்பரில் நடந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அது ஈரானை குறி வைத்து வாங்கப்படவில்லை என்றும் பென்டகன் விளக்கியுள்ளது.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், பங்கர்கள் அழிப்பு குண்டுகள் வாங்கப்படுவது உண்மைதான். ஆனால் எந்த நாட்டையும் குறி வைத்து அதை நாங்கள் வாங்கவில்லை. எங்களது திறமையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே இதை நாங்கள் செய்கிறோம்.ஒரு எதிரியை அழிக்க, எதிரியின் ஆயுத பலத்தை அழிக்க இந்த வகை குண்டுகள் அவசியம். குறிப்பாக மக்களை கொத்துக் கொத்தாக பெருமளவில் அழிக்க வகை செய்யும் வைத்திருக்கும் எதிரிகளை அழிக்க இந்த வகை குண்டுகள் நமக்குத் தேவை என்றார் அவர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு புற்றுநோய்: எவ்வித பாதிப்பும் இன்றி குழந்தை பிறந்தது.
இங்கிலாந்தின் லீமிங்டன் ஸ்பா நகரை சேர்ந்தவர் சாரா(30). அவரது கணவர் ஸ்டீவ் பெஸ்ட்(30). அலுவலகங்கள், வங்கிகளில் கண்காணிப்பு கமெரா பொருத்தும் இன்ஜினியராக இருக்கிறார்.இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. சாரா கர்ப்பமானார். மகப்பேறு மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
4 மாத கர்ப்பமாக இருந்த போது அவரது நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. சாரா அதிர்ச்சி அடைந்தார். கோவென்ட்ரிஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சத்திர சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.
சிறிது காலம் சாதாரணமாக இருந்தது. புற்றுநோய் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியது. உள்நாக்கு, தொண்டை என பரவ தொடங்கியது. உடனே ரேடியோதெரபி, கீமோதெரபி செய்துகொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று எச்சரித்தார்கள் மருத்துவர்கள்.தொடர்ந்து ரேடியோதெரபி எடுத்துக் கொண்டால் வயிற்றில் இருக்கும் சிசுவை கதிர்வீச்சு தாக்கும் அபாயம் இருக்கிறது என்றும் கூறினர். எனக்கு என் குழந்தை முக்கியம் என்று சாரா கதறினார். வயிற்றில் இருக்கும் சிசுவை பாதுகாக்க பிரமாண்ட கவசம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
1.5 டன் ஈயத்தை கொண்டு 20 இஞ்ச் நீளம், 4 இஞ்ச் தடிமனுக்கு தகடுகள் உருவாக்கப்பட்டன. அவற்றை வரிசையாக இணைத்து கவசம் உருவாக்கப்பட்டது. அவரது வயிற்றை முழுவதுமாக மூடுமாறு கவசத்தை உருவாக்கினர்.
அதன் பின்னர் பல முறை ரேடியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதம் சிகிச்சை தொடர்ந்தது. கடைசிகட்ட ரேடியோதெரபி கடந்த ஏப்ரல் 28ம் திகதி அளிக்கப்பட்டது. சிகிச்சை முடியும் நேரத்தில் சாராவுக்கு பிரசவ வலி எடுத்தது. ஆஸ்பத்திரியின் கேன்சர் பிரிவில் இருந்து நேரடியாக பிரசவ வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை கதிர்வீச்சு சிகிச்சை சிறிதும் பாதிக்கவில்லை என்று மருத்துவர்கள் பரிசோதனையின் மூலம் உறுதி செய்தனர்.
இதை கேட்ட பிறகு சாரா ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். ரேடியோதெரபி மற்றும் ஈய கவசம் உருவாக்கிய மருத்துவர்கள் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டு சாராவையும் வாழ்த்தினர்.இதுபற்றி தலைமை டாக்டர் லிடியா பிரெஸ்கோ கூறுகையில், கர்ப்பிணிகள் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொள்வது பற்றி இனி பயப்பட தேவையில்லை என்றார்.
சிரிய விமானப் படைத் தளத்தின் மீது எதிர்ப்பாளர்கள் தாக்குதல்.
சிரிய தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியில் இருந்த சிரிய விமானப் படைத் தளத்தின் ஒரு பகுதியை எதிர்ப்பாளர்கள் நேற்று குண்டுகளால் தாக்கித் தரைமட்டமாக்கினர்.இதில் எத்தனை பேர் பலியாயினர் என்பது தெரியவில்லை. இந்நிலையில் சிரியாவுக்கு வினியோகிக்கும் மின்சாரத்தை நிறுத்தப் போவதாக துருக்கி மிரட்டியுள்ளது.
டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியான ஹராஸ்டாவில் சிரிய விமானப் படைத் தளம் உள்ளது. சிரிய ராணுவத்திலிருந்து பிரிந்து சென்ற ராணுவ வீரர்கள் சிலர் இந்த விமானப் படைத் தளத்தில் உள்ள உளவுப் பிரிவு அலுவலகம் ஒன்றை நேற்று குண்டுகளால் தாக்கித் தரைமட்டமாக்கினர்.
அதோடு அத்தளத்தில் உள்ள வேறு பல கட்டடங்களையும் தாக்கினர். இச்சம்பவத்தில் பலியானோர் விவரம் தெரியவில்லை. ஹமாசில் உள்ள அதிபருக்கு எதிரான ராணுவப் பிரிவின் தலைவர் இச்சம்பவத்தை வரவேற்றுள்ளார்.சிரிய ராணுவத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான வீரர்கள் வெளியேறி சிரிய விடுதலை ராணுவம்' என்ற ராணுவத்தை உருவாக்கினர். இவர்கள் அதிபர் அசாத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச நாடுகளின் கோரிக்கைக்கு சிரியா இணங்கி வரும் என்ற நம்பிக்கையை தான் இழந்து விட்டதாக துருக்கி பிரதமர் ரெட்ஜெப் டாயிப் எர்டோயன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சிரியா தன் நடவடிக்கைகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார்.துருக்கி மின்சாரத் துறை அமைச்சர் நேற்று அளித்த பேட்டியில், தற்போது இரு தரப்புக் கூட்டு எண்ணெய் துரப்பண பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவரம் இப்படியே தொடர்ந்தால் சிரியாவுக்கு துருக்கி வினியோகித்து வரும் மின்சாரத்தை நிறுத்த வேண்டி வரும் என மிரட்டல் விடுத்துள்ளார்.