அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை (பாராளுமன்றம்) செனட் சபை (மேலவை) மாகாண கவர்னர் தேர்தல்கள் நடந்தன. அனைத்து தேர்தல்களிலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.
பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி 239 இடங்களையும், ஜனநாயக கட்சி 185 இடங்களையும் பிடித்தன. செனட் சபையில் 52 இடங்கள் பெற்று ஜனநாயக கட்சி பெரும் பான்மை பெற்றது. கவர்னர் தேர்தலில் குடியரசு கட்சிக்கு 23 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு 9 இடங்களும் கிடைத்தன.
ஜனநாயக கட்சி படுதோல்வி அடைந்தது ஒபாமாவுக்கு ஏற்பட்ட தோல்வியாக கருதப்படுகிறது. ஒபாமாவின் பொருளாதார கொள்கை எடுபடாததாலும் அவர் கொண்டு வந்த சுகாதார மசோதா தோல்வி அடைந்ததும் தான் அவரது தோல்விக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
இது தொடர்பாக ஒபாமா கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
ஜனநாயக கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியால் நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன். இதை ஜீரணித்து கொள்வது எளிதானது அல்ல.தேர்தல் தோல்வி எனக்கு ஒரு பாடமாக அமைந்து உள்ளது. மக்களின் மனதில் உள்ள அதிருப்தியை போக்கவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என நான் நம்புகிறேன். இன்னும் அதிக வளர்ச்சி தேவை.
கடந்த 2 ஆண்டாக வளர்ச்சி நிலை உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதை உணரவில்லை. நாட்டின் அதிபர் என்ற முறையில் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்கு குடியரசு கட்சியினரின் ஒத்துழைப்பையும் கேட்கிறேன். அவர்களுக்கு திட்டங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். இது தொடர்பாக வரும் ஆலோசனைகளை நான் கவனத்தில் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF