Saturday, November 19, 2011

இன்றைய செய்திகள்.

சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு.
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றவாளி என  தீர்மானித்து 36 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டடத்தில் அறிவிக்கப்பட்டது.நீதவான் தீபாலி விஜேசுந்திர தலைமையிலான ட்ரயல் எட் பார் நீதவான் குழாம் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா நேர் காணல் வழங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.பாதுகாப்புக் செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான் குழாம், சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.இதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.படையினருக்கோ, நாட்டுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என நான்கு நட்சத்திர ஜெனராலாக பதவி வகித்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிக்கா போலியாக தம்மீது குற்றம் சுமத்துவதாகவும் தம்முடனான நேர்காணல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
ஒரு நீதவான் சரத் பொன்சேகா குற்றமற்றவர் என தெரிவித்தார் 
வெள்ளைக் கொடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றமற்றவர் என விசாரணையின்போது ஒரு நீதவான் தெரிவித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதவான்களான தீபாலி விஜேசுந்தர, சுல்பியர் ராசின் மற்றும் வேரவௌ ஆகிய மூவர் ஆகியோர் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.இதில் நீதவான் தீபாவலி விஜேசுந்தர மறறும் சர்பிக் ராசின் ஆகியோர், மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒன்றில் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளனர்.
வழக்கை விசாரணை செய்த பி. வேரவௌ என்னும் நீதவான் சரத் பொன்சேகா மூன்று குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி கிடையாது என அறிவித்துள்ளார்.இதேவேளை, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பிடிக்காத தரப்பினர் தம்மை சிறையில் அடைக்க வேண்டுமென விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.
3ம் இணைப்பு
அநீதியான தீர்ப்பு: பிரதிவாதி கூண்டிலிருந்து பொன்சேகா
ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதுடன் இந்த அநீதியான தீர்ப்பை நான் நிராகரிக்கின்றேன் என வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதியின் கூண்டிலிருந்து தனது கருத்தை தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்தத் தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு இடம்பெறக்கூடாது என்று நான் எண்ணுகின்றேன் என்பதுடன் அநீதியான தீர்ப்பை நிராகரிக்கின்றேன் என்றார்.
இதேவேளை, வெள்ளைக்கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆட்சேபித்து,  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேன்முறையீடு நீதிமன்றில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவை குற்றவாளியென அறிவித்த அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் - பொன்சேகாவின் சட்டத்தரணிகள்.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிராக இன்று உயர்நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.கொழும்பு மேல் நீதிமன்றில் எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நலின் லந்துவேஹெட்டி தெரிவித்துள்ளார்.இந்த மேன்முறையீடு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொண்ட மூவர் அடங்கிய நீதவான் குழாம் சரத் பொன்சேகாவிற்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 5000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.
தீர்ப்பின் எழுத்து மூல ஆவணத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும், இன்று ஆவணம் கிடைக்கப் பெற்றால் எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி லந்துவேஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி கோரியிருந்தார். எனினும், சரத் பொன்சேகா நாற்பது ஆண்டுகாலம் இராணுவத்தில் ஆற்றிய சேவையைக் கருத்திற் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டுமென அவரது சட்டத்தரணி லந்துவெஹெட்டி கோரினார்.
சட்டவிரோதமாக சிகரெட் கடத்தியவர் கைது!
கட்டாரிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த 30 ஆயிரத்து 600 சிகரட்டுகள் அடங்கிய 153 சிகரட் பெட்டிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டாரிலிருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இலங்கை வந்த விமானத்திலே குறித்த சந்தேக நபர் இந்த சிகரட்டுகளைக் கொண்டு வந்துள்ளார். இச்சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரட்டுகளின் பெறுமதி ரூபா 6 இலட்சத்து 12 ஆயிரம் என கட்டுநாயக்க விமான நிலைய பிரதி சுங்கப் பணிப்பாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிக்கும் 500 இராணுவத்தினரை கைது செய்ய விசேட நடவடிக்கை.
பாதாள உலகக் குழுக்களில் அங்கம் வகிக்கும் 500 இராணுவ உத்தியோகத்தர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.60,000த்திற்கும் மேற்பட்ட படையினர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இதில் சுமார் 500க்கும் அதிகமான படையினர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களில் அங்கம் வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 25 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.தப்பிச் சென்றுள்ள 60,000 படைவீரர்களில் 55000 பேரை சட்ட ரீதியாக இராணுவ சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திமன்ற வளாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியோர் தொடர்பில் விசாரணை.
வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் அளிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியோர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களால் சிறைச்சாலை வான் வண்டி மற்றும் சிறைச்சாலை வாகனம் ஆகியன மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை வண்டியொன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவை சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் குறித்தே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகங்களை கட்டுப்படுத்துவது ஆபத்தாக அமையக் கூடும்!- விஜேதாச ராஜபக்ச.
ஊடகங்களை கட்டுப்படுத்துவது ஆபத்தாக அமையக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வைத்தியத்துறை, பொறியியற் துறை போன்றே ஊடகங்களுக்கும் ஒழுக்க விதிகள் காணப்படுகின்றன. மக்களின் நலனை முதனிலையாகக் கொண்டு தொழில்சார் ஒழுக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளைப் போன்று கருதி ஒழுக்க விதிகளை உருவாக்குவது ஆபத்தாக அமையக் கூடும்.
நாடுகளில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் சுய ஒழுக்க விதிகளைப் பின்பற்றி இயங்குவதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, அவ்வாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டால் பாரிய பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.டியூனிசியா முதல் லிபியா வரையில் பாரியளவில் கிளர்ச்சி வெடித்து ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டமைக்கான பிரதான ஏதுவாக மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை முடக்கப்பட்டமையை குறிப்பிடலாம்.
தகவல் அறிந்து கொள்ளும் மக்களின் உரிமை முடக்கப்பட்டால் அவர்கள் வேறு வழிகளில் தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பாளர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.அதேபோன்று போலியான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதனை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கக் கூடிய வகையில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் ஊடகங்கள் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடபகுதிக்கான புகையிரதப்பாதை இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்து.
வடபகுதிக்கான சுமார் 56 கிலோமீற்றர் தூரமான புகையிரதப் பாதை புனரமைப்பு செய்வதற்கான இலங்கை - இந்திய ஒப்பந்தமொன்று இன்று கொழும்பில் சைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புகையிரதப் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கும் இந்தியாவின் இர்கோன் நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
பளைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதை இந்திய நிறுவனத்தினால் இன்னும் இருவருடங்களில் நிர்மாணிக்கப்பட்டவுடன் காங்கேசன்துறைக்கு யாழ்தேவி செல்லும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார்.
அமைச்சர் குமார வெல்கம மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தா ஆகியோரும் இவ் வைபவத்தில் பங்குபற்றினர்.56 கிலோமீற்றர் நீளமான இந்த ரயில் பாதை 149 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்திய கடனுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இவ் வைபவத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தா, உரையாற்றுகையில், வடபகுதி ரயில் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறினார்.இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, இலங்கையில் ஏராளமான அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
முத்தமிடுவது போன்ற விளம்பரம்: சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வாடிகன் முடிவு.
பிரபல எகிப்து இமாம் ஒருவரை போப் பெனடிக்ட் உதட்டோடு உதட்டாக முத்தமிடுவது போன்று பெனட்டன் புகைப்படம் வெளியிட்டது.இந் நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.
எகிப்து நாட்டின் அல்-அஸார் மசூதி இமாம் முகமது அகமது அல் தயீபை போப் உதட்டில் முத்தமிடுவது போன்ற படத்துடன் மிகப்பெரிய பேனர் ஒன்று வாடிகன் அருகே ஒரு பாலத்தின் மீது தொங்கவிடப்பட்டிருந்தது. பின்னர் பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இதில் நடவடிக்கை எடுப்பது குறித்து வாடிகன் வெளியுறவுச் செயலர் டர்சிஸியோ பெர்டோன் ஆய்வுசெய்து வருவதாக ஹோலி சீ பிரஸ் அலுவலக இயக்குநர் ஃபெடரிகோ லொம்பார்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா-சீன அதிபர் ஹூஜிண்டோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ- பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் ஆகியோரும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது போன்று பெனட்டன் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இதற்கு எழுந்த எதிர்ப்புகளை அடுத்து இந்த விளம்பரங்களை அந்த நிறுவனம் வாபஸ் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: கனடா ஆர்வம்.
அமெரிக்காவும், கனடாவும் இணைந்து சுற்றுவட்டார பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் செயல்பட உள்ளன.கடந்த 17 மாதங்களாக இந்த ஒப்பந்த உருவாக்கப்பணிகள் நடைபெற்றன. கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை அமெரிக்க உயரதிகாரிகள் ஒட்டாவாவில் சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பல விடயங்களில் கனடாவின் முடிவான நிலை என்ன என்பதை இந்தக் கூட்டத்தின் போது அமெரிக்க அதிகாரிகள் அறிந்து கொண்டனர். இந்தத் தகவலை தன் நண்பருக்கு மின்னஞ்சல் மூலமாக பொதுப்பாதுகாப்புக்கான சர்வதேச விவகாரங்களின் இயக்குநர் ஆர்தர் வில்சின்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சுற்றுப்புற வட்டார பாதுகாப்பு ஒப்பந்தம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. மக்களும் உற்பத்திப் பொருட்களும் பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பான சாலைகளைத் தீர்மானிக்கிறது. அடுத்த மாதம் இந்த ஒப்பந்தம் பகிரங்கமாக தெரியவரும். இப்போது இதன் விவரங்கள் யாவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் ஹார்ப்பரும் அமெரிக்க அதிபரும் கையெழுத்திட்ட பின்பு தான் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். அமெரிக்காவுடனான வணிகத் தொடர்புகளை வளப்படுத்தவே இந்த ஒப்பந்தம் உருவாவதாகப் பலரும் கருதுகின்றனர்.கனடா பத்திரிக்கை இந்தத் திட்டம் ஒரு பில்லியன் செலவில் எல்லைகளின் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத் திட்டங்களோடு உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் வர்த்தக ரீதியாக கனடாவும் அமெரிக்காவும் மிகவும் நெருங்கி வரக்கூடும்.
எல்லைக்கு அப்பால் செயல்திட்டம் என்பது வேறு சில விடயங்களில் கவனம் செலுத்துகிறது. பாதுகாப்பு மிரட்டல்களை கண்டறிதல், உணவு மற்றும் வாகனத் தொழிற்சாலைகளை ஒழுங்குசெய்தல், எல்லைகளில் பயணம் செய்யும் கப்பல்கள் பற்றி முழுவிவரமும் அறிதல் போன்றவற்றில் அக்கறை கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தின் விவரம் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ரகசியமாகவே உள்ளது.
நவம்பர் 11ல் நடந்த வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா-கனடா எல்லைகளின் பாதுகாப்பில் இரு நாடுகளும் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. தீவிரவாதிகளின் மிரட்டலை எதிர்த்து பாதுகாப்பு முயற்சிகளை இரு நாடுகளும் பலப்படுத்துகின்றன.
கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ மூன்றும் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் இணைந்து சிந்தித்து மும்மடிப் பாதுகாப்பு மற்றும் செழிப்புப் பங்கீட்டுத் திட்டத்தை 2006ல் அறிமுகம் செய்ய இருந்தன.
அப்போது நடந்த தேர்தலில் பழமைவாதக் கட்சி தோற்றுப் போனதால் உடனடியாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. கடந்த பத்தாண்டுகளாகப் பாடுபட்டு இப்போது எல்லைக்கு அப்பால் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருநாடுகளும் கடுமையாக முயன்று வருகின்றன.
பாதுகாப்பு மற்றும் செழிப்புப் பங்கீட்டுத் திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தைத் தீட்டுவதற்கு அரசு ஏற்றுமதியாளர், தனித் தொழிலதிபர், தங்கவரி முகவர் கூட்டமைப்பு மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதி அவர்களின் ஆதரவைக் கோரியது.ஆனால் தொழிற்சங்க அமைப்புகளையும் வழக்கறிஞர்களை அழைத்துப் பேசவில்லை. சிலர் இந்தப் பங்கீட்டுத் திட்டத்தால் கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்கின்றனர்.
ஆனால் கடந்த ஆறு மாதமாக மிக மிக ரகசியமாக இரு நாட்டின் அரசு உயரதிகாரிகள் திட்ட முன்வரைவை உருவாக்க கடுமையாக உழைக்கின்றனர்.வரும் பிப்ரவரி மாதம் இந்தத் திட்டம் இறுதி நிலையை அடைந்து இரு நாட்டுத் தலைவர்களாலும் கையெழுத்திடப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒயிட் ஹவுஸின் ப்ரைவி கவுன்சில் அலுவலகத்தில் இருந்து கனடாவின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
அடுத்த 23 நாட்களில் அந்த முன்வரைவை மிக விரைவில் சரி பார்த்து அனுப்பவேண்டும் என்ற கடிதம் வந்தது. அதிக நாள் அவகாசம் தராமல், அமெரிக்க அதிகாரிகள் தாம் தயாரித்த முன் வரைவுக்கு கனடா அதிகாரிகளிடம் உடனே ஒப்புதழ் பெற விரும்பினர்.இதனால் கனடாவின் இறையாண்மைக்கு ஏதேனும் கேடு வருமா? என்றால், வரவே வராது என்ற பதில் தான் வருகிறது. கனடா அரசு தன் அரசியலமைப்புச் சட்டத்திற்கும், சட்ட அமைப்புக்கும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் அளிப்பதால் தன் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவே விரும்புகிறது.
இறந்தவர்களை மணிகளாக உருட்டி வைக்கும் கலாசாரம்.
இறுதிச்சடங்கு செய்வது, இறந்தவர் உடல்களை அடக்கம், தகனம் செய்வது ஆகிய சடங்குகள் நாட்டுக்கு நாடு, பகுதிக்கு பகுதி வேறுபடுகிறது.மிகமிக வித்தியாசமான கலாசாரம் தென்கொரியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு: 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீன தத்துவ ஞானி கன்பூசியஸ்.
இவர் வகுத்த நெறிமுறைகளே தென்கொரியாவில் பெரும்பாலும் எல்லா மத சடங்குகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்து ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது அவர் வகுத்த நெறி.அதுவே தென்கொரியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நூதன கலாசாரம் பரவி வருகிறது. இறுதி சடங்குகள் முடிந்த பிறகு உடலை தகனம் செய்கின்றனர். கடைசியாக கிடைத்த சாம்பல் பின்னர் ஒரு கன்டெய்னரில் சேகரிக்கப்பட்டு அதிக வெப்பநிலையில் வைக்கப்படுகிறது.
அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கப்படுவதால் சாம்பல் துகள்கள் உருகி, இறுகி சிறு சிறு உருண்டைகளாக மாறுகின்றன. கிரிஸ்டல் மணி போல வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த உருண்டைகளை புத்தர் பொம்மையுடன் கூடிய கண்ணாடி குப்பியில் வைத்து மூடிவிடுகின்றனர்.இச்சியான் நகரை சேர்ந்த போன்யாங் என்ற நிறுவனம் இந்த பணியை செய்து தருகிறது. இதற்கு செலவு சுமார் ரூ.43 ஆயிரம். ஒருவரது உடல் சாம்பலில் இருந்து 4 அல்லது 5 கப் கிரிஸ்டல் மணிகள் உருவாகின்றன.
இதுபற்றி கிம் நாம் என்பவர் கூறுகையில், அப்பா 27 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடலை தோண்டி எடுத்து, எரித்து சாம்பலாக்கி கிரிஸ்டல் ஆக்கி வைத்திருக்கிறேன். வழிபாட்டு அறையில் மணி வடிவில் இருக்கும் தந்தையை கும்பிட்டுவிட்டுதான் தினமும் வேலையை தொடங்குகிறேன். இப்போதும் அவர் வீட்டிலேயே இருப்பது போல உணர்கிறேன் என்றார்.
நாட்டில் இட பற்றாக்குறை இருப்பதால் தென்கொரிய அரசும் இத்திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. கல்லறைகளுக்கு 60 ஆண்டுகள் மட்டுமே அனுமதி. நல்லடக்கம் செய்து 60 ஆண்டுக்கு பிறகு அந்த இடத்தை காலி செய்து கொடுத்துவிட வேண்டும் என்று 2000-ல் அரசு உத்தரவு போட்டது. அரசே பிரசாரம் செய்வதால் பலரும் முன்னோர்களை கிரிஸ்டல் ஆக்கும் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர்.
பாகிஸ்தானில் அமெரிக்க டிரோன் தாக்குதல்: 7 தீவிரவாதிகள் பலி.
பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்க டிரோன்கள் தாக்குதல் நடத்தியதில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று கூறி ஆளில்லா விமானங்கள் டிரோன் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் வசிரிஸ்தான் பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் மலைப் பகுதிகளில் நேற்று டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.அமெரிக்க உளவு நிறுவனம் சி்.ஐ.ஏ.வின் உளவு விமானங்கள் டிரோன்கள் மூலம் 4 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மீரான்ஷா நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ராஸ்மக் பகுதியில் நடந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் ஆப்கன் தலிபான்களும் அல்கொய்தா தீவிரவாதிகளும் பதுங்கி உள்ளனர்.இந்த பகுதியில் கடந்த ஆண்டு டிரோன்கள் மூலம் 111 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 64 முறைதான் நடத்தப்பட்டுள்ளது.
சீனாவில் அதிகரிக்கும் விவாகரத்துக்கள்: புதிய சட்டத் திருத்தம் அறிமுகம்.
சீனாவில் சமீபத்தில் விவாகரத்து சட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தம் அங்குள்ள பெண்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சட்டத் திருத்தத்தால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவைப் போலவே சீனாவிலும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தான் இருந்தது.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அங்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறியது. தொடர்ந்து தனிக் குடித்தனம் துவங்கியது. மேலும் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியால் பல்வேறு சிக்கல்களும் தோன்றியுள்ளன.ஒரு காலத்தில் சீனாவில் விவாகரத்து என்பது மோசமான வார்த்தையாகக் கருதப்பட்டது. இன்று அதே சீனாவில் மாறி வரும் பொருளாதாரச் சூழலில் விவாகரத்து மளமளவென அதிகரித்து வருகிறது.
இந்தாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 28 லட்சம் தம்பதியர் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் விவாகரத்து 7 சதவீதம் அதிகரித்துள்ளது.மொத்தத்தில் நாட்டில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது சீன பொது விவகார அமைச்சகத்தின் கணக்குப்படி சராசரியாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் விவாகரத்துகள் நடக்கின்றன.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் கடந்த ஆகஸ்ட் 13ம் திகதி விவாகரத்து சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிவித்தது. அதன்படி விவாகரத்து பெற்ற பின் அந்தத் தம்பதியர் ஒரே வீட்டில் வசிக்க முடியாது. அல்லது அந்த வீட்டை பாதியாகப் பிரித்துக் கொள்ளவும் முடியாது.இருவரில் யார் அந்த வீட்டைச் சொந்தமாக வாங்கியுள்ளாரோ, அவர் மட்டும் தான் அந்த வீட்டில் இருக்க முடியும். மற்றவர் அதை விட்டு வெளியேறிவிட வேண்டும். அதாவது கணவன் தனது காசில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தால் விவாகரத்து பெற்ற பின் அந்த வீட்டின் மீது மனைவி உரிமை கொண்டாட முடியாது.
இந்த சட்டத் திருத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். சீனாவில் பாரம்பரியமாக கணவன் அல்லது அவரது பெற்றோர் தான் ஒரு வீட்டை சொந்தமாக வாங்குவர்.ஆனால் சமீப காலமாக பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் வீடு மற்றும் நிலத்தின் விலை விண்ணை முட்டிவிட்டது. இதனால் பெண்கள் பலர் சொந்த வீடுள்ள ஆணையே திருமணம் செய்து வருகின்றனர்.
இந்த புதிய விவாகரத்து சட்டம் ஆண்களுக்குத் தான் சாதகமாக உள்ளது. சொந்த வீடுள்ள கணவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக மனைவி வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.யாங் யியான்(31) என்ற பெண் இதுகுறித்துப் பேசும் போது, எங்களுக்குத் திருமணம் ஆகும் முன்பே, எனது முன்னாள் கணவர், ஒரு அபார்ட்மென்ட் வாங்கியிருந்தார். சமீபத்தில் எங்களுக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது.
தற்போதைய திருத்தப்பட்ட சட்டத்தின்படி, எனக்கு அந்த வீட்டில் உரிமை இல்லை. அதாவது நான் வீடிழந்தவளாகி விட்டேன். எனினும் எனது சேமிப்பை வைத்து ஓரளவுக்கு சமாளித்து வருகிறேன். ஆனால் நான் ஒரு இல்லத்தரசியாக இருந்திருந்தால் கஷ்டம் தான் என்றார்.சீனாவின் நீதித் துறையில் 13 ஆண் நீதிபதிகளுக்கு ஒரு பெண் நீதிபதி என்ற அளவில் தான், பெண் உரிமை உள்ளது. அதே போல் தான் குடும்ப விவகாரங்களிலும் பெண் உரிமை என்பது வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது.
முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா கைது.
மாஜி பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா அ‌ர்ரோயோ தேர்தல் முறைகேடு செய்ததாக நேற்று மணிலா மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார்.
அ‌ர்ரோயோ மருத்துவ சிகி்ச்சைக்காக வெளிநாடு செல்ல இருந்‌தார். குளோரியா 2001-2010 வரை அதிபராக இருந்த காலத்தில் ஊழல் செ‌ய்த‌தாக அவரை கைது செய்தனர்.இது குறித்து மருத்துவமனையில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த தென் மாவட்ட காவல்துறை சீனியர் உயர் அதிகாரி பிராங்ளின், குளோரியா தங்களது பாதுகாப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமரை பற்றி குறை கூறிய சர்கோசி: வருத்தம் தெரிவித்து கடிதம்.
இஸ்ரேல் பிரதமரை பொய்யர் என ஒபாமாவிடம் கூறியது பற்றி வருத்தம் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி.பிரான்சின் கேன்ஸ் நகரில் சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தனிப்பட்ட முறையில் பேசிய சர்கோசி, "இஸ்ரேல் பிரதமர் ஒரு பொய்யர். இனி அவரை நம்பி பயனில்லை” என்றார்.அவரது இந்த விமர்சனம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மேற்கத்திய நாடுகளுக்கு இஸ்ரேல் மீதான நம்பிக்கை குறைந்து வருவதைத் தான் இது காட்டுகிறது என நிபுணர்கள் கூறினர்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூவின் மனைவியின் தந்தை காலமானதற்கு வருத்தம் தெரிவித்து சர்கோசி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.அதில் அவர் பெஞ்சமின் உடனான நட்பை நினைவு கூர்ந்துள்ளார். மத்திய கிழக்கு விவகாரங்களில் இருதரப்புக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் அந்த நட்பை பாதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.எனினும் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விவரங்களை வெளியிட பிரான்ஸ் அதிபர் மாளிகை மறுத்துவிட்டது.
வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம்: 300 இளைஞர்கள் கைது.
வேலை இல்லை, சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, வறுமையை ஒழிக்க வேண்டும் என்று கூறி நியூயோர்க் நகரின் வால் ஸ்டிரீட்டை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.இந்த போராட்டம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் வால் ஸ்டிரீட் பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம். ஆனால் அங்கு கூடாரம் அமைத்து தங்க கூடாது, இரவில் இருக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.அதை மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த பொலிசார் சென்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.நியூயோர்க் பங்கு சந்தை அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு, அலுவலகத்துக்குள் செல்ல முயன்றவர்களை தடுத்தனர். இதனால் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து 300 பேரை பொலிசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொல்ல முயன்றதாக வாலிபர் மீது வழக்கு பதிவு.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொல்ல முயன்றதாக வாலிபர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.கமாண்டோக்கள் விரைந்து சென்று சோதனை நடத்திய போது, மாளிகை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை கைப்பற்றினர். அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கி இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகைக்கு செல்லும் எல்லா சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த சோதனையின் போது மாளிகையின் ஒரு கண்ணாடியில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதும், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி குண்டு விழுந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.பரபரப்பு அடைந்த அதிகாரிகள் மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் பென்சில்வேனியாவில் ஆஸ்கர் ஆர்டெகா என்ற 21 வயது வாலிபரை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் சுற்றிவளைத்தனர்.அவரிடம் பென்சில்வேனியா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஒபாமா சாத்தான், கிறிஸ்துவுக்கு எதிரானவர் என்று கோஷம் போட்டார்.
இதையடுத்து அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷெல் ஆகியோரை கொலை செய்ய முயன்றதாக பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை பிட்ஸ்பர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2005ம் ஆண்டு வாலிபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போதைய அதிபர் பில் கிளின்டனை கொல்ல முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு: மரியோ வெற்றி.
இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் மரியோ மோன்டி வெற்றி பெற்றார்.கடும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலி சிக்கி தவிக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனி மீது ஏராளமான ஊழல் மற்றும் பாலியல் புகார்கள் எழுந்தன. ஐரோப்பிய யூனியனின் நெருக்குதல் காரணமாக இவர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து மரியோ மோன்டி(68) புதிய பிரதமராக பதவியேற்றார். ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவும், இத்தாலியில் நிலவும் பொருளாதார சிக்கலை தீர்க்கவும் அதிரடி நடவடிக்கைகள் எடுப்பேன் மரியோ உறுதி அளித்தார்.இதற்கிடையில் புதிய அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதில் 281 ஓட்டுகள் பெற்று மரியோ வெற்றி பெற்றார்.செனட்டில் அவர் பேசுகையில், ஒரு வாரத்துக்குள் பொருளாதார சீர்திருத்த கொள்கைகள் வெளியிடுவேன் என்று அறிவித்தார். மேலும் பெண்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஓய்வுதிய திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். வீடு வாங்கினால் வரி விதிக்கப்படும் முறை மீண்டும் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: பிரிட்டிஷ் வீரர் மரணம்.
ஆப்கானிஸ்தானில்  நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தகவல் தெரிவித்தார்.ஹெல்மாண்டு மாநிலத்தில் ந ஹர்-எ சரஜ் என்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வந்த வீரர்களின் வண்டியின் மீது எறியப்பட்ட குண்டு வெடிப்பே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று செய்திதொடர்பாளர் கோர்டன் கெக்கன்சி தெரிவித்தார்.
யுஸ் என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட பீட்டர் யுஸ்டேஸ் இந்தக் குண்டுவெடிப்பில் இறந்து போனார். இவர் இராணுவத்தில் சேர்ந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பு சிறிது காலம் பெயிண்ட்டராகவும் அலங்கரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.இந்தக் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2001 ல் இருந்து இதுவரை மொத்தம் 388 பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. லிவர்புல் ஊரைச் சேர்ந்த யுஸ்டேஸின் குடும்பத்தினருக்கு மெக்கன்சி தன் ஆழ்ந்த அனுதாபத்தைக் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இருக்கும் கனடா மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்: அமைச்சர் கோரிக்கை.
ஆபத்து மிகுந்த சிரியாவை விட்டு விரைவில் வந்து விடுமாறு தன் நாட்டு மக்களுக்கு கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் போர்டு கோரிக்கை விடுத்துள்ளார்.சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் பல மாதங்களாக போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை ஒடுக்க உலக நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஐக்கிய நாட்கள் சபை கடந்த மார்ச் மாதம் முதல் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.ஆசாத்தின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட கனடாவும் தீர்மானித்துள்ளது. எனவே தன் மக்களை சிரியாவுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கின்றது. சிரியாவில் வாழும் கனடா நாட்டினர் உடனடியான கனடாவுக்கு திரும்ப வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
அரவு லீகுடனான சமாதான திட்டத்துக்கு உடன்பட வேண்டும் என்று அந்த அமைப்பு மூன்று நாள் கெடு விதித்துள்ளது. மேலும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை சிரியாவுக்குள் ஆசாத் அனுமதிக்க வேண்டும் என்று அரபு லீக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.இத்திட்டத்திற்கு உடன்படவில்லை என்றால் கடும் அபராதம் விதிப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. இருப்பினும் இன்று வரை சிரியா இதற்கு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர் மார்ட்டின் இதுகுறித்து கூறுகையில், சிரியாவின் தலைவர் ஆசாத் ஒத்துழைப்பு தருவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நவம்பர் 2 அன்று தன் படைகளைத் திரும்ப பெறுவதாகவும், துப்பாக்கி சூட்டை நிறுத்துவதாகவும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ஓர் ஒப்பந்தத்தில் ஆசாத் கையெழுத்திட்டார்.ஆனால் அதன் பின்று அந்த ஒப்பந்தத்தை அவர் மதிக்கவில்லை. வாக்குறுதிகளை இவ்வாறு மீறும் போது அரபு லீக் அதன் அதிபரை வற்புறுத்தி சமாதானத் திட்டத்தில் கையெழுத்திட வைக்கும் என்று உறுதிபடக் கூறினார்.
இத்தாலியின் புதிய பிரதமருக்கு மெர்கெல் நெருக்கடி.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் புதிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு இத்தாலியின் புதிய பிரதமர் மரியோ மாண்ட்டிக்கு நெருக்கடி கொடுக்கிறார்.இத்தாலி நாட்டின் சிரமமான நேரத்தில் பதவியேற்ற உங்கள் மீது "ஜரோப்பியாவின் நெருக்கடியை தீர்க்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது என்று மாண்ட்டியை வாழ்த்தி மெர்க்கெல்" ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் நீங்களும் உங்கள் அரசும் விரைந்து தேவையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார். ஜரோப்பியாவில் நன்மைக்காகவும் யுரோ மண்டல் சவால்களை எதிர்கொள்ளவும் மாண்ட்டியுடன் தானும் இணைந்து செயல்படுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மெர்க்கெல் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதம் மெர்கெலின் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஜெர்மன் மற்றும் இத்தாலி மக்களிடையே பாரம்பரியமாக இருந்து வரும் நல்ல ஆழமான நட்பை நம்முடைய கூட்டுறவு இன்னும் மேம்படுத்தும் என்றும் இத்தாலி மீதுள்ள நம்பிக்கையை மெர்கெல் கடிதம் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த புதன் அன்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற மாண்ட்டி உலகத் தலைவர்களின் நிதிச் சந்தை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடும் மேற்பார்வையில் தன்னுடைய நாட்டில் புதிய பொருளாதாரத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும். இத்திட்டம் பல கடுமையான நிபந்தனைகளையும் உள்ளடக்கியுள்ளது.
பிரான்ஸ் அணுசக்தி நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு.
பிரான்சு நாட்டு அணுசக்தி நிலையத்தில் இயற்கைப் பேரிடரின் போது ஏற்படும் பேரழிவை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு முறைகளை பின்பற்றவேண்டும் என்று பிரான்சு கருதுவதாக ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதத்தின் ஜப்பான் நாட்டில் ஃபுகுஷிமாவில் நடந்த பேரிடருக்குப் பிறகு ஐரோப்பிய நாடு தனது 58 நிலையங்களிலும் சில பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டன. பிரான்சின் வடமேற்குப் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுத்த தலைமுறை நிலையத்திலும் இந்தப் பாதுகாப்புப் பரிசோதனை நடத்தப்பட்டது.வெள்ளம், நிலநடுக்கம், அணுசக்தி கசிவு, குளிரூட்டும் அமைப்பு மற்றும் விபத்து மேலாண்மைச் செயற்பாடுகளின் முடக்கம் போன்ற சூழ்நிலைகளில் அணுசக்தி நிலையத்தின் செயல்பாடு மற்றும் திறன் குறித்து ஆராய்வதே இந்தப் பரிசோதனைகளின் நோக்கமாகும்.
IRSN நிபுணர்கள் கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு குறித்து ASNக்கு ஐநுாறு பக்க அறிக்கையை அனுப்பினார். ASN இந்த அறிக்கையை அலசி ஆராய்ந்து 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அரசுக்கு தன் கருத்துரையை வழங்கும்.IRSN தலைவர் ஜேக்கஸ் ரேப்புஸாட் அணுசக்தி நிலையத்தின் குளிரூட்டல் செயற்பாடு மற்றும் மின்சாரம் வழங்குதல் பிரிவுக்கு இன்னும் ஒரு அடுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று ராபட்டா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பிரான்சின் பழைய பாதுகாப்பு முறையில் இரண்டு அழைப்புகள் உண்டு. அவற்றில் ஒன்று செயலிழந்து போனாலும் மற்றொன்று செயல்படும். இரண்டுமே ஒரே நேரத்தில் செயலிழந்து போக வாய்ப்பில்லை. அணுசக்தி நிலையங்களின் ஓரடுக்குக் கூடுதல் பாதுகாப்புக்குரிய செலவு குறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் நிலையத்தில் விரைவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF