Wednesday, November 24, 2010

மகள் விடுதலை ஆவார்! பணிப்பெண் ரிசானாவின் தாய் நம்பிக்கையுடன் காத்திருப்பு


"மகள் விடுதலை ஆவார்." எஜமானரின் நான்கு மாத குழந்தையை படுகொலை செய்தார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் மரணதண்டனைக் கைதியாக இருக்கும் இலங்கைப் பணிப் பெண் ரிசானா நௌபீக்கின் தாய் இவ்வாறு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிராமத்தில் உள்ள குடிலுக்கு நேரில் வந்திருந்த த ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இவர் மேலும் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு:- ”ரிசானா மிகவும் நல்ல பிள்ளை.

ஆனால் சவூதி அரேபியாவில் என்ன நடந்தது? என்பது எமக்கு யாருக்கும் தெரியாது. இருப்பினும் அவர் எக்குற்றமும் செய்திருக்க மாட்டார் என்பதை நான் நன்றாகவே அறிவேன்.

நாங்கள் நாதி அற்றவர்களாய் செயல் இழந்து நிற்கின்றோம். இஸ்லாமிய மார்க்கத்தில் மன்னிப்பு என்பது மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.

எனவே எனது மகளை விடுதலை எம்மிடம் பத்திரமாக மீள ஒப்படைக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். எனது மகளின் விடுதலைக்காக பிரார்த்தித்து வரும் தமிழ், முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

எனது மகளின் விடுதலையில் மிகுந்த சிரத்தை காட்டி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் எமது நன்றி அறிதலை வெளிப்படுத்துகின்றேன். ரிசானாதான் எங்களின் மிகப் பெரிய சொத்து.

எங்களால் ஒரு நேரம் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் உள்ளது. ரிசானாவின் மூன்று சகோதரர்களால் கல்வியில் அக்கறை காட்ட முடியாமல் உள்ளது. ரிசானா இல்லாமல் எம்மால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது. 



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF