இலங்கை எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ ஆட்சியின் கீழ் இல்லை. எனவே எந்தவொரு நாட்டினதும் கட்டளைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.நாட்டின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக பிரச்சாரம் செய்ய சிலர் எடுத்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்புத் தலைவர்கள் மாநாட்டின் போது நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து கனடா கேள்வி எழுப்ப முயற்சித்த எடுத்த போதிலும் அதனை தோற்கடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ ஆட்சியின் கீழ் இல்லை. எனவே எந்தவொரு நாட்டினதும் கட்டளைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.எந்த நாட்டுத் தலைவரும் பிறப்பிக்கும் கால எல்லையின் அடிப்படையில் இலங்கை செயற்டபாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் அண்மையில் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச தபால் கட்டணங்கள் உயர்வு.
இதன்படி, சர்வதேச தபால் கட்டணங்கள் எட்டு பிரிவுகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது.முதல் 20 கிராம் முதல் தொடர்ச்சியாக எடைக்கு ஏற்ற வகையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.இதன்படி, சர்வதேச தபால் கட்டணங்கள் 50, 100, 200 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளன.
காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாதாள உலகக் குழுக்களின் கூலிப்படையாக மாறியுள்ளனர் – சரத் பொன்சேகா.
நாம் இருந்த காலத்தில் சீரிய ஒழுக்கத்துடன் காவல்துறையினரும், இராணுவத்தினரும் கடமையாற்றினர்.
தற்போது பாதாள உலகக் குழுக்களின் ஒப்பந்தங்களை காவல்துறையினரும், படையினரும் நிறைவேற்றுகின்றனர்.இராணுவத் தளபதி போர் புரியவில்லை, போரை நாமே திட்டமிட்டு நடத்தினோம் என மார்தட்டிக் கொண்டவர்களினால் பாதாள உலகக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் விநியோகத்தைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.படுகொலைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.
பெட்டிகளை கடைகளை உடைக்கவும், வடிகால்களை சுத்தப்படுத்தவுமே இவர்களினால் முடிகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கனிலிருந்து ஈரானுக்கு ரயில் பாதை.
தீவிரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானின் கனிமவளம் நிறைந்த ஹஜிகக் மாகாணத்தில் இருந்து ஈரானின் காபாஹர் துறைமுகத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
900 கி.மீட்டர் தூரமுள்ள இந்த ரெயில் பாதை அமைக்கும் பணியில் இந்தியா உதவுகிறது. அதற்கான திட்ட பணிகள் முடிந்து விட்டன.இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் தலையீடு குறையும் வாய்ப்பு உள்ளது.
ஹிலாரியின் தாயார் காலமானார்.
அமெரிக்க செயலர் ஹிலாரி கிளிண்டனின் தாயார் டோரதி ரோதம் செவ்வாய்க் கிழமையன்று காலமானார்.இந்தச் செய்தியினை கிளிண்டன் பவுண்டேஷன் குழுவினர் அறிவித்தனர். டோரதி ரோதம் 1919ம் வருடம் ஜூன் மாதம் 4ம் திகதி பிறந்த இவருக்கு தற்போதைய வயது 92 ஆகும்.
டோரதி ரோதம் 2000ம் வருடம் நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்தில் அதிபர் கிளிண்டனுடன் இந்திய பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில நாட்களாக டோரதி ரோதம் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், ஹிலாரி கிளிண்டன் தான் மேற்கொள்ளவிருந்த துருக்கி, பிரிட்டன் சுற்றுப் பயணங்களை ரத்து செய்திருந்தார்.
தற்போது ஹிலாரி கிளிண்டன் தாயார் டோரதி ரோதம் இறந்துவிட்டதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் நேட்டோ படைகளின் ராணுவத் தாக்குதல்கள் நிறுத்தம்.
லிபியாவில் ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற ஏழு மாதங்கள் செயலாற்றிய நேட்டோ நேற்று முன்தினம் நள்ளிரவோடு தனது ராணுவப் பணியை முடித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து லிபியாவின் புதிய இடைக்கால பிரதமராக அப்துர்ரகீம் அல் கைப் நியமிக்கப்பட்டுள்ளார். லிபியாவில் மும்மர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரியில் மக்கள் போர்க் கொடி தூக்கினர்.
கடாபி ராணுவம் மக்கள் மீது ராணுவ வன்முறை நிகழ்த்தியது. லிபிய மக்களைக் காப்பதற்காக ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி லிபியா மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. மார்ச் 31ம் திகதி முதல் நேட்டோ வான்வழிக் கண்காணிப்பில் ஈடுபட்டது. தொடர்ந்து கடாபியின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
மொத்தம் 26 ஆயிரம் முறை நடந்த தாக்குதலில் 9,600 முறை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 5,900 இலக்குகள் அழிக்கப்பட்டன. அவற்றில் 600 கவச வாகனங்கள், 400 பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை அடங்கும்.
கடாபி ஆட்சியில் வாங்கிக் குவிக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள் நேட்டோவின் ராணுவ நடவடிக்கையில் அழிக்கப்பட்டு விட்டன. எனினும் இன்னும் பல ஆயுதங்கள் குறிப்பாக வீரர்கள் தங்கள் தோளில் தாங்கி ஏவுகணைகளை ஏவக் கூடிய ஆயுதங்கள் லிபியாவில் இருப்பதாக நேட்டோ கவலை தெரிவித்தது. இந்த ஏவுகணைகள் மூலம் பயணிகள் விமானத்தையே ஒருவர் தரையில் இருந்தபடி தாக்க முடியும்.இதனால் நேற்று ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இதுகுறித்து ரஷ்யா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில் இந்த ஆயுதங்கள் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கிவிடாமல் இருக்க லிபிய அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளும் சீனா.
சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் இரண்டாம் கட்டமாக சீனா நேற்று ஆளில்லா விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.அமெரிக்கா, ரஷ்யா இணைந்து செயல்படுத்தி வரும் மிர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக சீனா தனக்கான ஒரு விண்வெளி நிலையத்தை 2020க்குள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 29ம் திகதி “லாங் மார்ச் 2எப்/ஜி” என்ற ஏவுகணை மூலம் தியான்காங்-1 அல்லது விண்ணுலக சொர்க்கம் என்ற விண்வெளி ஆய்வுக் கூடம் வெற்றிகரமாக விண்ணில் நிறுவப்பட்டது.இதையடுத்து இரண்டாம் கட்டமாக நேற்று ஷென் ஷாவூ-8 என்ற ஆளில்லா விண்கலம் லாங் மார்ச் - 2 எப் என்ற ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
9 மீ நீளமும், 2.8 மீ விட்டமும், 8 டன் எடையும் கொண்ட இந்த விண்கலம் பலமுறை திருத்தி வடிவமைக்கப்பட்டு பின் ஏவப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து வானில் 343 கி.மீ உயரத்தில் சுற்றி வரும்.சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூக்குவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலையில் ஏவப்பட்ட இந்த விண்கலம் இன்னும் ஓரிரு நாட்களில் தியான்காங்குடன் இணையும். இந்த இணைவு 180 நாட்கள் நீடிக்கும்.
இந்த இணைவு வெற்றிகரமாக நிகழ்ந்து விட்டால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளித் துறை ஒன்றை நிறுவும் முயற்சியை சீனா தொடரும்.அதற்காக ஷென் ஷாவூ-9 மற்றும் 10 ஆகிய விண்கலங்கள் 2012க்குள் ஏவப்படும் விண்வெளித் துறை உருவாகி விட்டால் 60 டன் எடை கொண்டதும், மனிதர்கள் பணியாற்றக் கூடியதுமான சர்வதேச விண்வெளி நிலையத்தை 2020க்குள் சீனா வெற்றிகரமாக உருவாக்கிவிடும்.
சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத் திட்டம் குறித்து அந்நாட்டில் வெளிவரும் குளோபல் டைம்ஸ் பத்திரிகை சில கேள்விகளை எழுப்பியுள்ளது.இதுகுறித்து அப்பத்திரிகையில் எழுதப்பட்டிருப்பதாவது: இதுபோன்ற விண்கலங்களை ரஷ்யா 30 ஆண்டுகளுக்கு முன்பே அனுப்பி விட்டது. விண்கலங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளின் விட்டம், கொள்திறன் ஆகியவை அமெரிக்க, ரஷ்ய ஏவுகணைகளை விட பின்தங்கித் தான் உள்ளன.
அந்நாடுகளைப் பார்த்து இதுபோன்ற ஆளில்லா விண்கலங்களை சீனா ஏவுகிறது. அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்கள் பாதுகாப்பை விட அரசியல் குறிக்கோள்களுக்காக விண்கலங்களை ஏவுகின்றன.இதுபோன்ற அசகாயச் செயல்கள் வேண்டுமா அல்லது நாட்டின் பாதுகாப்பு முக்கியமா என்பதை சீனா முடிவு செய்ய வேண்டும். மக்களின் வாழ்க்கைக்குத் தான் சீனா முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு உதவிய பெண்ணுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவிய பெண்ணுக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சவுதி அரேபிய பெண் ஒருவர்(பெயர் வெளியிடப்படவில்லை) கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பெண் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓகாஸ் என்ற பத்திரிகை “அல்கொய்தா லேடி” என்று குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 45 வயதிருக்கும் என்ற தகவலை மட்டும் வெளியிட்டது.இதற்கிடையில் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் அல்கொய்தா தீவிரவாதிகள் தங்குவதற்கு இடம் அளித்தது, நிதி திரட்டி அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அனுப்பியது, ஆயுதங்கள் வைத்திருந்தது, சவுதியில் தீவிரவாத செயல்களை தூண்டியது தெரியவந்தது.
அந்த பெண் மீதான விசாரணை கடந்த ஜூலை 31ம் திகதி தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீவிரவாதிகளுக்கு உதவிய பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் சவுதியில் பெண் ஒருவர் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை.
ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் முகாம் அமைக்க அமெரிக்கா திட்டம்.
ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் ராணுவ முகாம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.அமெரிக்க ராணுவம் ஈராக்கில் முகாமிட்டுள்ளது. தற்போது அங்கு ஓரளவு அமைதி திரும்பியதை தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அங்கிருந்து முற்றிலும் வாபஸ் பெறப்பட உள்ளது.
இதை அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகளும், தூதர்களும் மற்றும் ஈராக்கை சுற்றியுள்ள பல நாடுகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஏனெனில் ஈராக்கில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாத நிலையில் படைகள் முற்றிலும் வாபஸ் பெறுவது சரியல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே 20 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை தொடர்ந்து அங்கேயே நிறுத்த ஈராக் அரசுடன் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் பட்சத்தில் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், பக்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் ஆகிய நாடுகளில் ராணுவ முகாம்களை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இங்கு ராணுவ ரோந்து கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. அவை தவிர குவைத்தில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.அதற்காக குவைத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பதில் கூடிய விரைவில் தெரிய வரும்.
எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டாம்: சிரிய அதிபர்.
சிரியாவில் அதிபர் பஷார்-அல்-ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேரை ராணுவம் கொன்று குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பஷார் அல்-ஆசாத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஆசாத்துக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது நடத்தப்படும் ராணுவ தாக்குதலை நிறுத்தி விட்டு அரசியல் சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் லண்டனில் இருந்து வெளிவரும் “சண்டே டெலிகிராப்” என்ற பத்திரிகைக்கு அதிபர் ஆசாத் பேட்டி அளித்துள்ளார்.அதில் கூறியுள்ளதாவது, இப்பகுதியில் சிரியா ஒருமையமாக திகழ்கிறது. அதில் ஐரோப்பிய நாடுகள் விளையாட நினைத்தால் மிகப் பெரிய பூகம்பத்தை சந்திக்க நேரிடும். சிரியாவில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அது இப்பகுதி முழுவதும் பற்றி எரியும்.
சிரியாவை துண்டாட அவர்கள்(ஐரோப்பிய நாடுகள்) நினைக்கிறார்கள். சிரியாவை ஆப்கானிஸ்தான் போன்று மாற்ற நினைக்கிறார்களா? அல்லது 10 ஆப்கானிஸ்தான் ஆக மாற்ற வேண்டும் என கருதுகிறார்களா? அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கும், இங்கு ஏற்பட்டுள்ள புரட்சிக்கும் வித்தியாசம் உள்ளது.எனவே மக்களின் போராட்டத்துக்கு நான் வளைந்து கொடுக்க மாட்டேன். எனவே எங்கள் நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டாம் என எச்சரித்தார்.