Tuesday, November 23, 2010

"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு



வாஷிங்டன் : "புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்' என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில், ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரான்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

"புதிதாக பிறந்த குழந்தைகளில், மூளை வளர்ச்சி இல்லை; குழந்தைகளுக்கு நினைவாற்றல் கிடையாது; கனவு வராது' என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். இதுபற்றி, லண்டன் இம்பிரியல் காலேஜில் உள்ள எம்.ஆர்.சி., கிளினிகல் சென்டர் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதற்காக, பிறந்து எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையுள்ள குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் எட்வர்ட்ஸ் இதுகுறித்து கூறியதாவது:

வயது வந்த மனிதனின் மூளை போன்று, குழந்தைகளின் மூளையும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் கனவு காண்கின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்குவதால், நடந்து முடிந்த சம்பவங்களை காட்சி வடிவில் நினைவில் வைத்துக் கொள்கின்றன.

குழந்தைகளுக்கும் பகல் கனவு ஏற்படுகிறது. ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகளின் ஞாபக சக்தி மையம் மெதுவாகவும், தூங்கும் சமயங்களில் அதிக அளவிலும் இயங்குகிறது. இவ்வாறு டேவிட் எட்வர்ட்ஸ் கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF