Tuesday, November 23, 2010

கம்போடிய திருவிழாவில் பயங்கரம்! சனநெரிசலில் சிக்கி 375 பேர் மரணம்


கம்போடியாவின் தலைநகர் நொம்பென்னில் இடம்பெற்ற தண்ணீர் திருவிழாவில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 375 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர்.

மரணமடைந்தவர்களின் தொகை தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றது. திங்கள் கிழமை இரவு கம்போடியாவின் தலைநகரில் உள்ள பிரதான நதியில் இந்த தண்ணீர்த் திருவிழா இடம்பெற்றபோது அதில் லட்சக்கணக்கான மக்கள் பங்பேற்றனர்.

அச்சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. நதிக்குக் குறுக்காக உள்ள பாலத்தை ஒரே நேரத்தில் பலர் கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மேலும் 320 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள் பலர் மோசமான காயங்களுக்காளாகியுள்ளனர். உள்ளூர் ஆஸ்பத்திரிகளில் இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் போதிய வசதிகளும் இல்லை எனவே உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கும் அச்சம் உள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவில் கமரூஜ் கம்யூனிஸ ஆட்சிக்குப்பின் இடம்பெற்றுள்ள மிக மோசமான சம்பவம் இதுவென்று அந்த நாட்டின் பிரதமர் ஹுன்சேன் தெரிவித்துள்ளார்.1970 களில் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போது அங்கு 17 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

தண்ணீர் திருவிழா கம்போடியாவின் வருடாந்த திருவிழாவாகும். மழைகாலத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் மூன்று தினங்களுக்கு இந்தத் திருவிழா கொண்டாடப்படும்.

இதன் இறுதி நிகழ்வாக டோன்லிசாப் நதியில் இடம்பெறும் படகுப் போட்டி ஒரு கண்கவர் நிகழ்வாகும். இறுதி நாள் நிகழ்வைக் காண வந்திருந்த மக்களுக்கே இந்தக் கதி ஏற்பட்டது.







பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF