Sunday, November 28, 2010

சவுதி "பேஸ்புக்' இணையதளத்திற்கு நெருக்கடி



ரியாத் : "பேஸ்புக்' இணையதள சேவைக்கு, சவுதி அரேபியாவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய வழி சட்ட திட்டங்களை கடைபிடிக்கும் சவுதி அரேபியா, குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதில் பெயர் பெற்ற நாடு. நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக முறைகளை நிர்வகிப்பதில் இஸ்லாமிய மதத் தலைவர்கள் தான் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

உலக அளவில் பிரபலமான, "பேஸ்புக்' சமூக இணையதளம் சவுதியின் சட்ட திட்டங்களை மீறுவ தாக, குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சவுதி தகவல் தொடர்புத் துறை, "பேஸ்புக்' சமூக இணையதளத்தை கடந்த வாரம் தடை செய்தது. இதுகுறித்து சவுதி தகவல் தொடர்பு அமைச்சக ஊழியர் ஒருவர் கூறுகையில், "நாட்டு மக்கள் கடைபிடித்து வரும் கலாசார பழக்க வழக்கங்களை மீறும் வகையில், "பேஸ்புக்' இணையதள சேவைகள் உள்ளன.

இதனால், அதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றார்.அடுத்த சில நாட்களில் தனது முடிவை மாற்றிக் கொண்ட சவுதி தகவல் தொடர்பு அமைச்சகம், இந்த தடையை நீக்கியுள்ளது. எனினும், தனது சேவை முறைகளில் திருத்தம் செய்யும்படி, சவுதி "பேஸ்புக்' அலுவலகம் வற்புறுத்தப்பட்டுள்ளது.

இதனால், "பேஸ் புக்' இணையதளத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன், தனியார் "பிளாக்' ஒன்றில், "நான்தான் கடவுள்' என்று கூறி மோசடி செய்த ஒருவனை "பேஸ்புக்' உதவியுடன் சவுதி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளும், "பேஸ்புக்' இணையதளத்தை தடை செய்துள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF