Monday, November 21, 2011

இன்றைய செய்திகள்.

சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பை கோருவோம்! ரணில்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக உள்நாட்டில் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதுடன், வெளிநாடுகளிலும் பிரசாரங்களை மேற்கொண்டு ஒத்துழைப்பை கோருவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் பெயர் விபரங்களை வெளியிடாத அரசாங்கம் பயங்கரவாதத்திற்காக பணம் வழங்கிய கே.பியை சுக போகங்களுடன் பாதுகாக்கின்றதென்றும் தெரிவித்தார்.
கொழும்பு தெமட்டகொடை சந்தியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சவூதியில் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்கள் தாயகம் திரும்பினர்!
சவூதி அரேபியாவில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய நிலையில் சுமார் 20 இலங்கைப் பணியாளர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை எஜமானர்களின் துன்புறுத்தல்கள் மற்றும் விசா காலாவதியானமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த நிலையிலேயே திரும்பி வந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு திரும்பியுள்ள பணியாளர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரோகி பட்டத்துக்கு தாம் பயப்படவில்லை! -பாரதவின் மகள் ஹிருனிக்கா.
தமக்கு துரோகி பட்டம் கிடைத்தாலும் கவலைப்படப் போவதில்லை என்று கொலையுண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருனிக்கா குறிப்பிட்டுள்ளார்.
தமது தந்தையின் கொலை தொடர்பி;ல் தாம் சர்வதேசத்தின் நீதியை கோருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால், இந்த துரோகி பட்டம் கிடைக்கலாம். ஆனால் அதனைப்பற்றி பயப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.தமது தந்தையின் கொலை தொடர்பில் இலங்கையில் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை.
தமது தந்தையின் கொலை தொடர்பில் இலங்கையின் ஆளும் கட்சி, நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். உண்மையை மறைக்க முயலக்கூடாது என்று அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஏற்கனவே இலங்கை நீதியற்ற நாடுகளின் ஆசிய நிலை பட்டியலில் முன்னிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக உலக நாடுகளின் தலைவர்களும் இலங்கையின் வன்முறைகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் ஹிருனிக்கா தெரிவித்தார்.இலங்கையின் நீதி நிர்வாகத்தை நிலைநாட்ட படித்த புதிய இளைய தலைமுறை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகாவை நிரபராதி என தீர்ப்பளித்த நீதிபதிக்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது!– ரணில்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்த நீதிபதிக்கு பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மூத்த உறுப்பினர்கள் சரணடைய வந்தபோது அவர்களை சுட்;டுக்கொல்லுமாறு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சவேந்திர சில்வாவிடம் கட்டளை பிறப்பித்ததாக சரத் பொன்சேகா, சண்டேலீடருக்கு வழங்கிய செவ்வி தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதன்போது இரண்டு நீதிபதிகள், சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் இரண்டில் சரத் பொன்சேகா குற்றவாளி என்று தீர்ப்பளித்தனர்.
எனினும் நீதிபதி வராவௌ என்பவர், சரத் பொன்சேகாவை அனைத்துக் குற்றங்களில் இருந்தும் நிரபராதி என விடுவித்தார்.எனினும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குறித்த நீதிபதி நீதிமன்ற அமர்வின் போது பயன்படுத்தி வந்த கணணி சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் தமது தீர்ப்புக்கான விளக்கங்களை முழுமையாக வாசிப்பதற்கும் தீர்ப்பு நேரத்தின் போது வாய்ப்பு மறுக்கப்பட்டது.எனவே இந்த நடைமுறை முரண்பாடு தொடர்பில் தாம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்கு காலையில் அமைச்சரவைக் கூட்டம்! பிற்பகல் ஜனாதிபதி சபையில் சமர்ப்பித்து உரை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை அங்கீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி தலைமையில் அலரிமாளிகையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது.இக்கூட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும் பங்கேற்குமாறு அமைச்சரவையின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இக் கூட்டத்தில் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் 1.52 க்கு வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றுக்கு சமர்ப்பித்து நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார்.சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை தவிர ஏனைய நாட்களில் பாராளுமன்றம் பிற்பகல் 1.00 மணிக்கு கூடியபோதிலும் இன்று பிற்பகல் 1.50 க்கு கூடும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள ஏழாவது வரவுசெலவுத்திட்டம் இதுவாகும். எனினும் இது மஹிந்த சிந்தினையின் எதிர்கால நோக்கின் கீழ் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற இரண்டாவது வரவுசெலவுத்திட்டமாகும்.2016 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே ஆச்சரியமாக்கும் நோக்கிலேயே 2012 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
2012 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் தி. ஜயரட்னவினால் சமர்ப்பிக்கப்பட்டது.அதில் அடுத்தாண்டிற்கான மொத்தச் செலவீனம் 2200பில்லியன் ரூபாஎனமதிப்பிடப்பட்டிருந்தது.வரவுசெலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை 22 ஆம் திகதி  ஆரம்பமாகி 26, 27 ஆம் திகதிகளில் தவிர ஐந்து நாட்களுக்கு நடைபெற்று 30 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
குழுநிலை விவாதங்கள் டிடிம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகி 17 நாட்களுக்கு நடைபெற்று வரவுசெலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.பாராளுமன்றம் பிற்பகல் 1 .00 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் நடைபெறுகின்ற போதிலும் வரவுசெலவுத்திட்டக் காலத்தில் சபை நடவடிக்கைகள் காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் நடத்துவதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக முக்கியமான காரணங்களை தவிர வேறு தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.
உலகப் போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்க தயார் – விமல் வீரவன்ச.
ஈரான் மீது மேற்குலக நாடுகள் தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதனை தடுக்க முடியாது என்றும், உலக போர் ஏற்பட்டால் அதனை எதிர்நோக்கத் தயார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.இவ்வாறான ஓர் சூழ்நிலையினை எதிர்நோக்க இலங்கைத் தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
குறிப்பாக உலகப் போர் ஏற்பட்டால் நாட்டில் ஏற்படக் கூடிய உணவுப் பற்றாக்குறையை தீர்க்கக் கூடிய திட்டங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டியைத் தயார்படுத்திக் கொள்ளவும்!-மேர்வின் சில்வா எச்சரிக்கை.
நாட்டில் அவதூறு ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிட்டால் ஊடகவியலாளர்கள் சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய காலச் சூழலில் சில ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை எனவும் நாட்டின் முக்கிய நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான தகவல்களை உருவாக்கி சில ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்ட அவர், தமக்கு எதிராகவும் சிலர் இவ்வாறான சேறு பூசல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் எட்மண்ட் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுப்பு.
கனடாவின் எட்மண்ட்டன் ஆக்கிரமிப்பாளரை சட்டப்படி வெளியேற்ற அந்த இடத்தின் உரிமையாளர் மெல்கர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இவர்கள் வெளியேறவில்லை என்றால் காவல்துறையின் உதவியை நாடப்போவதாகவும் நகர்மன்றத்தில் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.ஆக்கிரமிப்பாளர் இந்த எச்சரிக்கையை எதிர்த்து இங்கேயே தங்கப் போவதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் பணக்காரர்கள் பொதுமக்கள் மீது காட்டும் சர்வாதிகாரமே இந்த எச்சரிக்கை என்று மிக்கெ ஹொடெமா என்ற ஆக்கிரமிப்பாளர் கூறினார்.
ஆக்கிரமிப்பாளரில் 15 பேர் உடனடியாக ஓர் அவசரக் கூட்டம் நடத்தினர். சிலர் வெளியேற முடிவு செய்தனர், வேறுசிலர் வெளியேறக் கூடாது என்றனர். காரணம் இங்கு தான் பொதுமக்களின் ஆதரவும் நன்கொடையும் ஏராளமாகக் கிடைப்பதாகக் பலர் கருதுகின்றனர்.சில நிபந்தனைகளின் பேரில் வெளியேறலாம் என்று கூறியவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த நிபந்தனைப் பட்டியல் தயாராகி மெல்கர் நிறுவனத்துக்கும் மற்றும் ஊடகத்துக்கும் அனுப்பப்படும் என்றார்.
வேன்கூவர், ரெஜினா, விக்டோரியா போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு போராட்டம் செயலிழந்துவிட்டது. கேல்கரி என்ற ஊரில் அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் ஒலிம்பிக் பிளாசா உகந்த இடம் எனக் கருதி அங்கேயே தங்கியுள்ளனர்.
மாண்ட்ரியல் மற்றும் கியூபெக் நகரங்களில் கூடாரங்கள் கலைக்கப்பட்ட போதும் சில ஆட்கள் மட்டும் தங்கிப் போராடி வருகின்றனர். தூய ஜேம்ஸ் பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றுவதா கூடாதா என்பது குறித்து திங்கட்கிழமை டொரொண்டோ நீதிமன்றத்தில் நீதிபதி டேவிட் பிரௌன் தீர்ப்பளிப்பார்.இந்த மாதத்தின் தொடக்கத்தின் முதன்முதலாக காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பாளர் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இப்போது பொது நலம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆக்கிரமிப்பாளரை வெளியேற்ற வேண்டும் என்று மெல்கர் தெரிவித்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் இணையதளத்தில் ஒரு முறையீட்டை அனுப்பி கையெழுத்து வேட்டை நடத்தினர். இதில் 3500பேர் கையெழுத்திட்டனர்.
விக்டோரியா ஆக்கிரமிப்பு போராட்டம் எண்பது கூடாரங்களோடு தொடங்கி பன்னிரெண்டாக இப்போது சுருங்கிவிட்டது. இவர்களில் ஐம்பது பேர் சனிக்கிழமை மதியம் ஊர்வலம் நடத்தினர். சர்வதேச ஆக்கிரமிப்புப் போராட்டத்தின் வலிமையைப் பலர் எடுத்துரைத்தனர். உலகம் முழுக்க நகரங்களில் மக்களுக்குக் குடியிருக்க இடம் அளிக்காதது குறித்துக் கடுமையாகப் பேசினர். 
மனிதநேயமற்ற முறையில் தன்னை நடத்துவதாக பிரான்ஸ் கோர்டில் வழக்கு தொடுத்துள்ள மைக்கேல்.
கோட்டே டி ஐவோரெயின் பழைய அதிபர் லாரண்ட் ஜிபேக்போவை பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவரையும் அவர் மகன் மைக்கேல் ஜிபேக்போவையும், பிரதமர் குயில்லௌமே சோரா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 11திகதி முதல் பௌனா என்ற நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் சிறை வைக்கப்பட்டனர். தந்தை, மகன் இருவரில் மகன் மைக்கேல் ஜிபேக்போவுக்கு ஐவரி தீவிலும் பிரான்சிலுமாக இரட்டைக் குடியுரிமை இருப்பதால் இவர் பிரான்ஸ் குடிமகன் என்ற அடிப்படையில் பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் பிரதமர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
சட்டத்திற்குப் புறம்பான முறையில் தன்னையும் தன் தந்தையையும் அடைத்து வைத்திருப்பதாகவும், தம்மைக் கடத்தி வந்ததாகவும் மனிதநேயமற்ற முறையில் நடத்துவதாகவும், பிரான்ஸ் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.முன்னாள் அதிபர் லாரண்ட் ஜிபேக்போ யூலை மாதத்தில் தன்னை பிரான்ஸ் இராணுவம் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டி ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜேர்மன் அதிபர்.
ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் தன்னுடைய நாட்டுமக்களின் சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் யூ டியூப் மூலமாகப் பதிலளித்துள்ளார். மக்கள் கேட்ட 1700 கேள்விகளின் முதற்கட்ட பதிலளிப்பு வெள்ளிக்கிழமையன்று நடந்து முடிந்தது.
வெள்ளிக்கிழமையன்று, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம், உடல்நலப் பாதுகாப்பு போன்வற்றிற்கு பதிலளித்தார். முதலில், அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் சட்டப்படியான அமைப்பில் சேர்க்கப்படவில்லை, என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மெர்க்கெல் அந்த அமைப்பு செயல்படும் விதத்தை விளக்கினார். ஆனால் ஏன் அரசியல்வாதிகள் அதில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. இரண்டாவதாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்களுடைய சம்பளத்தைத் தாமே முடிவு செய்கின்றனர் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.இதற்கு மெர்க்கெல், அவர்கள் மிகவும் கவனமாக முடிவெடுத்துத்தான் தங்கள் சம்பத்தை நிர்ணயிக்கின்றனர். நகரத்து மேயர்களுக்கு வழங்கும் சம்பளத்தைப் போலவே அவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது என்றார்.
இந்தக் கேள்விபதில் நிகழ்ச்சி பற்றி கேட்டதற்குத் ”தான் ஒரு ஈடுபாட்டுடன் அரசியலுக்கு வந்துள்ளதால் இந்தக் கேள்விகள் தனக்கு மிகுந்த ஆர்வத்தை அளிப்பதாகக் கூறினார். எனவே இந்தக் கேள்விகளுக்கு தான் மிகவும் உண்மையாகப் பதிலளிப்பதாவும், கேட்பவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பதில் அளிப்பதாகவும் கூறினார்.இன்னும் இரண்டு கட்டங்களாக நவம்பர் 31ம் திகதியும் வரும் திங்கட்கிழமையும் அவர் பதிலளிக்க தயாராக இருக்கிறார். அப்போது கஞ்சாப் பயன்பாட்டையும் அரசியலில் லஞ்சத்தையும் சட்டரீதியாக்குவது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடாபி மகன் மீதான விசாரணை நேர்மையாக நடக்கும் என லிபியா உறுதி.
கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் மீதான விசாரணை, நேர்மையான முறையில் நடக்கும் என, லிபியாவின் இடைக்கால பிரதமர் அப்துர் ரகீம் அல் கைப் தெரிவித்துள்ளார்.லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம், நேற்று முன்தினம் அந்நாட்டின் தென் பகுதியில், எதிர்ப்பாளர்களிடம் பிடிபட்டார். இவர் மீது, சர்வதேச கிரிமினல் கோர்ட் (ஐ.சி.சி.,) குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் சயீப் அல் இஸ்லாம் மீதான விசாரணை, சர்வதேச விதிகளின் படி, நேர்மையாக நடக்க வேண்டும் என, ஐ.சி.சி.கோரியுள்ளது. ஐ.சி.சி.யின் வழக்கறிஞர் லூயிஸ் மொரினோ ஒகம்போ, அடுத்த வாரம் லிபியா செல்ல இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.இதற்குப் பதிலளித்த லிபியாவின் இடைக்கால பிரதமர் அப்துர் ரகீம் அல் கைப், நேர்மையான முறையில் மிகவும் வெளிப்படையாக சயீப்புடனான விசாரணை நடக்கும் என உறுதியளித்துள்ளார்.
கலவரம் தொடர்பான வழக்கில் உடனடி முடிவு எடுக்க இயலாது: பிரிட்டன் பொலிஸ்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கடந்த ஒகஸ்ட் மாதம், கலவரம் உருவாகக் காரணமாக இருந்த, மார்க் டக்கனின் கொலையில் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லண்டனின் டோட்டன்ஹேம் பகுதியில், மார்க் டக்கன் வயது 29என்ற இளைஞர், கடந்த ஒகஸ்ட் 4ம் திகதி, பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர், அப்பகுதியின் தாதா கும்பலைச் சேர்ந்தவர். அவர் மீது, பல வழக்குகள் உள்ளன.
சம்பவத்தன்று அவரை பொலிசார் சுற்றி வளைத்த போது, அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட முயன்றார். வேறு வழியின்றி, பொலிசார் அவரை சுட்டுக் கொன்றனர் என, தகவல் கூறப்பட்டது. மார்க் டக்கனின் கொலை, பிரிட்டன் முழுவதும் கலவரமாக வெடித்தது. இக்கலவரம், நான்கு நாட்கள் நீடித்தது.இக்கலவரத்தில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 1,800 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்க் டக்கன் சுட்டுக் கொல்லப்பட்ட சூழல் குறித்து, போதிய ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
அவரது உடல் கிடந்த இடத்தில் இருந்து, 10 அல்லது 14 அடி தூரத்தில் கிடந்த ஒரு துப்பாக்கி, பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. ஆனால், அது அவரது துப்பாக்கி என்பதற்கு தடயவியல் ஆதாரமில்லை. இதுகுறித்து, பொலிசுக்கு எதிரான சுயேச்சை கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், இது மிகச் சிக்கலான வழக்காக கருதப்படுகின்றது.அதனால், இவ்விவகாரத்தில் மக்கள் உடனடியாகத் தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. ஸ்காட்லாண்டு யார்டு பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்போது, எந்த முடிவுக்கும் வருவது சரியல்ல எனக் கூறியுள்ளது.
சிரிய ஜனாதிபதிக்கு எதிராக அரசு அலுவலகம் மீது தாக்குதல்.
சிரிய நாட்டின் தலைநகர் டமாஸ்கசிஸ் உள்ள ஆளும் பாத் கட்சி அலுவலகம் மீது சிரிய விடுதலை ராணுவம் நேற்று ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது.சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த எட்டு மாதங்களாகப் போராடி வருகின்றனர். சிரிய ராணுவம் மூலம் அவர்களை அசாத் அடக்கி வருகிறார்.
ஆனால் ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதில் இருந்து விலகி “சிரிய விடுதலை ராணுவம்” என்ற பெயரில் சிரிய ராணுவம் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.நேற்று அதிகாலைக்கு சற்று முன் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியான மஜ்ராவில் உள்ள ஆளும் பாத் கட்சியின் அலுவலகம் மீது சிரிய விடுதலை ராணுவம் ஆர்.பி.ஜி ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.இந்த வகை ராக்கெட்டுகளை தனிநபர் தனது தோளில் இருத்தியபடியே ஏவலாம். தலைநகரின் முக்கிய இடத்தில் சிரிய விடுதலை ராணுவம் தாக்குதல் நடத்துவது இதுவே முதன் முறை.
இது தொடர்ந்தால் லிபியாவைப் போல சிரியாவிலும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். தாக்குதல் நடத்தப்பட்ட போது அக்கட்டடத்தில் யாரும் இல்லை என்பதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இத்தாக்குதல் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என சிரிய விடுதலை ராணுவம் கூறியுள்ளது.இதற்கிடையில் பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஜனாதிபதி அசாத் கூறியதாவது: இந்தப் பிரச்னை தொடரத் தான் செய்யும். சிரியா மீதான நெருக்கடி மேலும் அதிகரிக்கும். ஆனால் இந்த நெருக்கடிகளுக்கெல்லாம் சிரியா தலைவணங்கி விடாது.
மற்ற சிரிய மக்களைப் போலவே, எனது நாட்டினர் ஒவ்வொருவரும் ரத்தம் சிந்தும் போது எனக்கு வேதனையாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒரு ஜனாதிபதி என்ற முறையில் இந்த ரத்தம் சிந்தும் போக்கை தடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.அரபு லீகில் இருந்து சிரியா விலக்கப்பட்டது சரியல்ல. அடுத்தாண்டு பெப்ரவரி அல்லது மார்ச்சில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசியல் அமைப்பிற்கான பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும். தேர்தல் தான் யார் ஜனாதிபதியாக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
எகிப்தில் தொடரும் கலவரம்: 676 பேர் படுகாயம்.
எகிப்தில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது பொலிசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நிகழ்த்தினர்.இதில் இருவர் பலியாயினர். 676 பேர் காயம் அடைந்தனர். இக்கலவரம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக் மக்களால் விரட்டப்பட்ட பின் தற்காலிக ஆட்சிப் பொறுப்பேற்ற ராணுவ உயர் மட்ட கவுன்சில் ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்துவதாக வாக்களித்தது.ஆனால் பாராளுமன்ற தேர்தல் உட்பட கவுன்சில் சொன்ன எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் சமீபத்தில் புதிய அரசியல் அமைப்பின் வழிகாட்டு நெறிகள் அடங்கிய ஆவணம் ஒன்றை ராணுவ கவுன்சில் சமர்ப்பித்தது.
அதில் ராணுவத்துக்குக் கூடுதல் அதிகாரம், அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை பொதுமக்களிடம் இருந்து ரகசியமாக வைக்கப்படும். இந்த ஆவணம் எதிர்க்கட்சிகளால் குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியால் கடும் கண்டனத்திற்கு உள்ளாயிற்று.தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தன. அதன்படி மக்கள் கடந்த 18ம் திகதி புகழ்பெற்ற தாரிர் சதுக்கத்தில், ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று முன்தினம் சிலர் தாரிர் சதுக்கத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து கூடாரம் அமைத்தனர். அவர்களை வெளியேற்றுவதற்காக கவசம் அணிந்த பொலிசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.இத்தகவல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மூலம் பரவியது. இதையடுத்து நூற்றுக்கணக்கான பேர் சதுக்கத்தில் திரண்டனர். ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசார் மீது கல்லெறிந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் மோதல் மூண்டது.
பிற நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். இதேபோன்ற ஆர்ப்பாட்டம் அலெக்சாண்டிரியா மற்றும் சூயஸ் நகரங்களிலும் நடந்தது. அலெக்சாண்டிரியாவில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் பலியானார். 676 பேர் காயம் அடைந்தனர்.இச்சம்பவத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சி உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என மக்கள் குரல் கொடுத்துள்ளனர்.
நேற்று இரண்டாம் நாளாக இக்கலவரம் தொடர்ந்தது. உடனடியாக அதிகாரத்தை மாற்றியளிக்கும் தேதியை ராணுவக் வுன்சில் அறிவிக்க வேண்டும் என மக்கள் ஆயிரக்கணக்கில் தாரிர் சதுக்கத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.எதிர்வரும் 28ம் திகதி எகிப்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற கலவரங்கள் மூள்வது நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்குவதாக ராணுவ கவுன்சில் கண்டித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரித்துள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF