Tuesday, November 23, 2010

இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க மீண்டும் ஒரு குழுவை அமைக்கப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு



இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தாம் குழுவொன்றை அமைத்து அரசியல் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி அதன் யோசனைகளை பெற்றுக்கொண்டதும் அதன் பின்னர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருக்கும் நிலையிலேயே புதிய குழு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கருத்துரைத்துள்ளார்.
தமது மனதில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வு திட்டம் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் மக்கள் மனதில் இருக்கும் விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர்களுக்கு என்ன தேவை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
இதன்போது தமது மனதில் உள்ள தீர்வு திட்டத்தை விட பொதுமக்களிடம் அதிகமான விருப்பங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாண சபை தேர்தல் 2011 ஆம் ஆண்டு இடம் பெறும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது முதலாம் தவணை காலத்தின் போது பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி இந்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது ஒரே நாடு என்ற கோட்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்யுள்ளார்.
எனவே மக்களின் மனதை வெல்வதும் அபிவிருத்தியை முன் கொண்டு சென்று மக்களுக்கு அதன் மூலம் பயன் பெற்று கொடுப்பதுமே தமது இரண்டாம் தவணையின் நோக்கம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த மூன்று லட்சம் பேரில் தற்சமயம் 18 ஆயிரம் பேரே இடம் பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ளனர்.
இவர்களில் 10 ஆயிரம் பேரையாவது இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்ற முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் இராணுவ தளபதியின் மருமகனான தனுன திலகரட்ண ஆயுத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர் என தமக்கு தெரிந்திருந்தால் அதற்குரிய முன்கூட்டிய நடவடிக்கைகளை தாம் எடுத்திருக்கமுடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ தளபதியோ அல்லது வேறு எவரோ தவறுகளை மேற்கொள்ளும் போது அதன் பிரதிபலன்களுக்கு முகங் கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச த ஹிந்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF