தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை திட்டமிட்டபடி நேற்று துவக்கியதை அடுத்து, வடகொரியா மஞ்சள் கடல் எல்லையில் உள்ள தன் ஏவுதளங்களில் இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளைத் தயாராக வைத்துள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. தென்கொரியாவின் மேற்கு பகுதியான மஞ்சள் கடல் பகுதியில் நேற்று தென்கொரியாவும், அமெரிக்காவும் தங்கள் கூட்டு ராணுவப் பயிற்சியை திட்டமிட்டபடி துவக்கின. இப்பயிற்சியில், 75 போர் விமானங்கள் மற்றும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட அமெரிக்க அணுசக்தி போர்க்கப்பலான "ஜார்ஜ் வாஷிங்டன்'னும் கலந்து கொண்டிருக்கிறது.
அதோடு, மேலும் மூன்று போர்க்கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் போர் விமானங்களையும் இயான்பியாங் தீவில் தென்கொரியா தயார் நிலையில் வைத்துள்ளது. தீவில் இருந்த அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தென்கொரியா வெளியேற்றிவிட்டது.இந்நிலையில், விவகாரம் மேலும் மோசமாவதைத் தடுக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. சீன அரசின் தலைமை நிர்வாகி டாய் பிங்குவோ உள்ளிட்ட பல உயரதிகாரிகள் நேற்று சியோலில் கூடி, தென்கொரிய வெளியுறவு அமைச்சர் கிம் சுங் ஹ்வானுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.இந்த கூட்டு ராணுவப் பயிற்சியின் போது வடகொரியா தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால், பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கும்படி, அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு தென்கொரிய அதிபர் லீ மியுங் பாக் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியா தயார்: இந்நிலையில், மஞ்சள் கடல் எல்லையை ஒட்டிய தன் ஏவுதளங்களில், குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது வடகொரியா. "எல்லையைத் தாண்டி வந்தால் கடுமையான ராணுவ தாக்குதல் நடத்தப்படும்' என்று வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய தரப்பில் பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.அமெரிக்காவின் கூட்டு ராணுவப் பயிற்சியை எதிர்க்கும் சீனா, தன் நட்பு நாடான வடகொரியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. வடகொரிய பார்லிமென்ட் தலைவர் விரைவில் சீனா செல்வார் என சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் "ஷின்ஹுவா' தெரிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF