Friday, November 19, 2010

ஜனாதிபதி இரண்டாவது பதவிக் காலத்திற்காகப் பதவியேற்றார்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காக இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

காலிமுகத் திடலிலுள்ள பழைய பாராளுமன்றத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

சர்வமதத் தலைவர்களின் ஆசிகளையடுத்து பிரதம நீதியரசர் அசோக என் டி சில்வா முன்னிலையில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜயமங்கள கீதம் பாடப்பட்டதுடன் ஜனாதிபதிக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இராணுவ அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

மாலைதீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர் உட்படப் பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பதவியேற்கும் வைபவத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி, உலகின் சிரேஷ்ட தேசமாக எழுச்சிபெற முயற்சிக்கும் இலங்கையர்களின் முதலாவது கடமை, நாட்டில் இரத்தக் களறி ஏற்படும் சந்தர்ப்பங்களை முற்றாக இல்லாதொழிப்பதேயெனத் தெரிவித்தார்.

இந்த இலக்கை அடைவதற்கு நாட்டில் ஐக்கியம் , நீண்டகாலச் சமாதானம் பேணப்படவேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கலகங்களைத் தடுப்பதைவிட வறுமையை ஒழிப்பதே சிறப்பானதெனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

நாட்டில் 80 % மக்கள் வாழும் 16 ஆயிரம் கிராமங்களையும் அபிவிருத்தி செய்யும் பணிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் பலனை மக்கள் தற்போது அனுபவித்து வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் 5 துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அந்தத் துறைமுகங்களை அண்மித்த பகுதிகள் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த பகுதிகளாக மாற்றமடையுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF