Friday, November 4, 2011

இன்றைய செய்திகள்.

மழையுடன் கூடிய காலநிலை மாத இறுதிவரை தொடரும்!- வானிலை அவதான நிலையம்.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மாத இறுதிவரை தொடரும் என்றும் மன்னார் மாவட்டத்திலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அவதான நிலையத் தகவல்களின்படி மன்னார் மாவட்டத்தில் கடந்த முதலாம் திகதியே அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மன்னாரில் அன்றைய தினம் 103.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், களுத்துறையில் 76.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் யாழ்ப்பாணத்தில் 56.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள வர்த்தகர்களை நெருக்கடிக்குள்ளாக்காது புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்!– ரணில்.
சிங்கள வர்த்தகர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதனை விடுத்து புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் புலிகளுக்கு காணப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.வர்த்தக முயற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள வர்த்தகர்களை துன்புறுத்தாது, புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்N போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.போரின் போது சொத்துக்களை இழந்தவர்களுக்கும் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு புலிகளின் சொத்துக்களை பயன்படுத்த முடியும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் முகவர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.க்கு மட்டும் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான சொத்துக்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் பராமரிப்பில் இலங்கையில் உள்ள முக்கிய கிரிக்கெட் மைதானங்கள்.
இலங்கையில் உள்ள முக்கிய கிரிக்கெட் மைதானங்களை பராமரிக்கும் பணியை இராணுவம் ஏற்கவுள்ளது. இந்த மைதானங்களை பராமரிக்கத் தேவையான பணம் தன்னிடம் இல்லை என்று கிரிக்கெட் வாரியம் கூறுகிறது.
ஆனால் இப்படி மைதானங்களை இராணுவத்திடம் ஒப்படைக்கும் செயல் இராணுவமயமாக்கல் இலங்கையில் மோசமான அளவுக்கு சென்றுள்ளதை காட்டுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை கூட்டாக நடத்திய இலங்கை, அந்தப் போட்டிகளுக்காக இரண்டு புதிய கிரிக்கெட் அரங்குகளை கட்டியது.அதில் ஒன்று ஜனாதிபதியின் அம்பாந்தோட்டையில் இருக்கிறது. அதுதவிர ஏற்கனவே இருந்த ஒரு மைதானம் முழுமையாக சீரமைக்கப்பட்டது.
இதற்காக பெரும் பொருள் செலவிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக வாங்கப்பட்ட கடன் இன்னமும் அடைக்கப்படாததால் கிரிக்கெட் வாரியம் பெரும் கடன் சுமையில் இருக்கிறது.இந்த நிலையில் தரைப் படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றும் தலா ஒரு மைதானத்தை பராமரிப்பார்கள் என்று விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
பரமரிப்புப் பணிகளை பொறுப்பெடுத்துக் கொள்வதுடன், போட்டி நடக்கும் நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் படையினர் கவனித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.கிரிக்கெட் வாரியத்தின் பண இருப்பு மிகவும் குறைந்து போய்விட்டதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வாரிய உறுப்பினருமான சிதாத் வெட்டிமுனி பிபிசியிடம் தெரிவித்தார்.
அதேநேரம் படையினரின் பங்களிப்பு தமக்கு அதிர்ச்சியை அளிப்பதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஏற்கனவே நாட்டில் காய்கறிகளை விற்பது, நகர்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்ற பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்புச் செயலரின் தாளத்துக்கு ஏற்ப படையினர் ஆடுவதாக தெரிவித்தார்.
இப்படிச் செய்வதன் காரணமாக பொதுமக்களுக்கான வேலை வாய்ப்புக்கள் பறிபோவதுடன் இராணுவத்தின் ஊக்கத்தையும் அது குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வாரியம் கடந்த பல மாதங்களாக விளையாட்டு வீரர்களுக்கு சம்பளத்தை அளிக்கவில்லை.
புதிதாக பொறுப்பேற்றுள்ள கிரிக்கெட் வாரியத் தலைவர் தனக்கு முன் அந்தப் பொறுப்பில் இருந்தவர் மைதானங்களை கட்ட ஏகப்பட்ட பணத்தை செலவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்.ரசிகர்களோ ஏனைய பிரசித்தி பெற்ற மைதானங்களும் பராமரிப்பின்றி புறக்கணிக்கப்படுவதாக வருந்துகின்றனர்.
பாதுகாப்பின் போது வெளியார் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது!– ஜனாதிபதியின் செயலாளர்.
முக்கியஸ்தர்களின் பாதுகாப்புக்காக செல்லும் போது பொலிஸாரைத் தவிர ஏனையவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது என்று ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இதற்கான பணிப்புரையை பொலிஸார் பரிசோதகர்களுக்கு விடுத்துள்ளார்.
முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு கடமைகளின் போது பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடமையில் இருக்கவேண்டும்.அவர்கள் பொலிஸாரை தவிர வெளியார் எவரும் குறித்த பாதுகாப்பு கடமையின் போது ஆயுதங்களை வைத்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று லலித் வீரதுங்க பணித்துள்ளார்.
இதுவரை காலமும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுகள் பொலிஸாரின் கீழ் இடம்பெறவில்லை.புதிய நடைமுறையின்படி அவையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. 
துமிந்த சில்வாவை நான் பார்வையிடச் செல்லவில்லை – கெஹலிய ரம்புக்வெல்ல.
கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நான் பார்வையிடச் செல்லவில்லை என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐந்து அமைச்சர்கள் துமிந்தவை பார்வையிடச் சென்றதாகவும், அந்த ஐந்து பேரின் பட்டியலில் தமது பெயர் அடங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்தவை பார்வையிடச் செல்ல தமக்கு நேரம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.துமிந்த சில்வா தொடர்பில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும் என்றும், எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்த சீன விண்கலம்.
பூமிக்கு மேலே 343 கி.மீ தொலைவில் சீனா உருவாக்கி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் அந்நாட்டின் ஷென்ஷாவூ-8 என்ற ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது.
அமெரிக்கா, ரஷ்யா இணைந்து செயல்படுத்தி வரும் மிர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனக்கான ஒரு விண்வெளி நிலையத்தை 2020க்குள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.இதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 29ம் திகதி தியான்காங்-1 என்ற விண்வெளி ஆய்வுக் கூடம் வெற்றிகரமாக விண்ணில் நிறுவப்பட்டது.
சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூக்குவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் ஷென்ஷாவூ-8 என்ற ஆளில்லா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஷென்ஷாவூ-8 விண்கலம் நேற்று தியான்காங்குடன் அமைதியான முறையில் இணைந்தது.
சஹாரா பாலைவனத்தில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் மகன்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சஹாரா பாலைவனத்தில் ஒளிந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கடாபியின் மகன்களில் ஒருவர் செய்ப் அல் இஸ்லாம் கடாபி. லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்த போது சில முக்கிய ராணுவத் தலைவர்களுடன் லிபிய எல்லையிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.டுயெரக் பழங்குடி இன மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். இந்த இன மக்கள் வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் வாழ்கின்றனர்.
தப்பியோடியுள்ள கடாபியின் மகனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடி வருகிறது. உள்நாட்டுப் போரின் போது சில ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொது மக்களை கொன்று குவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.எனினும் ஆப்பிரிக்காவில் சில நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பரந்து விரிந்த பாலைவனப் பகுதியில் நீண்ட நாள்கள் உயிர் வாழ முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் ஆதம் தியாம் தெரிவித்துள்ளார்.
எனினும் மாலி நாட்டுப் பாலைவனப் பகுதிகளில் சில இடங்களில் நீரும், விலங்குகளும் உள்ளன. ஆனால் அப்பகுதி அல் காய்தா பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.லிபிய நாட்டில் இஸ்லாமிய இயக்கங்களை அடக்கி ஒடுக்கிய கடாபி குடும்பத்தவரை அவர்களுக்குப் பிடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானை தாக்கி அழிக்கும் இஸ்ரேலின் ஏவுகணை சோதனை வெற்றி.
இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இந்த ஏவுகணை ஈரான் வரை பாய்ந்து சென்று தாக்கும் சக்தி படைத்தது என்று தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தற்காலத்துக்கு ஏற்ற வகையில் பல அதிநவீன ஏவுகணைகள் தயாரிப்பில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக அதிக தூரம் சென்றும் தாக்கும் அதிநவீன ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது.
டெல் அவிவ் நகரின் புறநகரில் உள்ள ராணுவ முகாமில் இருந்து ஏவுகணை வெற்றிகரமாக பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழித்தது என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் சர்வதேச பத்திரிகைகள் கூறுகையில், இஸ்ரேல் சோதனை செய்த ஏவுகணை ஈரான் வரை சென்று தாக்கும் சக்தி படைத்தது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் படைத்தது என்று தெரிவித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் மூன்று தலைகளுடன் பிறந்த குழந்தை.
இந்தோனேசியாவில் மூன்று தலைகளுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வடக்கு சுமத்ராவின் பின்ஜாய் நகரில் வசிக்கும் கூலி தொழிலாளியின் மனைவிக்கு கடந்த சனியன்று ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த மகிழ்ச்சியை அந்த தம்பதியால் கொண்டாட முடியவில்லை. காரணம் குழந்தை வழக்கத்துக்கு மாறாக 3 தலைகளுடன் பிறந்தது.
4 கிலோ எடையில் பிறந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் குழந்தை நீண்ட காலத்துக்கு உயிருடன் இருக்கும் என்று கூறமுடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவர் டிம்யானா கூறுகையில், நரம்பு குழாய் பாதிப்பு காரணமாக வழக்கத்துக்கு மாறாக இக்குழந்தை 3 தலைகளுடன் பிறந்துள்ளது. அதற்கு தீவிர சிகிச்சை அளிப்பதுடன் திரவ உணவு கொடுக்க முயற்சித்து வருகிறோம். உடல் நிலை மோசமாக இருப்பதால் நீண்ட காலம் உயிருடன் இருக்கும் என கூறமுடியாது என்றார்.மேலும் சிறந்த மற்றும் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட மேடன் ஹஜ் ஆதம் மாலிக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முகம்மது நபி(ஸல்) குறித்த கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பத்திரிக்கைக்கு தீ வைப்பு.
பிரான்ஸ் நாட்டின் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தம் அட்டைப் படத்தில் “சிரித்துச் சாகவில்லை என்றால் 100 கசையடி” என்று முகம்மது நபி(ஸல்)கூறுவதாக ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டது.
இதைக் கண்ட இஸ்லாமிய பெருமக்கள் கொதித்துப்போய் பாரிஸ் நகரில் இருந்த இந்த பத்திரிக்கையின் தலைமையகத்திற்குள் யன்னல் வழியாக பெட்ரோல் வெடிகுண்டை வீசினர். பத்திரிக்கை அலுவலகம் தீப்பற்றி எரிந்தது. பிரெஞ்சு அரசாங்கம் இது குறித்து கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது.சார்லி ஹெப்டோவின் இணையத்தளம் ஒன்று மெக்கா நகரத்தின் படங்களை வெளியிட்டதற்காக கடுமையாகத் தாக்கப்பட்டது.
இதுகுறித்து பிரான்சு நாட்டின் பிரதமர் பிராங்கோயிஸ் பில்லோன், ஜனநாயகத்தின் மதிப்பு அதன் பேச்சு சுதந்திரத்தில் தான் அடங்கியுள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்திற்கு இழுக்கு ஏற்படும் காரியத்தை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. எந்த காரணத்துக்காகவும் வன்முறையை நியாயப்படுத்த இயலாது என்று கடுமையாகக் கூறினார்.
பிரான்சின் அரசியல்வாதிகள் தமது எதிர்ப்பை ஒட்டுமொத்தமாகத் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் சார்லி ஹெப்டோ உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ அது ஒரு செய்தித்தாள். பத்திரிக்கைச் சுதந்திரம் என்பது பிரான்சின் உயிர்மூச்சாகும். எனவே அனைத்து மக்களும் பத்திரிக்கைகளை மதித்துப் போற்ற வேண்டும் என்றார்.
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் எதிர்க்கட்சித் தலைவரான ஃபிராங்க்கோய்ஸ் ஹொலாண்டே, என்பவர் “லே மாண்டே” என்ற பத்திரிகைக்கு இச்சம்பவம் குறித்த தனது பேட்டியில் பின்வருமாறு கூறினார். பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கும் நம்பிக்கைகளின் மதிப்புக்கும் இடையிலான போராட்டம் நிரந்தரமானது தான் என்றாலும் அடிப்படைவாதத்தை நாம் எந்த வடிவத்திலும் அனுமதிக்கக்கூடாது என்றார்.
பிரெஞ்சு முஸ்லீம் கவுன்சில் முகம்மது நபி(ஸல்)பற்றய கேலிச்சித்திரத்தையும் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கை அலுவலகத்திற்கு நெருப்பு வைத்ததையும் கண்டித்தது. இஸ்லாமியருக்கு உண்டான வருத்தத்தையும் பதிவு செய்தது.கடந்த 2007ல் இந்தப் பத்திரிக்கை இதுபோல முஸ்லீம்களைக் கேலி செய்ததால் பலரது கண்டனத்துக்கும் கோபத்துக்கும் ஆளானது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் வன்முறையாளர்களாக மாறும் குழந்தைகள்: கவலையில் பெற்றோர்கள்.
பிரித்தானிய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மூர்க்க குணம் கொண்டவர்களாக இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். பெரும்பாலும் குழந்தைகள் மிகுந்த தொல்லை தருவதாகவே உள்ளன.இதனால் பலரும் தங்கள் பிள்ளைகளை விலக்கி வைக்க நினைக்கின்றனர். இந்த முடிவு கவலையளிப்பதாக உள்ளது என குழந்தைகள் காப்ப தலைமை நிர்வாகி ஆனி மேரி கேரி கூறியுள்ளார்.
குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சி குறித்து 2000 பிள்ளைகளிடம் சமீபத்தில் ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டது. அதில் ஐந்தில் இரண்டு குழந்தைகள் முழுமையான சிந்தனை வளர்ச்சி பெறாத நிலையில் மூர்க்கமாக நடந்து கொள்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
பெற்றோர்கள் பிள்ளைகளை விலக்கி வைத்தால் எதிர்கால பிரிட்டனின் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.நல்ல பிள்ளைகள் குறித்து நாம் கவலைப்படுவதில்லை. ஆனால் சில பிள்ளைகள் அடி, தடியில் ஈடுபடும் போது நாம் அவற்றை சகஜமாக ஏற்றுக்கொள்கிறோம். முறையாக வளர்க்கப்படாத பிள்ளைகளே பெரும்பாலும் மூர்க்க குணமும் ஆபாசமான பேச்சும் உடையவராய் இருக்கின்றனர்.
இவர்களின் நிலையை நாம் மாற்றியமைக்க முடியும். இவர்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை குறித்துப் பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை வெறுக்காமல் அவர்களிடம் அன்பாக பழக வேண்டும் என்று ஆனி மேரி கேரி பிரச்சாரம் செய்கிறார்.குழந்தை வளர்ப்பு சீராக இருந்தால் பெற்றோரின் வாழ்வும் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் நிறைந்து இருக்கும் என்பதை உணர்ந்து அவரவர் தத்தம் பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க முன்வர வேண்டும் என்று ஆனி தெரிவித்தார்.
இந்தியா ஆதரவான நாடு: அந்தஸ்து வழங்கி பாகிஸ்தான் கௌரவிப்பு.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால் வர்த்தகம் உள்பட பல துறை உறவுகளில் ஒத்துழைப்பு இல்லை.
பாகிஸ்தான் மீது முதலில் போர் தொடுக்க மாட்டோம், தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்று இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.மேலும் நட்பு நாடு அல்லது மிகவும் ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்காமல் இருந்தது. ஆனால் கடந்த 1996ம் ஆண்டே பாகிஸ்தான் ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா வழங்கிவிட்டது.
இந்நிலையில் இந்தியாவுக்கு ஆதரவான நாடு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கர் அறிவித்தார்.
இதுகுறித்து பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். பல ஆண்டு இழுபறிக்கு பின் ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் நேற்று வழங்கி அறிவித்தது.இதுகுறித்து தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிர்தோஸ் ஆஷிக் அவான் கூறுகையில், கேபினட் கூட்டத்தில் நீண்ட ஆலோசனைக்கு பின் இந்தியாவுக்கு ஆதரவான நாடு அந்தஸ்து வழங்க ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் இருநாட்டு வர்த்தக உறவு மேம்படும் என்றார்.
ஜேர்மனியின் உதவிக்கு பாராட்டுகளை தெரிவித்த நேட்டோ.
கடாபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அவரால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனியும் ஈடுபட்டது. ஜேர்மன் விமானங்கள் ஆப்கானிஸ்தான் வந்த பின்பு அங்கிருந்த நேட்டோ விமானங்கள் லிபியாவுக்குப் பறந்தன. இவை லிபியாவில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டது.
ஜேர்மனி லிபியா மீது நேட்டோ நடத்திய போரில் நேரடியாக ஈடுபடவில்லை. விலகியே இருந்து வந்தது. ஐ.நா லிபியா மீது நேட்டோ போர் தொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த போது ஜேர்மனி இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.இரண்டு ஜேர்மனிகளும் இணைந்த பிறகு எல்லா விடயங்களிலும் முன்பு போல ஜேர்மனி, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இயலவில்லை. கடாபி விடயத்திலும் அப்படித்தான் ஒதுங்கிக் கொண்டது.
பின்பு ஜேர்மனியானது துப்பறியும் விமானங்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி நேட்டோ படைகளுக்கு உதவியது. இதுமட்டுமல்லாமல் கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் நிதியுதவி அளித்து ஜேர்மனி உதவியது.
இதுகுறித்து நேட்டோ படையின் தலைவர் கூறுகையில், நேட்டோ படையில் ஜேர்மனியின் பங்கு மிகச்சிறப்பானதாக இருந்தது. லிபியா மீது நேட்டோ படைகள் போர் தொடுத்தது மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்திலும் தான் என்று லிபியா நடவடிக்கைக்கான காரணங்களை எடுத்துரைத்தார்.
மேலும் முன்பு ஐரோப்பிய எல்லைப் பகுதிகளுக்கும் வடஆப்பிரிக்காவுக்கும் இடையில் ஒரு நிலையான தன்மை இல்லை. இப்போது இந்த நிலை மாற்றப்பட்டுவிட்டது. இனி ஐரோப்பாவின் எல்லைப் பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளால் தொல்லை எதுவும் ஏற்படாது என்று உறுதிபடக் கூறினார்.ஜேர்மனியின் நடவடிக்கை குறித்து தான் மகிழ்ச்சி அடைந்ததாக ஒபாமாவும் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியல்: ஒபாமா முதலிடம்.
உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் இடத்தில் உள்ளார்.கடந்தாண்டு வெளியான பட்டியலில் ஒபாமா முதல் இடத்தை இழந்திருந்தார். ஆனாலும் பின்லேடன், கடாபி ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு பட்டியலில் அவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
ரஷ்யாவின் விளாடிமிர் புடின் இரண்டாவது இடத்திலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் நான்காவது இடத்திலும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 16வது இடத்திலும் உள்ளனர்.
வளர்ச்சி இலக்குகளை பெற தனியார் பங்களிப்பு தேவை: தலைவர்கள் அறிவிப்பு.
ஐ.நா சபை நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளை ஜி20 நாடுகள் அடைய தனியார் பங்களிப்புத் தேவை என்று உலக பெரு நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழில் வர்த்தகசபை சம்மேளங்களின் கூட்டமைப்பு(பிக்கி) பரிந்துரைத்துள்ள வளர்ச்சிக்கான பி-20 செயல் திட்டத்தில் இக்கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.பி-20 செயல் திட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உணவுப் பாதுகாப்பு, நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் தனியார் பங்களிப்பு அவசியம்.
உணவுப் பாதுகாப்பே சர்வதேச முன்னுரிமை பெற்ற இலக்காக உள்ளது. இதை அடைய வேளாண் உணவுப் பொருள்கள் உற்பத்தியில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் உணவுப் பொருள்கள் விலையில் ஏற்ற இறக்கங்களைக் குறைத்து, நிலைப்புத் தன்மையை ஏற்படுத்த முடியும்.
உலக அளவில் வேளாண் கொள்கையில் ஒருங்கிணைவை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்றுமதி தடைகளின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். வியாழக்கிழமை தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் பிரதான கவனத்தைப் பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிக்கியின் துணைத் தலைவர் ஆர்.வி. கனோரியா, யுனிலிவர் முதன்மைச் செயல் அதிகாரி பவுல் போல்மேன் ஆகியோர் இந்த செயல்திட்டத்தைத் தயாரித்து உள்ளனர்.
சீன அரசை எதிர்த்த ஓவியருக்கு ரூ.10 கோடி வரி விதிப்பு.
சீனாவின் பிரபல ஓவியர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான அய்வெவி(54) ரூ.10 கோடி வரி செலுத்த அந்நாட்டு அரசு கெடு விதித்துள்ளது.பெய்ஜிங் பேக் கலாசார வளர்ச்சி நிறுவனம் சார்பாக செலுத்த தவறிய ரூ.10 கோடி வரி மற்றும் அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அய்வெவிக்கு வருவாய் துறை கெடு விதித்துள்ளது.
இது குறித்து அய்வெவி கூறுகையில், வரி செலுத்த கோரி கெடு விதித்துள்ள கலாசார நிறுவனம் என் மனைவி லுகுயிங் பெயரில் செயல்படுகிறது.ஆளும் அரசு, சட்ட திட்டத்துக்கு எதிரான பல்வேறு கருத்துகளை பேசுவது, எழுதுவதாலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு இத்தகைய பழியை என் மீது சுமத்துகிறது.என்னை கைது செய்ய எந்தவொரு ஆதாரமும் கிடைக்காததால் வரி பாக்கி வைத்ததாக கூறி மார்ச் மாதம் பொலிசாரால் கைது செய்யப்பட்டேன்.
பின் 80 நாட்களுக்குப்பின் ஜாமீனில் வெளிவந்தேன். மேலும் வரி மற்றும் அபராதத்தை தங்களால் செலுத்த முடியாது.ஏனெனில் பேக் நிறுவனத்தின் கணக்கு புத்தகத்தை மார்ச் மாதத்திலே அரசு பறிமுதல் செய்து விட்டது என்று அவர் தெரிவித்தார்.
ஜப்பான் புகுஷிமா அணு உலையில் கதிரியக்க வாயு கண்டுபிடிப்பு.
ஜப்பானின் கிழக்கு பகுதியில் கடந்த மார்ச் 11ம் திகதி 9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி அலைகள் பொங்கி ஊருக்குள் புகுந்தது.இந்த பேரழிவில் 15 ஆயிரத்து 828 பேர் பலியானார்கள். 3 ஆயிரத்து 760 பேரை காணவில்லை. ஒரு லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
நிலநடுக்கத்தால் புகுஷிமாவில் உள்ள டச்சி அணுமின் நிலைய அணு உலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டு கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டது.கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் ஒரு அணு உலையில் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.அந்த அணு உலையில் கதிரியக்க தன்மையுள்ள செனான் வாயு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். செனான் வாயு விரும்பத்தகாத அணுவினைகளினால் உருவாவதாகும்.
இதையடுத்து போரிக் அமிலம் ஊற்றி அதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இது குறித்து டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனியின் செய்தி தொடர்பாளர் ஒசாமு யோகோகுரா கூறுகையில்,“அணு உலையில் வெப்பம், அழுத்தம் மற்றும் கதிரியக்க அளவில் எந்த உயர்வும் இல்லை. அணு உலையில் செனான் வாயு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரிய பிரச்னை அல்ல. அணு உலையின் வெளியே எந்த கதிரியக்க கசிவும் இல்லை” என்றார்.
பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றங்கள் விரைவுப்படுத்தப்படும்: இஸ்ரேல்.
மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் யூதக் குடியேற்றங்களை விரைவுபடுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.மேலும் பாலஸ்தீன அதிகாரசபைக்கான நிதிப் பரிமாற்றங்களையும் தற்காலிகமாக முடக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.ஐ.நாவின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசாரத்திற்கான அமைப்பினை யுனெஸ்கோவில் முழு நேர உறுப்புரிமையைப் பாலஸ்தீனம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்தே இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் இஸ்ரேலின் இத்தீர்மானம் சமாதான முயற்சிகளை விரைவில் சிதைக்க வல்லதென பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.இதேவேளை யுனெஸ்கோவின் உறுப்புரிமையைப் பாலஸ்தீனம் பெற்றுக் கொண்டதை ஓர் அனர்த்தமென இஸ்ரேலிய அரசாங்கம் வர்ணித்துள்ளது.
இதுகுறித்து பி.பி.சிக்கு கருத்துத் தெரிவித்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் யிகாஸ் பல்மோர் கூறுகையில், ஐ.நா. மற்றும் சர்வதேச அரங்குகளில் இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு பதிலாக நாமும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.இவ்வாறான முயற்சிகளில் நேரத்தை வீணாக்காது அவர்கள்(பாலஸ்தீனர்கள்) பேச்சுக்களைத் தொடரவேண்டும், பாலஸ்தீனர்கள் மீதான அழுத்தங்களை அதிகரிப்பதற்காகவே குடியேற்றங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே யூதக் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதை விரைவுபடுத்துவதற்கு பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.யுனெஸ்கோவில் உறுப்புரிமையைப் பெற்றுள்ள பாலஸ்தீனம் ஐ.நா.விலும் உறுப்புரிமையைப் பெறும் முயற்சிகளை முன்னெடுக்கலாம் எனக் கருதும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், பாலஸ்தீனத்திற்கான ஒரு தண்டனையாகவும் இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பாலஸ்தீன அதிகாரசபையின் சார்பில் சேகரிக்கப்பட்ட நிதியை முடக்குவதற்கான இஸ்ரேலின் தீர்மானம் பாலஸ்தீனர்களின் நிதியைக் கொள்ளையடிப்பதைப் போன்றதென பாலஸ்தீன அதிகாரசபை தெரிவித்துள்ளது.யூதக்குடியேற்றங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு பாலஸ்தீனம் கோரிவரும் நிலையில் இஸ்ரேல்-பாலஸ்தீன சமாதானப் பேச்சுக்கள் ஒருவருடத்திற்கு முன்னர் முறிவடைந்திருந்தன.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்பில் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான யூதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சர்வதேச சட்டத்தின் கீழ் இக்குடியிருப்புக்கள் சட்ட விரோதமானவை என்ற போதிலும் இஸ்ரேல் இதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்தோருக்கு கியூபெக்கில் பெரும் வரவேற்பு.
கியூபெக் நாட்டு அரசாங்கம் புலப்பெயர்ந்தோருக்கு தொடர்ந்து வரவேற்பு அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.இதற்கு முன்பு பிரெஞ்சு மொழி தெரிந்தோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கியூபெக் நாட்டிற்குள் வந்த பிறகு அவர்கள் பிரெஞ்சு மொழியைப் படித்து, பிரெஞ்சு மக்களுடன் ஒன்றி பிரெஞ்சு கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இத்தகவலை புலம்பெயர்ந்தோர் துறை அமைச்சர் கேத்லீன் வீல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 57,200 பேர் இந்த ஆண்டும், 53800 பேர் 2012லும் 2013,14களில் ஏறத்தாழ இதே எண்ணிக்கையிலும் புலம்பெயர்ந்தோர் வருகை அமையப் போகிறது.எதிர்க்கட்சிகள் புலம்பெர்ந்தோர் பிரெஞ்சு மக்களுடன் பண்பாட்டு ரீதியில் இணைந்து வாழ முடியாத போது அவர்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் முதலாளிகள் புலம்பெயர்ந்தோருக்கு அனுமதி அளிக்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வருகின்றனர். இதற்கு காரணம் புலம்பெயர்ந்த மக்களை  வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதே.இரண்டாம் உலகப்போரின் போது பிறந்தவர்கள் எல்லாம் இப்போது ஓய்வூதியம் பெறத் தொடங்கி விட்டனர். உழைக்கும் வயதினர் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே பிரெஞ்சு பேசும் புலம்பெயர்ந்தோர் கியூபெக்கில் பெரும் வரவேற்பு பெறுகின்றனர்.
எகிப்து கப்பலில் தீ விபத்து: 1229 பேர் உயிர் தப்பினர்.
செங்கடலில் சென்று கொண்டிருந்த எகிப்து நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 1229 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் ஜோர்டான் வழியாக எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது.
கப்பலில் இருந்த 1,230 பயணிகளில் பெரும்பாலானோர் எகிப்து நாட்டினர். கப்பல் ஜோர்டான் நாட்டின் அகுபா துறைமுகம் தாண்டி எகிப்துக்கு அருகே வந்தபோது திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.அதிர்ச்சியடைந்த கப்பல் அதிகாரிகள் எகிப்து கடற்படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கடற்படையினர் கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பலியானார். மற்ற 1,229 பேர் உயிர் தப்பினர். உயிர் தப்பியவர்களில் பலர் சிறு சிறு படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டன.மேலும் பல பயணிகள் கடலில் குதித்து நீந்தியபடி கரை சேர்ந்தனர். பத்திரமாக மீட்கப்பட்டவர்கள் மற்றொரு பயணிகள் கப்பலில் அருகில் உள்ள நுவெய்பா துறைமுகம் அனுப்பி வைக்கப்பட்டதாக எகிப்து போக்குவரத்து அமைச்சர் அலி ஜெய்ன் அல் அபிடின் தெரிவித்தார். எனினும் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF