'We Can' என்ற ஒற்றை ஸ்லோகன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பதவியை எட்டிப் பிடித்தவர் பராக் உசேன் ஒபாமா!
மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவில் அமெரிக்கா சிக்கித் தவித்த வேளையில் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கறுப்பின அதிபர். பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பதவிக்கு வந்தவர், அதன் பிறகு எதிர்கொண்டது அனைத்தும் கண்டனங்களும் ஆவேசக் கோபதாபங்களும்தான்!
அமெரிக்கா ஹவாய் மாகாணத்தின் ஹோனோலுலுவில் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தார். கென்யாவின் ஸ்வாஹிலி மொழியில் 'பராக்' என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று பொருள்!
ஒபாமாவின் அப்பா ஒபாமா சீனியர் ஆன் டன்ஹாமை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போதே ஒபாமா மூன்று மாதக் குழந்தையாக ஆன் வயிற்றில் இருந்தார்!
ஒபாமா, அவரது பெற்றோருக்கு ஒரே மகன்தான். ஆனால், தந்தை மற்றும் தாயின் மறுமணங்களால் இவருக்கு எட்டு சகோதர, சகோதரிகள் உண்டு!
கூடைப் பந்தாட்டம் என்றால் உயிர். ஆறு அடிக்கு மேல் உயரம்கொண்டவர் என்பதால், மிக எளிதாக பந்தைப் பாக்கெட் செய்வார்!
பிளாக் ஃபாரஸ்ட் பெர்ரி ஐஸ் டீ ஒபாமாவின் ஃபேவரைட். காபிக்கு தடா. இந்திய உணவுகள்,குறிப் பாக காரமான உணவுகளை விரும்பி உண்பார்!
இடது கைப் பழக்கம்கொண்ட ஒபாமா, தினமும் உடற்பயிற்சி செய்வார்.
சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகள் 'சிறந்த பேராசிரியர்' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்!
இந்தோனேஷியாவில் இருக்கும்போது, இரண்டு முதலைகள், ஏகப்பட்ட கோழிகள், வாத்துகளை வளர்த்து வந்தார். இவர் வளர்த்த குரங்கின் பெயர் டாடா!
சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றபோது அறிமுகமான மிஷேலைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். மலியா, சஷா என்று இரண்டு குழந்தைகள்!
நீண்ட நேர உரைகள் நிகழ்த்துவதில் வல்லவர். இவர் எழுதிய Dreams from My Father, மற்றும் The Audacity of Hope ஆகிய புத்தகங்களின் ஆடியோ பதிப்பு கிராமி விருது வென்றன!
மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், சீசர் சாவேஸ் (விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய மெக்சிகோ அமெரிக்கன்) ஆகிய மூவரும் தான் தன் ரோல்மாடல் ஹீரோக்கள் என்று குறிப்பிடுவார்!
ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியில் கிளிண்டனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். பின்னர், தன்னை படிப்படியாகக் கட்சியில் வளர்த்துக்கொண்டு கிளிண்டனின் மனைவி ஹிலாரியையே அதிபர் பதவிக்கான போட்டியில் பின்னுக்குத் தள்ளினார்!
அதிபரின் வெள்ளை மாளிகை 'நோ ஸ்மோக்கிங் ஸோன்' என்பதால், அவ்வப்போது நிகோடின் கலந்த சூயிங்கம்களை மட்டுமே அசை போடுவார்!
'சிகாகோ என்னும் மாகாணத்தில் இருந்து வந்து இருக்கும், மிகவும் ஒல்லியான தேகம்கொண்ட, பேரைச் சொல்லும்போதே சிரிப்பை வரவழைக்கும் மனிதர்' - ஒபாமாவை இப்படிக் கிண்டல் அடித்தவர், கலிஃபோர்னியா மாகாண கவர்னர் அர்னால்டு ஷ்வாஸ்னெகர்!
"இங்கே கறுப்பு அமெரிக்கா, வெள்ளை அமெரிக்கா, ஆசிய அமெரிக்கா, கிறிஸ்துவ அமெரிக்கா என்றெல்லாம் எதுவும் இல்லை. இங்கே இருப்பது எல்லாம் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காதான்!" என்று தாய்நாட்டை உயர்த்திப் பிடிக்கும் பேச்சுக்களால் கைதட்டல்களை அள்ளி வாக்குகளைக் கவர்ந்தார் ஒபாமா!
'அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி' என்று செய்தி வெளியானவுடன், இன்ப அதிர்ச்சி தாங்க முடியாத லட்சக்கணக்கான ஆஃப்ரோ-அமெரிக் கர்கள் வீதிகளில் வாய்விட்டு அழுத காட்சிகள் அப்போது டி.ஆர்.பி ஹிட் சென்சேஷன்!
ஒபாமா அதிபராகப் பதவியேற்றபோது, வாஷிங்டனின் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரையும் மீறி, 20 லட்சம் பேர் திரண்டார்கள். கிளிண்டன் இரண்டாவது முறை பதவியேற்றபோது, 50 ஆயிரம் பேர் நேரில் கூடியதே அதுவரையிலான சாதனை!
ஆபிரகாம் லிங்கனுக்கு அடுத்து, அதிக உயரமான அமெரிக்க அதிபர். லிங்கன் 6 அடி 4 அங்குலம். ஒபாமா 6 அடி 2 அங்குலம்!
இவரது கைக்கடிகாரம் மூலம், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. அவருக்கு ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று ஒரு தகவல் உண்டு!
'ஒபாமாவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது' என்று குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, 'உண்மையான அன்புக்காக சிறு வயதில் ஏங்கியவன் நான். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டவன்!' என்று இவர் தனது சிறு வயது நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொண்டது அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டியது!
'நான் போரை எதிர்ப்பவன் அல்ல; ஆனால், ஊமையான, மடத்தனமான போர்களை எதிர்க்கிறேன்!' என இராக் போர் குறித்து கடுமையாக விமர்சித்தார். தேர்தல் சமய வாக்குறுதியின்படி, இராக்கில் இருந்து படிப்படியாக அமெரிக்கப் படைகளைத்திரும்ப அழைத்துக்கொண்டார்!
2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. "அந்தப் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா என்பது ஒருபுறம் இருக்கட்டும்... இந்தப் பரிசை அளித்ததன் மூலம் அமெரிக்கர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி. பதவி ஏற்ற ஒன்பதே மாதங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த அங்கீகாரம் மிகவும் பிரமாண்டமானது!' என தலையங்கம் எழுதியது அமெரிக்காவின் மனசாட்சியான 'தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகை!
'உலகப் பொருளாதார மந்த நிலையைப் போக்க நான் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் 100 சதவிகிதம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாம் செய்வது சரியா, தவறா என்ப தைக் காலம்தான் தீர்மானிக் கும்!'-எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கு ஒபாமாவின் அடக்கமான பதில் இது!
உலகமே எதிர்பார்த்தபடி அதிபராகப் பதவியேற்றவுடன் ஒபாமாவால் அற்புதங்களை நிகழ்த்த முடியவில்லை.'அமெரிக்காவின் இன்றைய அரசியல் நிலையும், யதார்த்த சூழ்நிலையும் ஒபாமாவின் கனவுகளை இப்போதைக்குச் சாத்தியப்படுத்தாது!' என்கிறார்கள் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF