Wednesday, November 3, 2010

ஒபாமாவுக்காக அதிநவீன வசதிகளுடன் சூப்பர் கார் இந்தியா வருகை அணுகுண்டு தாக்குதலுக்கு உத்தரவிடும் சிறப்பு பட்டனும் உள்ளது


அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வருவதை முன்னிட்டு அவருடைய அதிநவீன `சூப்பர்' காரும் இந்தியா வருகிறது. ரசாயன, உயிரி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் அந்த காருக்குள் அணுகுண்டு போட உத்தரவிடும் `விசை' இடம் பெற்றுள்ளது.

7 டன் எடை

அமெரிக்க அதிபர் ஒபாமா, வருகிற சனிக்கிழமையன்று இந்தியா வருகிறார். இந்தியாவில் 4 நாட்கள் தங்கி இருக்கும் அவர், மும்பை மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். எனவே, அவர் பயணம் செய்வதற்காக அமெரிக்க அதிபரின் பிரத்தியேக கார் இந்தியா வருகிறது. மொத்தம் ஏழு டன் (7 ஆயிரம் கிலோ) எடை கொண்டது, அந்த கார்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த கார், `காடிலாக் ஒன்' என அழைக்கப்படுகிறது. மிக, மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டதாக அந்த கார் உள்ளது. ரசாயன தாக்குதல், உயிரி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல் என எந்தவித தாக்குதலும் அந்த காரை ஒன்றும் செய்ய முடியாது.

அணுகுண்டு போட உத்தரவிடலாம்

காரின் மேற்புறத்தில் ராணுவ தரத்திலான பாதுகாப்பு ஸ்டீல் கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, துப்பாக்கிக் குண்டுகளும் காரை துளைக்காது. கார் ஜன்னல் கண்ணாடிகள் ஒவ்வொன்றும் 5 அங்குலம் தடிமன் கொண்டவை. மேலும், உடைக்க முடியாத தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த பிரபஞ்சத்திலேயே உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஒரே சூப்பர் வாகனம், அமெரிக்க அதிபரின் கார் என்றால் மிகையாகாது.

அந்த காருக்குள் இருந்தபடியே அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை, துணை ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஆகியோரை எந்த நேரமும் ஒபாமா தொடர்பு கொள்ளும் வகையில் அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, காருக்குள் இருந்தபடியே அணு ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவிடும் வகையில் `சிறப்பு பட்டன்' (விசை) காருக்குள் உள்ளது.

40 விமானங்கள், 6 கார்கள்

இந்தியாவுக்கு அதிபர் ஒபாமா வருவதால் இந்த காரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி நகரத் தெருக்களில் இது வலம் வரும். இது தவிர, ஒபாமா வருகையை முன்னிட்டு அமெரிக்காவில் இருந்து 40 விமானங்கள், 6 ஆயுதம் தாங்கிய கார்கள் ஆகியவையும் வருகின்றன. அமெரிக்க உளவுப் பிரிவு சார்பாக மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இரண்டு சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குள் அதிபர் ஒபாமா செல்லும் ஒவ்வொரு அங்குல இடத்தையும் அந்த உளவுப் பிரிவினர் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். ஒபாமா மற்றும் அவருடைய மனைவி செல்வதற்காக 3 கடற்படை ஹெலிகாப்டர்களும் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒபாமா பாதுகாப்பு பணிகளில் 30 மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்படுகின்றன.

மாநிலங்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத் துறை உஷார் படுத்தியுள்ளது. எனவே, மராட்டியம், டெல்லி மற்றும் காஷ்மீர் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தீபாவளி விழாக்காலம் என்பதால் டெல்லியில் உள்ள முக்கிய சந்தைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, ஒபாமா வருகையும் இருப்பதால் கூடுதலாக 10 சந்தைகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் �னியன் பிரதேச அரசுகளுக்கும் தீவிரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF