போர் பங்காளியாக அமெரிக்கா தமது பொறுப்பை நிறைவேற்றியது! இலங்கை நிறைவேற்றவில்லை- இன்னர் சிற்றி பிரஸ்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
போர் பங்காளியாக அமெரிக்கா தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தமது பொறுப்பை இன்னும் நிறைவேற்றவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளக், இரகசிய செய்தியுடன் இலங்கை வந்துள்ளார். எனினும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தும் வரை அவர் அதனை வெளியிடமாட்டார் என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, இலங்கை தொடர்பில் இரண்டு அனுகுமுறைகளை கையாள்கிறது. ஒன்று இலகுவான அணுகுமுறை இரண்டாவது கடுமையான அணுகுமுறை.
இதில் பிளேக் மற்றும் இராஜாங்க திணைக்களம் இலகு அணுகுமுறையையும் ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகம் கடுமையான அணுகுமுறையையும் கடைப்பிடிக்கவுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ரொபோ்ட் ஒ பிளேக், அமெரிக்க தூதுவராக இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் பங்காளியாக செயற்பட்டார். அத்துடன் தமது நாடான அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி திரட்டல்களுக்கு எதிரான நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டார்.எனினும் 2008 ஆண்டு ஒக்டோபர் 25 ம் திகதி சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிளேக், இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் தோற்கடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2009 ம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதியன்று கொழும்பில் வைத்து கருத்துரைத்த அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் தற்போது தோற்கடிக்கப்பட்டிருப்பதால், 13 வது அரசியல் அமைப்பின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.இதிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்த பின்பே, தமிழர்களுக்கான தீ;ர்வு காணப்படவேண்டும் என்ற அமெரிக்காவின் எண்ணம் தெளிவாகியுள்ளது.
இதன் காரணமாகவே பிரபாகரனின் நடமாட்டங்களை அவதானிப்பதற்காக அமெரிக்கா, இலங்கைக்கு செய்மதிகளையும் வழங்கியது.இந்தநிலையில் அமெரிக்கா தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளது. எனினும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தமது பொறுப்பை இன்னும் நிறைவேற்றவில்லை.இவ்வாறான சூழ்நிலையிலேயே ரொபோ்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயம் இடம்பெறுகிறது.
நிபுணர் குழுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க தயார்- சரத் பொன்சேகா.
பான் கீ மூனின் நிபுணர் குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க தாம் தயாராவதாக இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.போரின் போது தமக்கு கீழ் பணியாற்றிய படைவீரர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவன் என்ற வகையில் தாம் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்க தயாராவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கே தாம் பதிலளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஒஸாமா பின் லேதின் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டமை குறித்து கருத்துரைத்த அவர், மிகவும் நேர்த்தியான படை நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.ஏற்கனவே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்திருந்த சரத் பொன்சேகா, தமது தலைமையின் கீழ் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. எனினும் போர்க்குற்றம் தொடர்பில் குற்றம் காணப்படுபவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் வன்னியின் இறுதியுத்தத்தின் போது சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டமைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக பான் கீ மூனின் நிபுணர் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகாரப் பகிர்வு வழங்க மகிந்த தயாராக இல்லை– சவுதி கெசட்.
இலங்கையின் சிறுபான்மை தமிழர்களுக்கு இடையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இல்லை என த சவுதி கெசட் இணையத்தளம் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதில் இருந்து, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவது தொடர்பில், தம்மை உட்படுத்திக் கொள்ளவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, நாடு முழுவதும் அரசாங்கத்தின் கையில் வந்த பின்னர், அதிகாரப் பகிர்வை வழங்கவும், சிறந்த அரசியல் தீர்வை முன்வைக்கவும் சிறந்த ஒரு வாய்பு கிடைத்தது.
எனினும் இது பிற்போடப்பட்ட தன்மை தற்போது காணப்படுகிறது.நீண்டகாலமாக நிலவுகின்ற தமிழர் சிங்களவர் இனப்பிச்சினைக்கு, அதிகார பகிர்வே முக்கிய தீர்வாக அமையும்.எனினும், ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் உள்ள பலரும், அதிகாரப் பகிர்வினை வழங்க எதிர்ப்பை வெளிகாட்டி வருகின்றனர்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து 152 கோடி ரூபா முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து 152 கோடி ரூபா பணம் முறைகேடாகக் கையாளப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.ஜனாதிபதி நிதியம் தொடர்பான கட்டுப்பாட்டுச் சபையின் விதிகள் மற்றும் அதன் சட்டதிட்டங்களுக்குப் புறம்பான முறையில் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளிலேயே பிரஸ்தாப நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
கணக்காய்வாளர் நாயகத்தினால் நேற்று பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவுக்கு (கோர்ப் குழு) தாக்கல் செய்திருந்த 2009ம் ஆண்டுக்கான கணக்கறிக்கையிலேயே பிரஸ்தாப விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி நிதியத்தின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பான முறையில் 2008ம் ஆண்டில் எண்பத்தி நான்கு கோடி ரூபாவும், 2009ம் ஆண்டில் எழுபத்தி நான்கு கோடி ரூபாவும் முறைகேடான வழியில் செலவிடப்பட்டிருப்பதாக பிரஸ்தாப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மருத்துவ உதவி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலமைப்பரிசில்கள், கலாசார மற்றும் மத விவகாரங்கள், விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள், நலனோம்புகை மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்பவற்றுக்காகவே பிரஸ்தாப நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இலங்கை பதிலளிக்காது! அமைச்சர் ஜி எல் பீரிஸ்.
இலங்கை அரசாங்கம், பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்காது என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. செயலரின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நேற்று நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் பீரிஸின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிபுணர் குழு வெளியிட்டது ஐ.நா. சபையின் அறிக்கை அல்ல. ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தனிப்பட்ட முறையில் அவருக்கு நம்பகமான மூன்று நபர்களினால் தன்னிச்சையாகத் தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்குப் பதில் அளிக்கவேண்டிய கடப்பாடு அரசுக்கு இல்லை.பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட புலிகள் அமைப்பை ஒழுக்கமுள்ள ஓர் அமைப்பு என மேன்மைப்படுத்தியும், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையை துன்பியல் முடிவு என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் தமிழ், சிங்கள சமூகங்களுக்கு இடையில் மீண்டும் ஓர் இன முரண்பாட்டையும், மோதல்களையும் ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.இது ஆறி வரும் புண்ணை மீண்டும் கிளறிவிடுவது போன்றதாகும்.முன்கூட்டியே எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை மனதில் வைத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையாகவே இது காணப்படுகின்றது.
அது தொடர்பாக அக்கறை கொள்ள வேண்டியதில்லை. முற்றும் முழுதாக குரோத மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை இலங்கை அரசு முழுமையாக நிராகரிக்கின்றது. என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளை, முன்னதாக இலங்கை அரசாங்கம், இந்த அறிக்கைக்கு பதிலளிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் பேசினேன். எங்களுக்கு இடையிலான பேச்சு மிகவும் நட்புறவுடனேயே அமைந்திருந்தது. அறிக்கை தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம். இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தாலன்றி தான் எதையும் செய்யமாட்டார் என்று அவர் கூறினார். உறுப்புரிமை நாடுகள் கோரிக்கை விடுக்கும்வரை இந்த அறிக்கை தொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதையும் தாம் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவுடனும், ஏனைய அரசியல் தலைவர்களுடனும் பேசி உள்ளேன். இந்தியா, சீனா மற்றும் பல்தேசிய தலைவர்களுடனும் எமது நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தியுள்ளேன்.மேலும் விரைவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர்களையும் நேரடியாக சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளேன்.
இது எமது நாட்டின் தேசிய கௌரவம் தொடர்பான விடயம். எமது நாட்டுக்கு எதிராக விடப்பட்டுள்ள இந்தச் சவாலை முறியடிக்க நாம் தயாராகவே இருக்கின்றோம். இன்றைய நிலையில் கட்சி நிறங்களை மறந்து அனைவரும் ஒன்று படவேண்டும்.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் யுத்தத்தின் பின் இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொண்டுவரும் நல்லிணக்க அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு தெளிவாக ஒரு கடிதம் எழுதவுள்ளவோம். இப்படி அமைச்சர் பீரிஸ் கூறினார்.
இறந்தது பின்லேடன் தான்! இறந்து போன சகோதரியின் மூளை திசு டிஎன்ஏ உறுதி செய்தது.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின்லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.
நியூயோர்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் இரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ 'சிக்னேச்சரையும்' பதிவு செய்து வைத்துவிட்டது.
வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்திருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ, டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.
இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.
பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்.
ஒசாமா கொல்லப்பட்டதற்காக அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்! தலிபான்கள் எச்சரிக்கை.
அல்குவைதா தலைவர் ஒசாமாவின் மறைவுக்கு பின்னர் தாலிபன் பயங்கரவாத இயக்கம் அமெரிக்காவுக்கும் , பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அல்குவைதா தலைவர் ஒசாமா கொல்லப்பட்டதற்காக அமெரிக்காவும், பாகிஸ்தானும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளது
அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் அரசையும், அவற்றின் படைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தாலிபன் செய்தி தொடர்பாளர் இசானுல்லா இசான் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் குடோஸ் என்பவர் கூறுகையில்,"பின்லேடன் கொல்லப்பட்டதால் ஜிகாதுக்கு எந்த மாற்றமும் வந்து விடாது. அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா. ஜிகாதில் அவர் சக்திவாய்ந்தவர். அவரது இழப்பு முஜாகிதீனுக்கு பெரிய வேதனையாக இருக்கும்.ஆனால் பின்லேடனின் மரணம் ஜிகாதை நிறுத்தி விடாது. முஸ்லீம் அல்லாதவர்களிடம் இருந்து நமது இடத்தை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.
பின்லேடனின் மறைவுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தனது அமைப்பினர் புதிய நடவடிக்கை ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்த அவர், இதே போன்ற நடவடிக்கையை பல்வேறு அமைப்பினரும் தொடங்க உள்ளனர் என்றார்.
பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உண்மையானது தானா என்பது குறித்து தலிபான்களிடையே ஏராளமான சந்தேகங்கள் உள்ளதாக தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். எனினும் அவர் இறந்திருந்தால் அது எங்களது போராட்டத்தில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தும் எனக் கருதவில்லை என்றார்.இந்நிலையில் பயங்கர வாத நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மெரிக்காவை தோற்கடிக்கபதற்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதனையே ஒஸாமாவின் மரணம் உலகிற்கு உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒஸாமாவின் மரணம் அல் கய்தா தீவிரவாத இயக்கத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நீதியை நிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் ஆர்வம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது என்பது ஒஸாமா மீதான தாக்குதலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் அரசையும், அவற்றின் படைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தாலிபன் செய்தி தொடர்பாளர் இசானுல்லா இசான் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் குடோஸ் என்பவர் கூறுகையில்,"பின்லேடன் கொல்லப்பட்டதால் ஜிகாதுக்கு எந்த மாற்றமும் வந்து விடாது. அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா. ஜிகாதில் அவர் சக்திவாய்ந்தவர். அவரது இழப்பு முஜாகிதீனுக்கு பெரிய வேதனையாக இருக்கும்.ஆனால் பின்லேடனின் மரணம் ஜிகாதை நிறுத்தி விடாது. முஸ்லீம் அல்லாதவர்களிடம் இருந்து நமது இடத்தை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.
பின்லேடனின் மறைவுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தனது அமைப்பினர் புதிய நடவடிக்கை ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்த அவர், இதே போன்ற நடவடிக்கையை பல்வேறு அமைப்பினரும் தொடங்க உள்ளனர் என்றார்.
பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உண்மையானது தானா என்பது குறித்து தலிபான்களிடையே ஏராளமான சந்தேகங்கள் உள்ளதாக தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். எனினும் அவர் இறந்திருந்தால் அது எங்களது போராட்டத்தில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தும் எனக் கருதவில்லை என்றார்.இந்நிலையில் பயங்கர வாத நடவடிக்கைகளை கைவிடுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மெரிக்காவை தோற்கடிக்கபதற்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதனையே ஒஸாமாவின் மரணம் உலகிற்கு உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒஸாமாவின் மரணம் அல் கய்தா தீவிரவாத இயக்கத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நீதியை நிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் ஆர்வம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது என்பது ஒஸாமா மீதான தாக்குதலின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி சுரங்க விபத்து: 14 ஊழியர்கள் சிக்கினர்.
மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் உள்ள கோகுலியா மாகாணத்தில் சான் ஜு யான் டி சபினாஸ் நகரம் உள்ளது.இதன் புறநகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று திடீரென மீதேன் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டது.
உடனே மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சுரங்கத்திற்குள் 60 மீற்றர் ஆழத்தில் 14 ஊழியர்கள் சிக்கி தவிப்பது தெரியவந்தது.
எனவே அவர்களை உயிருடன் மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் திரண்டனர். சுரங்கத்தின் நுழைவு வாயிலில் காத்து கிடக்கின்றனர்.சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் ஊழியர்களை உயிருடன் மீட்க அரசு உதவும் என மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டெரான் தெரிவித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ஒரு சுரங்கத்தில் இதே போன்று விபத்து ஏற்பட்டது. அதில் 65 பேர் பலியானார்கள்.
ஒசாமாவை சுட்டது அமெரிக்கப் படைதானா: புதிய சர்ச்சை.
அமெரிக்காவுக்கே சவால் விட்ட ஒசாமா பின்லேடன் தந்திரமாக விசேட படைகளின் மூலம் கொல்லப்பட்டதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியானது.அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் தனது மெய்ப்பாதுகாவலர் ஒருவரால் சுடப்பட்டிருக்கக் கூடும் என்கிற ரீதியில் பாகிஸ்தானிய பத்திரிக்கை ஒன்று கருத்துத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் 5 ஆண்டு காலமாக பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னதாக அறிவித்திருந்தார்.அபோதாபாத்தில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சண்டை குறித்து அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளித்தும் உள்ளனர். ஒசாமாவை தங்கள் படையினர் சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிட்டிருந்தனர்.
இப்படியான செய்திகள் வெளியாகியுள்ள இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டான்(dawn) நாளிதழ் வெளியிட்ட செய்தி ஒன்று ஒசாமாவை சுட்டது அமெரிக்கப் படைதானா என்ற சந்தேகத்தை ஆழமாக எழுப்பியுள்ளது.அமெரிக்க சிறப்புப் படையினர் ஹெலிகாப்டரில் வந்து நள்ளிரவில் தாக்குதல் நடத்திய அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்தைப் பார்த்த அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களின் அடிப்படையில் அந்தச் செய்தியில் ஆராயப்பட்டுள்ளது.
தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த பாகிஸ்தான் அதிகாரி கூறியதாவது: துப்பாக்கிச் சண்டை நடந்தச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில் ஒசாமாவை மிக நெருக்கமாகச் சென்று அவரது தலையில் ஒற்றைத் துப்பாக்கிக் குண்டால் சுட்டு வீழ்த்தியிருக்க சாத்தியமில்லை.
தங்களால் தப்பமுடியாத சூழலை உணர்ந்து ஒசாமாவே தனது பாதுகாவலரைக் கொண்டு துப்பாக்கியால் சுட வைத்திருக்கக் கூடும் என்று அந்த அதிகாரி விவரித்ததாக அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒசாமாவின் பாதுகாவலர்கள் மூவரும் சுட்டு வீழ்த்தப்பட பின்லேடனின் உடலை மட்டும் கைப்பற்றிச் சென்றிருக்கிறது அமெரிக்கப் படை. ஒசாமா பின் லேடன் சடலத்தின் படங்களையோ அல்லது வீடியோவை அமெரிக்கா இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில் பாகிஸ்தானின் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
லிபிய போராட்டக்காரர்கள் பகுதியில் வெடிகுண்டுத் தாக்குதல்.
லிபியாவில் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நபர்களின் மையப்பகுதியாக பெங்காசி உள்ளது.இந்த நகருக்கு கிழக்குப் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு ஒரு கார்குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அமைதி தவழும் பெங்காசியில் இந்தக் குண்டு வெடிப்பு அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
லிபிய அதிபர் கடாபியை பதவியில் இருந்து நீக்குவதற்கு போராடுபவர்களின் தலைமையகத்திற்கு 200 மீற்றர் தொலைவில் கார் குண்டு வெடித்ததாக போராட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் ஓமர் பானி உறுதிப்படுத்தினார்.
மாலை நேர தொழுகைக்கு சிறிது நேரம் முன்பாக காரில் குண்டு வெடித்தது என லிபிய பத்திரிக்கையாளர் நசீர் வார்ப்புலி கூறினார். இந்த கார் குண்டு வெடிப்பு கடாபி படை பிரிவினரின் சதி வேலை என நிகழ்விடத்தில் இருந்தவர்கள் கூறினர்.
கடந்த பெப்பிரவரி மாதம் 15ம் திகதி கடாபிக்கு எதிரான போராட்டம் வெடித்தது. மூன்று மாத போராட்டக் காலத்தில் பெங்காசியில் வெடித்த முதல் கார்குண்டு இதுவாகும். குண்டு வெடிப்பு சிதறல்களில் இரண்டு பேர் காயம் அடைந்ததாக சாட்சிகள் கூறினர்.இதற்கிடையே மிஸ்ரட்டா நகரில் செவ்வாய்க்கிழமை அமைதி நிலை நீடித்தது. போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போட்டால் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் முசா இப்ராகிம் கூறினார்.
சிரிய அரசைக் கண்டித்து அமர்வு போராட்டம் நடத்த அழைப்பு.
சிரிய அரசை கண்டித்து நகரங்களில் அமர்வு போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.கடந்த 2 தினங்களில் மட்டும் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் உள்ள தேசிய மனித உரிமை அமைப்பு தெரிவித்து உள்ளது. போராட்டம் நடத்துபவர்களையும் சிரிய அரசு கண்மூடித்தனமாக கைது செய்து வருகிறது.
கடந்த வாரத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய நபர்களின் கைது எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என சர்வதேச பொது மன்னிப்பு குறிப்பிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர்கள் மிக மோசமான நிலையில் காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் மீது கடுமையான தாக்குதலும் நடந்ததாக காவலில் இருந்து வெளியே வந்தவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மக்கள் நாட்டின் புகழை சீர்குலைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை நிலை உள்ளது என மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்தது.டெரா பகுதி மக்களை அரசு கொடுமைப்படுத்துவது காட்டுமிராண்டித்தனம் என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 25ம் திகதி முதல் டெரா பகுதியை பாதுகாப்பு படை முற்றுகையிட்டு அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காத வகையில் துன்புறுத்தி வருகிறது.
போலியான புகைப்படங்கள் என்ற குற்றச்சாட்டு: சந்தேகத்தை தீர்க்க அமெரிக்கா முடிவு.
பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீர்ர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒசாமா பின்லேடன் இல்லை. சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான படம் போலியானது என்று செய்தி வெளியானது.
இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பின்லேடனின் படங்களை வெளியிடலாமா? என்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது என்று தேசிய பாதுகாப்பு துறை துணை ஆலோசகர் ஜான் பிரினின்ன் தெரிவித்துள்ளார்.தீவிரவாத எதிர்ப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கான தேசிய பாதுகாப்பு துறை துணை ஆலோசகர் ஜான் பிரினின்ன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்க வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தீவிரவாதி ஒசாமா பின்லேடன் தான் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. சந்தேகங்களையும் ஊகத்தையும் தீர்ப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
அதனால் அபோதாபாத் அதிரடி தாக்குதல் பற்றிய புகைப்படங்கள் உட்பட தகவல்களை வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். அவ்வாறு வெளியிடும் போது புகைப்படங்களையும் வெளியிடலாமா என்று பரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.தீவிரவாதி பின்லேடனின் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் சந்தேகங்கள், ஊகங்களுக்கு முடிவு கட்டலாம் என்ற அமெரிக்க எம்.பிக்கள் சிலர் யோசனை தெரிவித்திருந்தனர்.
பின்லேடன் இல்லாத ஆப்கான் போர்: பிரான்ஸ் புதிய நம்பிக்கை.
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் திங்கட்கிழமை கொல்லப்பட்டார்.இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பின்லேடனை வீழ்த்துவதில் உள்ள ஒபாமாவின் உறுதியை சர்கோசி திங்கட்கிழமை பாராட்டினார்.
பின்லேடன் இல்லாத ஆப்கானிஸ்தான் போர் பிரான்சிற்கு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராடும் நேட்டோ தலைமையிலான கூட்டுப்படையில் பிரான்ஸ் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிரான்சில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு பிரான்ஸ் அரசு தடைவிதித்தது. இந்த தடையை கண்டித்து கடந்த 6 மாதத்திற்கு முன்னர் ஒசாமா பின்லேடன் பிரான்சுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் துருப்புகள் இருப்பதையும் பின்லேடன் கண்டித்து இருந்தார். பின்லேடனின் எச்சரிக்கைகள் பிரான்சுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தன.எங்கள் முஸ்லீம் தேசத்திற்கு எதிரான அநீதியை கடைபிடிக்கிறீர்கள். எனவே ஆப்கானிஸ்தானில் இருந்து நீங்கள் படைத் துருப்புகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என பின்லேடன் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்ப்பர் மகத்தான வெற்றி: ஒபாமா வாழ்த்து.
கனடா பொதுத் தேர்தலில் பழமைவாத கட்சியின் தலைவர் ஸ்டீபன் ஹார்ப்பர் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.செவ்வாய்கிழமை இந்த தலைவர்கள் ஹார்ப்பருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.பாகிஸ்தான் மண்ணில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப்படை சுட்டுக் கொன்றதற்கு ஒபாமாவுக்கு ஹார்ப்பர் வாழ்த்து தெரிவித்தார்.
ஒபாமா, ஹார்ப்பர் தொலைபேசி அழைப்பின் போது எல்லைப் பகுதியில் நிலவும் நெருக்கடியை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்தனர்.கனேடிய நாடாளுமன்றத்தில் ஸ்டீபன் ஹார்ப்பர் 166 தொகுதிகளை வென்றுள்ளார். அவருக்கு பழமைவாத கட்சி ஆதரவாளர்கள் வாழ்த்து கூறினர். கனேடியர்களின் நம்பிக்கையை பெறும் வகையிலான திட்டங்களுக்கு தமது பெரும்பான்மை அரசு முக்கியத்துவம் அளிக்கும் என ஹார்ப்பர் உறுதி அளித்தார்.
திங்கட்கிழமைத் தேர்தலில் ஹார்ப்பர் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான இருக்கைகளை கைப்பற்றி உள்ளார். லிபரல் கட்சியினரை பின்னுக்கு தள்ளி புதிய ஜனநாயக கட்சியினர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளனர். என்.டி.பி அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.திங்கட்கிழமை இரவு ஹார்ப்பர் வெற்றி உரை நிகழ்த்துகையில் கூறியதாவது: தமது நான்கு ஆண்டு ஆட்சியில் உறுதியான நிலையான பழமைவாத அரசு அமைய வழிவகுக்கப்பட்டுள்ளது. கனேடியன் என்கிற முறையில் கியூபெக்கில் ப்ளாக் கட்சி தோல்வி அடைந்திருப்பது பெரும் ஊக்கத்தை தமக்கு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புனிதப் போர் தொடர்ந்து நடைபெறும்: அல்கொய்தா எச்சரிக்கை.
புனிதப் போர் தொடர்ந்து நடத்தப்படும் என்று அல்கொய்தா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்பு படையினரால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த தகவல் வெளியானதும் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெளிநாடுகளில் உள்ள அல்கொய்தா இயக்கத்தினர் முதலில் இதை நம்ப மறுத்தனர். பின்னர் இந்த செய்தி உறுதியானதும் அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.
பின்லேடனின் மூதாதையர் வசித்த ஏமன் நாட்டிலும், அவர் பிறந்த சவுதி அரேபியாவிலும் இந்த செய்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏமனில் உள்ள அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறும் போது பின்லேடன் இறந்தது மிகவும் வருத்தமானது.
அவர் கொல்லப்பட்டது எங்கள் இயக்கத்தின் தீவிர போராட்டத்தின் தொடக்கமாக இருக்கும். எனவே எங்கள் புனிதப் போர் தொடர்ந்து நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.இது பற்றி அரேபியா அல்காய்தா முக்கிய தலைவர் ஒருவர் கூறியதாவது: முதலில் வந்த பின்லேடன் பற்றிய தகவலை எங்களால் நம்ப முடியவில்லை.
பின்னர் பாகிஸ்தானில் உள்ள எங்கள் இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டு அதை உறுதி செய்தோம். பின்லேடன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் புனிதப்போரை தொடர வேண்டும் என்று எங்களுக்கு ஏராளமான தகவல்கள் வருகின்றன.புனிதப்போரை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒசாமா என்ற சிங்கத்தின் கால் தடத்தைப் பின்பற்றி அல்கொய்தா சிங்கங்கள் நடைபோடும். அமெரிக்கா தான் செய்த செயலுக்கான அறுவடையை விரைவில் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
கப்பல் கொள்ளையர்களுக்கு வழங்கப்பட்ட 439 ஆண்டுகள் சிறைத் தண்டனை.
கப்பல் கொள்ளையர்களுக்கு 439 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு இந்திய பெருங்கடல் பகுதியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீன்பிடி கப்பல் ஒன்று கடல் கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது.
அக்கப்பலில் 36 ஊழியர்கள் உட்பட 16 ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரையும் 46 நாட்கள் பிணைய கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு காப்டிவெலிகாப்துல்லாய் மற்றும் ராகெகெஸ்ஸி ஹசன் ஆஜி என்ற கடல்கொள்ளையர்கள் தலைமையிலான குழுவினர் நடத்தியதாக கண்டறியப்பட்டது.இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு குறித்து ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் இந்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஐரோப்பிய யூனியன் பகுதியில் மட்டும் கடற்கொள்ளையர்கள் சுமார் 77 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு உலைகளை தாக்கப் போவதாக தீவிரவாதிகள் அச்சுறுத்தல்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்த பங்களாதேஷின் இளைஞர்கள் ஐந்து பேரை இங்கிலாந்து பொலிசார் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த கம்பிரியாவில் உள்ள ஹெல்லா பீல்டு பகுதிகளில் உள்ள அணுமின் நிலையத்தை தாக்க முடிவு செய்திருப்பதாக கண்டறியப்பட்டது.
அணு உலைகளுக்கு தேவைப்படக்கூடிய புளுட்டோனியம் இப்பகுதியில் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி கடந்த 1940ம் ஆண்டிலிருந்து செயற்பட்டு கொண்டிருக்கிறது.மேலும் இப்பகுதி மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அளித்த தகவலால் இங்கிலாந்து ரகசிய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் இந்த இளைஞர்களுக்கு மற்ற தீவிரவாத குழுக்குழுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணணி பயன்பாட்டாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்: நிபுணர்கள் எச்சரிக்கை.
ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட பின் சைபர் கிரிமினல்கள் எனப்படும் "இணையதளத் திருடர்கள்" பல்வேறு வழிகளில் இணையதளங்கள் மற்றும் தனி நபர் கணணிகளுக்குள் புகுந்து வைரசைப் பரப்பி வருகின்றனர்.இதனால் கணணிப் பயன்படுத்துவோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த 12 மணி நேரத்துக்குள் உலகம் முழுவதும் உள்ள கணணிகளில் பல்வேறு விதமான வைரஸ்கள் பரவுவதை நிபுணர்கள் கண்டறிந்தனர்.
இவர்கள் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பற்றிய வார்த்தைகள், படங்கள், வீடியோக்கள், "லிங்க்" எனப்படும் இணைப்புகளின் மூலம் வைரஸ்களைப் பரப்பி வருகின்றனர். இந்த வைரஸ்கள் கணணிகளின் செயல்பாட்டையே நிறுத்தி விடும் தன்மை கொண்டவை.
அது மட்டுமல்லாமல் பி.பி.சி, ஏ.பி.சி, சி.என்.என் போன்ற பிரபல செய்தி நிறுவனங்களின் பெயர்களையும் இணையதளத் திருடர்கள் பயன்படுத்துகின்றனர். கூகுள் இணையதளத்தில் படங்களைத் தேடும் பகுதியில் சில வைரஸ் பரப்பும் படங்களை இணைத்து அவற்றின் மூலமும் வெகுவேகமாக பரப்பி வருகின்றனர்.
அதனால் பெஸ்ட் ஆன்ட்டி வைரஸ் 2011, இஸ்லாமாபாத், அல் கொய்தா, நேவி சீல்ஸ், ஒபாமா அட்ரஸ், ஒசாமா பின்லேடன் டெட், ஒசாமா பின்லேடன் டெட் 2011, ஒசாமா பின்லேடன் டெட் ஆர் அலைவ் ஆகிய வார்த்தைகளுடன் கூடிய படங்கள், இணையதளங்கள், செய்தித் துணுக்குகள் மற்றும், லிங்க் வந்தால் அவற்றை க்ளிக் செய்து தொடர வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற வைரஸ்களை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வழியாகவும் இணையதளத் திருடர்கள் பரப்பி வருவதால் அந்த சமூக இணையதளங்களில் இருப்பவர்கள் செய்திகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
குறிப்பாக பேஸ்புக்கில் வரும் விளம்பரங்கள் விடயத்தில் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.இந்த வைரஸ்களைத் தடுக்க தனி நபர்கள் தங்கள் கணணிகளில் தரம் வாய்ந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களைப் பதிவிட வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் இளவரசர் வில்லியம் திருமணம், ஜப்பான் சுனாமி ஆகிய சம்பவங்களின் போதும் இதுபோன்ற வைரஸ் பரப்பல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.