Thursday, November 11, 2010

பாராளுமன்றத்திற்கு படகுப் பயணம் : வீடியோ கேமரா ஒளியில் பாராளுமன்ற நடவடிக்கைள்

பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதை இன்று பெய்த அடைமழையால் முற்றாக மூழ்கிப் போயுள்ளதன் காரணமாக இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு உறுப்பினர்கள் படகில் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது.
பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் மூன்றடிக்கும் உயரமான நீர் நிரம்பி அப்பிரதேசமெங்கும் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் கூட தாமதித்தே ஆரம்பமாகியிருந்தன.
அப்போதும் கூட பாராளுமன்றத்திற்கு தரை வழியாக செல்ல முடியாத நிலை காணப்பட்டதால் இராணுவமும், கடற்படையும் அவர்களுக்கு உதவ முன்வந்தன. அதன்படி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படகு மூலம் பாராளுமன்றத்திற்குச் சென்றனர்.
இன்னும் சிலர் இராணுவத்தின் உயரமான பவள் கவச வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வாறாக பல சிரமங்களின் மத்தியில் பாராளுமன்றத்தைச் சென்றடைந்த போது மழை காரணமாக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வர பெரும் ஏமாற்றமாக இருந்தது.
வேறு வழியின்றி பாராளுமன்றத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டு வீடியோ கமெராக்களின் ஒளியில் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது.
அரசாங்கம் இன்று பாதுகாப்புப் படையினரின் சம்பளம், பாதுகாப்பு போன்ற இராணுவத்தரப்பு விவகாரங்களுக்கென 1500 கோடி ரூபாவிற்கான குறை நிரப்புப் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்திருந்தது.
ஆயினும் பாராளுமன்றச் சூழலின் நிலையில் அது தொடர்பான விவாதத்தை நடத்தாமலேயே பிரேரணையை நிறைவேற்ற எதிர்க்கட்சியினர் சம்மதித்தனர். அதனால் வெறும் எட்டு நிமிடங்களுடன் பாராளுமன்ற அமர்வு முற்றுப் பெற்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF