Sunday, November 7, 2010

வெடித்து சிதறும் எரிமலை- விமானங்கள் ரத்து


இந்தோனேஷியாவில் ஜாவா தீவில் உள்ள போக்ய கர்தா நகரம் அருகேயுள்ள மெராபி எரிமலை வெடித்து சிதறுகிறது. இது கரும் புகையுடன் நெருப்பு குழம்பை கக்குகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 
 
அந்த எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சுமார் 2 லட்சம் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், வெளியேற மறுத்தவர்கள் எரிமலை குழம்பில் சிக்கினர். அவ்வாறு சிக்கியவர்களில் இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர்.
 
மேலும், பலர் 95 சதவீத தீக் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு கண்பார்வை பறிபோனது. இந்த நிலையில் மெராபி எரிமலையின் சீற்றம் இன்னும் தணியவில்லை. 
 
அது தொடர்ந்து வெடித்து சிதறுகிறது. அதில் இருந்து கரும்புகை மண்டலம் கிளம்புகிறது. பாறை துகள்கள், மற்றும் நச்சு கியாஸ் வெளியாகிறது. அத்துடன் நெருப்பு குழம்பு வழிந்தோடுகிறது.
 
எரிமலையில் இருந்து வெளியாகும் புகை 8 கி.மீட்டர் உயரத்துக்கு வானில் பரவியுள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தா பகுதியிலும் காற்றில் பரவி வருகிறது. 
 
இதனால் விமானங்கள் பறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் புகையில் உள்ள சாம்பல் விமானங்களின் என்ஜினில் புகுந்து பழுதடைய செய்து விபத்தை ஏற்படுத்தும். எனவே ஜகார்தாவுக்கு செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
சிங்கப்பூர் ஏர்வேஸ், கேத்தே பசிபிச், ஜப்பான் ஏர்லைன்ஸ், லுப்தான்சா, மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா ஆகிய பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் சரக்கு விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இவை எரிமலை அருகேயுள்ள யோக்யகர்தா நகருக்கு மட்டும் செல்லவில்லை.
 
ஜகார்த்தா சர்வதேச விமான நிலையமாகும். இங்கு நாள் ஒன்றுக்கு 1200 விமானங்கள் வந்து செல்கின்றன. அவற்றில் தற்போது 10 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
கடந்த ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதில் இருந்து வெளியேறிய புகையால் ஒரு வாரத்துக்கும் மேல் 1 லட்சத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 
 
இதற்கிடையே, மெராபி எரிமலை உள்ள யோக்ய கர்தாவையும் அதை சுற்றியுள்ள 20 கி.மீட்டர் சுற்றளவு பகுதியை அபாயகரமான பகுதி என இந்தோனேஷிய அரசு அறிவித்துள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF