
கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த மலையாள திரைப்படம் ''ஆதமின்டே மகன் அபு'. இந்த வருடம் இந்தியா சார்பாக, ஆஸ்கர் அகடமி விருதுகளுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திரைப்படம். சலிம் குமாருக்கு சிறந்த நடிகர் எனும் தேசிய விருதை வாங்கிக்கொடுத்த திரைப்படம். 16 வது சர்வதெச கேரள திரைப்பட விழாவில் ஆதிமத்யானந்தம் திரைப்படத்துடன் இணைந்து திரையிடப்படவுள்ள திரைப்படம் என இன்னமும் பல பெருமைகளை பெற தயாராகவே உள்ளது.
ஈரானிய இயக்குனர் 'மஜிதி மஹிதி'யின் உயர்தர வரிசைப் படங்கள் போல் இந்தியாவிலிருந்து ஒன்று கிடைக்காதா என ஏங்கியவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல் தோன்றும் இத்திரைப்படம்,இந்தியா ஏன் அஸ்காருக்கு இப்படத்தை தெரிவு செய்தது என ஆச்சரியப்படுபவர்களுக்கு படம் பாருங்கள் புரியும் என்கிறது.
'ஆதமின்டே மகன் அபு' திரைப்படம் பற்றி 'ரெட்டைவால்ஸ்' வலைப்பதிவாளரின் விமர்சன பதிவை அவருடைய அனுமதியுடன் இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்!ஒரு ஹஜ் யாத்திரை.அதற்கான ஒரு வயதான தம்பதிகளின் முயற்சி. நெகட்டிவான எந்த ஒரு விஷயமும் இல்லாமல் மெதுவான வேகத்தில் நகரும் ஆழமான படம் - ஆதாமின்டே மகன் அபு! சலீம்குமாரின் அபாரமான நடிப்பில் சலீம் அகமது இயக்கி இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படம்.
அபுவும் (சலீம்) ஆய்ஷும்மாவும் (ஸரீனா வஹாப்) மகனால் கைவிடப்பட்ட வயதான தம்பதிகள். அத்தரும் யுனானி மருந்துகளும் விற்று ஜீவனம் நடத்துகிறார்கள். அபுவிற்கு ஒரே ஒரு கனவு . மனைவியை அழைத்துக் கொண்டு ஹஜ் சென்றுவர வேண்டும். டிராவல்ஸில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பணம் புரட்ட ஆரம்பிக்கின்றனர். வியாபாரம் நலிந்த நிலையில் பத்து வருடம் சேமித்த பணமும் கூட போதாதென்கிற நிலமை. மாடு,மரம் என அனைத்தையும் விற்று ஹஜ் செல்ல தயாராகிறார்கள். புனித யாத்திரைக்குத் தயாராகி புது துணிகள் எல்லாம் எடுத்து ஊரில் எல்லாரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்புமுன் மீண்டும் பணப்பிரச்சினை. ஊரிலுள்ள அனைவரும், ட்ராவல் ஏஜன்ட் முதற்கொன்டு உதவிக்கு வருகிறார்கள்.ஆனாலும்..தம்பதிகள் ஹஜ் சென்றார்களா என்பது மீதி கதை.
மாயா ஜாலங்களோ சென்டிமென்டுகளை நியாயப் படுத்தும் ஃப்ளாஷ்பேக்குகளோ எதுவும் தேவைப்படாத, கதையை அதன் போக்கில் மெதுவாக நகர்த்தும் திரைக்கதை. அதற்கு யானை பலம் சேர்க்கும் மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. . அதை விட முக்கியமாக , காஸ்டிங். நெடுமுடி வேணு, கலாபவன் மணி என ஓரிரு காட்சிகள் வந்தாலும் எங்குமே நடிப்பது தெரியவில்லை.மற்றும் உறுத்தாத பிண்ணனி இசை. அவார்டு வாங்கும் படம் என்றாலே காத தூரம் ஓடிவிடும் நம் ரசிக கண்மனிகள்.
இந்த படத்தில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, மிகையில்லாத , ரொம்பவே யதார்த்தமான நடிப்பு. பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் காட்சியில் நடுங்கும் சலீம், தேசிய விருதுக்கு நிச்சயம் வொர்த் தான். மொத்தத்தில் குறை சொல்ல முடியாத ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகிய சினிமா "ஆதாமின்டே மகன் அபு"
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF