Friday, November 19, 2010
நூறு அடி கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தை சிறு காயங்களுடன் மீண்ட அதிசயம்!
ஆர்ஜன்டீனாவில் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ்ஸுக்கு அருகில் பிளாரஸ் பகுதியில் மூன்று வயது குழந்தையொன்று 100 அடி ஆழமான தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் வீழ்ந்தது.
வெனசா மமானி என்ற இந்தக் குழந்தை வீழ்ந்த கிணறு விவசாயிகளால் பாவிக்கப்படும் 14 அங்குலங்கள் மட்டுமே அகலமான கிணறாகும்.
இதில் யாரும் விழுந்தால் மீட்டெடுப்பதென்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். குழந்தை விழுந்த தகவல் கிட்டியதும் பொலிஸார் தீயணைப்புப் படையினர் என 200 க்கும் மேற்பட்ட மீட்பாளர்கள் அங்கு விரைந்தனர் உள்ளே யாரும் இறங்க முடியாது அந்தளவு கிணறு ஒடுக்கமானது
உள்ளே ஒரு கயிறு போடப்பட்டது. அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு குழந்தை மேலே வருமா? அதுசம்பந்தமான அறிவுறுத்தல்களை குழந்தையால் பின்பற்றமுடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இருந்தாலும் வேறு வழியில்லை.
இதற்கிடையில் அங்கு ஊடகங்களும் வந்து சேர்ந்துவிட்டன. விஷேட கேபிள் வழியாக கெமராக்களும் கிணற்றுக்குள் அனுப்பப்பட்டன. படப்பிடிப்பும் நடந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேர தீவிரப் போராட்டத்தின் பின் அந்த அதிசயம் நடந்தது.
குழந்தை வெனசா மமானி எல்லோரும் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு மேலே வந்தது. உள்ளே அனுப்பப்பட்ட கயிறு குழந்தையின் மார்பைச் சுற்றிக் காணப்பட்டது.
அழுது கொண்டு வெளியே வந்த குழந்தையின் உடலில் சிறு கீறல் காயங்கள் மட்டுமே காணப்பட்டன. இருந்தாலும் குழந்தை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF