Friday, November 25, 2011

இன்றைய செய்திகள்.

நாணய நிதியத்தின் நிதி தேவையில்லை! சலுகையுடன் கடன் தருவதால் பெற்றுக்கொள்கிறோம்!- இலங்கை அரசு.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரிலேயே நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இது தொடர்பில் மறுப்பறிக்கை ஒன்றை இலங்கை அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் நாணய மதிப்பு 3 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதனை சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வரவேற்றுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தையும் பொருளதாரத்தையும் மேம்படுத்த இந்த நாணய மதிப்பிறக்கம் ஏற்படுத்தும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப்பிரதிநிதி கோசி மாத்தாய் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வலியுறுத்தலின் பேரில் இந்த நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட்டதாக இலங்;கையின் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்தநிலையிலேயே அரசாங்கத்தின் மறுப்பறிக்கை வெளியாகியுள்ளது.பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம இது தொடர்பில் கருத்துரைக்கையில், வெளிநாட்டில் பணியாற்றுவோரிடம் இருந்து இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய்கள் வருமானமாக கிடைக்கிறது. அத்துடன் தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக உள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவையில்லை என்று கூறியுள்ளார். எனினும் சர்வதேச நாணய நிதியம் சலுகை அடிப்படையில் தவணைக்கடன்களை வழங்குவதன் காரணமாகவே அந்த கடனை பெற்றுக்கொள்வதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் 1.8 பில்லியன் டொலர் கடனுதவி திட்டத்தின்கீழ் 218.3 மில்லியன் டொலர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு கிடைக்கும் என்று அமுனுகம தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் மனிதாபிமான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன!– ஐ.தே.க.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனிதாபிமான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.சரத் பொன்சேகாவிற்கு வைத்திய சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் ஜயலத் ஜயவர்தன ஆகிய ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரத் பொன்சேகாவை சிறைச்சாலையில் பார்வையிட்டனர்.
சரத் பொன்சேகாவின் நோய் நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்ட காலத்தில், சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மக்களுக்கு வெளிப்படுத்த அரசாங்கம் முயற்சி செய்துள்ளது.தற்போது அவருக்கு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளக் கூடிய அடிப்படை உரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம் ஜனவரியில் இலங்கை வருகிறார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டார்.
"இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார்" என அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
நாடு எந்த திசையில் பயணம் செய்கின்றது சஜித் கேள்வி.
நாடு எந்தத் திசையில் பயணம் செய்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலையாளிகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சந்தேக நபர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.உரிமைகளுக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சிறுவர் விற்பனை நிலையம் கண்டுபிடிப்பு! 70 சிறுவர்கள் மீட்பு.
சிறுவர் இல்லம் ஒன்றை நடத்தும் பேரில் குழந்தைகளை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டவர்களுக்கு விற்பனை செய்துவந்த சிறுவர் விற்பனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மீட்டுள்ளது.மொறட்டுவ ராவத்தாவத்த பகுதியில் இயங்கிவரும் சிறுவர் இல்லமொன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நேற்று புதன்கிழமை(23.11.2011) மாலை சுற்றிவளைத்து அங்கிருந்த 70 சிறுவர், சிறுமியரை மீட்டுள்ளது. 
அதிகாரச் சபையின் முறைப்பாடுகளை பதிவு செய்யும் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நேற்று கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்படி சிறுவர் இல்லம் சுற்றிவளைக்கப்பட்டது. இதன் போது சிறுவர் இல்லத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளும் குழந்தைகள் உள்ள 15 தாய்மாரும் 6 கர்ப்பிணிகளும் இருந்ததாக அதிகார சபை தெரிவித்துள்ளது. 
மேலும், சிறுவர்களை கொள்வனவு செய்ய சென்றிருந்த அமெரிக்க மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த இரண்டு தம்பதியினரும் குழந்தை விற்பனை செய்யும் தரகர் ஒருவரும் இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்களும் இவ்விடுதியில் இருந்துள்ளனர். 
குழந்தைகளை கொள்வனவு செய்ய இந்த வெளிநாட்டு தம்பதியினர், 7 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை சிறுவர் இல்லத்திற்கு வழங்கியுள்ளதுடன் இலங்கை பெண் ஒருவர் 35 ஆயிரம் ரூபாவை குழந்தையை கொள்வனவு செய்ய வழங்கியுள்ளார். இடைத் தரகர்களே இவர்களை சிறுவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 
மொறட்டுவ ராவத்தாவத்தை பகுதியில் இயங்கி வரும் இந்த சிறுவர் இல்லம் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இயங்கி வருகிறது. கன்னியாஸ்திரி ஒருவர் இந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியாக செயற்பட்டு வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. 
அனாதை குழந்தைகளை பராமரித்து அவர்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் பல காலமாக நடந்து வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை சிறுவர் இல்லத்தில் இருந்த வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டை சேர்ந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
3500 மில்லியன் ரூபா செலவில் இராணுவத் தலைமையகம் அமைக்கப்பட உள்ளது.
3500 மில்லியன் ரூபா செலவல் இராணுவத் தலைமையகம் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.பத்தரமுல்ல பிரதேசத்தில் புதிய இராணுவத் தலைமையகம் அமைக்கப்பட உள்ளது.இராணுவத் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்காக 3500 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிர்மாணப் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போலி விசா படிவங்களை காட்டி பணம் மோசடி!மூவர் கைது.
பிரித்தானியா செல்லவென போலியான முறையில் விசா படிவங்களை தயாரித்து அதனை காட்டி நிதி மோசடியில் ஈடுபட்ட மூவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பு குற்ற தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கொட்டாஞ்சேனை மற்றும் மோதர ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து போலி பிரித்தானிய விசா விண்ணப்பப்படிவங்கள், போலி பயண அனுமதிச் சிட்டுக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் மூவரிடமும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரணில் கோரிக்கை.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சி, இன மற்றும் மத பேதங்களைக் களைந்து மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும், சிங்கள வர்த்தகர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும், நீதியின்மை, சர்வாதிகாரம் போன்றன இல்லாதொழிக்கப்பட போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் ரணில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு ஹைட் மைதானத்திலிருந்து போராட்டம் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த மரணம்.
இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த (73) மரணமடைந்தார். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.வீட்டினுள் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதால் இவர் கண்டி பொதுவைத்தியசாலையின் நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
1938 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த, 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார்.மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது.தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
இவர் மாவனல்ல தொகுதியின் முன்னாள் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூகே ரத்வத்தயின் மகனாவார்.கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை- கண்டி மேயர் மகேந்திர ரத்வத்தை ஆகியோர்களின் தந்தையாவார்.இவர் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரரும் ஆவார்.
ரூ.10 கோடி மதிப்பில் தயாரான தங்க கிறிஸ்துமஸ் மரம்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டது. அலங்கார பொருட்கள் மற்றும் குடில்களை அமைப்பதற்கான பொருட்களை இப்போதே மக்கள் வாங்க தொடங்கி விட்டனர்.
பல்வேறு நகரங்களில் வண்ணமிகு அழகிய கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தங்க கிறிஸ்துமஸ் மரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
2.4 மீட்டர் உயரத்தினால் ஆன இந்த கிறிஸ்துமஸ் மரம் டோக்கியோவில் ஜின்ஷா தனாகா என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் வைக்கப்பட்டுள்ளது.சுமார் 12 கிலோ தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த மரத்தின் மதிப்பு ரூ.10 கோடி(இந்திய ரூபாய்) ஆகும். இந்த மரத்தை 15 தங்க நகை நிபுணர்கள் 4 1/2 மாதங்கள் இரவு-பகலாக  சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.
தலிபான் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் தெக்ரிக் இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் தலிபான் தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைந்தால் அவர்களுடன் சமாதானம் பேச அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தலிபான் தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர்.இதற்கிடையே தலிபான்களுடன் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தலிபான்கள் சம்மதிக்காமல் அரசுடன் மட்டுமே பேசுவோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதையடுத்து தலிபான் தீவிரவாத அமைப்புடன் அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த தீவிரவாத குழுவினர் போர் நிறுத்த அறிவிப்பை இஸ்லாமாபாத்தில் உள்ள இண்டர்நேஷனல் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
கனடாவில் ஏழைக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.
கனடாவில் கடந்த இருபதாண்டுகளில் ஏழைக் குழந்தைகளின் எண்ணிக்கை 20 சதவீதமாகக் குறைந்திருப்பதாக வறுமையை எதிர்த்துப் போராடும் சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளன.அதே சமயம் கனடாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கு பெருகியுள்ளது. இங்கு பத்துக் குழந்தைகளில் ஒரு குழந்தை வறுமையால் வாடுகிறது. மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை நான்கில் ஒன்றாக இருக்கிறது.
வறுமை ஒழிப்புக்கான கூட்டுச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி எதிர்வரும் 2020ம் ஆண்டுக்குள் இன்றிருக்கும் வறுமையைப் பாதியாகக் குறைத்துவிட வேண்டும் என்று வறுமை ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.ஏற்கெனவே 1989ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2000ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினருடன் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் மோதல்.
பிரான்ஸ் நாட்டில் நார்மண்டி என்ற இடத்தில் புதன்கிழமையன்று(23.11.2011) நூற்றுக்கணக்கான அணுசக்தி எதிர்ப்பாளர்கள் காவல்துறையினருடன் மோதினர்.பிரான்ஸ் நாட்டின் அரெவா என்ற இடத்தில் உள்ள அணுசக்தி உற்பத்தி நிலையத்திலிருந்து கதிர்வீச்சுக் கழிவு தொடர் உந்து மூலமாக எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்தது.
இந்தக் கதிர்வீச்சுக் கழிவின் ஆபத்தை உணர்ந்த எதிர்ப்பாளர்கள் இக்கழிவை பொதுமக்கள் வாழும் ஊர்கள் வழியாகக் கொண்டு செல்வது ஆபத்தானது என்பதால் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர்.வடமேற்கு பிரான்சில் உள்ள வலோக்னஸ் என்ற ஊருக்கு வெளியே சில கிலோமீற்றர் தூரத்திற்கு ரயில் வண்டிப் பாதையில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பார்க்காரர்கள் நின்று மறியல் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர்.
13.30 GMT மணிநேரத்துக்குப் புறப்பட இருந்த தொடர் உந்து வண்டியில் 11 குழாய்ப் பெட்டகங்களில் அதிகக் கதிர்வீச்சுடைய அணுசக்திக் கழிவு அரெவா நிலையத்திலிருந்து சுத்திகரிப்புக்காக அருகில் உள்ள லாஹேக் என்ற ஊருக்கு அனுப்பப்பட இருந்தது. இந்த ரயிலில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பேராபத்து நிகழக்கூடும்.ஜேர்மனியிலும், பிரான்சிலும் இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செயற்கையாக பனி சூழலை உருவாக்கும் பணியில் அவுஸ்திரேலியா.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக அவுஸ்திரிய மலை பகுதிகளில் பனிக்காலம் தாமதமாகிறது.இதனால் இயந்திரங்கள் வைத்து செயற்கையாக பனி உருவாக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பாவின் பிரமாண்ட மலைத் தொடர் ஆல்ப்ஸ். அவுஸ்திரியாவில் ஆரம்பித்து ஸ்லோவேனியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து என்று பிரான்ஸ் வரை நீண்டு காணப்படுகிறது.அவுஸ்திரியாவின் பாதி பகுதியை இது ஆக்கிரமித்திருக்கிறது என்பதால் பல மாதங்கள் இதமான காலநிலை நிலவும். பல பகுதிகளில் கோடையில் கூட வெப்பம் குறைவாகவே இருக்கும்.
அவுஸ்திரியாவின் டிரோல், சால்ஸ்பர்க் மலைகளில் அக்டோபரில் இருந்தே பனி படரத் தொடங்கும். மெல்ல அதிகரித்து நவம்பரில் மலையே பனியாக காட்சியளிக்கும். பனிச்சறுக்கு விளையாட்டுகள் சூடு பிடிக்கும். உலகம் முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் வருவார்கள்.வெப்பநிலை அதிகரித்திருப்பதால் இன்னும் பனிக்காலம் தொடங்கவில்லை. மலையில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் நடக்கும் இடம் முழுக்க ஆங்காங்கே இயந்திரங்கள் வைத்து பனி உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெப்பம் அதிகம் இருப்பதால் செயற்கை பனி உருகி விடுகிறது. இதனால் பனிச்சறுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி பனிச்சறுக்கு விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, புவிவெப்பநிலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பால் பனி உருவாவது தாமதமாகிறது. அனேகமாக டிசம்பரில் தான் பனி உருவாகும் என்று தெரிகிறது. அதற்கு பிறகே போட்டிகள் நடத்த முடியும் என்றனர்.அவுஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலையில் பனியின்றி வெறிச்சோடி கிடக்கிறது. பனிச்சறுக்கு போட்டிகள் நடக்கவுள்ள சரிவு பகுதியில் இயந்திரங்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட பனி, திட்டு திட்டாக தெரிகின்றன.
சீனாவில் வறுமையில் வாடும் பிஞ்சுக் குழந்தைகள்.
சீனாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட இரண்டு கோடியே முப்பது லட்சம் சிறுவர்கள், தமது தாய் தந்தையரின் நேரடி பாரமரிப்பில்லாமல் வளர்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.அவர்களது பெற்றோர் சீனாவுக்குள்ளேயே இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தொழில் செய்கிறார்கள்.
சீனாவின் பொருளாதாரம் அதீத வளர்ச்சியை கண்ட காலகட்டத்தில் அந்த நாட்டின் வறிய கிராமப்புறங்களில் இருந்து 20 கோடி தொழிலாளர்கள், வேலைகளைத் தேடி நகரங்களுக்குச் சென்றார்கள்.அவர்களில் பலர் தமது குழந்தைகளை தமது சொந்த ஊர்களில் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ விட்டுச் செல்கிறார்கள்.வருடத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டு தடவைகள் மாத்திரம் அவர்கள் வந்து தமது குழந்தைகளைப் பார்த்துச் செல்வார்கள்.இவ்வாறு பெற்றோரால் தமது ஊர்களிலேயே விட்டுச் செல்லப்படும் மொத்தக் குழந்தைகளில், 5 வயதுக்குட்பட்டவர்கள் 40 வீதமாகும் என்று அனைத்துச் சீன பெண்கள் சம்மேளனம் கூறியுள்ளது.
தெற்கு மாகாணங்களில் இது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாகக் கூறும் பெண்கள் அமைப்பு, பராமரிப்பு, போஷாக்கு மற்றும் குடும்ப அன்பு போன்றவை போதியளவு கிடைக்காததால், குழந்தைகளுக்கு மன நீதியான பாதிப்பு ஏற்படுவதாக கூறுகின்றது.
இந்த விடயத்தில் சீன ஊடகங்கள் வேறு சில புள்ளிவிபரங்களைத் தருகின்றன. இதேபோன்று கடந்த 2007 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வுக்கு பிறகு பெற்றோர் இல்லாமல் ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளதாகத் தென்படுகின்றது.குடிபெயர் தொழிலாளர்களின் பெரும்பாலான குழந்தைகள் நகரங்களில் உள்ள அரச நிதியுடனான பள்ளிக்கூடங்களுக்கு செல்வதை சீன குடியியல் பதிவு முறைமை தடுக்கிறது.
ஆகவே அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தம்மோடு அழைத்துச் செல்வதற்கு எந்த வகையான ஊக்க உதவியும் கிடையாது.அத்துடன் இந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூட வயதை அடையும் போது இந்தப் பிரச்சினைகள் குறைவதற்கான எந்த விதமான சமிக்ஞையும் தென்படவில்லை.
தாய்லாந்து நாட்டின் அரசிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
தாய்லாந்து நாட்டின் அரசிக்கு கைபேசி மூலமாக குறுஞ்செய்தி அனுப்பிய நபருக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கின் புறநகர் பகுதியில் வசிப்பவர் அம்போன் தங்னோபக்கு(61). இவர் அந்நாட்டின் அரசிக்கு கைபேசி மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
அரசியை அவமதித்து விட்டதாகக் கூறி இவர் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும் இவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இவர் 20 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளார். தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்திற்கு எதிரான செயல்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனைக்கு சர்வதேச பொதுமன்னிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கம்போடியா நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்த விசாரணை ஆரம்பம்.
கம்போடியா நாட்டை ஆட்சி செய்த கெமர்ரூச் ஆட்சியில் நடந்த இனப்படுகொலைகள் குறித்த விசாரணை நேற்று(23.11.2011) ஆரம்பமானது.கம்போடியாவை ஆண்ட போல் பாட், கடந்த 1975ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை வியட்நாம் வம்சாவளி மக்கள் பலரை கொன்று குவித்தார்.இவரது ஆட்சியில் 17 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஐ.நா.வின் தலையீட்டின் பேரில் இந்த படுகொலை குறித்த விசாரணை நேற்று(23.11.2011) ஆரம்பமானது.
இந்த படுகொலையை நடத்திய போல் பாட் கடந்த 1998ல் காலமானார். இவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் நுவான்சியா, சமூக விவகாரத்துறை முன்னாள் அமைச்சர் லெங் திரித் உள்ளிட்ட மூன்று பேர் மீது தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.இவர்கள் மூன்று பேரும் 80 வயதை தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு பயணமாகும் ஏமன் ஜனாதிபதி.
ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு அவர் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தையடுத்து 33 ஆண்டுகளாக ஜனாதிபதியாக பதவி வகித்து அலி அப்துல்லா சலே தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் மருத்துவ சிகிச்சை‌ மேற்கொள்ள நியூயோர்க் நகருக்கு வர இருப்பதாகவும், பதவி விலகுவது குறித்த ஒப்பந்தத்தில் கை‌யெழுத்து இட்டது குறித்து பொதுச்செயலாளர் பான் கி மூனிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.ஏமன் நாட்டில் அமைதி ஏற்படுவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள இந்த முடிவை பான் கி மூன் வரவேற்றுள்ளார். மேலும் ஏமன் நாட்டின் நிலவரம் குறித்து அரபு லீக் நாடுகள் எடுத்துள்ள முடிவு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என பான் கி மூன் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வெற்றி.
ஐக்கிய நாடுகள் சபையில் கூட்டு ஆய்வு குழுவுக்கான(J.I.U) தேர்தலில் சீனாவை இந்தியா தோற்கடித்தது.ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் பல்வேறு அமைப்புகளில் சக்தி வாய்ந்த அமைப்பாக J.I.U திகழ்கிறது. J.I.U என்பது உறுப்பு நாடுகளின் நிதி விவகாரங்கள் தொடர்பான ஆய்வுக் குழுவாகும்.
11 பேர்களை கொண்ட இந்த குழுவுக்கான தேர்தலில் ஆசிய பிராந்தியம் சார்பாக இந்தியாவும், சீனாவும் முதல் முறையாக நேரடியாக மோதின. இந்தியா சார்பில் கோபிநாதனும், சீனா சார்பில் இந்தியாவுக்கான சீன தூதர் ஜாங்யனும் போட்டியிட்டனர்.உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீனாவுடன், இந்தியா நேரடியாக மோதியதால் இத்தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
உச்சக்கட்ட பரபரப்புக்கு இடையே நடந்த தேர்தலில் 183 வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது. சீனா 77 வாக்குகள் பெற்றது. 5 ஆண்டு பதவிக்காலம் உடைய இந்த பதவியை 2013 ஜனவரியில் கோபிநாத் ஏற்பார். தற்போது ஆசியா சார்பில் இதில் அங்கம் வகிக்கும் சீனாவின் பதவிக்காலம் 2012 டிசம்பர் 31ல் முடிவுக்கு வருகிறது.கடந்த 35 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா இந்த குழுவுக்கு தெரிவாகியுள்ளது. முன்னதாக 1968-77ல் இதன் உறுப்பினராக இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் J.I.U.வில் இந்தியா இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
லிபியாவின் புதிய அமைச்சர்கள் நியமனம்.
லிபியாவின் இடைக்காலப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள அப்துல் ரகீம் புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.இந்த அமைச்சரவையானது இனி தேர்தலை ஜனநாயக முறையில் நடத்தி புதிய அமைச்சரவையை உருவாக்க உதவும்.
ஒசாமா அல்-ஜுவாலி பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கிறார். இவர் சிந்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் இராணுவ அதிகாரியாக இருந்தவர். இவருடைய வீரர்கள் அண்மையில் கடாபியின் மகன் சயீப் அல்- இஸ்லாமைக் கைது செய்தனர்.உள்விவகாரத்துறை அமைச்சராக ஃபௌசி அப்தெலால் பொறுப்பேற்கிறார். இவர் மிஸ்ராதா போராளிகளின் தலைவர்களின் ஒருவராக இருந்தவர். கடாபியை இவரது வீரர்களே பிடித்தனர்.
இத்தாலியின் எண்ணெய்த் தொழிற்சாலையின் முன்னாள் நிர்வாகியாய் இருந்த அப்துல் ரகீம் பின் யஸ்ஸா எண்ணெய் மற்றும் வாயு தொழில்துறையின் அமைச்சர் ஆகிறார்.லிபியாவின் ஐ.நா. துணைத் தூதரான இப்ராஹீம் தபர்ஷி, வெளிவிவகார அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் பெயர் இறுதிப் பட்டியலில் காணப்படவில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF