இதன் முதற்கட்டமாக புளூமெண்டால் மற்றும் மஹவத்த பிரதேசங்களில் எரிபொருள் குழாய்களுக்கு மேலாக வீடுகளை நிர்மாணித்து வாழும் 150வீடுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படவுள்ளதாகவும் வெளியேற்றப்படுவோருக்கு அருகிலுள்ள மைதானத்தில் தற்காலிகமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
40 வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசங்களில் சட்டவிரோதமாக வாழும் இம்மக்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். அத்தோடு 60 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்துள்ள விநியோகக் குழாய்களுக்குப் பதிலாக புதிய குழாய்களை பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும்
இச்சட்டவிரோத குடியிருப்பாளர்களால் அதற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். அண்மையில் இப்பிரதேசத்திலுள்ள பழுதடைந்த குழாய் ஊடாக எபொருள் கசிவு ஏற்பட்டது. இது மிகவும் ஆபத்தானதாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அன்பளிப்புச் செய்த சிலை மீது மாலைதீவில் தாக்குதல்.
இந்த நினைவுச் சின்னத்தை அண்மையில் மாலைதீவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சார்க் மாநாடு நடைபெற்ற மாலைதீவின் அடு தீவுகளில் அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.
வெளிநாட்டிலிருந்து சிலைகள் தருவிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இலங்கை அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்த குறித்த சிலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கறுப்பு நிறத்திலான எண்ணெய் பூசப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, சிலை மீது தாக்குதல் நடத்தியவர்களை அந்நாட்டு எதிர்க்கட்சி தேசிய வீரர்களாக அறிவித்துள்ளதுடன் முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி முஹமட் கயூம் எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ஈரான் உதவும்! ஈரானிய தூதுவர் ஹசன் பூரை.
சுற்றுலா, விவசாயம், கலாசாரம், பொதுஉறவு போன்ற பல துறைகளில் இலங்கையுடனான தொடர்பினை ஈரானிய அரசாங்கம் அதிகரிக்கும் எனவும் இலங்கையில் நிலையான அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களுக்கிடையிலான சிறந்த புரிந்துணர்வைக் கட்டியெழுப்பவும் ஈரானிய அரசு உதவும் என குறிப்பிட்ட அவர், இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினருக்கும் ஈரானிய தேசிய மொழியான பாரசீகத்தை கற்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வீடமைப்புத்திட்டம், 1000 கிராமங்களுக்கான மின்சார வசதி என பல பாரிய உதவிகளை ஈரானிய அரசாங்கம் இலங்கையில் முன்னர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஈரான் ஆன்மீகத்தலைவரின் செயலக தெற்காசிய பிராந்திய பிரதிநிதியான அயதுல்லா செய்த் சஹ்ருகி உள்ளிட்ட பலரும் கலந்து கொணடனர்.
மரண தண்டனை பெற்றுள்ள ரிசானாவும் பெற்றோரும் உணர்ச்சிபூர்வ சந்திப்பு.
ரிசானா நபீக்கை தண்டனையில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது.
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொள்ளாமல் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதியன்று ரிசானா நபீக்குக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பை வழங்கியதை அடுத்து முதல் தடவையாக அவரை அவரது பெற்றோர் சந்தித்துள்ளனர்.இதன் போது தமது தந்தையான மொஹமட் மற்றும் தாயான ரிபானா ஆகியோரிடம் தம்மை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கோரினார் என்று அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது பிள்ளையை வீட்டுக்கு அழைத்து செல்ல அல்லாஹ் உதவி செய்வார் என்று ரிசானாவின் தந்தையார் கூறியுள்ளதாகவும் அரப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.குழந்தை ஒன்றுக்கு பாலூட்டும் போது அது இறந்ததை அடுத்தே ரிசானா கொலை குற்றம் சுமத்தப்பட்டார்.
இதனையடுத்து இறந்து போன குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே ரிசானாவுக்கு விடுதலை கிடைக்கும் என்பது சவூதி சட்டத்தின் அடிப்படையாகும்.இதேவேளை இன்று சவூதி அரேபியாவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இலங்கையின் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, ரிசானாவினால் கொலையுண்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை சந்தித்து அவர்களின் மன்னிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிப்பார் என்று அரபு நியூஸ் மேலும் தெரிவித்துள்ளது.
சுவீகரிப்புச் சட்டமூலத்துக்கெதிரான மனுக்கள் ரத்து! உயர்நீதிமன்றம் தீர்மானம்!
குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுப்பதற்கான அடிப்படை எதுவும் இல்லை என ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழு தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரதுங்கவின் தலைமையிலான நீதியரசர் குழுவே இந்த தீர்ப்பை அறிவித்தது.நுகேகொடை நாலந்தராம விகாரையின் விகாரதிபதி தீனியாவல பாலித்த தேரர், செவனகல சீனித்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் கரும்பு பயிர் செய்கையாளர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நான் பிரதமரானால் ராணுவம் என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்: இம்ரான் கான்.
நான் பாகிஸ்தானின் பிரதமரானால் ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.இவர் முன்னாள் கிரிக்கட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவரும் ஆவார்.
கிரிக்கட்டில் கொடிகட்டிப் பறந்த பாகிஸ்தான் வீரர் இம்ரான் கான் தற்போது பிரதமர் பதவிக்கு அடிபோடுகிறார்.நான் மட்டும் பாகிஸ்தான் பிரதமரானால் ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் என் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று ராணுவம் என்று பெயரிடப்பட்ட வீடியோ ஒன்றில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.என்னை யாரும், எப்பொழுதுமே கட்டுப்படுத்தியதில்லை என்று அவர் கூறியதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.பிரதமரானால் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஐஎஸ்ஐ அமைப்பை தன் நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ள இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.
பிரிட்டனில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்.
கடந்த ஓக்டோபர் மாதப் புள்ளி விவரப்படி பிரிட்டனில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியது.யூன், யூலை, ஓகஸ்ட் மாதங்களில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 1.14 பில்லியனில் இருந்து 2.57 பில்லியனாக உயர்ந்தது. இந்த உயர்வு 8.1 சதவீதமாகும்.
16 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 991.000 பேரில் 21.3 சதவீதம் பேருக்கு வேலையில்லை. இந்த வேலையில்லாக் கொடுமைக்கு சர்வதேச நிதி நெருக்கடியே காரணம் என்று அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையே வேலை தேடுவோரில் உதவித்தொகை பெறுவோரின் எண்ணிக்கையும் 25000 ஆக உயரும் என்று IHS குளோபல் இன்சைட்டைச் சேர்ந்த ஹோவாட் ஆர்ச்செர் கூறினார்.
தொடர்ந்து எட்டுமாதங்களாக வேலையில்லா இளைஞரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இவர்களுக்கான வேலைகளைத் தேட வேண்டும் என்று CBIயின் ஜான் கிரிட்லேண்ட் கவலை தெரிவித்துள்ளார்.பிரதமர் டேவிட் கமரூன் இளைஞருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது குறித்து விவாதிக்க வியாழனன்று தொழில் துறை தலைவர்களுடன் ஒரு கூட்டம் நடத்துகிறார்.
முதன்முறையாக சோமாலியக் கொள்ளையர் மீதான விசாரணை தொடக்கம்.
முதன்முறையாக சோமாலியக் கொள்ளையர் மீதான வழக்கு விசாரணை பிரான்சில் தற்பொழுது நடைபெறுகிறது.2008ல் சோமாலியக் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளாகத் தங்கியிருந்த பிரெஞ்சு தம்பதியரை அவர்கள் சென்ற படகுடன் ஆறு கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இந்த இளைஞர்கள் இரண்டு பில்லியன் யூரோ கேட்டு மிரட்டினர்.
தகவலறிந்த பிரான்சின் சிறப்புப்படைப் பிரிவு விரைந்து சென்று கடத்தப்பட்ட படகையும் அதில் இருந்த பிரெஞ்சு தம்பதியர் ஜான் ஏவாஸ் டெலனா மற்றும் பெர்னாடெட்டாவையும் மீட்டது.
கடத்தல்காரர்களில் ஆறு பேரைக் கைது செய்து பிரான்ஸ் சிறையில் அடைத்தது. ஒருவர் மட்டும் இரு சாராருக்கும் இடையில் நடந்த மோதலில் பிரான்சு காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கைது செய்த ஆறு பேர் மீதும் கடத்தல் மற்றும் கொள்ளைக் குற்றங்கள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் போது இவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்.
சோமாலியாவின் 3700 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் கொள்ளைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் ஏறத்தாழ பத்துப் பன்னிரெண்டு கப்பல்களை இந்தச் சோமாலியக் கொள்ளையர்கள் பணத்துக்காக கடத்தினர்.கப்பலின் உரிமையாளரோ பயணம் செய்த மக்களின் அரசாங்கமோ பிணையத் தொகையைக் கொடுத்து கப்பலை மீட்பது வழக்கம்.
சிரியாவின் அடக்குமுறைக்கு ஜேர்மன் கடும் கண்டனம்.
சிரியாவில் போராட்டக்காரர்களுக்கு எதிரான கொடுமைகளை இழைக்கும் பாதுகாப்பு படை மீது கட்டுப்பாடுகள் விதிக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருவதாக ஜேர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் கியூடோ வெஸ்டர்வெல்லே தெரிவித்தார்.பிரஸ்ஸல்ஸ் மாநகரில் திங்கட்கிழமை அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கூடுகின்றனர். இக்கூட்டத்தில் போராளிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் அபராதமும் விதிக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.
வெஸ்ட்டர்வெல்லே பிராங்க்பர்ட்டில் தன்னுடைய கட்சிக் கூட்டத்தில் பேசிய போது, சிரியாவின் வன்முறைப் போக்கு குறித்து சர்வதேச சமுதாயம் தன்னுடைய எதிர்ப்பைக் கடுமையாகவும் உறுதியாகவும் பதிவு செய்ய வேண்டும். விடுதலைப் போராளிகளுக்கு எதிரான சிரியாவின் அடக்குமுறையை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம் சிரியா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததன் காரணம், சிரியாவின் பாதுகாப்பு படை நவம்பர் 2 அன்று ஹோம்ஸ் நகின் நடுவில் கிட்டத்தட்ட 125 பேரை சுட்டுக்கொன்றதே ஆகும்.மேலும் அரபு லீகில் இருந்து சிரியா வெளியேற்றப்பட்டதால் வெளிநாட்டுத் தூதரகங்கள், காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இப்போது அரபு லீகின் தலைவர்கள் உடனே ஒரு கூட்டம் நடத்தி நாட்டின் அமைதியின்மை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று அரசு தொலைக்காட்சியில் சிரியா அறிவித்துள்ளது.
அதிபர் அசாத்துக்கு எதிராகக் கோஷம் போட்ட நால்வரை ஹமா நகரத்தில் சிரியாவின் பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. இவ்வாறான வன்முறைத் தாக்குதல் நடைபெறுவதால் துருக்கி அரசு தன்னுடைய அரசு உயர் அதிகாரிகளின் குடும்பங்களை சிரியாவை விட்டு காலி செய்யப் போவதாகத் தெரிவித்தது.டமாஸ்கஸ் நகரத்தில் சவுதி அரேபியத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு துருக்கி அரசு இத்தகவலைத் தெரிவித்தது.
நீர்யானை தாக்கியதில் பண்ணை உரிமையாளர் மரணம்.
தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை சேர்ந்தவர் மரியஸ் எல்ஸ்(41). விலங்குகள் மீது அதிக பிரியம் கொண்டவர்.ஜோகன்னஸ்பர்க் அருகே 400 ஏக்கர் பரப்பில் பண்ணை வைத்திருந்தார். அதில் ஒட்டகசிவிங்கி, காண்டாமிருகம் உள்பட பல காட்டு விலங்குகளை வளர்த்து வந்தார்.அவரது பண்ணையில் ஹம்ப்ரி என்ற நீர்யானை ஒன்றும் வளர்ந்து வந்தது. 5 வயது குட்டியாக இருக்கும் போதே அதை வளர்க்க ஆரம்பித்தார் மரியஸ்.
பொதுவாக எல்லாரும் நாய், பூனை, மாடு, ஆடு ஆகியவற்றைதான் செல்ல பிராணிகளாக வளர்ப்பார்கள். எனக்கு ஹம்ப்ரிதான் செல்லப்பிள்ளை என்று மரியஸ் அடிக்கடி சொல்வார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பண்ணையை ஒட்டியுள்ள ஆற்றில் ஹம்ப்ரி நீர்யானையுடன் மரியஸ் குளித்துக் கொண்டிருந்தார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை.இதையடுத்து பண்ணை முழுவதும் ஊழியர்கள் தேடினர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர் ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது தெரியவந்தது. கடந்த மார்ச்சில் பண்ணைக்கு சென்ற 52 வயது நபர் மற்றும் அவரது 7 வயது பேரனை ஹம்ப்ரி நீர்யானை தாக்கியுள்ளது.பலத்த காயமடைந்த அவர்கள் ஒரு மரத்தில் ஏறியதால் தப்பினர். மரியஸ் சென்று நீர்யானையை அடக்கி அவர்களை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய பிரதமருக்கு சீன நோபல் விருது அறிவிப்பு.
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுக்கு இந்த ஆண்டுக்கான சீன சமாதான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் சீனாவில் “கன்பூசியஸ் சமாதான விருது” கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், சீன விவசாய ஆராய்ச்சியாளர் யுவான் லாங்பிங் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.விருதுக்கு பெயரை தேர்வு செய்ய கல்வியாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் கொண்ட தேர்வு குழுவினர் ஓட்டளித்தனர். அதிகபட்ச ஓட்டுகள் பெற்று ரஷ்ய பிரதமர் புடின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லிபியாவில் நேட்டோ படைகள் குண்டு வீச புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சமாதான விருதுக்கு அவரது பெயர் தேர்வு செய்யப்பட இதுவே முக்கிய காரணம் என்று தேர்வு குழு கூறியுள்ளது. இந்த விருது சீன நோபல் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: வீதிகளில் மக்கள் தஞ்சம்.
இந்தோனேஷியாவின் கிழக்கு மாகாணமான பப்புவாவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.42 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 என பதிவானதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ஆனால் தங்கள் நாட்டு மதிப்பீட்டின்படி 6.2 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக இந்தோனேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்மடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதுமில்லை. நாட்டின் மலைப்பிரதேச நகரான ஓக்சிபிலில் இருந்து 34 கி.மீ தென்மேற்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக இந்தோனேஷிய புவியியல் ஏஜென்சி தெரிவித்துள்ளது.அருகில் இருக்கும் தனாமெரா, மெராக் மற்றும் வாமனா மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
ரசாயன ஆயுதங்களை தயாரித்த கடாபி: கமரூன் குற்றச்சாட்டு.
கடாபி ரசாயன ஆயுதங்களை தயாரித்தார் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் குற்றம் சாட்டியுள்ளார்.லிபியா முன்னாள் அதிபர் கடாபி புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அவர் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தற்போது அவர் லிபியாவில் மக்களை பெருமளவில் அழிக்கவல்ல ரசாயன ஆயுதங்களை தயாரித்தார் என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமருன் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் அவற்றை உலக நாடுகளின் பார்வையில் இருந்து மறைத்து வைத்து இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரசாயன ஆயுதங்கள் அழிக்கப்படும். அதற்கான உதவியில் இங்கிலாந்து நிபுணர்கள் ஈடுபடுவார்கள்.மேலும் லிபியாவில் ஜனநாயகம் மேம்பட இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் உதவி புரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
காங்கோ நாட்டில் எரிமலை வெடித்து சிதறியது.
காங்கோ நாட்டில் வெடித்து சிதறும் எரிமலையானது தீப்பிழம்புகளை வெளியேற்றி வருகின்றது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டில் நியா முலாஜிரா என்ற இடத்தில் எரிமலை உள்ளது. அந்த எரிமலை கடந்த 6ந் திகதி வெடித்தது.
அதில் இருந்து கரும்புகையுடன் எரிமலை குழம்பு வெளியேறி ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அதை நேரில் பார்க்க மிகவும் ஆசைப்பட்டனர். தொடக்கத்தில் அதற்கு அனுமதி மறுத்த காங்கோ நாட்டு நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
அதற்காக அதன் அருகேயுள்ள விருங்கா பூங்காவில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்க நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வாடகை கட்டணம் வசூக்கலிப்படுகிறது.இரவில் சுற்றுலா பயணிகள் சுமார் 1 கி.மீட்டர் தூரம் பயணத்துக்கு பின் நியாமுலாஜிரா எரிமலை அருகே அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு சுமார் 1000 அடி தூரத்துக்கு அப்பால் அவர்களை நிற்க வைத்து எரிமலை வெடித்து சிதறுவதை பார்க்க வைக்கின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் அருகில் செல்லாத வகையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று எரிமலை வெடித்து சிதறும் அழகை கண்டு ரசிக்கின்றனர்.இதற்கு முன்பு வெடித்து சிதறிய ஹாவாய் கிளாவுயா எரிமலையை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அந்த எரிமலை 65 அடி உயரத்துக்கு நெருப்பு குழம்பை கக்கியது.
பாகிஸ்தானில் மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி அளித்த விருந்தை ராணுவ தலைமைத் தளபதி கயானி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.இதனால் அந்த நாட்டில் மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணமாக வந்த துருக்கி அதிபர் குர்பன்குலி பெர்டிமுக்கமேடோவுக்கு அதிபர் ஜர்தாரி இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை விருந்து அளித்தார்.
இதில் பங்கேற்க ராணுவ தலைமைத் தளபதி கயானி உள்பட முப்படைத் தளபதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் யாரும் விருந்தில் பங்கேற்கவில்லை.அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவுவதையே இந்தப் புறக்கணிப்புச் சம்பவம் உணர்த்துகிறது என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ராணுவ பணியாளர் குழுத் தலைவர் ஜெனரல் காலித் ஷமீம், விமானப் படைத் தளபதி ராவ் ஓமர் சுலைமான் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதால் அவர்கள் இருவரும் விருந்தில் பங்கேற்கவில்லை என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ராணுவத் தலைமைத் தளபதி கயானி, செவ்வாய்க்கிழமை ராவல்பிண்டியில் தான் இருந்துள்ளார். இருப்பினும் அவர் விருந்தைப் புறக்கணித்துள்ளார். அழைப்பிதழ் அனுப்பப்பட்ட போது கயானி வெளிநாட்டில் இருந்ததால் அவருக்கு முறையான தகவல் கிடைக்கவில்லை என்று ராணுவத் தரப்பில் ஏனோதானோ காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடற்படைத் தளபதி ஆசிப் சாண்டிலா லாகூரில் இருந்தபோதும் விருந்தில் பங்கேற்கவில்லை. இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, மற்ற தளபதிகள் பங்கேற்காமல் அவர் மட்டும் எப்படி விருந்தில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தன.
இதைவிட மேலாக பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அமகது முக்தாரும் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் விருந்தைப் புறக்கணித்தார் என்பதற்கு அவரது வட்டாரத்தில் யாரும் பதில் அளிக்கவில்லை.இதனிடையே முப்படைத் தளபதிகள் விருந்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து விசாரணை நடத்த அதிபர் ஜர்தாரி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராணுவப் புரட்சி? 1999 தொடக்கத்தில் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் சென்றபோது அவரை வரவேற்க ராணுவத் தளபதிகள் யாரும் வரவில்லை. அதிபர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டும் வாஜ்பாயின் நிகழ்ச்சிகளை ராணுவத் தளபதிகள் திட்டமிட்டுப் புறக்கணித்தனர்.
அதன் பின்னர் அதே ஆண்டு அக்டோபரில் அதிபர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்திவிட்டு அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி முஷாரப் ஆட்சியைப் பிடித்தார்.ராணுவப் புரட்சியின் பிறப்பிடமாக கருதப்படும் பாகிஸ்தானில் இப்போதும் அதேபோன்ற சூழ்நிலை உருவாகியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் 90 நாட்களில் பதவி விலகுவேன்: ஏமன் அதிபர் உறுதி.
வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சிலின் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் வகையில் இன்னும் 90 நாட்களில் பதவி விலகத் தயாராக இருப்பதாக ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே தெரிவித்துள்ளார்.துனிசியா, எகிப்தை அடுத்து கடந்த பிப்ரவரியில் ஏமனில் அதிபர் சலேவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. குண்டு வீச்சில் காயம் அடைந்த சலே சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சிகிச்சை பெற்றார்.
அதையடுத்து திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு திரும்பினார். எனினும் ஏமனில் போராட்டங்கள் குறையவில்லை. ராணுவத்துக்கும் பழங்குடியினருக்குமான மோதல் மேலும் அதிகரித்து வருகிறது. ஏமனில் அமைதி திரும்புவதற்காக வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில்(ஜி.சி.சி) சில பரிந்துரைகளை முன்வைத்தது.
ஆனால் அதில் கையெழுத்திட சலே மறுத்து வருகிறார். எனினும் அவர் ரியாத்தில் இருந்த போது தனக்குப் பதிலாக எதிர்க் கட்சிகளுடன் பேசுவதற்கான அதிகாரத்தை துணை அதிபர் அப்துர் அபு மன்சூர் ஹாடிக்கு அளித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று அவர் அளித்த பேட்டியில் ஜி.சி.சி ஒப்பந்தப்படி தேர்தல் நடக்கும் போது அதிபர் தானாகவே பதவி விலகி விடுவார். ஒப்பந்தப்படி இன்னும் 90 நாட்களில் நான் பதவி விலகுவேன்.
33 ஆண்டுகளாக நான் அதிகாரத்தில் இருந்துள்ளேன். இதில் உள்ள சங்கடங்கள், சாதக-பாதகங்கள் அனைத்தையும் அறிவேன். அதிகாரத்தை விட மறுப்பவன் முட்டாள் தான் என்றார்.எனினும் இதுபோல் அவர் ஏற்கனவே பலமுறை அறிவித்தும் கூட பதவியில் இருந்து விலகவில்லை என்பதால் அவரது இந்த அறிவிப்பை எதிர்க் கட்சிகள் நம்ப மறுத்துவிட்டன.
வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம்: பூங்காவில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள் வெளியேற்றம்.
வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் துவங்கிய நியூயோர்க்கின் ஜூகோட்டி பூங்காவில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அந்நகர பொலிசாரால் வெளியேற்றப்பட்டனர்.வெளியேற மறுத்த 70 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க அரசியலில் தனியார் நிறுவனங்களின் அதீதமான தலையீட்டை எதிர்த்து, கடந்த செப்டம்பர் 17ம் திகதி வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் துவக்கப்பட்டது.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த இயக்கத்தினர் நியூயோர்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஜூகோட்டி பூங்காவில் முகாமிட்டு கடந்த இரு மாதங்களாக தங்கியிருந்தனர்.வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் மூன்றாவது மாதத்தில் நுழையும் தருணத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பொலிசார் பூங்காவில் தங்கியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
அதற்கு முன்பாக பூங்காவின் உரிமையாளர் ப்ரூக்பீல்டு ஆபீஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்துக்கு நியூயோர்க் மேயர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியது.அதில் பூங்காவில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இரு மாதங்களாகத் தங்கியுள்ளதால் சுகாதாரச் சீர்கேடு மற்றும் பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் பூங்கா தூய்மை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நள்ளிரவு 1 மணியளவில் பூங்காவில் கவச உடையணிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டனர். வானில் ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டன. பூங்காவில் தங்கியிருந்தவர்களிடம் பூங்கா தூய்மை செய்யப்பட்ட பின் அவர்கள் மீண்டும் வரலாம் எனக் கூறப்பட்டது.இதையடுத்து பலர் அமைதியாக வெளியேறினர். ஆனால் 70க்கும் மேற்பட்டோர் வெளியேற மறுத்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரையும் பொலிசார் கைது செய்தனர்.
பூங்காவில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நிமிடத்துக்கு நிமிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் ட்விட்டரில் பதிவு செய்து கொண்டிருந்தனர். பூங்காவில் தங்கியிருந்தோர் தினசரி நடத்திய ஆர்ப்பாட்டங்கள், டிரம்ஸ் கச்சேரிகள், கோஷங்கள் இவற்றால் எழுந்த சத்தத்தால் அருகில் குடியிருப்போர் கோபமடைந்து அமைதியான சூழல் கெடுக்கப்படுவதாக புகார் அளித்தனர்.
வேலைவாய்ப்பிற்காக பிரிட்டன் செல்வோரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு.
பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதத்தில் அவர்களுக்கான வேலைகள் பட்டியலில் பல பிரிவுகளை பிரிட்டன் குறைத்து விட்டது.
இதனால் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் பிரிட்டனுக்குச் செல்ல இயலாத நிலை உருவாகும். ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி பிரிட்டனுக்குச் செல்கின்றனர். இவர்களுக்கான வேலைகள் பட்டியல் “ஷார்டேஜ் ஆக்குபேஷன் லிஸ்ட்” என அழைக்கப்படுகிறது.
இந்தப் பட்டியலில் உள்ள வேலைகளுக்கான மிகத் திறன் வாய்ந்த நபர்கள் இரண்டாம் நிலை(டயர் 2) விசா மூலம் பிரிட்டனுக்குச் செல்லலாம். இந்நிலையில் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்த உயர்நிலைக் கல்விப் பிரிவில் உயிரியல் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கான பேச்சு மற்றும் மொழி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், கண் மருத்துவர்கள் ஆகிய பணியிடங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
இந்த நீக்கம் புலம்பெயர்தல் பற்றிய ஆலோசனைக் குழுவின்(எம்.ஏ.சி) பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து குடியேற்றத் துறை அமைச்சர் டமியன் க்ரீன் கூறுகையில்,"இதுபோன்ற திறன் வாய்ந்த வேலைகளுக்கான ஆட்கள் இனி பிரிட்டனில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் மூலம் வெளியாட்களை நம்பியிருக்கும் நிலை குறையும்” என்றார். இந்தத் திருத்தத்தால் இனி ஆண்டுக்கு 40 ஆயிரம் ஊழியர்கள் பிரிட்டனுக்குச் செல்ல இயலாத நிலை உருவாகும்.
சிரியாவில் அதிபருக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 70 பேர் பலி.
சிரியாவில் அதிபர் அசாத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரே நாளில் மட்டும் 70 பேர் பலியாகியுள்ளனர்.சிரியாவில் அதிபருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அரபு லீகில் இருந்து சிரியா நீக்கப்பட்டது, எதிர்க்கட்சிகளுக்குப் புதிய தெம்பை அளித்துள்ளது.
ஜோர்டான் எல்லையருகில் அமைந்துள்ள டரா நகர், ஹோம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 70 பேர் பலியாகியுள்ளதாக சிரியா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையில் சிரியாவின் எதிர்க்கட்சிக் குழு நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றது. சிரியாவில் அன்னியத் தலையீட்டை ரஷ்யாவும், சீனாவும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
அதேநேரம் சிரியாவுக்கான தனது ஆயுத வினியோகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. இதனால் ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவதற்காக சிரியா எதிர்க்கட்சிக் குழு மாஸ்கோ சென்றுள்ளது.இதுகுறித்து நேற்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அரபு லீகின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளும், சிரியா அரசு தரப்பும் உடனடியாக பேச்சுவார்த்தையைத் துவக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் நன்கொடை குறையவில்லை: ஆய்வில் தகவல்.
கனடாவில் நற்குணம் படைத்தவர்கள் வழங்கும் நன்கொடை பொருளாதார நெருக்கடியால் குறையவில்லை என்பது புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.லெகெர் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு, கடந்த ஆண்டில் ஒவ்வொருவரும் சராசரியாக 487 டொலர் நன்கொடை வழங்கினர்.
சென்ற ஆண்டை விடக் குறைவாகவோ அல்லது நூறு டொலர் மட்டுமோ நன்கொடை வழங்கியவர் 25 சதவீதம் பேர் ஆவர். ஆனால் 18 சதவீதம் பேர் ஐநூறு டொலருக்கும் அதிகமாக நன்கொடை வழங்கினர்.கனடா மக்களில் 71 சதவீதம் பேர் சென்ற ஆண்டு கொடுத்த அதே தொகையை அல்லது கூடுதலான தொகையைக் கொடுக்கவே விரும்புகின்றனர்.
38 சதவீதம் பேர் குறிப்பிட்ட சம்பவத்துக்கு என்று தனித்தனியாகவும், 27 சதவீதம் பேர் கையில் பணம் இல்லாத காரணத்தாலும் 23 சதவீதம் பேர் ஒரு சில தர்ம காரியங்களுக்கு மட்டும் என்று வெவ்வேறு கொள்கையின் அடிப்படையில் நன்கொடை வழங்குகின்றனர்.
இந்த ஆண்டு நன்கொடையின் அளவு குறையாது என்று மார்வி ரிக்கெர் கூறியுள்ளார். இவர் BMO ஹாரிஸ் தனியார் வங்கியில் மனிதநலப் பணி மையத்தின் துணைத்தலைவர் ஆவார். இப்பெண்மணி பெரிய அளவில் தருபவர்களிடம் எந்த மாற்றமும் இருக்காது, சிறிய அளவில் தருபவர்களிடம் தடுமாற்றம் இருக்கலாம் என்றார்.யுனைட்டெட் வேயில் உள்ள ஜுலியா கோர்மன் என்ற பெண்மணி, பொருளாதார நெருக்கடியான 2008 முதல் குறைவானவர்களே கொடுத்தாலும் நிறைவாகக் கொடுக்கிறார்கள் என்கிறார்.
பூங்காவில் போராட்டம் நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஜூகோட்டி பூங்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் மீண்டும் அதே பூங்காவுக்கு நேற்று திரும்பினர்.
அவர்களை நள்ளிரவில் அங்கிருந்து வெளியேற்றிய நியூயோர்க் நிர்வாகத்தின் செயல் சட்டப்பூர்வமானது தான் எனக் கூறியுள்ள நியூயோர்க் சுப்ரீம் கோர்ட் கூடாரம், பெரிய பைகள், ஜெனரேட்டர்கள் போன்ற எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இயக்கத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
கடந்த 15ம் திகதி அதிகாலை 1 மணியளவில் ஜூகோட்டி பூங்காவில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நியூயோர்க் பொலிசார் பலவந்தமாக வெளியேற்றினர்.வெளியேறியவர்கள் அருகில் உள்ள போலே பூங்காவில் தங்கினர். இவ்விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் நியூயோர்க் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையில் நேற்று கோர்ட் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: அமெரிக்க அரசியல் சாசனப்படி நியூயோர்க் அதிகாரிகள் செய்தது சரிதான். தொடர் போராட்டத்தின் போது பொது மக்களுக்கு தொந்தரவு எதுவும் விளையக் கூடாது.அதன்படி பூங்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால் இரவில் தங்கக் கூடாது. கூடாரம், பெரிய பைகள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பொருட்களுடன் உள்ளே போகக் கூடாது என உத்தரவிட்டது. இவ்வாறு நியூயோர்க் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
நியூயோர்க் மேயர் மிக்கேல் ப்ளூம்பெர்க் கூறுகையில், பூங்காவில் இருந்த சூழல், மக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தது. அங்கிருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்திற்காக வந்ததாகத் தெரியவில்லை. அதனால் தான் அவர்களை வெளியேற்றி பூங்காவை தூய்மைப்படுத்த வேண்டியதாகி விட்டது. பாதுகாப்புக் காரணமாக இந்த நடவடிக்கை நள்ளிரவில் மேற்கொண்டது என்றார்.பூங்கா பகுதியில் ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் இரவில் தங்கித் தூங்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
பொலிசாரின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு ஆர்ப்பாட்டக்காரர் கூறுகையில், ஆர்ப்பாட்டம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. இது எங்கள் நகரம். இந்தப் பூங்கா தான் கடந்த இரு மாதங்களாக எங்கள் வீடாக இருந்தது என்றார்.இன்று மூன்றாவது மாதத்தில் நுழையும் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் அமெரிக்கா மற்றும் உலகின் பல முக்கிய நகரங்களில் தொடர்ந்து நடக்கிறது. பூங்கா அதிரடி நடவடிக்கை அவர்களின் குறிக்கோளை மேலும் உறுதியாக்கியுள்ளது.
சீனாவில் கொடூர சாலை விபத்து: 18 குழந்தைகள் பலி.
சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் நேற்று நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 18 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியாயினர்.சீனாவில் குறைந்த இருக்கைகள் கொண்ட பள்ளி வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் மழலைப் பள்ளிக் குழந்தைகளை, மாணவர்களை ஏற்றிச் செல்வது வாடிக்கை. இதனால் அங்கு பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
சமீபத்தில் அரசு தொலைக்காட்சியில் ஒன்பது நீளமான இருக்கைகள் கொண்ட ஒரு மினி வேனில் 64 குழந்தைகள் அடைத்துச் செல்லப்படுவது காண்பிக்கப்பட்டது.இந்நிலையில் சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கன்சூ மாகாணத்தில் கிங்யாங் நகரில் உள்ள மழலைப் பள்ளி ஒன்றுக்கு அப்பள்ளி வாகனம் 64 பேருடன் சென்று கொண்டிருந்தது. இவர்களில் 62 பேர் குழந்தைகள். இந்த வாகனத்தில் 9 நீளமான இருக்கைகள் மட்டுமே இருந்தன.
யூலின்சி பகுதியில் எதிரில் வந்து கொண்டிருந்த நிலக்கரி லாரியுடன் பள்ளி வாகனம் நேருக்கு நேராக மோதியது. இதில் வாகனம் நொறுங்கி விட்டது. சம்பவ இடத்திலேயே நான்கு குழந்தைகளும், வாகன ஓட்டுனரும் பலியாயினர்.மீதி 14 பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனையிலும் பலியாயினர். 45 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் சில மணி நேரங்களிலேயே சீனா முழுவதும் தீப்போல பரவி விட்டது. ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைதளங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் இச்சம்பவத்திற்கு அதிர்ச்சி, வருத்தம் தெரிவித்தனர்.அதேநேரம் பள்ளிக் கல்வித் துறையை கடும் விமர்சனம் செய்துள்ளனர். பலர் அமெரிக்காவில் உள்ள பள்ளி வாகனங்களோடு சீன பள்ளி வாகனங்களை ஒப்பிட்டு சீன பள்ளிக் கல்வித் துறையை குற்றம்சாட்டியுள்ளனர்.