குறிப்பாக பல முக்கிய வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இணைப் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமைப் பதவியை பறிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ரணில் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளும் போது சதித் திட்டத்தின் மூலம் கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதற்கு கிளர்ச்சிக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ராஜபக்ஷவின் விசுவாசி : விக்கிலீக்ஸ்.
2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு சரியான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தற்போதைய பிரதம நீதியரசர் பக்கச்சார்பற்ற நிலையிலும், சுயாதீனமாகவும் செயற்படுவாரா என்பது சந்தேகமே என கொழும்பைச் சேர்ந்த மனித உரிமைச் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு டெலிகிராப் என்னும் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதியின் குடும்பத்தார் சம்பந்தப்பட்ட வழக்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்தில் அரசியல் நியமனத்தின் மூலமே ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை ஈடு செய்ய பஸ் கட்டணங்களை உயர்த்த நேரிடும் : கெமுனு.
கடந்த 29ம் திகதி நள்ளிரவு முதல் டீசலின் விலை எட்டு ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிபொருள் விலையேற்றத்தினால் குறுந்தூர பஸ்கள் 500-750 ரூபா வரையில் நாளாந்தம் நட்டம் அடைவதுடன், தூர இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் 1000 – 1250 ரூபா வரையில் நாளாந்தம் நட்டமடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நட்டத்தை வரையறுக்கும் நோக்கில் எரிபொருளின் விலை சிறியளவில் உயர்த்தப்பட்டது : ஹரி ஜயவர்தன.
இதனை ஈடு செய்யும் நோக்கில் சிறியளவில் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் நிலவிய வரட்சியினால் நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சார உற்பத்திக்கு அதிகளவு எரிபொருளை ஒதுக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மின்சார உற்பத்திக்காக அரசாங்கம் பாரிய நட்டத்தில் எரிபொருளை விநியோகம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவினை நேரில் சென்று நலம் விசாரித்த மஹிந்த ராஐபக்ஷ.
இன்று மாலை துமிந்த சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளார்.
மனித உரிமைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் மறு சீரமைப்புக் கொண்டு வர வேண்டும் என்ற இணக்கப்பாட்டுடன் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.
அண்மையில் கொழும்பு உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் கொலன்னாவையில் மோதல் இடம்பெற்றது.இந்த மோதல் சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சு மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்தார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வாவை, பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் ஏற்கனவே சென்று பார்வையிட்டு இருந்தனர்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்பியிருந்தார்.நாடு திரும்பிய ஜனாதிபதி சில அமைச்சர்களுடன் துமிந்த சில்வாவை பார்வையிடச் சென்றதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் மறு சீரமைப்புக் கொண்டு வர வேண்டும் : ஆஸி. பிரதமர்.
பொது நலவாய அமைப்பில் பாரிய மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டு வர தாம் தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். சில தீர்மானங்களை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததென்றும் பலவற்றை நிறைவேற்ற சிக்கல் தோன்றிய போதும் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சிறந்த எதிர்காலத்திற்கு அவுஸ்திரேலியா பாரிய பங்களிப்பைச் செய்துள்ளதென தான் நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.இதேவேளை சிறந்த நபர்கள் குழு தயாரித்த அறிக்கையில் மறுசீரமைப்பின் போது மனித உரிமைகளுக்கென சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டு மென விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை பெரும்பான்மை ஆதரவின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நபர்கள் குழு முன்வைத்த 106 கோரிக்கைகளில் 11 கோரிக்கை நிராகக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதும் அடுத்த பொது நலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு உச்சிமாநாடு நிறைவுக்கு வந்தது.
சீனாவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின.
சீனாவில் இன்று காலை 5.58 மணியளவில் கிக்சுவான், கன்சு ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் அங்கு கட்டிடங்கள் வீடுகள் குலுங்கின. இதைத் தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரம் கழித்து வடமேற்கு சீனாவில் உள்ள இலி என்ற பகுதியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கைபேசியின் உதவியால் காப்பாற்றப்பட்ட பிரெஞ்சு பெண்மணி.
பெண்மாலுமிகளின் நட்சத்திரமாக ஒளிரும் பிரெஞ்சு நாட்டுப் பெண்மணி பிளாரென்ஸ் ஆட்ஹாடு மத்திய தரைக்கடல் பகுதியில் பயணம் செய்த போது கடலில் விழுந்துவிட்டார்.
அவரிடம் இருந்த கைபேசி உதவியுடன் தன் தாயாரிடம் பேசி நிலைமையை எடுத்துரைத்தார். அவர் தாயார் மீட்புக் கப்பலுக்குப் பேசியதும் மீட்புப்படையினர் கடலில் குதித்து பிளாரன்சை காப்பாற்றினர்.
1990ம் ஆண்டு தனி நபராக இருந்து அட்லாண்டிக் கடலில் கப்பலோட்டும் போட்டியில் வெற்றிபெற்றவர் ஆவார். இவருக்கு இப்போது 54 வயதாகிறது.இவர் ஓய்வு பெறுவதற்காக தனியாக கோர்சிகா தீவுக்கு அருகில் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது தடுமாறி கடலில் விழுந்து விட்டார்.
இவரது கையில் நீர்புகாத கைபேசி இருந்ததால் தன் தாயாருடன் தொடர்புகொள்ள முடிந்தது. மீட்புப் படையினர் வர இரண்டு மணிநேரம் ஆனதால் கடல் நீரில் இவர் உடல் சில்லிட்டுப்போனது. அதன் பின் செயற்கை வெப்பமூட்டி மூலம் இவர் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டார்.
மிக வேகமான நகரங்களின் பட்டியல்: ஜேர்மனியில் மூனிச் முதலிடம்.
மூனிச் நகரமானது ஜேர்மனியின் மிக வேகமான நகரம் என அண்மையில் நடைபெற்ற ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.விட்ஸ்கே ப்ட்ஸ்வோச் என்ற இதழில் ஆர்தர் டி. லிட்டில் என்பவர் உலகின் 78 நகரங்களின் வாகனப் போக்குவரத்தை ஆராய்ந்தார்.அவற்றில் 15 ஜேர்மனியில் உள்ளவையாகும். கார் பகிர்தல் சேவை மற்றும் வாடகை மோட்டார் பைக்குகளும் வாகனக் கணக்கில் சேர்க்கப்பட்டன.
ஒவ்வொரு நகரத்தின் பொதுப் போக்குவரத்து அமைப்பும், போக்குவரத்துக் கொள்கைகளும், போக்குவரத்து நேரமும் ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன.உலகளவில் மூனிச் ஒன்பதாகவது இடத்தைப் பெற்றது. ஹாங்காங் முதலிடத்தைப் பெற்றது. லண்டனும் ஆம்ஸ்டெர்டாமும் முன் வரிசையில் உள்ளன.ஜேர்மன் நகரங்கள் பதினைந்தில் ஹாம்பெர்க், பெர்லின், ஸ்டட்கார்டு, லீப்சிக் ஆகியன முறையே 2, 3, 4, 5ஆம் இடங்களைப் பெற்றன. 14,15ஆவது இடங்களை கோலோனும் டுசெல்டார்ஃபும் பெற்றன.
ராணி எலிசபெத் மறைந்தால் எவ்வாறு செய்தி வெளியிடுவது: ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிபிசி.
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் மறைந்தால் அதுபற்றி செய்தி வெளியிடும் முறை பற்றி ஊழியர்களுக்கு பிபிசி பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து லண்டனில் வெளியாகும் தி சண்டே டைம்ஸ் நாளிதழில் இடம்பெற்ற செய்தி வருமாறு: 2002ம் ஆண்டில் இங்கிலாந்து ராணி(குயின் மதர்) இறந்தபோது அதை இங்கிலாந்து அரசு செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்ட விதம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
அனுபவம் வாய்ந்த செய்தி வாசிப்பாளர் பீட்டர் சிசன்ஸ் பழுப்பு நிற கோட், பிரவுன் நிற டை அணிந்து ராணி மறைவை அறிவித்தார். அதுபோன்ற தவறு ஏற்பட்டு விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இருக்க ராணி 2ம் எலிசபெத் மறைவை அறிவிப்பதற்கான பயிற்சியை பிபிசி தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இதற்கான போலி வீடியோ ஒளிபரப்பி ஊழியர்களுக்கு செய்தி வெளியிட பயிற்சி தரப்படுகிறது. துக்க செய்தியை அறிவிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் அணிய வேண்டிய உடைகள் அலமாரிகளில் வைக்கப்பட்டன. மற்ற நிகழ்ச்சிகள் ரத்து, தேசிய கீதம் ஒலிபரப்பு, வாழ்க்கை வரலாறு வீடியோ ஆகியவை பற்றியும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ராணி மறைந்தால் 12 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அதன் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை மட்டுமின்றி அதன் பிறகு சில நாட்களும் கொமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப கூடாது என்றும் பயிற்சி தரப்படுகிறது. இவ்வாறு தி சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
க்வான்டாஸ் விமான சேவைகள் மீண்டும் துவக்கம்.
அவுஸ்திரேலியாவின் பிரபல க்வான்டாஸ் விமான நிறுவனத்திற்கும், அதன் தொழிற்சங்கங்களுக்குமான பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்ட 44 மணிநேரத்திற்குப் பின் மீண்டும் விமானச் சேவை துவக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அவுஸ்திரேலியாவின் பிரபல க்வான்டாஸ் விமான நிறுவனம் நஷ்டம் ஏற்படுவதால் ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டது. இதையடுத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருதரப்பும் ஒரு சுமுகமான முடிவுக்கு வர முடியவில்லை.இதனால் கடந்த 29ம் திகதி க்வான்டாஸ் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து விமானங்களும் உடனடியாகத் தரையிறக்கப்பட வேண்டும். பிரச்னைக்கு முடிவு காணும் வரை ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உலகின் 22 விமான நிலையங்களில் க்வான்டாசின் 108 விமானங்கள் தரையிறக்கப்பட்டன. 600 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த அதிரடி முடிவால் 70 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.க்வான்டாசின் இந்த அறிவிப்பு அவுஸ்திரேலியாவை அதிரச் செய்தது. மத்திய அரசு இப்பிரச்னையில் தலையிட்டது. அவுஸ்திரேலிய தொழிற்துறை தகராறுகளைத் தீர்க்கும்,“பேர் ஒர்க் ஆஸ்திரேலியா” தீர்ப்பாணையத்தில் நேற்று முன்தினம் அவசரமாக இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.
நீதிபதி ஜியோப்ரே கிடைஸ் வழங்கிய தீர்ப்பில், உடனடியாக தொழிற்சங்கங்கள் பணியில் சேர வேண்டும். விமானச் சேவை துவக்கப்பட வேண்டும். இருதரப்பும் பேச்சு நடத்தி 21 நாட்களுக்குள் நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்ட வேண்டும் என்றார்.
இந்தத் தீர்ப்பை அவுஸ்திரேலிய மத்திய அரசு வரவேற்றுள்ளது. தீர்ப்பை அடுத்து உலகின் பல பகுதிகளில் நிறுத்தப்பட்ட க்வான்டாஸ் விமானங்கள் தங்கள் சேவையை நேற்று முதல் துவக்கின. இந்தப் பிரச்னையால் பயணிகளுக்கு ஏற்பட்ட தொந்தரவுக்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
ஊழல் புகார்: பாலஸ்தீன தலைவர் அராபத்தின் மனைவிக்கு எதிராக கைது வாரண்ட்.
ஊழல் புகார் காரணமாக யாசர் அராபத் மனைவிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறைந்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தின் மனைவி சுஹா அராபத்.
கடந்த 2006ம் ஆண்டு இவர் துனிசியாவில் இருந்த போது மக்கள் புரட்சியால் பதவி விலகிய முன்னாள் அதிபர் ஷின்அல் அபிடின் பென்அலியின் மனைவி லைலா டிராபல்சியின் நெருங்கிய தோழியாக இருந்தார்.அப்போது இவர் பென் அலி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துனிசியாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து முன்பு அதிபராக இருந்த பென்அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அதை தொடர்ந்து அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்த சுஹா அராபத் மீதும் ஊழல் புகார் காரணமாக விசாரணை நடத்தப்பட உள்ளது. அதற்காக அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அட்டோனிசியா என்ற ஓன்லைன் பத்திரிகையில் சட்டதுறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் காதீம் ஷின் அல் அபிடின் தெரிவித்துள்ளார்.கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள சுஹா அபாரத் தற்போது மால்டா நாட்டில் இருக்கிறார். அங்கு அவரது சகோதரர் கபி அல்-தவில் பாலஸ்தீன தூதராக உள்ளார். எனவே அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிர்கிஸ்தான் அதிபர் தேர்தல்: தற்போதைய பிரதமர் வெற்றி.
கிர்கிஸ்தானின் அடுத்த அதிபராக இப்போது பிரதமராக உள்ள அல்மாஸ்பெக் ஆதாம் பாயேவ் தேந்தெடுக்கப்பட்டுள்ளார்.முன்னாள் சோவியத் யூனியனில் கிர்கிஸ்தான் இடம் பெற்றிருந்தது. 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்ட போது இது சுதந்திரம் பெற்று தனிநாடானது.
கடந்த 20 ஆண்டுகளில் முன்னாள் மத்திய ரஷியா நாடான இங்கு இதுவரை அதிபர் தேர்தல்கள் நியாயமாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.கடந்த 2005ம் ஆண்டு நடந்த துலிப் புரட்சியில் அஸ்கர் அகாயோவ் பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்டார். புதிய அதிபராக குர்மான் பெக் பாகியேவ் பொறுப்பேற்றார். அவரது சீரத்திருங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதில் 470 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். கிர்கிஸ்தான் மக்கள் இயக்கம் என்ற கட்சியின் தலைவரான இவர் 2005-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார்.2010-ம் ஆண்டு முதல் ரோஸ் ஊடன் பாயேவ் அதிபராக உள்ளார். இவரின் ஆதரவாளரான அல்மாஸ் பெக் ஆதாம் பாயேவ் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பிரதமராக உள்ளார்.
இந்நிலையில் அந்நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் அல்மாஸ் பெக் ஆதாம் பாயேவ் 63 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் தூய்குணாலி அப்டிராய்மோவ் தெரிவித்தார்.முதல் சுற்றிலேயே அவர் தேவையான வாக்குகளைப் பெற்றுள்ளதால் இரண்டாவது சுற்று தேவையில்லை என அவர் குறிப்பிட்டார். அதாவது அல்மாஸ் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து 15 பேர் போட்டியிட்டனர்.
நாடாளுமன்ற சபாநாயகர் அதாகான் மதுமாரோவ், முன்னாள் குத்துச் சண்டை வீரர் காஷிம்பெக் தாஷியேவ் உள்ளிட்டோர் தோல்வியை தழுவினர். முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக தாஷியேவின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.தேர்தல் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போனதாக மதுமாரோவ் கூறினார். அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடபோவதாக அவர் தெரிவித்தார். கிர்கிஸ்தானில் மட்டுமே அமெரிக்கா மற்றும் ரஷியாவின் ராணுவ முகாம்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் ரசாயன ஆயுதங்கள்: புதிய பிரதமர் தகவல்.
லிபியாவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக அந்நாட்டு புதிய பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல் கூறியிருக்கிறார்.லிபியா அமைதியான நாடாக இருக்கப் போகிறது. இங்கிருக்கும் ரசாயன ஆயுதங்களை இனியும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. சர்வதேச பார்வையாளர்கள் வந்து அவற்றை ஆய்வு செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
எனினும் அவை எப்படிப்பட்டவை, எங்கெங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பன போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.லிபியாவில் அறிவிக்கப்படாத ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஐ.நா பாதுகாப்பு அவையில் லிபியாவுக்கான ஐ.நா தூதர் இயான் மார்ட்டின் அண்மையில் கூறியிருந்தார். அவற்றின் பயன்பாடு குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.
லிபியாவில் இருக்கும் ரசாயன ஆயுதங்களை சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் அழிக்க வேண்டும் என்று கோரி ரஷியா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இந்த வாரம் வாக்கெடுப்புக்கு வருகிறது.
இஸ்லாமிய குடியரசிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ஈரான் நோட்டீஸ்.
சவுதி அரேபிய தூதர் கொலை சதித் திட்டத்தில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டை எதிர்த்து ஈரான் முறைப்படி நோட்டீஸ் அளித்துள்ளது.அமெரிக்காவுக்கான சவுதி அரேபிய தூதரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் மன்சூர் அர்பாப்சியார்(56) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரின் பின்னணியில் ஈரானின் புரட்சிப் படை இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இக்குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்துள்ள ஈரான் நேற்று முறைப்படி இதுகுறித்து அமெரிக்காவுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரக உறவை மேற்கொள்ளாததால் ஈரானில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மூலம் இந்த நோட்டீஸ் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 29ம் திகதி இந்த நோட்டீஸ் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு கிடைத்ததாக நேற்று முன்தினம் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நோட்டீசில் ஈரான் கூறியிருப்பதாவது: இதுபோன்று ஒரு நாட்டின் மீது குற்றச்சாட்டுகள் கூறுவது அமெரிக்காவின் அரசியலில் ஒரு உத்தியாக பேணப்பட்டு வருகிறது. பொய்க் காரணங்களைச் சொல்லித்தான் ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது.
அங்கு நடத்திய போரினால் தனது பணப்பையை நிரப்பிய அமெரிக்கா அங்கிருந்து கிளம்பும் வழியைக் காணோம். சர்வதேச சட்டங்களை மீறி ஈரானின் தார்மீக நிலைப்பாட்டை புண்படுத்தும் விதத்தில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறியதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசிடமும், புரட்சிப் படையிடமும் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
2060ல் மக்கள்தொகை ஐந்தில் ஒரு பங்காக குறைந்துவிடும்: உள்துறை அமைச்சர்.
2060ம் ஆண்டில் ஜேர்மன் நாட்டின் மக்கள்தொகை பதினெழு பில்லியனாக குறைந்து விடும். அதாவது இன்று இருப்பதை விட ஐந்தில் ஒரு பங்காகச் சுருங்கிவிடும் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.பெர்லினில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில் ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹேன்ஸ் பீட்டர் பிரெட்ரிக் கூறியதாவது, சமீப காலமாக குறைந்து வரும் பிறப்பு விகிதமும், வளர்ந்து வரும் முதியோர் எண்ணிக்கையும் கவலையளிப்பதாக உள்ளன.
2060ல் 21 சதவீதம் குறைந்துவிடும். இரண்டு ஜேர்மனிகளும் இணைக்கப்பட்ட போது உருவான ஐந்து மாநிலங்கள் மக்கள்தொகை குறைவினால் பெரிதும் பாதிக்கப்படும்.எடுத்துக்காட்டாக சேக்சோனி – அன்ஹால்ட்டில் மக்கட்தொகை 42 சதவீதமாக குறையும். அண்டை மாநிலங்களான துரிங்கியாவில் 41 சதவீதமும், மெக்லென்பக் மேற்கு பொமரேனியாவில் 36 சதவீதமும் குறையக் கூடும்.
பிரெமென் மற்றும் பவேரியா மாநிலங்களில் 14 முதல் 15 சதவீதமும், ஹேம்பர்க்கில் 6 சதவீதம் மட்டுமே குறையும் என்பது சற்று ஆறுதலாக உள்ளது என்றார்.இப்போது ஜேர்மனியில் 82 கோடிப்பேர் வாழ்ந்து வருகின்றனர். முதியோரின் ஆயுள் நீடித்து வரும் இக்காலக்கட்டத்தில உழைக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கொண்டே வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் ரஷ்ய விண்கலம்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லும் ஆளில்லா விண்கலத்தை ரஷ்யா நேற்று முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யா சார்பில் சரக்குகள் கொண்டு செல்லும் விண்கலம் ஒன்று கடந்த ஆகஸ்ட் 24ம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.ஆனால் அந்த விண்கலம் பாதியில் விழுந்ததால் பரிசோதனை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து விண்கலம் விழுந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டு குறைகள் ஏதும் இல்லாமல் புதிய விண்கலமானது தயாரிக்கப்பட்டது. இதையடுத்து எம்-13 எம் என்ற புதிய விண்கலம் நேற்று கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கனுர் என்ற இடத்தில் இருந்து ஏவப்பட்டது.
இதில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தேவையான சரக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலமானது நாளை மறுநாள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடையும் என்று கூறப்படுகின்றது.
ஹோஸ்னி முபாரக் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மீதான வழக்கு இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் கடந்த பிப்ரவரியில் முபாரக்கிற்கு எதிராக நடந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களின் போது ராணுவ வன்முறை நிகழ்ந்தது குறித்து முபாரக், அவரது மகன்கள் அலா மற்றும் கமால் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்த விசாரணை கெய்ரோவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ரபாத் தலைமையிலான குழுவை மாற்றியமைக்க வேண்டும் என வாதிகள் தரப்பில் அப்பீல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் முபாரக் மீதான விசாரணை டிசம்பர் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜாப்ஸ் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவார்: பில் கேட்ஸ் புகழாரம்.
ஆப்பிள் நிறுவனர் காலஞ்சென்ற ஸ்டீவ் ஜாப்ஸ் சிறந்த போட்டியாளர் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஜாப்சுக்கும், தனக்கும் இடையே இருந்த தொழில்நுட்ப போட்டி, நேர்மறையாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.
ஸ்டீவ் ஜாப்சின் செயல்பாடுகள் கற்பனைக்குள் அடங்காதவை, எதிர்காலத்தில் மக்களுக்கு என்ன தேவைப்படப் போகிறது என்பதை தற்போதே அறிந்து அதன்படி புதிய சாதனங்களை உருவாக்கும் திறன் வாய்ந்தவர்.நான் ஆப்பிள் தயாரிப்புகளை பார்க்கும் போது அவருடைய முகம் தான் தனக்கு நினைவிற்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தைவானில் கடும் நிலநடுக்கம்.
பெரு நாட்டின் லிமாவில் 6.9 என ரிக்டர் அளவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 134 வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
ஆனால் 103 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மக்கள் வீடுகளை இழந்து சாலையோரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்நிலையில் தைவானின் வடகிழக்கு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
அப்பகுதிகளில் இருந்த மக்கள் அச்சத்தில் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். உயிர்சேதம் எதுவும் இல்லை.அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் கணக்கிடப்பட்டு வருகிறது.
போதைப் பழக்கத்தில் பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்கள்: அதிர்ச்சித் தகவல்.
பிரித்தானியாவில் பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் ஒயின் குடிக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பொதுவாக 14,15 வயதைச் சேர்ந்தவர்கள் வாரத்துக்கு பத்து யூனிட் வரை குடிக்கின்றனர். சிறு வயதில் குடிக்கும் குழந்தைகள் தமக்கு உதவ ஆள் கிடைக்காததால் இத்தகைய தீயபழக்கத்திற்கு ஆளாகின்றனர்.
பெற்றோரின் வேலை நெருக்கடியால் பிள்ளைகளின் இன்ப துன்பங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ள நேரமில்லை. இதனால் ஆதரவிழந்த குழந்தைகள் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதில் மன அமைதி பெறுகின்றனர். இவர்களுக்குப் போதுமான அளவு தூக்கம் கிடைப்பதில்லை.
படிக்கும் குழந்தைகளில் மூன்று சதவீதம் பேர் மட்டும் வீட்டிற்கு வந்து பாடம் படிக்கின்றனர். உடற்கட்டைப் பராமரிப்பதில் பெண்குழந்தைகள் பத்து வயது முதல் அக்கறை காட்டுகின்றனர்.
பத்து வயதுக்கும் குறைவானவர்கள் கணணி விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டுகின்றனர். இவர்களில் சிலர் தினமும் இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்கின்றனர்.
சிறுவர்களிடையே கஞ்சாப் பழக்கமும் மதுப்பழக்கத்துடன் சேர்ந்துள்ளது. மிகச் சிலர் ஹெராயின், கொக்கேய்ன், எக்டசி போன்ற போதைப் பொருட்களையும் நுகர்கின்றனர்.மொத்தத்தில் பிரிட்டனின் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் சிறுவர்களின் படிக்கும் நேரம் குறைந்து விட்டதையும், மது, போதை, புகை போன்றவை கூடியிருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 381ஆக உயர்வு.
தாய்லாந்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாங்காங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 381 பேர் பலியாகி உள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.வரும் நாட்களிலும், மழையின் தீவிரம் கடுமையாக இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
முதல் உலகப்போர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடக்கம்.
முதலாம் உலகப்போர் நடந்த முடிந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் பிரான்ஸ் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை தொடங்குகிறது.நவம்பர் 11ம் திகதி போரின் நினைவாக 50000 அரும் பொருட்களைக் கொண்ட ஒரு அருங்காட்சியகத் திட்டத்தை பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தொடங்கி வைக்கிறார்.
பிரிட்டன் இவ்விழா குறித்து இன்னும் எந்தத் திட்டத்தையும் வெளியிடவில்லை. முதல் உலகப் போரில் பிரிட்டனின் ஒரு கோடி வீரர்கள் உயிரிழந்தனர், இரண்டு கோடி வீரர்கள் காயமுற்றனர். வீரர்களின் இந்த மாபெரும் தியாகம் நடைபெற்ற இடம் பிரான்ஸ் என்பதால் இந்தக் கொண்டாட்டங்களில் பிரான்ஸ் முந்திக்கொண்டுள்ளது.
பாரிசுக்கு 25 மைல் தொலைவில் உள்ள மியக்ஸ் என்ற ஊரில் இந்த புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் சர்வாதிகார ஜேர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் பங்கு பற்றி விளக்குகிறது.2014ல் இந்தத் திட்டம் நிறைவு பெறும், போர்ப்பொருட்களைக் கொண்ட பிரான்சின் கௌரவப்படைப்பாக இந்த அருங்காட்சியகம் திகழும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போர் வீரர்களின் நினைவாக மட்டுமே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்படுகிறது என்பதால் இதற்கு ஆகும் செலவு பற்றி தாம் கவலைப்படப் போவதில்லை என்று சர்கோசி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் கடும் போட்டியை சந்திக்கப் போவதால் தேய்ந்து வரும் தன் மக்கள் ஆதரவைப் பெருக்கவே இத்திட்டத்தை வகுத்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
மியக்ஸ் நகரத்தில் அமெரிக்கப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் சுமார் 75,000 சதுர அடிப்பரப்பில் இந்த அருங்காட்சியகம் உருவாகுகிறது. இதில் முக்கிய இடம் பெறப்போவது மார்னேயின் முதல் போர் தொடர்பான காட்சிப்பொருட்களே ஆகும்.இந்த அருங்காட்சியகத்தில் மார்னே போரில் பயன்படுத்திய பொருட்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அப்போது பயன்பட்ட 600 பாரிசு மோட்டார் வண்டிகளில் ஒன்றான ”மார்னே டாக்ஸி” பார்வைக்கு வைக்கப்படும்.
இந்த வண்டி படைகளை போர்முகத்திற்கு விரைவுபடுத்தியதால் “மார்னேயின் அதிசயம்” (மிராக்கிள் ஆஃப் த மார்னே) என்று அழைக்கப்படுகிறது.அந்தக் காலத்தில் பாரிஸ் மற்றும் பெர்லின் நகரில் இருந்த ரயில்வே நிலையங்களின் மாதிரிகள் அங்கு இடம்பெறும். மேலும் போர் வீரர்கள் பயன்படுத்திய பதுங்கு குழிகளின் மாதிரிகளும் ஏற்படுத்தப்படும்.
போர்வீரர் பயன்படுத்திய கவசங்கள், சீருடைகள், டாங்கர் வண்டி போன்றவை 1918ல் நடைபெற்ற மார்னேயின் இரண்டாம் போரில் ஈடுபட்ட அமெரிக்கர்களின் நினைவாக இடம்பெறும்.
பிரிட்டன் எல்லைகளில் மின்னணுத் தகவல் பதிவு துறை அறிமுகம்.
பிரிட்டனின் எல்லைப்பகுதிகளின் வழியாக அத்துமீறி ஊடுருவ முயன்ற பத்தாயிரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மின்னணு பதிவின் மூலமாக இந்த குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த 52 வாரங்களில் இந்தத் தடுப்பும் கைதும் நடைபெற்றது. இந்த மின்னணுப் பதிவு முறை 2005ல் பிரிட்டனில் புகுத்தப்பட்டது.
விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத்தளங்களில் மின்னணு முறை பின்பற்றப்படுவதால் பயணிகள் குறித்த அனைத்து தகவல்களும் இத்தளங்களில் பாதுகாக்கப்படுகின்றன.55 சதவீதம் பயணங்கள் விமானம் மற்றும் கப்பல் மூலமாக நடைபெறுவதால் பிரிட்டனின் எல்லைப்படையும் காவல்துறையும் இணைந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் குற்றவாளிகளைத் தமது நாட்டிற்குள் அனுமதிக்காமல் தடுத்து விடுகின்றது என்று புலம்பெயர்வுத் துறை அமைச்சர் டேமியன் கிரீன் காவல்துறையை பாராட்டி பேசினார்.
மேலும் 2013 ஆம் ஆண்டு முதல் புதிய எல்லைக் காவல் படை தேசிய குற்றவியல் தடுப்பு முகமையின் ஒரு பகுதியாக இருந்து எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் என்றும் கூறினார்.இவ்வாறு மின்னணுத் தகவல் பதிவு முறையைச் செயல்படுத்துவதில் சில முரண்பாடுகளும் உள்ளன. ஏனெனில் 2010ஆம் ஆண்டு யூலை மாதத்தில் புலம்பெயர்வுத் துறை அமைச்சர் இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்துச் செய்தததால் இந்தப் பதிவுமுறைகளைச் செய்து வந்த ரேதியோன் என்ற நிறுவனம் அரசாங்கத்தின் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தது.
பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பு முகமை இந்த மின்னணுப்பதிவுத் திட்டத்தைச் சரியாக நடத்தாதலால் பிரச்னைகள் தோன்றுவதாக ரேதியன் நிறுவனம் குற்றம்சாட்டியது.எனினும் முதன்மை காவல் அதிகாரிகள் அமைப்பின் தலைவர் ஜான் டோன்லோன், எல்லையோர மின்னணுத் தகவல் பதிவுத் திட்டம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
ஜான் டோன்லோன் என்பவர் கூறுகையில், தேடப்படும் குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறும் முன்போ நாட்டுக்குள் நுழையும் முன்போ அவர்களை அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்தும் பணியை காவல்துறை செய்து வருகிறது.இத்திட்டத்தின் மூலமாக தீவிரமான குற்றவியல் வழக்குகளில் துப்புத்துலக்கவும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடியும் என்றார். இவ்வாறு பல்வேறு பணிகளுக்கும் இந்த மின்னணுத் தகவல் பதிவுத் திட்டம் உதவுகின்றது.
செப்டம்பர் மாதத்தில் 125 பில்லியன் பயணிகள் பிரிட்டனுக்குள் வந்து சென்றனர். இவர்களில் 2700பேர் பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பதினோரு பேர் கொலைக் குற்றவாளிகள், 22 பேர் பாலியல் பலாத்தகாரக் குற்றவாளிகள், 316 பேர் வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் 126 பேர் போதைப்பொருள் கடத்தியவர்கள் என்று அரசுப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
எல்லையோர மின்னணுத் தகவல் பதிவுத் தளஅமைப்புகளுக்குள் பல்வேறு வழித்தடங்களையும் அரசு இணைக்க முயன்று வருகிறது. இவ்வாறு புதிய வழித்தடங்கள் இணையும் போது இந்தத் தடங்களைப் பயன்படுத்தும் குற்றவாளிகள் பலரும் கைதாவது உறுதி என்பதையும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பனிப்புயல்: பல லட்சம் பேர் பாதிப்பு.
அமெரிக்காவில் அக்டோபர் மாதம் பனி காலமாகும். இந்த ஆண்டு அங்கு கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.நியூயோர்க், நியூமெர்சி, வெஸ்ட் மில் போர்டு, மாசாசூசெட், ஜாப்பிரி, நியூஹாம்ப்ஷியர், கனெக்டிக் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசுகிறது.
இதனால் அப்பகுதிகளில் வாழும் 28 லட்சம் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்புயல் வீசுவதால் மின்சாரம் தடைபட்டுள்ளது.ரோடுகள், தண்டவாளங்கள் பனிகட்டியால் மூடப்பட்டுள்ளது. வாகனங்கள், ரெயில்கள் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.குளிர் காற்று வீசுவதால் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். கனெக்டிகட், நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன. பனிப்புயலுக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.
வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கூலிப்படையின் உதவியை நாடும் கடாபியின் மகன்.
லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மூத்த மகன் சயீப் அல் இஸ்லாம்(39). இவர் பானிவாலிட் நகரில் புரட்சி படையுடன் நடந்த சண்டையின் போது ராணுவ கமாண்டராக இருந்தார்.
இந்த நிலையில் கடாபி கொல்லப்பட்டதும் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். ஏற்கனவே போர்க்குற்றம் காரணமாக இவருக்கு சர்வதேச குற்றவியல் கோர்ட்டு வாரண்டு அனுப்பியுள்ளது. எனவே நெதர்லாந்தில் உள்ள ஹாக்கூ நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் சரண் அடைய விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இடைத்தரகர்கள் மூலம் அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இந்த நிலையில் திடீரென அவர் லிபியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்ப முயற்சி கொண்டுள்ளார்.அதற்காக தென் ஆப்பிரிக்காவில் உள்ள கூலிப்படை குழுக்களை அவர் நாடியுள்ளார். இவர்கள் மூலம் லிபியாவில் இருந்து நைஜர் எல்லை வழியாக தப்பி செல்ல முடிவு செய்துள்ளார்.
நாடோடி மக்களுடன் சயீப் அல் இஸ்லாமை அனுப்ப தென் ஆப்பிரிக்க கூலிப்படையினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணி உதவியை வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற அவரது குடும்பத்தினர் செய்து தர தயாராக உள்ளனர்.
இந்த தகவலை சர்வதேச குற்றவியல் கோர்ட்டின் வக்கீல் லூயிஸ் மொரேனோ அகாம்போ இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.கடாபியின் மகன் சாடி கடாபி நைஜர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். பாதுகாப்பாளராக இருந்த காரி பீட்டர்ஸ் என்பவர் சாடி கடாபி லிபியாவில் இருந்து தப்பிக்க உதவி செய்தார்.
அவர் கனடாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர். கடாபியின் மற்ற மகன்கள் சயீப் அல் இஸ்லாம், ஹன்னிபால் ஆகியோருக்கும் இவர் தான் பாதுகாவலராக இருந்தார். ஹன்னிபால் அவரது தங்கை ஆயிஷா ஆகியோர் அல்ஜீரியாவுக்கு தப்ப இவர் தான் உதவி புரிந்தார். தற்போது அவர் கனடாவில் உள்ளார்.
யுனெஸ்கோவில் முழு நேர உறுப்பினராக பாலஸ்தீனம் தேர்வு: அமெரிக்கா கடும் கண்டனம்.
யுனெஸ்கோவில் பாலஸ்தீனம் முழு நேர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இத்துடன் அமெரிக்கா வழங்கும் பல ஆயிரம் கோடி டொலர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. ஐ.நா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார கிளை அமைப்பான யுனெஸ்கோவில் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இதில் பாலஸ்தீனம் உறுப்பினராக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்தது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் இங்கு நடந்த ஓட்டெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு போதிய ஆதரவு(107 ஓட்டுக்கள்) விழுந்தன, மொத்தம் இந்த அமைப்பில் 173 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இந்த வெற்றிக்கு பாலஸ்தீன மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அமெரிக்ககா மற்றும் இஸ்ரேல் கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளது.இதன் முதல் கட்டமாக நவம்பர் மாதம் வழங்க வேண்டிய 60 மில்லியன் டொலர் தொகையை அமெரிக்கா நிறுத்த முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆண்டு முழுவதும் வழங்கும் மொத்த தொகையான 80 பில்லியன் டொலர் தொகையை நிறுத்திக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.யுனெஸ்கோவிற்கு கிடைக்கும் நிதியில் அமெரிக்கா பெருமளவில்(45 சதம் வரை) தரும் நாடாக இருந்துள்ள வேளையில் இது பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் வாய்ப்புகளை இது பாதிக்கும் என்று இஸ்ரேல் தனது எதிர்ப்பு கருத்தை வெளியிட்டுள்ளது.மேலும் சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிராக இருக்கும் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.