சியோல் : தென்கொரியத் தீவின் மீதான வடகொரியாவின் திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவி வரும் சூழலில், தென்கொரியாவுடன் ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு விமானம்தாங்கி போர்க்கப்பலை அது தென்கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. தென்கொரியாவுக்கு சொந்தமான இயாங்பியாங் தீவு மீது, வடகொரியா நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் தென்கொரிய கடற்படை வீரர்கள் இருவரும், பொதுமக்கள் இருவரும் பலியாயினர். இச்சம்பவத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்தன.
இந்நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா, தென்கொரிய அதிபர் லீ மியுங் பாக்குடன் தொலைபேசியில் பேசிய போது, "அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவு தென்கொரியாவுக்கு உண்டு. மேலும் இதுபோன்ற பிரச்னைகளில் உலக சமுதாயத்துடன் இணைந்து அமெரிக்காவும் தோளோடு தோள் கொடுத்து தென்கொரியாவுக்கு ஆதரவாகப் போராடும்' என்று உறுதியளித்தார். இதையடுத்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோ கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலான "ஜார்ஜ் வாஷிங்டன்' நேற்று அங்கிருந்து புறப்பட்டு சியோலை நோக்கிச் சென்றுள்ளது.
இதில் 90 போர்விமானங்களும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களும் உள்ளனர். இதுகுறித்து தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்,"இந்த வார இறுதியில் சியோலில் இருநாட்டு ராணுவமும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றன. இந்த தற்காப்பு முயற்சி இயல்பானதுதான்' என்று தெரிவித்தனர். நேற்று சியோலில் இத்தாக்குதல் தொடர்பாக, ராணுவ உயரதிகாரிகளுடன் தென்கொரிய அதிபர் லீ நடத்திய கூட்டத்திற்குப் பின் விடுத்த செய்தியில்,"இதுபோன்ற எரிச்சலூட்டும் காரியங்களை வடகொரியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மீண்டும் ஒருமுறை இதுபோன்ற தாக்குதல் நடந்தால், மிக மோசமான பழிவாங்கலை அது எதிர்கொள்ள வேண்டி வரும்' என்று எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வடகொரியா,"இருநாடுகளுக்கு இடையிலான கடல் எல்லையை மி.மீ., அளவு தென்கொரியா தாண்டினால் கூட கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தாக்குதலுக்குப் பின், நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்களை இயாங்பியாங் தீவுக்கு தென்கொரியா அனுப்பி வைத்துள்ளது. அத்தீவில் குடியிருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தாக்குதல் நடந்த பின், அத்தீவை அதிகாரிகள் சோதனையிட்டதில் பொதுமக்கள் இருவரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டன. இயாங்பியாங் தீவை ஒட்டி உள்ள ஐந்து தீவுகளுக்கு ராணுவத்தை அனுப்புவது குறித்து நேற்று தென்கொரிய ராணுவ அமைச்சர் கிம் டே யங் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"வடகொரியா இனிமேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தென்கொரிய ராணுவம் தயார் நிலையில் உள்ளது' என்று தெரிவித்தார். வடகொரியாவுக்கு தென்கொரியாவில் இருந்து அனுப்பத் தயார் நிலையில் இருந்த 240 லட்ச ரூபாய் மதிப்புடைய சிமென்ட், மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அடங்கிய கப்பல்களை தென்கொரிய அரசு நிறுத்தி வைத்து விட்டது. இந்நிலையில், ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் இப்பிரச்னையில் சீனாவின் தலையீட்டை கோரியுள்ளன.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூத் தன் அறிக்கையில், "இப்பிரச்னையில் சீனா தலையிட்டுத் தன் செல்வாக்கின் மூலம் வடகொரியாவுக்கு அறிவுறுத்த வேண்டும். இதுவரை சீனாவின் பேச்சை அது கேட்டதில்லை. எனினும் அந்த பிராந்தியத்தில் அமைதி நீடிப்பதற்காக சீனா இதை செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பத்திரிகைகள் கொந்தளிப்பு:
வடகொரியாவின் திடீர் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியப் பத்திரிகைகள், பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. தென்கொரியாவில் இருந்து வெளிவரும் பல பத்திரிகைகள், "வடகொரியாவுக்கு சரியான உறுதியான பலத்த அடி கொடுக்க வேண்டும். வடகொரியா எப்போதும் தனது ஆக்கிரமிப்பு புத்தியை விட்டதில்லை. சர்வதேச விதிகளை மீறி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது மன்னிக்க முடியாத குற்றம். அது நெருப்போடு விளையாட ஆரம்பித்து விட்டது. நாம் அதை சுட்டுப் பொசுக்கினால் தான் நெருப்பின் தன்மை அதற்கு புரியும்' என்று கொந்தளித்து எழுதியுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF