பல தசாப்த கால இன மோதல்களுக்கு பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடையாளச் சின்னமாக இன்று அம்பாந்தோட்டையில் சீன அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ திறந்து வைத்தார். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 65 ஆவது பிறந்த தினம்.
நாளை வெள்ளிக்கிழமை 19ம் திகதி இவர் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவிக்கு சத்தியப் பிரமாணம் செய்து கொள்கிறார். இவற்றை நினைவு கூறும் வகையிலேயே இன்று இவரது சொந்த மண்ணில் இத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய துறைமுகத்தல் இன்று நங்கூரமிடப்பட்ட கப்பலில் இருந்து சரக்குகள் ஜனாதிபதி முன்னிலையில் இறக்கப்பட்டன.
இத்துறைமுக நிர்மாணத்துக்கு சீனா இலகு கடனாக 300 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உள்ளது.இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் பாதையில் அமைந்துள்ள இத் துறைமுகத்தின் மொத்த நிர்மாணப் பணிகளுக்கு 1.5 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ”நான் பதவியேற்றபோது கௌரவமான சமாதானம் மற்றும் புதிய இலங்கை என்பவற்றை ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி வழங்கினேன்.
அதை நான் நிறைவேற்றி புதியதோர் நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளேன்.” இன்று இங்கு உரையாற்றும்போது ஜனாதிபதி கூறினார்.ஜ னாதிபதியின் உரை நேரடியாக தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது. இலங்கைக்கு மிக நெருக்கமான நட்பு நாடு மற்றும் வர்த்தகப் பங்காளி என்கிற வகையில் இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அதிகரித்து உள்ளன. இதனால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது.
தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை விஸ்தரிப்பதற்கான ஒரு மூலோபாயமாகவே இம்முதலீடுகள் அமைகின்றன என்று அரசியல் அவதானிகள் நம்புகின்றனர். பங்களாதேஷ்,மியன்மார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் சீனா துறைமுகங்களை நிர்மாணித்து வருகின்றது.
நேபாளத்திலும் இலங்கையிலும் ரயில்வே திட்டங்களில் கூட முதலீடுகள் செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.க டந்த ஆண்டில் சீனா இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலரை வழங்கியதன் மூலம்,இலங்கைக்கு உதவி வழங்குவதில் ஜப்பானையும் முந்திவிட்டது.