ஷிராணி பண்டாரநாயக்க முதல் பெண் பிரதம நீதியரசராக இன்று பதவியேற்பு.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
இலங்கையின் 43 வது பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் மேற்கொள்கின்றார்.உயர் நீதிமன்ற நீதியரசரான இவர், இலங்கையின் பிரதம நீதியரசர பதவிக்கு தெரிவாகும், முதல் பெண்மணியாவார்.
அநுராதபுரம் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று பின்னர், கொழும்பிலும் தமது கல்வியைத் தொடர்ந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டதுறை பீடத்தில் உள்வாங்கப்பட்டார்.அதன்பின் 1980 ல் சட்டத்துறை பட்டத்தையும், 1983 ம் ஆண்டு சட்டம் தொடர்பான முதுமானி பட்டத்தையும் பெற்றார்.நீதிமன்றச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரான ஷிராணி பண்டாரநாயக்க 11 தடவைகள் பதில் பிரதம நீதியரசராக செயற்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்: 6 பேர் பலி.
பாகிஸ்தானில் இருவேறு பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.பெஷாவரில் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றை தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
சமீப காலமாக மசூதிகளையும், மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களையும் விட்டுவிட்டு பாதுகாப்பு நிலைகளின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். அல்கொய்தா பிரமுகர் முகமது குவாஸிம் என்கிற சோஹைல் அல் மக்கி ஐ.எஸ்.ஐ சோதனையின் போது கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கருதப்படுகிறது.
குவெட்டாவின் காலி கமலோ பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்கப் படைகளால் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலிபான் அமைப்பினர் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்: கிலானி.
சர்வதேச விவகாரங்களில் சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜியாங்ஸு மாகாணத்தில் இன்று காலை நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
விழாவில் கிலானி பேசியதாவது: சீன தேசத்தின் சிறப்புகளை நாங்கள் மதிக்கிறோம். சீனாவின் பழமையான செழிப்புகளை இன்றைய உலகம் தற்போது தான் சந்திக்கிறது. சீனாவின் தத்துவங்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பலன் தரக்கூடியது.சீனா-பாகிஸ்தான் உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் கன்பூசியஸ் மையங்கள் தொடங்கப்படும். அதுபோல் சீனப் பல்கலைக்கழகங்களில் பாகிஸ்தான் கல்வி மையங்களும் திறக்கப்படும்.
21ம் நூற்றாண்டில் சீனா உலகை வடிவமைப்பதை காண்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் சர்வதேச விவகாரங்களில் சீனா தனது பங்களிப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.கிலானி 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று பீஜிங் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவர் நியமனம்.
பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2ந் திகதி அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதை தொடர்ந்து அல் கொய்தா இயக்கத்தின் புதிய தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. பின்லேடனுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் அல்மான் அல் ஜவாகிரி புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர் சர்வதேச அளவில் அல்கொய்தா இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.
அதற்கு பொருத்தமான நபர் யாரும் இல்லாத பட்சத்தில் அப்பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிக்கிறார். மேலும் இந்த இயக்கத்தின் காப்பாளராகவும் செயல்படுகிறார். எனவே அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக சைபால் ஆதல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.எகிப்தை சேர்ந்த இவர் அங்கு முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். எகிப்தில் இவர் அல்மான் அல் ஜவாகிரியுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். இவருக்கு முன்னதாக மொகமத் முஸ்தபா யாம்னி என்பவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ளார்.
இதை தொடர்ந்து சைபால் ஆதல் தேர்வு செய்யப்பட்டுள்ளதா? தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தவிர அத்னன் அல் கொஷ்ரி தகவல் தொடர்பாளராகவும், மொகமத் நசிர் அல் வாஷி அபுநஷீர் ஆப்பிரிக்கா விவகாரங்களை கவனிப்பவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தான்-வசிரிஸ்தான் விவகாரங்களையும் இவர் கூடுதலாக கவனிக்க உள்ளார். அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் மகன்கள் யாருக்கும் எந்தவித பதவியும் வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்த இயக்கத்தில் பதவி வகிக்க யாரும் விரும்பவில்லை என தெரிகிறது.
தலிபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தை: அமெரிக்கா தீவிரம்.
ஆப்கானிஸ்தானில் பன்னாட்டுப் படைகளுக்கு பெரும் சவால்களை எழுப்பி வரும் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா நேருக்கு நேர் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முடிவு செய்துள்ளது.இந்த மே மாதம் 2ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க கமண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பின்லேடன் மறைவிற்கு பின்னர் தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அமெரிக்கா முனைப்பு காட்டியுள்ளது.
தலிபான்களின் தலைவர் முல்லா ஓமருக்கு நெருக்கமான நபர்களுடன் கத்தார் மற்றும் ஜேர்மனியில் 3 அமைதி பேச்சு வார்த்தைகளுக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்லேடன் மறைவால் தலிபான்கள் அமைதிப்பேச்சு வார்த்தைக்கு அதிக உத்வேகத்தை தந்துள்ளதாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க ராஜ்ய உறவு அதிகாரிகள் நம்புகிறார்கள். ஆப்கானிஸ்தானில் வருகிற ஜூன் மாதம் முதல் அமெரிக்க துருப்புகள் குறைக்கப்படுகின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு லட்சம் வரையிலான அமெரிக்க துருப்புகளில் பல ஆயிரம் வீரர்கள் திரும்ப அழைக்கப்படுகினறனர். ஆப்கானிஸ்தானில் 10 ஆயிரம் பிரிட்டன் வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்கள் மத்திய மற்றும் தெற்கு ஹெல்மாண்ட் பகுதியில் இருக்கிறார்கள்.தலிபான்களுடன் நடைபெறும் பேச்சு வார்த்தை குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்,"அமைதிப்பேச்சு வார்த்தை துவக்க நிலையிலேயே உள்ளது" என்றனர். இந்த ஆண்டு அமெரிக்க கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தலிபான்களுடன் அமெரிக்கா நேரடி தொடர்பு மேற்கொள்கிறது என காபூலில் உள்ள மேற்கத்திய அதிகாரி உறுதிபட தெரிவித்தார். குவாண்டனமோ சிறையில் உள்ள 20 முக்கிய தலிபான் தலைவர்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என தலிபான்கள் வலியுறுத்துகிறார்கள்.அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி ஹமீத் கர்சாய்க்கு எதிரானவர்கள் அமெரிக்கா நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்ச நிலையை எட்டியது.
பிரிட்டனில் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை கால் ஆண்டு இறுதியில் அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 16 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் வேலை பெறுவதில் பிரிட்டனில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட வயது இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பை பெறுவதற்காக அரசு 6 கோடி பவுண்ட் நிதியை அறிவித்திருந்த போதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
16-24 வயது வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை கால் இறுதி ஆண்டு கால கட்டத்தில் மேலும் 12 ஆயிரம் கூடியுள்ளது. இதன் மூலம் பிரிட்டனில் வேலையில்லா இளைஞர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 63 ஆயிரமாக உயர்ந்தது.அதே நேரத்தில் 16 மற்றும் 17 வயது இளைஞர்கள் வேலையில்லா எண்ணிக்கை மேலும் 14 ஆயிரம் அதிகரித்து 2 லட்சத்து 18 ஆயிரம் என்ற நிலையை எட்டியது. கடந்த 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கையை காட்டிலும் தற்போது 16 மற்றும் 17 வயது பிரிவினரில் வேலையில்லா எண்ணிக்கை அதிகபட்சமாக கூடியுள்ளது.
இருப்பினும் மொத்த வேலையில்லா திண்டாட்ட எண்ணிக்கை 17 ஆயிரம் குறைந்து 24 லட்சத்து 75 ஆயிரமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 78 சதவீதம் வேலையில்லா திண்டாட்ட எண்ணிக்கை குறைந்துள்ளது.இதன் மூலம் வேலை தேடுவோர் நிதியுதவி பெறுவோர்களின் எண்ணிக்கை 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியிருப்பில் திடீர் தீ விபத்து: 17 பேர் காயம்.
ஜேர்மனியின் முல்ஹெய்ம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் பலியானார். 17 பேர் காயம் அடைந்தனர்.விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தீக்காயம் அடைந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய ஒரு பெண் கருகிய நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீக்காயம் அதிகமாக இருந்ததால் அந்த பெண் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். தீ விபத்தால் பரவிய கடும் புகை காரணமாக விபத்தில் இறந்த பெண்ணின் கணவர் மற்றும் 16 பேர் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.
அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் சில நிமிடம் மயங்கிய நிலையிலேயே காணப்பட்டனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் மேலும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
தீயணைப்புத்துறையினர் கூறுகையில்,"செவ்வாய்க்கிழமை காலை தீ அணைக்கப்பட்டது. 58 தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கழிவு நீர் அகற்றும் பகுதியில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது" என்றார்.
போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்: ஒபாமா.
மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறைக்கு எதிராக மாற்றம் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.குறிப்பாக மனித உரிமைகள், அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க தீவிர முயற்சி செய்ய உள்ளதாக வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கார்னீ பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: தீவிரவாதம், வன்முறை இவற்றை களைய அதற்கான எல்லா சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் முக்கியமாக அரசியல், மனித உரிமைகள் ஆகியவற்றில் மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கடாபி வீடு அருகே அடுத்தடுத்து குண்டு மழை.
நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதலை நிறுத்தினால் போர் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக உள்ளதாக கடாபி தெரிவித்து உள்ளார்.போர் நிறுத்தத்தை அறிவிக்க கடாபி தயாரானாலும் அவரை கைது செய்வதற்கான வாரண்டை பெற சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் தலைமை விசாரணையாளர் விண்ணப்பித்துள்ளார்.
லிபிய தலைநகர் திரிபோலியில் கடாபி வீடு அருகே உள்ள அல் அசிசியா பகுதியில் செவ்வாய்க்கிழமை 2 குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து வெள்ளை நிற புகை அந்த பகுதியில் பரவியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கும், 11.30 மணிக்கும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது.
திரிபோலிக்கு புறநகர் பகுதியிலும் நேட்டோ படைகள் தங்களது தாக்குதலை துவக்கின. இந்த தாக்குதலில் லிபிய ராணுவத்தின் ரேடார் மையங்கள் அழிக்கப்பட்டன.ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொல்வதற்கு காரணமாக உள்ள கடாபி, அவரது மகன் செய்ப் அல் இஸ்லம், புலனாய்வுத் துறை தலைவர் அப்துல்லா செனுசி ஆகியோரை மனித இனத்திற்கு எதிரான குற்ற நிகழ்வுகளுக்காக கைது செய்ய வாரண்ட கோருகிறோம் என விசாரணயாளர் தெரிவித்தார்.
விமானத்தின் உடைந்த பாகங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்கிறது பாகிஸ்தான்.
பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கையின் போது சேதமடைந்த ஹெலிகாப்டரின் வால் பகுதியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் சம்மதித்துள்ளது.இத்தகவலை தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மே 2ம் திகதி இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோதாபாத்தில் தங்கியிருந்த பின்லேடன் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க கமாண்டோ வீரர்கள் ஹெலிகாப்டர்களில் வந்தனர்.
பின்லேடனை சுட்டுக் கொன்ற பின்னர் திரும்பிச் செல்லும் போது அவர்கள் வந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று செயல்படவில்லை. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரின் அதிநவீன தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதால் அதை கமாண்டோ வீரர்கள் வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் அதன் வால் பகுதி மட்டும் பின்லேடன் தங்கியிருந்த வீட்டின் சுற்றுச்சுவரில் தொங்கியபடி கிடந்தது. இந்நிலையில் ஹெலிகாப்டரின் அந்த உடைந்த பகுதியை தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டது.அதை சீனாவிடம் பாகிஸ்தான் வழங்கிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அதை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு செல்கிறார் ஹிலாரி கிளிண்டன்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் விரைவில் பாகிஸ்தான் செல்ல உள்ளார்.இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க ஹிலாரி பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் அவர் பாகிஸ்தான் செல்வதற்கான திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவரது பயணத்துக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்ய ஹிலாரியின் சிறப்புப் பிரதிநிதி மார்க் கிராஸ்மன் பாகிஸ்தானுக்கு இந்த வாரம் செல்ல உள்ளதாக டோனர் தெரிவித்தார்.அபோதாபாத் நகரில் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு ஹிலாரி பாகிஸ்தான் செல்வது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கொரு நாய் மட்டுமே வளர்க்க வேண்டும்: சீனாவில் புதிய சட்டம்.
சீனாவில் பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையை குறைக்க இனி வீட்டுக்கொரு நாய் தான் வளர்க்க வேண்டும் என்ற புதிய சட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது.சீனாவில் மக்கள் தொகை தான் அதிகம் என்று நினைத்தால் நாய்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தான் இருக்கிறது. மக்கள் தொகையைக் குறைக்க வீட்டுக்கொரு குழந்தை சட்டம் அமலுக்கு வந்தது. தற்போது நாய்களின் எண்ணிக்கையை குறைக்க வீட்டுக்கொரு நாய் சட்டம் வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தால் சீனாவின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் வெறிநாய்க்கடி பரவுவதைக் குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.ஷாங்காயில் மொத்தம் 8 லட்சம் நாய்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 40 ஆயிரம் நாய்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்ய 186 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்பதால் பலர் தங்கள் நாய்களை பதிவு செய்வதில்லை.
நேற்று முதல் மக்கள் எங்கு தங்கியிருக்கிறார்களோ, அதற்கேற்ப வருடாந்திர கட்டணம் 8 முதல் 46 பவுண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் வைத்திருப்பவர்கள் இந்த வாரத்திற்குள் பதிவு செய்து விட்டால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். இந்த புதிய சட்டத்தால் நடுத்தர குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
நாட்டு மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்: முபாரக்.
மக்களுக்கு நான் எந்தத் தீங்கு செய்திருந்தாலும் என்னை மன்னிக்க வேண்டும். என் சொத்துக்கள் முழுவதையும் நாட்டிற்குத் தந்து விடுகிறேன் என முபாரக் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளரிடம் தெரிவித்துள்ளார்.எகிப்து அதிபராக முபாரக் இருந்த போது அவரும், அவரது குடும்பத்தாரும் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் சம்பாதித்தனர். மக்கள் புரட்சிக்குப் பின் அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முபாரக், அவரது மனைவி சூசன்னே முபாரக், அவரது மகன்கள், கமால் மற்றும் அலா ஆகிய நான்குபேரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களில் முபாரக்கும் அவரது மனைவியும் சினாய் தீபகற்பத்தில் உள்ள ஷரம் எல் ஷேக் என்ற நகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் முபாரக் ராணுவ ஆட்சியாளர்களிடம் சில கோரிக்கைகள் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில் அவர் கூறியிருப்பதாவது: இதுவரை மக்களுக்கு நான் செய்த தீங்குகளுக்கு என் அதிகாரிகள் எனக்குத் தந்த தவறான தகவல்களே காரணம். நான் பொறுப்பல்ல. அதனால் எனக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். அதற்கு ஈடாக என் சொத்துக்கள் அனைத்தையும், நாட்டுக்குத் தந்து விடுகின்றேன்.
முபாரக் ஆட்சியில் ஊழலில் திளைத்த அமைச்சர்கள் பலர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. முபாரக்கின் மீதான ஊழல் மற்றும் மக்கள் புரட்சியின் போது பொலிசாரை ஏவி மக்களைக் கொன்றது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் இருந்து தப்பிப்பதற்கே முபாரக் இதுபோன்று நாடகம் ஆடுகிறார் என்ற கருத்து தற்போது எகிப்தில் பரவலாகக் காணப்படுகிறது. பொது மன்னிப்பு குறித்த முபாரக்கின் கடிதங்கள் விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.பொது மன்னிப்பு வழங்கப்பட்டால் அவருக்கும் அவரது மனைவிக்கும் மட்டுமே கிடைக்கும் எனவும், அவரது மகன்கள் இருவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கர்கள் தங்களது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்: ஒபாமா.
நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க வேண்டுமானால் இந்திய மற்றும் சீன மாணவர்களுடன் நீங்கள் கடுமையான போட்டியில் இறங்கத் தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில் நேற்று மாணவர்களிடையே அதிபர் ஒபாமா பேசியதாவது: நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க வேண்டும். அதற்கு பீஜிங்(சீனா) மற்றும் மும்பை(இந்தியா) மாணவர்களுடன் போட்டியிட வேண்டும்.
அந்தப் போட்டி கடுமையானதாக இருக்கும். அவர்கள் கடும் பசியில் உள்ளனர். கடினமாக உழைக்கின்றனர். அவர்களைப் போல நீங்களும் தயாராக வேண்டும். கடினமாக உழைக்க விரும்பினால் ஒரு தொழிற்சாலைக்குச் செல்லலாம்.
ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது. நீங்கள் வேலை தேடி வெளியில் போகும் போது நாஷ்வில்லே(டென்னசியின் தலைநகர்) மற்றும் அட்லான்டா(ஜார்ஜியா மாகாணத் தலைநகர்) ஆகியவற்றின் மக்களோடு மட்டும் போட்டியிடவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.ஒரு நாடு என்ற அளவில் நமது இளைஞர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். ஒருசிலர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு ஒபாமா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
லிபியாவில் வலுக்கும் போராட்டம்: தொடர் குண்டு மழை.
லிபியாவில் தலைநகர் திரிபோலி மீதான நேட்டோ விமானப் படைகளின் குண்டு வீச்சு வலுத்துள்ளது.கடாபி குடியிருப்பு வளாகத்தின் அருகில் உள்ள இரு அமைச்சகங்கள் குண்டு வீச்சில் தீக்கிரையாயின. இந்நிலையில் கடாபி அமைச்சரவையின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகி எதிர்த் தரப்பில் சேர்ந்து கொண்டார்.
லிபியாவில் கடாபி ராணுவத்தின் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நேட்டோ தனது தாக்குதலை விரிவுபடுத்த வேண்டும் என்று சமீபத்தில் பிரிட்டன் கேட்டுக் கொண்டது. இதையடுத்து கடந்த இரு நாட்களாக தலைநகர் திரிபோலியின் பல பகுதிகளில் நேட்டோ விமானப் படைகள் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன.இந்நிலையில் நேற்று கடாபி குடியிருப்பு வளாகத்தின் அருகில் உள்ள ஊழல் தடுப்பு அமைச்சகம் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சகம் ஆகியவற்றின் மீது நேட்டோ குண்டுகளை வீசியதில் இரு அமைச்சகங்களும் தீக்கிரையாயின.
இச்சம்பவத்தில் ஊழியர்கள் சிலர் காயம் அடைந்ததாகத் தெரிவித்துள்ள லிபிய அரசு எதிர்த் தரப்புதான் நேட்டோவுக்குத் தவறான வழிகாட்டி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையில் லிபியாவின் தேசிய எண்ணெய் கார்ப்பரேஷன் துறை அமைச்சர் ஷாக்ரி கனீம்(68) நேற்று தனது பதவியில் இருந்து விலகி எதிர்த் தரப்பில் சேர்ந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் படித்த இவர் எண்ணெய் வளக் கூட்டமைப்பு நாடுகளின்(ஓபெக்) கூட்டத்தில் லிபியா சார்பில் கலந்து கொண்டவர். அவர் தற்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என்று எதிர்த் தரப்பு தெரிவித்துள்ளது. அவர் துனிஷியாவிற்குச் சென்றிருக்கக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.அதேநேரம் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று லிபிய அரசின் பிரதிநிதிகளுடன் ரஷ்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பெங்காசியில் உள்ள எதிர்த் தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
லிபிய தூதரக அதிகாரிகள் உடனே வெளியேற வேண்டும்: மக்கள் ஆர்ப்பாட்டம்.
ஒட்டாவா தலைநகரில் உள்ள 5 லிபிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றப் போவதாக கனடா அறிவித்தது. கனடா தலைநகர் ஒட்டாவாவில் லிபியா தூதரகம் உள்ளது.
இந்த தூதரகம் செயல்பாடு திருப்திகரமான நிலையில் இல்லை. லிபியாவில் அப்பாவி மக்களை கர்னல் கடாபி கொன்று வரும் நிலையில் அந்த தூதரகம் கனடாவில் செயல்படுவது சரியானதாக இல்லை என கனடிய அரசு கருதுகிறது.எனவே தங்கள் தலைநகரில் உள்ள லிபிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் முடிவுக்கு வந்துள்ளதாக அரசு இணையத்தளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லிபியா தலைநகர் திரிபோலியுடன் கனடா ஏற்கனவே தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டுவிட்டது.
இருப்பினும் நேட்டோ படையெடுப்பின் போது லிபியாவுடனான ராஜ்ய உறவுகளை கனடா துண்டித்துக் கொள்ளவில்லை. இது குறித்து கனடிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது: கனடாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள லிபியா தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.லிபியாவில் வருகிற ஜூன் மாதம் 16ம் திகதி வரை கனடா படைகள் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு துருப்புகள் பணிக்காலத்தை நீட்டிக்க துணை நிலை ராணுவத்தின் அனுமதியை பெற வேண்டி உள்ளது என பழமைவாத அரசு கூறியுள்ளது.