
கெய்ரோன்: எகிப்தின் கிசா பகுதியில் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான சுற்றுச்சுவர் புதையுண்டிருப்பது அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எகிப்தின் கிசா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அப்பகுதியில் 3,400 ஆண்டுகளுக்கு முன்பே 2 அடுக்குகளாக காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டிருந்தது தற்போதைய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மனித முகமும் சிங்க உடலும் கொண்ட ‘ஸ்பிங்ஸ்’ சிலை எகிப்தின் கிசா நகரில் உள்ளது. 241 அடி நீளம், 20 அடி அகலம், 66 அடி உயரம் கொண்ட இந்த சிலை உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காஃப்ரா என்ற பாரோ மன்னனால் கி.மு. 2550 ம் ஆண்டு, அதாவது 4,560 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இப்பகுதியில் புழுதிப் புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் இருந்து பிரமிடு, ஸ்பிங்ஸ் உள்ளிட்ட நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் கி.மு. 1400 ம் ஆண்டில் எகிப்து மன்னர் துட்மோட்ஸ் காலத்தில் இந்த காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. காம்பவுண்டுக்கு ஆபத்து இல்லாமல் மண், கல் ஆகியவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.
