Friday, November 26, 2010

வடகொரியாவிடம் சொல்லி வையுங்கள்:சீனாவுக்கு அதிபர் ஒபாமா வேண்டுகோள்



வாஷிங்டன்:""வடகொரியா விவகாரத்தில், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கு நிலவும் பதட்டத்தை குறைக்க வேண்டும்,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.வடகொரியா - தென்கொரியா நாடுகளின் எல்லையையொட்டிய கடல் பகுதியில், தென்கொரியாவுக்கு சொந்தமான பியாயோங் தீவு உள்ளது. இங்கு தென்கொரியாவின் ராணுவ தளம் உள்ளது.

இத்தீவின் மீது, வடகொரியா அண்மையில் குண்டுகளை வீசி, திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, வடகொரியா மீது தென்கொரியா தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் உருவாகியுள்ளது. இதுபற்றி, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:கடந்த சில மாதங்களாக வடகொரியா, இத்தகைய எரிச்சலை மூட்டும் செயலை செய்து வருகிறது.

நான் இரு நாடுகளின் அதிபர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இச்சந்திப்பின் போது, இருநாடுகளும் ஒற்றுமையுடன் இருக்கும்படி வலியுறுத்தப்படும்.வடகொரியா நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது. சர்வதேச நாடுகள் ஓரணியில் திரண்டு, வடகொரியாவுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். பசிபிக் பிராந்தியத்தில், தென்கொரியா நமது முக்கிய நண்பனாக திகழ்கிறது. வடகொரியாவில் தனக்குள்ள செல்வாக்கை சீனா பயன்படுத்தி, அங்கு நிலவும் போர் சூழலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, வழிகாட்ட அமெரிக்கா தயாராக உள்ளது.இவ்வாறு ஒபாமா கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF