Thursday, November 25, 2010

நியூசிலாந்து சுரங்கத்தில் இரண்டாவது வெடிவிபத்து : அனைவரும் பலியாகியிருப்பதாக அச்சம்



கிரேமவுத் : நியூசிலாந்து நாட்டில், 29 பேர் சிக்கிக் கொண்ட சுரங்கத்திற்குள் மீண்டும் ஒரு பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்ததால் அவர்கள் அனைவரும் பலியாகியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இத்தகவல் அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்தின் மேற்குக் கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள "பைக் ரிவர்' நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்திற்குள் கடந்த வாரம் சிலர் பணியில் இருந்த போது வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 29 பணியாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இவர்களில் 17 வயது முதல் 62 வரையிலான பலதரப்பட்ட வயதுடையவர்கள் இருந்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு பேரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு பேரும் அதில் இருந்தனர். அனைவருக்கும் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளேயே இருந்தன. எனினும், சுரங்கத்திற்குள் பயங்கரமான விஷவாயுவின் தாக்கம் இருந்ததால், மீட்புப் படையினர் உள்ளே செல்ல இயலவில்லை. இரண்டு ரோபோக்கள் மூலம் விஷவாயுவின் அளவைக் கணக்கிட நேற்று முன்தினம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம், மற்றொரு வழியாக, துளையிட்டு விஷவாயுவை அளவிடும் பணியும் நடந்தது. பாறைகள் மிகவும் கடினமாக இருந்ததால், துளையிடும் பணி தொய்வடைந்தது. இந்நிலையில், நேற்று மற்றொரு மோசமான வெடிவிபத்து சுரங்கத்திற்குள் நிகழ்ந்துள்ளது. இது முதலில் நிகழ்ந்த வெடிவிபத்தை விட இரண்டு மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது.

இவ்விபத்தில் உள்ளே சிக்கியிருந்தவர்கள் அனைவரும் சிக்கி இறந்து போயிருக்கலாம் என்று போலீஸ் உயரதிகாரி காரி நோயல்ஸ் தெரிவித்தார். சுரங்கம் அமைந்துள்ள மாவட்டத்தின் மேயர் டோனி கோக்ஷ்ரூனும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஐந்து நாட்களாக, சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் உறவினர்கள் சுரங்கத்திற்கு வெளியே பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இச்செய்தி வெளியானவுடன் அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து பேட்டியளித்த போலீஸ் உயரதிகாரி காரி நோயல்ஸ்,"இரண்டாவது முறையும் வெடிவிபத்து நிகழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் பார்த்தால் உள்ளே ஒருவரும் உயிருடன் இருக்க முடியாது என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது' என்று தெரிவித்தார்.

மேயர் டோனி கூறுகையில்,"நியூசிலாந்தின் கருப்பு நேரம் இது. இதை நம்பவே முடியவில்லை. அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. அவர்கள் கதறி அழுகின்றனர். தரையில் விழுந்து புரள்கின்றனர். சிலர் கோபத்தில் கூச்சலிடுகின்றனர்' என்று கூறினார். அந்நாட்டின் மின்துறை அமைச்சர் கெர்ரி ப்ரவுன் லீ, இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 1914ல் வடபகுதியில் ஒரு சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 43 பேர் பலியாயினர். அதையடுத்து நியூசிலாந்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் நடந்த இரண்டாவது மிகப் பெரிய சோக சம்பவம் இது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF