Saturday, November 26, 2011

உயிர்கள் வாழக்கூடிய கோள்கள்: விஞ்ஞானிகள் ஆராய்ச்சி!



விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் சந்திரனில் உயிர்கள் வாழக்கூடிய நிலைமை இருக்கின்றதா என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.சூரியக்குடும்பத்தைச் சேராத கிலியேசே 581g என்ற வெளி கோளும் (exo planet), சனியின் சந்திரனான டைட்டானும் உயிர்கள் வாழக்கூடியனவாக உள்ளன. இவ்வாறு உயிர்கள் வாழக்கூடியவை என்று தீர்மானிப்பதற்கு இரண்டு அடிப்படைத் அளவீடுகளைக் கொண்டு ஆராய்ந்ததாக விஞ்ஞானிகளின் ஆய்வுரை தெரிவிக்கிறது.
அந்த இரண்டு குறியீடுகளாவன:
1. பூமியை ஒத்த தன்மை அளவீடு – ESI 
2. கோளில் உயிர்வாழும் இயல்பு அளவீடு – PHI
ESI என்ற முதல் அளவீடு, பிற கோள்களிலும் சந்திரன்களிலும் பூமியை ஒத்த தன்மை இருக்கின்றதா என்பதை அறிவதாகும் என்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் முனைவர் டிர்க் ஷுல்சே-மகுச் தெரிவித்தார். PHI என்ற இரண்டாவது அளவீடு, மற்ற கோள்களில் உயிர்வாழும் இயல்பு இருந்தால் அங்கு நமக்குத் தெரிந்த அல்லது தெரியாத உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிவதாகும் என்றார்.


பூமியை ஒத்த தன்மையை அறியும் அளவீடு (ESI) தாய்க்கோளிலிருந்து சந்திரனுக்கு இடையிலான தொலைவு, அதன் அளவு, அடர்த்தி போன்றவற்றைக் குறிக்கும். கோளில் உயிர்வாழும் இயல்பு அளவீடு (PHI) என்பது அந்தக் கோளில் பாறையோ உறைபனியோ இருக்கின்றதா அங்கு காற்று வெளியோ காந்த வெளியோ இருக்கின்றதா என்பதை உணர்த்துகிறது.
தாய்க்கோளிலிருந்து சந்திரனுக்கு கிடைக்கும் ஒளி அல்லது அலை நெகிழ்வு, அதாவது ஈர்ப்பு சக்தி மூலமாக அங்கிருக்கும் உயிர்களுக்குக் கிடைக்கும் சக்தியை இந்த ஆராய்ச்சி அறிய முயல்கிறது. மேலும் முக்கிய வேதிச் செயற்பாடுகளுக்குத் தேவையான கரிமச் சேர்மம் இருக்கின்றதா நீர்மக் கரைப்பான்கள் உண்டா என்பதையும் அறிய முயல்கின்றது.


இந்த பூமியை ஒத்த தன்மை அளவீடு அதிகபட்சமாக ஒன்று என்றால் கிலியேசே 581g என்ற வெளிகோளுக்கு இந்த அளவீடு அதிகபட்சமாக 89 என்று உள்ளது. இதைப் போலவே பப்பிஸ் குடும்பத்தைச் சேர்ந்த நெப்ட்யூன் அளவிலான HD69830d என்ற வெளிகோளும் 0.60 என்ற குறியீட்டைப் பெற்றது. இந்தக் கோள் தாய்க்கோளுக்கு மிக அருகே இருப்பதால் அதிக குளிரோ அதிக வெப்பமோ கிடையாது. இதனால் உயிர்கள் வாழக்கூடிய தட்பவெப்பம் நிலவுகிறது.நம்முடைய சூரியக்குடும்பத்தில் செவ்வாயின் பூமியை ஒத்த அளவீடு 0.70 மற்றும் புதனில் இது 0.60 ஆக உள்ளது. கோளில் உயிர்வாழும் இயல்பு பற்றி அறியும் போது சனியின் சந்திரனான டைட்டானில் 0.64 என்றும் செவ்வாயில் 0.59 என்றும் வியாழனின் சந்திரனான யூரோப்பாவில் 0.47 என்றும் கண்டறிந்துள்ளனர்.வருங்காலத்தில் இந்தக் கோள்களில் பச்சையம் உள்ளதா என்பதைக் காணும் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்படலாம்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF