Wednesday, November 17, 2010

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா? சந்தேகத்தை கிளப்புகிறது அமெரிக்கா

வாஷிங்டன் : "ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மறுசீரமைப்புத் திட்டத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் திருப்பம் நிகழலாம்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச்செயலர் ராபர்ட் ப்ளேக் எச்சரித்துள்ளார். இதனால் ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு, அதில் இந்தியாவுக்கும் இடம் அளிக்கப்படும்' என, வாக்குறுதியளித்தார். அவரது இந்த வாக்குறுதி சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச்செயலர் ராபர்ட் ப்ளேக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒபாமா இந்தியாவில் கூறியது, கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல. அது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு தான்.

எனினும் அது ரகசியமாக வைக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரியது. எந்நேரம் வேண்டுமானாலும் இப்பிரச்னையில் திருப்பம் நிகழலாம் என எச்சரிக்க விரும்புகிறேன். ஐ.நா., சபை விரிவாக்கம், அதில் இந்தியா இடம் பெறுவது என்ற இவ்விவகாரம், நீண்ட காலமாக கூடிய ஒரு சிக்கலான விவகாரம் என்பதை ஒபாமாவும், பிறரும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேநேரம், நிரந்தர மற்றும் நிரந்தரமல்லாத உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். ஐ.நா.,வில் இடம் பெற்றுள்ள 15 உறுப்பினர்களும், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தான் ஒபாமா விரும்பும் மாற்றம். ஆனால், அது ஒரு சிக்கலான நீண்ட கால நடவடிக்கை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதற்காக இந்தியாவுக்கு எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.பாகிஸ்தானை பொறுத்தவரை, சர்வதேச அளவில் அதுதான் பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு என்பதால், அதை ஒழிக்க பாக்., தன்னார்வத்துடன் செயல்பட வேண்டும் என்பதை ஒபாமா வலியுறுத்தியுள்ளார். ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை மட்டுப்படுத்துவதற்காகத் தான் ஒபாமா இந்திய உறவை விரும்புகிறார் என்று கூற முடியாது.இவ்வாறு ராபர்ட் ப்ளேக் தெரிவித்தார்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF