உத்தரபிரதேசம் மாநிலம் ஜாம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிஷன். இவருக்கு சங்கீதா (வயது 18), சுனிதா (14) அனிதா (12) பிங்கி என்ற மகள்களும் ராகுல் என்ற மகனும் இருந்தனர். |
ராம்கிஷன் தனது குழந்தைகள் அனைவர் பெயரிலும் இன்சூரன்சு பாலிசி எடுத்து இருந்தார். சங்கீதா, அனிதா, சுனிதா, பெயர்களில் தலா ரூ.2 லட்சம் பாலிசியும், பிங்கி பெயரில் ரூ.1 லட்சம் பாலிசியும் எடுத்து இருந்தார். மேலும் தனது பெயரிலும் மகன், மனைவி பெயரிலும் பாலிசி எடுத்து இருந்தார். இந்த நிலையில் ராம்கிஷன் நிலம் ஒன்றை வாங்க முடிவு செய்தார். இதற்கு ஏராளமான பணம் தேவைப்பட்டது. இதற்காக 2 மகள்களை கொன்று இன்சூரன்சு பணத்தை பெற திட்ட மிட்டார். இது பற்றி தனது நண்பர் பவான் என்பவரிடம் ஆலோசனை நடத்தினார். அவர் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் 2 மகள்களையும் கொலை செய்து விடுவதாக கூறினார். கடந்த 22- ந்தேதி ராம்கிஷன் தனது மகள்கள் சுனிதா, அனிதா இருவரையும் சினிமா பார்க்கலாம் என கூறி அழைத்து சென்றார். பின்னர் இருவரையும் பவானிடம் ஒப்படைத்து சினிமாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். பவான் இருவரையும் அருகில் உள்ள தியேட்டருக்கு அழைத்து சென்றார். படம் பார்த்து விட்டு இரவில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இருவரையும் அங்குள்ள ஆற்றில் அவர்கள் வந்த சைக்கிளோடு தள்ளி விட்டார். ஆற்றில் அதிகம் வெள்ளம் சென்றது அதில் மூழ்கி இருவரும் இறந்தனர். மறுநாள் ராம்கிஷன் போலீசில் சென்று ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது 2 மகள்களும் வீட்டில் இருந்த 100 ரூபாயை எடுத்துக் கொண்டு சைக்கிளில் வெளியே சென்றனர். அதன் பிறகு வீடுதிரும்பவில்லை என்று கூறி இருந்தார். போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே இருவரின் பிணமும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கி கிடந்தது தெரிய வந்தது. ராம்கிஷன் மீதே போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக கூறினார். இதனால் சந்தேகம் வலுத்தது. போலீசார் தீவிரமாக விசாரித்த போது நடந்த உண்மைகளை ஒத்துக் கொண்டார். இதையடுத்து ராம்கிஷன், பவான் இருவரையும் போலீசார் கைது செய்தனர். |