Thursday, November 24, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை ரூபாவின் பெறுமதியை குறைத்தமை சிறந்த நடவடிக்கை!- சர்வதேச நாணய நிதியம்.
இலங்கை ரூபாவின் பெறுமதியை குறைத்தமை சிறந்த நடவடிக்கை என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இது நாட்டின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு நன்மை பயக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையினால் ஒதிக்கீடுகள் பாதுகாக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கோஷி மாதாய் குறிப்பிட்டுள்ளார்.2012 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியை மூன்று வீதத்தால் குறைக்கும் யோசனையை முன்வைத்தார்.
இராணுவத்திற்கு வழங்கும் சலுகைகளை காவல்துறையினருக்கு வழங்க முடியாது– தினேஸ்.
இராணுவத்தினருக்கு வழங்கும் சகல சலுகைகளையும் காவல்துறையினருக்கு வழங்க முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.போரில் ஈடுபட்டு ஊனமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் காவல்துறையினருக்கு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.இராணுவம் விசேட சட்டத்தின் கீழ் நிர்வாகம் செய்யப்படுவதாகவும், காவல்துறையினர் சிவில் சட்டங்களின் நீழ் நிர்வாகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், போரில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றுக் கொள்ளவும், இலகுப் பணிகளில் ஈடுபடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஊனமடைந்த இராணுவப் படைவீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், காவல்துறையினருக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
தேசிய கீதத்தை தமிழிலும் பாட முடியும்-வாசுதேவ நாணயக்கார.
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழியில் பாட முடியும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.தேசிய கீதத்தை தமிழ், சிங்கள மொழிகளில் பாடுவது என்ற நியதியில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனவும் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடுவதற்கு சில அதிகாரிகள் முயற்சித்த போதிலும் அரசாங்கம் இதற்கு அனுமதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு மொழிகளுமே தேசிய கீதத்தை பாட முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த வருடத்தில் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் போராட்டத்திற்கு ஜே.வி.பி ஆதரவளிக்கக் கூடிய சாத்தியம்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கு ஜே.பி.வி ஆதரவளிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 29ம் திகதி பாரியளவில் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.போராட்டத்தில் ஜே.வி.பியை பங்கேற்க வைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், ஜே.வி.பி. கிளர்ச்சிக் குழுவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்புகளைப் பேணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்கு சோமவன்ச தரப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 
யசூசி அகாசி இலங்கை வருகை.
ஜப்பானின், இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் யசூசி அக்காசி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில் கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் 27ஆம் திகதி அதிகேவ நெடுஞ்சாலை திறக்கவுள்ளதாகவும் குறித்த வீதி ஆரம்ப நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்களில் அக்காசி முக்கிய பங்காற்றினார் அத்துடன் யுத்தத்தின் பின்னரும் அக்காசி பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை - அனோமா.
முன்னாள் இராணுவத் தளபதி வரத் பொன்சேகாவை மருத்து பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைக்கு இன்று அழைத்துச் செல்ல வேண்டியிருந்த போதிலும், இதுவரை அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக குறித்த வைத்தியசாலை வளாகத்தில் இருந்து அனோமா பொன்சேகா ஊடகங்களுக்கு மேற்கண்டவாறான கருத்தைத் தெரிவித்தார்.
தமது கணவரை இன்று வைத்தியசாலைக்கு பரிசோதனை செய்யவேண்டிய நாள் ஆகையால் தான் ஏற்கனவே குறித்த வைத்தியசாலைக்குச் சென்று காத்திருந்த போதிலும் இதுவரை அவரை வைத்தியசாலைக்கு சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்ற சங்கத்தில் ஐ.தே.க முறைப்பாடு.
இலங்கை நாடாளுமன்றில் ஆளும் கட்சியினர் நடத்திய தாக்குதல் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
நாடாளுமன்றிற்குள் கட்சி உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட மாபெரும் சவாலாகவே இதனை நோக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றிற்கு எடுத்துச் சென்ற ஆவணங்களை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெரிவி்த்துள்ளார்.
இலங்கையில் நீதித்துறை அரசியல் ஆயுதமாக பயன்படுகின்றது.
இலங்கை அரசாங்கம் நீதித்துறையை தமது அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று பொது அமைப்புகளும் சமய தலைவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமையை கண்டித்தே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கொழும்பில் கூடிய சமய தலைவர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் ஆகியோர் சரத் பொன்சேகா மீதான தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டதுடன்  இலங்கையின் நீதித்துறை மீளமைக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் நீதித்துறையில் தற்போது தெளிவான தன்மை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் சரத் பொன்சேகாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டமையை அடுத்து பொதுமக்கள் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை நீதித்துறையின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறதாகவம் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசசார்பற்ற நிறுவனங்கள் போரை விற்பனை செய்து டொலரை சம்பாதித்தனர்! -திஸாநாயக்கா குற்றச்சாட்டு.
இலங்கையில் இனவாதத்தை தூண்டுவதற்கும் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தவும் சில மேற்குலக நாடுகள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த 30 ஆண்டுகளாக போரை விற்பனை செய்து டொலர்களை சம்பாதித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் அந்த முயற்சியை இன்னமும் கைவிடவில்லை. மீண்டும் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்தை தூண்ட சில மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையையும் இந்தியாவையும் துண்டு துண்டாக பிளவடையச் செய்ய வேண்டுமென சில சக்திகள் முயற்சிக்கின்றதாகவும் 5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்தனர் என குறிப்பிட்ட அவர், இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்களே எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பௌத்த மதம் பரவிய போது வடக்கிலும் பௌத்தம் பரவியதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் நியமிப்பு.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதராக முன்னாள் செய்தி அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்பு தூதராக இருந்த ஹூசைன் ஹக்கானி பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று கூறி அமெரிக்க அரசிடம் உதவி கேட்டதாக சர்ச்சை எழுந்ததால் தூதர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து அந்த இடத்துக்கு ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பத்திரிகையாளரான ரஹ்மான், ஜர்தாரி அரசில் செய்தி அமைச்சராக இருந்தவர்.பர்வேஸ் முஷாரப் ஆட்சிக் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்த ஜர்தாரி அரசு மறுத்ததால் ரஹ்மான் அமைச்சர் பதவியில் இருந்து 2009ம் ஆண்டு ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
கிப்தில் நீடிக்கும் கலவரம்: இடைக்கால பிரதமர் பதவி ராஜினாமா.
எகிப்தின் இடைக்கால பிரதமர் எசம் ஷரப் மற்றும் அவரது அமைச்சரவையினர் ராஜினாமா செய்துள்ளனர்.எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக் மக்களால் விரட்டப்பட்ட பின் தற்காலிக ஆட்சிப் பொறுப்பேற்ற ராணுவ உயர்மட்ட கவுன்சில் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதாக வாக்களித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் உட்பட கவுன்சில் கூறிய எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தாரிர் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது.போராட்டக்காரர்களை வெளியேற்ற பொலிசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். வன்முறை சம்பவத்தால் தாரிர் சதுக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன.இதேபோன்ற ஆர்ப்பாட்டம் அலெக்சாண்டிரியா மற்றும் சூயஸ் நகரங்களிலும் நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர், 1,700 பேர் காயமடைந்தனர்.
எகிப்தில் பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு இறுதியிலோ, 2013ம் ஆண்டிலோ நடத்த ராணுவ உயர்மட்ட கவுன்சில் திட்டமிட்டது. ஆனால் தற்போதைய போராட்டங்கள் காரணமாக எதிர்வரும் 28ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என ராணுவ உயர்மட்ட கவுன்சில் உறுதியளித்துள்ளது.இது குறித்து ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன் குறிப்பிடுகையில், எகிப்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது வருத்தமளிக்கிறது. எகிப்தின் இடைக்கால ஆட்சியாளர்கள் மனித உரிமைகளை பாதுகாத்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
கெய்ரோவின் தாரிர் சதுக்கத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர். இடைக்கால பிரதமர் எசம் ஷரப் மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும். வன்முறையில் 26 பேர் கொல்லப்பட்டது குறித்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால பிரதமர் எசம் ஷரப் மற்றும் அவரது அமைச்சரவையினர் ராணுவ உயர் மட்ட கவுன்சிலிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இருப்பினும் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் எகிப்தின் பல நகரங்களிலும் தீவிரமடைந்து வருகிறது.
ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிப்பு.
ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஒடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றொரு பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.இதற்கு பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஈரான் அணு ஆயுதங்களை தயார் செய்வதாக சர்வதேச அணுசக்தி அமைப்பு சந்தேகிக்கிறது.
இதன் காரணமாக அந்நாட்டின் மீது பல நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில் மேலும் அந்நாட்டை தனிமைப்படுத்தும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகள் மற்றொரு பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளன.ஈரான் நாட்டு வங்கிகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது, ஈரான் நாட்டின் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துக்கு அளித்து வந்த தொழில் நுட்ப உதவிகள், உபகரணங்கள் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொருளாதார ரீதியாக ஈரான் தனிமைப்படுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கிளின்டன் தெரிவித்துள்ளார். இந்த புதிய பொருளாதார தடைக்கான உத்தரவில் அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்கு இது முரண்பாடாக உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நினைத்திருந்தால் மும்மை தாக்குதலை தவிர்த்திருக்கலாம்.
அமெரிக்கா நினைத்திருந்தால் இந்தியாவின் மும்பையில் நடந்த தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் குறித்து பிரான்ஸ் புலனாய்வு அதிகாரி ஒருவர் கொடுத்த ரகசிய தகவலை அமெரிக்காவில் அப்போது ஆட்சியிலிருந்த புஷ் அரசு பொருட்படுத்தவில்லை.
அதை மதித்து செயல்பட்டிருந்தால் மும்பை தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் பிபிஎஸ் பிரன்ட்லைன் மற்றும் புரோபப்ளிக்கா இணைந்து புலனாய்வு செய்து வெளியிட்டுள்ள அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிறந்த புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர் ஜீன் லூயிஸ் புருக்கையர். இவர் 30 ஆண்டுகளாக தீவிரவாதிகள் பற்றிய புலன் விசாரணையில் ஈடுபட்டவர்.கடந்த 2003ம் ஆண்டில் பிரான்சை சேர்ந்த லஷ்கர் தீவிரவாதி வில்லி பிரிகிட்டே என்பவனை ஜீன் லூயிஸ் கைது செய்தார். அவனுக்கு 2003ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் குண்டு வைத்தது உள்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
அவனது கையாளாக செயல்பட்ட இன்னொரு லஷ்கர் தீவிரவாதி சஜித் மிர் என்பவனும் அப்போது பிடிபட்டான். அவனுக்கும், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ அமைப்புக்கும் தொடர்பு இருந்ததும், அவனது செயல்களுக்கு ஐ.எஸ்.ஐ ரகசியமாக உதவியதும் ஜீன் லூயிஸ் விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் 2007ம் ஆண்டில் பாரீஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சஜித் மிர்ருக்கு 10 ஆண்டுகளும், பிரிகிட்டேவுக்கு 9 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கிடையே ஜீன் லூயிஸ் அப்போது அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளை சந்தித்து பேசினார். சஜித் மிர்ருக்கு ஐ.எஸ்.ஐ தொடர்பு உள்ளதையும், பாகிஸ்தானின் இரட்டை வேடம் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் அப்போது அமெரிக்காவில் ஆட்சியிலிருந்த புஷ் அரசு அதை பொருட்படுத்தவில்லை. அந்த சஜித் மிர் என்பவன் தான் மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவன் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே அமெரிக்காவின் புஷ் அரசு அப்போதே உஷார் அடைந்து பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் நடவடிக்கைகளை கண்காணித்திருந்தால் மும்பை தாக்குதலை தடுத்திருக்கலாம். இவ்வாறு அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது சோயூஸ் விண்கலம்.
விண்வெளியில் ஐந்து மாத காலம் தங்கியிருந்த ரஷ்ய, அமெரிக்க, ஜப்பானிய விண்வெளி வீரர்கள் சோயூஸ் விண்கலம் மூலம் நேற்று பூமிக்கு திரும்பினர்.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்புடன் விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பல மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர்.
இவர்களுக்கு தேவையான தண்ணீர், பிராணவாயு, உணவு மற்றும் அத்யாவசிய பொருட்களை அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் சுமந்து செல்கின்றன.விண்வெளியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த அமெரிக்காவின் மைக் போசம், ஜப்பானின் சதோஷி புருகவா, ரஷ்யாவின் செர்ஜி வோல்கோவ் ஆகியோர் சோயூஸ் விண்கலத்தின் மூலம் நேற்று பூமிக்கு திரும்பினர்.
கஜகஸ்தானில் உள்ள அர்கல்யங்க் என்ற இடத்தில் தரையிறங்கிய சோயூஸ் விண்கலத்திலிருந்து மூன்று நாட்டு வீரர்களும் வெளியே வந்தனர்.கஜகஸ்தானில் அவர்கள் தரையிறங்கிய இடத்தில் மைனஸ் 15 டிகிரி குளிர் காணப்பட்டது. நல்ல உடல் நிலையில் இருந்த அவர்கள் சம்பிரதாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு போராளிகள் வெளியேற உத்தரவு.
கனடாவில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புப் போராட்டங்களை இளைஞர்கள் நடத்துகின்றனர். எனவே இவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.அவர்கள் தங்கள் கூடாரங்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வான்கூவரில் கலைக் கூடத்திற்கு வெளியே கூடாரம் அமைத்தவர்களை திங்கட்கிழமையே காலி செய்யுமாறு நீதிபதி ஆனி மெக்கன்சி தீர்ப்பளித்தார். அரசு பொது இடங்களை இளைஞர்கள் ஆக்கிரமிப்பதை எதிர்த்து நீதிமன்றத் தடை உத்தரைவைப் பெற முயல்கின்றது. ஆனால் நீதிபதி இதற்கு மறுத்துவிட்டார்.
கியூபெக் நகரத்தில் கூடாரமிட்டவர்களை அதிகாலையில் சென்ற காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் வெளியேற்றினர்.விக்டோரியாவில் நூற்றாண்டுச் சதுக்கத்தில் கூடாரமிட்ட இளைஞர்களை காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் வந்து அப்புறப்படுத்தினர். அங்கிருந்தவர்களில் பன்னிரெண்டு பேர் மட்டும் தத்தம் கூடாரங்களில் தங்கியிருந்தனர். பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். ஒரு பெண் மட்டும் தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டார்.
மொன்றியலில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் தாங்கள் விக்டோரியா சதுக்கத்திலேயே இருப்போம் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர். ஆனால் அவர்களை மாநகராட்சி மேயர் ஜெரால்டு டிரெம்லே வெளியேறச் சொல்லிவிட்டார்.டொரொண்டோவில் போராட்டம் நீடிக்கின்றது. இவர்கள் தூய ஜேம்ஸ் தேவாலயத்துக்குச் சொந்தமான தூய ஜேம்ஸ் பூங்காவில் கூடாரமிட்டுத் தங்கியுள்ளனர். இதுவரை இவர்களுக்கு ஆதரவு வழங்கிய மறுமலர்ச்சித் திருச்சபையினர் இப்போது வெளியேறச் சொல்லிவிட்டனர். மாநகர மேயர் ராப் ஃபோர்டு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விரைவில் வெளியேறிவிடுமாறு அமைதியாகக் கூறியுள்ளார்.
டொரொண்டோ ஆக்கிரமிப்பாளரில் ஒருவரான நெல்லி மிக்கெலெஸ் இப் போராட்டத்தை பெரியதோர் இயக்கத்தின் தொடக்கமாகக் கருதுகிறார். அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இவ் இளைஞர்களை வலிந்து வெளியேற்றுவது மிகவும் கடினம் என்று கூறி போராளிகளுக்கு மிக்கெலெஸ் ஊக்கமளித்து வருகிறார்.கனடா முழுக்க ஆக்கிரமிப்பாளர் போராட்டம் எந்த இடத்திலும் கூடாரம் அமைக்காமல், நள்ளிரவுக்கு மேல் தங்காமல் அதிகாலை 5 மணி முதல் தங்கள் போராட்டத்தை நடத்தலாம் என்று அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
நவீன நாஜிப் படையால் ஜேர்மனிக்கு அவமானம்: நாடாளுமன்றத்தினர் கருத்து.
நவீன நாஜிப் படையினர் 13 ஆண்டுகளாக ஜேர்மனியில் இருந்து பத்து பேரைக் கொன்றிருப்பது நமக்கு பெருத்த அவமானம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 14 வங்கிக் கொள்ளையும், இரண்டு ஆணி குண்டு தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். இவர்கள் கிழக்கு ஜேர்மனியில் உள்ள தங்கள் சொந்த ஊரான ஜீனாவில் வெடிகுண்டுத் தொழிற்சாலை நடத்தி வந்தனர்.1998ம் ஆண்டு காவல்துறையினர் இதனைக் கண்டுபிடித்தனர். நவீன நாஜிகள் மூவருக்கும் சுமார் இருபது பேர் உதவியிருக்கலாம் என்று காவல் துறையினர் கருதுகின்றனர்.
தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய ஜனநாயக் கட்சியை(NPD) தடை செய்யலாமா என்று ஆலோசித்து வருவதாக ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் ஹேன்ஸ் – பீட்டர் பேட்ரிக் தெரிவித்தார். 300 பேர் நவீன நாஜிப் படையைத் துப்பு துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.நவீன நாஜிப் படையினருக்கு எதிராக தீர்மானம் ஒன்றும் ஜேர்மனி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தன்னைப் பற்றி தவறாக எழுதிய பத்திரிக்கைகள் மீது வழக்கு: ஸ்டிராஸ்கான் அறிவிப்பு.
பாலியல் குற்றத்திற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சர்வதேச நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் தன்னைப் பற்றி இழிவாக எழுதிய பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இவர் மீது அமெரிக்கா தொடர்ந்த வழக்கில் நம்பகத் தன்மை இல்லாத காரணத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் இவர் தன்னைப் பற்றித் தவறாக எழுதிய லெ ஃபிகாரோ என்ற பத்திரிகை மீதும், பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசியின் மூத்த ஆலோசகரான ஷென்றி குவாய்னோ மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஸ்டிராஸ்கான் எதிர்வரும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு அவரது திட்டத்தைச் சிதைத்துவிட்டது.அமெரிக்கா இவர்மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சிறையிலிருந்து விடுதலையாகி பிரான்ஸ் திரும்பியவுடன் தன் மனைவியும் முன்னாள் தொலைக்காட்சி நடிகையுமான ஆனி சின்கிளாருடன் இணைந்து சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
முழு வீச்சில் உள்நாட்டு போர் உருவாகும்: கமரூன் எச்சரிக்கை.
கடந்த எட்டு மாதங்களாக சிரியாவில் நடந்து வரும் உள் நாட்டு போராட்டங்கள் போரை உருவாக்கும் நிலையில் உள்ளன என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.கமரூன் துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போருக்கான சாத்தியக்கூறுகள் இருப்பது பற்றி தானும் அப்துல்லாவும் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிரியாவின் இராணுவம் அந்நாட்டு விடுதலைப் போராளிகளை எதிர்த்து கடும் தாக்குதல் நடத்திவருகிறது. இதுவரை சுமார் 3500 பேரை இராணுவம் கொன்றுவிட்டதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
சிரியா ஜனாதிபதி பஷார்-அல் அசாத்தின் இராணுவப் பிடியிலிருந்து சிரியாவை மீட்க அந்த இராணுவத்துடன் போர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சிரியாவுக்கு எதிராக துருக்கி, அரபு நாடுகளின் கூட்டமைப்புடன், பிரிட்டனும் சேர்ந்து ஓர் அணியாகத் திரண்டதில் கமரூன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக், சிரிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிரியாவின் இராணுவ எதிர்ப்புக் குழுக்கள் அனைத்தும் ஒன்று திரண்டு வலிமை பெற்றுத் திகழ வேண்டும் என்று கூறினார். முதன்முறையாக விடுதலைப் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகள் கூட்டம் இலண்டனில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மனித உரிமைக்கான சிரியாவின் கூர்நோக்கு அமைப்பு ஹோம்ஸில் ஐந்து சிறுவர்கள் உட்பட 13 பேரை சிரியா இராணுவம் சுட்டுக் கொன்றதாகத் தகவல் தெரிவிக்கின்றது.இராணுவத்தின் அட்டூழியங்கள் அதிகமாகி வரும் நிலையில் சிரியாவை இராணுவத்திடமிருந்து மீட்க விடுதலைப் போர் உருவாவது உறுதி.
சோமாலியாவில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி.
சோமாலியாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் குழந்தைகள் உள்பட 11 பேர் உடல் சிதறி பலியானார்கள்.தலைநகர் மொகாடிஷுவின் தெற்கு பகுதியில் உள்ள வடாஜிரில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜேகா சாலையில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் குழந்தைகள் உள்பட 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.இந்த சாலை அரசு அதிகாரிகளால் வழக்கமாக பயன்படுத்தப்படும் சாலையாகும். எனவே அவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.
குண்டு வெடிப்பை நேரில் பார்த்த சாதிக் முகமது என்பவர் கூறுகையில், காதை பிளக்கும் சத்தத்துடன் குண்டு வெடித்தது. எங்கு பார்த்தாலும் ரத்தமும் சதையுமாக கிடந்தது. குழந்தைகளும் இறந்து கிடந்தனர் என்றார்.குண்டு வெடிப்பு குறித்து விசாரித்து வருகிறோம். யாரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்று பொலிஸ் அதிகாரி அபித் உமர் கூறினார்.
அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற வாலிபர் கைது.
பாதாள சாக்கடை குழாய் வழியாக அமெரிக்காவில் ஊடுருவ முயன்ற மெக்சிகோ வாலிபர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டு கைது செய்தனர்.வட அமெரிக்க நாடான மெக்சிகோவை சேர்ந்த வாலிபர்(25) ஒருவர் அமெரிக்காவில் ஊடுருவும் திட்டத்துடன் சான்டியாகோ பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தார்.
டிஜுவானா ஆறு பசிபிக் கடலில் கலக்கும் முகத்துவார பகுதியின் வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து விடலாம் என முடிவு செய்தார். அங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் நுழைந்து, அதன் வழியாக சென்று நாட்டுக்குள் சென்று விடலாம் என்பது அவரது திட்டம்.சுமார் 3 அடி அகலம் கொண்ட குழாயில் புகுந்தார். இந்நிலையில் கலிபோர்னியாவில் அதிக மழை பெய்ததால் சாக்கடையில் நீர் வரத்து அதிகரித்தது. உள்ளே வாலிபர் சிக்கிக் கொண்டார்.
இதற்கிடையில் மழை மீட்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் எதேச்சையாக பார்த்து அவரை பத்திரமாக மீட்டனர்.பாதாள சாக்கடைக்குள் வெள்ளத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள அவர் மெக்சிகோவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று அதிகாரிகள் கூறினர்.
இந்திய சட்டங்கள் அமெரிக்க நிறுவனங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்: அமெரிக்கா.
ஆக்க பூர்வ அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இந்திய சட்டங்கள் தங்கள் நாட்டின் நிறுவனங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.ஆக்க பூர்வ அணுசக்தி துறையில் தங்கள் நாட்டின் நிறுவனங்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயல்பட இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலன் கூறினார்.
தீர்வு காணப்பட விஷயங்களில் இதுவும் ஒன்று என்றும் இதனை இறுதி செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இது போன்ற விஷயங்களுக்கு தீர்வுக் காண காலதாமதம் ஆகும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
முதல் முறையாக சர்வதேச இஸ்லாமிய வங்கிகளுக்கு வட்டி விகிதம் நிர்ணயிப்பு.
சர்வதேச இஸ்லாமிய வங்கிகளுக்கு வட்டி விகிதம் முதல் முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சராசரி லாபம் ஈட்டும் வகையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச இஸ்லாமிய வங்கியின் 18-வது ஆண்டு மாநாடு பஹ்ரைனில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 16 இஸ்லாமிய வங்கிகள் பங்கேற்றன. வங்கிகளிடையே நிதி உதவி அளித்துக் கொள்வதற்கு வசதியாக வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.
அதிக முதலீட்டு நிதியுடன் செயல்படும் இஸ்லாமிய நிதித்துறை ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சியை எட்டி வருகிறது.வழக்கமான வங்கிகளின் செயல்பாடுகளிலிருந்து முற்றிலுமாக விலகி தனித்துவத்துடன் இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF