Sunday, May 8, 2011

இன்றைய செய்திகள்.

பான் கீ மூனுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை: ஆதரவை விலக்கிக் கொள்ளும் சாத்தியம்.

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அலுவலர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் நட்பு நாடுகளான ரஸ்யாவும் சீனாவும் கவலை வெளியிட்டுள்ளன.ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கையின் போர்குற்றம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டதன் பின்னரே இந்த கவலையை இரண்டு நாடுகளும் வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை கொச்சைப்படுத்துவது  அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது போன்ற செயல்கள் தொடருமானால், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவை தாம் மறுபரிசீலனை செய்யவேண்டி வரும் என்று ரஸ்யாவும் சீனாவும் கூறியுள்ளன.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மீது மேற்கொண்டு வரும் எதிர்ப்பு அறிக்கைகளையும் கருத்துக்களையும் அரசாங்கம் குறைக்கவேண்டும்.பான் கீ மூனின் உருவப்பொம்மை அண்மைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களை அடுத்தே ரஸ்யாவும் சீனாவும் இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு விடுத்துள்ளன.

கொழும்பிலிருந்து இலங்கைக்கு தண்டனை வழங்க 28 பக்க அறிக்கை! - திவயின.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளுக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பிலிருந்து அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. 

மிக இரகசியமாக அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை  இலங்கைக்கு தண்டனை வழங்க வேண்டிய முறைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ முனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 28 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் இலங்கைக்கும், இலங்கைக்கு ஆதாரவாகச் செயல்படும் நாடுகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வரும் இலங்கை கிறிக்கெற் அணியின் பாதுகாப்புக்கு பிரிட்டன் ஏற்பாடு.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வர இருக்கும் இலங்கைக் கிறிக்கெற் அணியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசு ஈடுபட்டு வருகின்றது. 

எதிர்வரும் 14 ஆம் திகதி ஒக்ஸ்பிறிச்ட் கிறிக்கெற் மைதானத்தில் இலங்கை கிறிக்கெற் அணியின் முதலாவது ஆட்டம் ஆரம்பம் ஆகின்றது. அன்றைய தினம் இலங்கைக் கிறிக்கெற் அணியினருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் மைதானத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் இலங்கைக் கிறிக்கெற் அணியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசு ஈடுபட்டு வருகின்றது என கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
ஆளுங்கட்சியின் தென்னிலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பின்தொடரும் புலனாய்வுக்குழுக்கள்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஆளுங்கட்சியின் தென்னிலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.தென்னிலங்கையின் துடிப்பான இளம் அரசியல்வாதிகளான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கே.வி. இந்திக, மாத்தறை மாவட்டத்தின் ஹேமால் குணசேகர, காலி மாவட்டத்தின் நிசாந்த முதுஹெட்டிகம ஆகியோரே புலனாய்வுப் பிரிவினரின் தீவிர கண்காணிப்பிற்குள்  கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவருமே ஜனாதிபதியின் குடும்ப உறவினர்கள் என்பதுடன் ஹேமால் குணசேகர ஜனாதிபதியின் மிக நெருக்கமான உறவினர் ஆவார். ஏனைய இருவரும் கூட தூரத்து உறவினர் என்று சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு ஜனாதிபதியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆயினும் தம்மை அலட்சியம் செய்துள்ள ஜனாதிபதி மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது அவர்கள் மூவரும் கடும் கோபமுற்றுள்ளனர். அதன் காரணமாக பகிரங்கமாகவே ராஜபக்ஷ குடும்பம் மீது விமர்சனங்களை அள்ளி வீசுகின்றனர். அது தான் ஜனாதிபதியின் கோபத்தைக் கிளறி விட்டுள்ளது.அதனையடுத்தே அவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு  ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட் பத்திரணவின் மகனும், தற்போதைய ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் பத்திரணவும் அரசாங்கம் தொடர்பான அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தப் போய், ஜனாதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதனையடுத்து தற்போது அவர் மௌனம் காக்கத் தொடங்கியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
நிபுணர் குழு அறிக்கைக்கு அடுத்தவாரமளவில் அரசாங்கம் பதிலளிக்கும்.
எதிர்வரும் வாரமளவில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் பதலளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியான ஆரம்பத்தில் அதனை ஐ.நா.சபையின் அறிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியாதெனவும், அதற்குப் பதிலளிக்கப் போவதில்லை எனவும் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டில்  இருந்தது.
ஆயினும் பின்பு பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ள அரசாங்கம், நிபுணர் குழு அறிக்கைக்குப் பதிலளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று காலியில் இடம்பெற்ற  வைபவமொன்றின் போது அதனைத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை அரசாங்கம் எதிர்த்த போதிலும் ஐ.நா. சபையுடனான உறவில் விரிசல்கள் ஏற்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை வைத்து தனது நலன்களை நிறைவேற்றிக் கொள்ளத்துடிக்கும் இந்தியா.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக இலங்கைக்கு உதவியளிப்பதற்கு இந்தியா தனது நலனை முன்னிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.அதில் முக்கியமாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் மட்டுமன்றி நாடு தழுவிய ரீதியில் இந்திய வர்த்தக விஸ்தரிப்புக்கான நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றித் தரவேண்டுமென இந்தியா விதித்துள்ளது.  அதன் காரணமாகவே அண்மையில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியையும் இந்தியாவிடம் கையளிக்கும் அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆயினும் தனது சுயநல நோக்கங்கள் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக இந்தியா இன்னும் பல மேலோட்டமான நிபந்தனைகளையும் விதித்துள்ளது.அவற்றில் வழமையான பல்லவியான அதிகாரப் பரவலாக்களை துரிதப்படுத்தல், அரசியலமைப்பில் மாற்றத்தையேற்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரித்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் பிரதிநிதிகளாக (ஏனைய குழுக்களுடன் ஒரு பிரதிநிதியாக) அங்கீகரித்தல் போன்ற நிபந்தனைகளும் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயினும் பிரதானமாக இந்தியாவின் வர்த்தக நலன்கள் தொடர்பில் ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டிள்ளதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்த அறிக்கை வெளியாகும் என்றும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவை அமவதித்தால், ஆதரவை வாபஸ் பெறவேண்டிவரும்! : இலங்கைக்கு எச்சரிக்கும் சீனா,ரஷ்யா.

ஐக்கிய நாடுகள் சபையினை அவமதிக்கும் படி நடந்துகொண்டால், இலங்கைக்கான தமது ஆதரவை விலக்கிக்கொள்ள நேரிடும் என சீனா மற்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.'ஐ.நா நிபுனர் குழு அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனை அவமரியாதை செய்யும் வகையிலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை இலங்கையர்கள் மேற்கொள்ளக்கூடாது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி அரசியல் வாதிகள் பலர் ஐ.நாவினை தரக்குறைவாக விமர்சனம் செய்துவருவது ஆபத்தானது.

இவற்றை கருத்தில் கொண்டு ஐ.நாவின் கொழும்பு காரியாயலயம், மற்றும் அதன் பணியாளர்களுக்கு உச்சளவு பாதுகப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம்.தொடர்ந்து ஐ.நாவுக்கு எதிராக இலங்கையர்கள் கீழ்த்தரமாக நடந்துகொண்டால் தமது ஆதரவை வாபஸ்பெற்றுக்கொள்வது தொடர்பில் யோசிக்க வேண்டிவரும்' என சீனா, ரஷ்யா கூறியுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே தின ஊர்வலத்தில், ஐ.நா பொதுச்செயலாளரை குரங்காக சித்தரிக்கும் போஸ்டர்கள்.

உயிருக்கு பாதுகாப்பு இருந்தால் ஆட்டநிர்ணய பெயர்களை வெளியிடுவேன்: ஹசான் திலகரட்ன.
தமது உயிருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால், இலங்கை கிரிக்கட் அணியில் ஆட்டநிர்ணயம் செய்தவர்களின் பெயர்களை வெளியிடமுடியும் என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு பின்னரே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ஆட்டநிர்ணயத்தில் சம்பந்தப்பட்டோர், தற்போதே ஹசானுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஹசானின் மனைவியான அப்சாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்க்கட்சி அரசியல்வாதியான ஹசான் திலகரட்ன 1992 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கட் அணியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்று வருவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். தாம் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்துக்கு ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வழங்கப் போவதாகவும் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.
83 டெஸ்ட் போட்டிகளிலும், 200 ஒருநாள் கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடிய ஹசான் உயிரச்சுறுத்தல் காரணமாக கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்து வந்தார்.இதே வேளை ஹசான் திலகரட்ன முடிந்தால் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிடட்டும் என்று இலங்கையின் அணிக்கு கடந்த உலக கிண்ண போட்டிகளின் போது தலைமை தாங்கிய குமார் சங்கக்கார சவால் விடுத்துள்ளார்.
அரசியல் தலையீடு : இலங்கை கிரிக்கெட்டின் போட்டிக் குழுத் தலைவரும் முக்கிய உறுப்பினரும் விலகல்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் போட்டிக் குழுத் தலைவரும் மற்றொரு முக்கிய உறுப்பினரும் தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.இது தொடர்பாக இவ்விருவரும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போட்டிக்குழுத் தலைவர் ரவி டி சில்வா மற்றும் குழுவின் முக்கிய உறுப்பினரான அஷ்லிரட்நாயக்கவுமே தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்தவர்களாவர். உலகக் கிண்ணப் போட்டியை தொடர்ந்து இலங்கை அணிக் கப்டன் குமார் சங்ககார துணைக் கப்டன் மஹேல ஜெயவர்தன தேர்வுக் குழு என பலரும் தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்திருந்தனர்.
இந்த நிலையிலேயே தற்போது போட்டிக் குழுத் தலைவரும் முக்கிய உறுப்பினரும் இராஜிநாமா செய்துள்ளனர். போட்டிக் குழுவுக்குள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகிகளின் அதிகரித்த தலையீடு காரணமாகவே தாங்கள் பதவி விலகியதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போட்டிக் குழுவின் தற்காலிக தலைவராக ஹிகான் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இலங்கை கிரிக்கெட்டினுள் அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருவதால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகி வருவதாக பலரும் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எகிப்தில் தலைநகர் கெய்ரோவில் நடந்த மதக்கலவரம் : 6 பேர் பலி, 75 பேர் படுகாயம்!

எகிப்து தலைநகர் கெய்ரோவில், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும் இடையில் நேற்று நடந்த திடீர் மோதலில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.எகிப்து மக்கள் புரட்சி வெற்றி பெற்று, அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபார் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், இடம்பெற்றுள்ள முதல் பாரிய கலவரமாக இது மாற்றம் பெற்றுள்ளது.

கிறிஸ்த்தவ பெண் ஒருவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு முனைந்த வேளையில், கிறிஸ்த்தவ - இஸ்லாமிய மதத்தலைவர்களிடையே உருவாகிய முறுகல் நிலையை தொடர்ந்து, வடமேற்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் இம்பாடாவில், உள்ள Coptci Saint Church தேவாலயம், இஸ்லாமிய குழுவொன்றினரால் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று சனிக்கிழமை மாலை இவ்வன்முறை வெடித்தது.
துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு, கல்லெறிதல் என இரு தரப்பினாலும் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கு பெருந்தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டனர். எனினும் மோதல்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் 6 பேர் உயிரிழந்ததாகவும், 75 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.80 மில்லியன் மக்கள் சனத்தொகை கொண்ட எகிப்து நாட்டில் 10 சதவீதமானோர் கிறிஸ்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் உளவுத்துறை சோதனை: 25 பேர் கைது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் பாகிஸ்தான் உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 25 பேர் சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் அவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அபோதாபாத் அருகில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 25 பேரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்துள்ளனர். எனினும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
அபோதாபாத் அருகேயுள்ள பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு பொலிசார் நூற்றுக்கணக்கானோரை கைது செய்ததாக முன்னாள் அமைச்சர் லலா அலி அப்சல் ஜடூன் தெரிவித்துள்ளார்.இந்த தேடுதல் வேட்டை நடத்தப்படுவதற்கு முன் அப்பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு கருதி அபோதாபாத் நகருக்குள் வெளிநாட்டு செய்தியாளர்கள் நுழைவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
மரிஜீனா போதை மருந்தை ஆதரித்து பல ஆயிரம் பேர் பேரணி.
மரிஜீனா போதை மருந்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும் என பல ஆயிரம் பேர் திரண்ட பேரணி சனிக்கிழமை றொரண்டோ குயின்ஸ் பார்க்கில் நடந்தது.மரிஜீனா போதை மருந்து பொருளை மருத்துவ ரீதியாகவும் மகிழ்ச்சி கொண்டாட்டத்திலும் பயன்படுத்துவதை ஆதரித்து உலக மரிஜீனா போதை மருந்து 13வது ஆண்டுப் பேரணி நடைபெற்றது.
றொரண்டோ பேரணி நிகழ்ச்சியை மாட் மெர்னாக் ஒருங்கிணைத்திருந்தார். இந்தப் பேரணி குறித்து மெர்னாக் கூறியதாவது: மருத்துவ ரீதியிலான மரிஜீனா மருந்து திட்டம் கனடாவில் செயல்படுத்தப்படவில்லை. இதன் மருத்துவ விளைவுகளை விளக்கியே பேரணி நடத்தினோம்.
ஒரு சதவீதத்தினருக்கும் குறைவான மருத்துவர்களே மருத்துவ ரீதியிலான மரிஜீனா செயல்பாடுகளுக்கு அட்டைகளில் கையெழுத்திட்டு உள்ளனர். எனவே நீதிபதி மரிஜீனாவை விளைவிப்பது தொடர்பாக எனக்கு விலக்கு அளித்துள்ளார் என்றார்.மரிஜீனா போதை மருந்து இல்லாமல் என்னால் இங்கு இருக்க முடியாது என பேரணியில் கலந்துகொண்டு கிரா மெக்னீல் கூறினார். உலக மரிஜீனா பேரணியில் மிகப் பிரமாண்டப் பேரணியாக றொரண்டோ பேரணி உள்ளது என நிகழ்ச்சி அமைப்பாளர் நீவ் டேபிரோ தெரிவித்தார்.
கனேடிய மக்கள் இந்த போதை மருந்தை நேசிக்கின்றனர். இந்த பேரவைக்கு அளவு கடந்த கூட்டம் வந்துள்ளது என அவர் தெரிவித்தார். கனடாவில் 15ல் ஒருவர் மாதம் ஒருமுறை இந்த போதை மருந்தை எடுத்துக் கொள்கின்றார்.
ஒரு கோடி கனேடியர்களை இந்த மரிஜீனா தொடர்பு கொண்டுள்ளது. எனவே 1 கோடி கனேடியர்களும் கிரிமினல்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சணல் வகை செடியில் இருந்து பெறப்படும் மருந்த மற்றப் போதை மருந்துகள் போல அல்ல. கடுமையான தருணங்களில் இதனை எடுத்துக் கொள்வது தவறு இல்ல. இதனை புகைக்க சட்டபூர்வமாக பலருக்கு அனுமதி உள்ளது என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் கூறினர்.
ஏர் பிரான்ஸ் விமான விபத்தில் முதல் உடல் கண்டெடுப்பு.
ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த 2009ஆம் ஆண்டு அட்லாண்டிக் பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.இந்த விபத்து நடந்து 2 ஆண்டுகள் ஆனபோதும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய 4வது தேடுதல் பணியை பிரான்ஸ் குழுவினர் மேற்கொண்டனர். அவர்களது தீவிர தேடுதல் முயற்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து நொறுங்கிய விமானத்தின் தகவல் பதிவுகளை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
பதிவு கிடைத்த சில தினங்களில் விபத்தில் உயரிழந்த நபரின் உடலையும் மீட்புக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். 2009ம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிவோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு ஏர் பிரான்ஸ் விமானம் வந்தது.
இந்த விமானம் அட்லாண்டிக் கடல்பகுதியில் நொறுங்கி விழுந்ததில் விமானத்தில் இருந்த 228 பேர் பலியானார்கள். சிறிய நீர் மூழ்கி கப்பல்கள் உதவியுடன் பிரெஞ்சு மீட்புக் குழுவினர் விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தனர்.விபத்தில் பலியான அனைத்து நபர்களின் உடல்களையும் கடலில் இருந்து எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் நடுஉடலை மீட்டு இருப்பதாக பிரெஞ்சு பொலிஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப ரீதியாக கடலில் 2 ஆண்டுகளுக்கு மேல் மூழ்கி கிடக்கும் உடல்களை எடுப்பது என்பது சாத்தியமாக இல்லை. மிகவும் ஆழமான கடல் பகுதியில் மீட்புக் குழுவினர் எதிர்பாராத பயங்கரச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என பொலிஸ் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான விமானத்தை தேடும் பணியில் இலேடே செய்ன் கப்பல் ஈடுபட்டது. இந்தக் கப்பலில் கடலில் கிடந்த முதல் உடல் வைக்கப்பட்டு உள்ளது. இக்கப்பல் பிரேசில், ஆப்பிரிக்கா இடையே உள்ள கடல்நீர்ப் பகுதியில் அமைந்துள்ளது.
பின்லேடன் மரணத்தை பாராட்டிய ஜேர்மனி அதிபர் மீது நீதிபதி கிரிமினல் புகார் பதிவு.
அல்கொய்தா தீவிரவாதத் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2ஆம் திகதி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவர் கொல்லப்பட்டதும் ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் மகிழ்ச்சி தெரிவித்தார். அவரது நிலைக்கு ஜேர்மனி அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிபரின் கருத்து குறித்து ஜேர்மனி நீதிபதி கிரிமினல் புகார் பதிவு செய்துள்ளார். ஜேர்மனியில் தனது மகிழ்ச்சி நிலைக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் ஏங்கலா மார்கெல் தனது கருத்தில் மாற்றம் செய்துள்ளார்.
சர்வதேச தீவிரவாத வலைப்பின்னலை மேற்கொண்ட பின்லேடன் மரணம் தமக்கு நிம்மதியைத் தந்துள்ளது. பின்லேடன் மரணம் எனக்கு மகிழ்ச்சி என்பதை விட நிம்மதி பெரு மூச்சு கிடைத்துள்ளது என அவர் பாசர் நேபிரஸ்சே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.அவரது பேட்டி மே 7ஆம் திகதி நாளிதழில் வெளியாகியுள்ளது. பின்லேடன் கடந்த 2001ஆம் ஆண்டு வாஷிங்டன் மற்றும் நியூயார்க் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியவர் ஆவார். அவர் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார்.
அவரது மரணச் செய்தி கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஏங்கலா மார்கெல் அறிக்கை வெளியிட்டார். அவரது நிலையை ஜேர்மனி மக்கள் பலரும் ஏற்கவில்லை. குறிப்பாக மார்கெலின் சொந்த பழமைவாத கட்சியான கிறிஸ்டியன் டெமாக்ரேட்ஸ் கட்சியனரும் ஏற்கவில்லை.இந்த நிலையில் ஹம்பர்க் நீதிபதி ஹெய்ன்ஸ் உத்மான் அதிபர் மார்கெலுக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். பின்லேடன் மரணத்தால் ஆப்கானிஸ்தான் நிலையில் மாற்றம் வந்து விடாது. அங்கு தொடர்ந்து ஜேர்மானிய வீரர்கள் தொடர்ந்து இருப்பார்கள் என்றும் மார்கெல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஸ்திரமற்ற நிலைக் காணப்படுகிறது. எனவே அந்த நாட்டை பாதுகாக்க வேண்டிய நிலையில் நமது வீரர்கள் உள்ளனர். அந்த பகுதி மீண்டும் தீவிரவாத மையமாக உருவெடுப்பதை தடுக்க வேண்டும் என்றும் மார்கெல் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மானிய துருப்புகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என 60 சதவீத மக்கள் கருத்து தெரித்துள்ளனர்.
இந்தோனேஷிய விமான விபத்து: தேடும் பணி மீண்டும் தொடக்கம்.
இந்தோனேசியாவின் மேற்கு பபுவாவில் நேற்று விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்களை தேடும் பணியை மீட்புக் குழுவினர் இன்று காலை மீண்டும் தொடங்கினர்.
27 பேருடன் சென்ற மெர்பாடி ஏர்லைன்ஸ் விமானம் மேற்கு பபுவாவின் கைமனா விமானநிலையத்தில் நேற்று பிற்பகலில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக கடலில் விழுந்தது.இந்த விபத்தில் நேற்று மாலைவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இரவில் வெளிச்சமின்மை காரணமாக தேடும்பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீதமுள்ள 10 பேரைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் இன்று காலை தொடங்கினர். உள்ளூர் மீனவர்களும் மீட்புக் குழுவினருடன் இணைந்து காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.மேலும் அந்த விமானத்தின் பதிவுசெய்யப்பட்ட உரையாடல்கள் அடங்கிய பெட்டியையும் மீட்புக் குழுவினர் தேடி வருவதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் நானோ சம்பானோ தெரிவித்தார்.
ஜாவா தீவில் பயங்கர நிலச்சரிவு: 17 பேர் பலி
ஜாவா தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பழத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 17 பேர் பலியாகினர்.மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கருட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவால் மணல் மற்றும் கற்கள் சிகாசோ ஆற்றினுள் விழுந்தன. இதனால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 17 பேர் பலியாயினர். இருவரை காணவில்லை. நான்கு பேர் காயமடைந்தனர்.காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கிறது. கடந்தாண்டில் இதுபோன்று ஏற்பட்ட பலத்த மழை மற்றும் வெள்ளத்திற்கு பாபுவாவில் உள்ள தெலுக் வோண்டமா என்ற இடத்தில் 148 பேர் பலியாகினர்.
பிரிட்டன் தாக்குதலில் லிபிய ஏவுகணைகள் நொறுங்கின.
பிரிட்டனின் ஹொரயல் படைப்பிரிவு(ஆர்.ஏ.எப்) தாக்குதலில் லிபியாவின் ராக்கெட் ஏவுதளங்களும், ஸ்கட் ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் கன்டெய்னர்களும் நொறுங்கின.லிபியாவில் உள்ள சிர்தே நகருக்கு அருகே பிரிட்டனின் 2 சூறாவளி விமானங்கள் லிபிய ஆயுதங்களை தகர்த்தன. போர் விமானங்கள் நீண்ட தூர இலக்கை பாய்ந்து தாக்க கூடிய ஸ்கட் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் 30 கன்டெய்னர்களை நொறுக்கின.மிஸ்ரட்டாவில் கடாபி அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை ஒடுக்கி லிபிய ராணுவம் கண்ணி வெடிகளை பரவலாக புதைத்துள்ளது.
லிபிய அரசின் கொடூர நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் பிரிட்டன் ஆர்.ஏ.எப் போர் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. லிபிய ராணுவம் சீன கண்ணி வெடிகள் புதைத்துள்ளதை வீடியோ ஆதாரம் மூலம் போராட்டக்காரர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.இதனை மனித உரிமை அமைப்பும் ஆய்வு செய்துள்ளது. லிபியா ராணுவம் பேரழிவை ஏற்படுத்தும் கொத்துக்குண்டுகளை ராக்கெட் மூலம் வரும் பாராசூட்டுகளில் அனுப்பி தாக்குதலை நடத்துகிறது.
வியாழக்கிழமை இரவு மிஸ்ரட்டா நகரில் 20க்கும் மேற்பட்ட சீன கண்ணி வெடிகளை லிபியா ராணுவம் வீசி உள்ளது. லிபியாவின் 3வது பெரிய நகரம் மிஸ்ரட்டா. இந்த நகரம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.லிபிய ராணுவம் மீதான ஹொரயல் விமானப்படை தாக்குதல் வெற்றிகரமாக அமைந்துள்ளது என பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாம் போக்ஸ் கூறியுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனும், ஜவாஹிரியும் பிரிந்து விட்டனர்: அமெரிக்கா.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனும், அல் ஜவாஹிரியும் பிரிந்து விட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடனை விட்டு ஜவாஹிரி பிரிந்து போய் விட்டார். மேலும் பின்லேடனை ஜவாஹிரி ஓரம் கட்டி வைத்து விட்டார். மேலும் பின்லேடன் இயக்கத்திற்கு நிதி வருகையும் வெகுவாக குறைந்து போனதால் பின்லேடனை அவர் தவிர்க்க ஆரம்பித்து விட்டார்.1988ம் ஆண்டு அல்கொய்தா அமைப்பை உருவாக்க பின்லேடனுக்கு உதவியாக இருந்தார் ஜவாஹிரி. மேலும் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அல்கொய்தாவின் தாக்குதல்களை நடத்தியும் வந்தார் என்று அந்த பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
ஆனால் இதை அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக இல்லை. இதுகுறித்து அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பது நம்பும் படியாகவே இல்லை. அப்படி ஒரு விடயம் நடந்ததாக எங்களிடம் உளவுத் தகவல் எதுவும் இல்லை.பின்லேடனுக்கு பல கடுமையான பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். ஆனால் ஜவாஹிரியும், அவரும் பிரிந்திருந்ததாக எங்களிடம் தகவல் இல்லை. அல்கொய்தா அமைப்புக்குப் பண வருகை வெகுவாக நின்று போனது உண்மை தான் என்றார்.
இருப்பினும் 2005ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போதுதான் ஜவாஹிரிக்கும், பின்லேடனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த ஆண்டில் ஈராக்கில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவரான அபு முசாப் அல் ஜர்காவி என்பவரின் தலைமையில் ஈராக் அல்கொய்தா உருவானது.இதன் பிறகு தான் பின்லேடனும், ஜவாஹிரியும் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஜவாஹிரியால் தனக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சியே அபோதாபாத்துக்கு பின்லேன் இடம் பெயர்ந்து வந்ததாகவும் கருதப்படுகிறது.
கடல் நீ்ர் மட்டம் உயருவதால் உலகின் முக்கிய நகரங்கள் மூழ்கி விடும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை.
ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது.இதே நிலை நீடித்தால் வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான பகுதிகளிலும், லண்டன் முதல் ஷங்காய் வரையிலான நகரங்களிலும் கடல் மட்டம் 1.6 மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சுனாமி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கடல் நீர் மட்டம் குறித்த சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பூமி உருண்டையின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது என எட்டு நாடுகள் கொண்ட ஆர்டிக் மானிடரிங் அசெஸ்மென்ட் திட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி ஏராளமான அளவில் நீர் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் நீர் கடலில் கலப்பதால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எதிர்காலத்தில் 0.9 மீற்றர் முதல் 1.6 மீற்றர் வரை அதாவது 5 அடி, 3 அங்குலம் வரை கடல் மட்டம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக தட்ப வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு கடந்த 2007ம் ஆண்டில் நடத்திய ஆய்வில் வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 18 முதல் 59 செ.மீ அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடல் மட்டம் உயர்வது குறித்து ஐரோப்பிய தட்ப வெப்ப நிலை குறித்த அமைப்பின் ஆணையர் ஹெட்கார்டு கூறுகையில்,"உலகில் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்துமே அடுத்த சில ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும் என்று தான் கூறுகின்றன. இது கவலையளிக்கும் ஒரு தகவலாகும்" என்றார்.
இந்நிலையில் தட்ப வெட்ப சீர்குலைவை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடல் மட்டம் அதிகரிக்கும் போது மாலத்தீவு உள்ளிட்ட உலகின் சில நாடுகள் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 2100ம் ஆண்டில் 1.6 மீற்றர் அளவிற்கு கடல் மட்டம் அதிகரிக்கப் போகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கடல் மட்டம் அதிகரிப்பால் சுனாமி தாக்குதலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு சமீபத்திய ஜப்பான் சுனாமியை உதாரணமாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாத்து வெப்ப நிலை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சர்வதேச அளவிலான இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் அறிவுரை.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் உங்கள் வாக்குறுதியை நிரூபியுங்கள் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது.அதே நேரத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை மீது சந்தேகம் வருகிறது என்று அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக் குழுவின்(சி.ஆர்.எஸ்.,) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 2003ம் ஆண்டில் இருந்து ஒசாமா பின்லேடன் தங்கியிருந்தார். அவர் அங்கு இருந்தது பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது என பாகிஸ்தான் சாதித்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்க எம்.பிக்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர். எந்தக் கேள்விக்கும் பாகிஸ்தானிடம் இருந்து சரியான பதில் வரவில்லை.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தானிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். அதே நேரம் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கா, பாகிஸ்தான் கூட்டணி சில நல்ல பலன்களைத் தந்துள்ளது.
பாகிஸ்தானில் இயங்கி வரும் அல்கொய்தா மற்றும் பிற பயங்கரவாத இயக்கங்கள் மீது அந்நாட்டு அரசு தனது நெருக்கடியை அதிகரிக்க வேண்டும். பயங்கரவாதம் தான் பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது பற்றி அமெரிக்கா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விரைவில் பதில் தருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. எனினும் இவ்விசாரணை முடிவுக்கு வர சில காலம் எடுத்துக் கொள்ளும். இருதரப்பு நலன் கருதி பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் உடன் அமெரிக்கா தொடர்ந்து செயலாற்றும். இவ்வாறு மார்க் டோனர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அமெரிக்க எம்.பிக்களுக்காக அமெரிக்க பாராளுமன்ற ஆய்வுக் குழு(சி.ஆர்.எஸ்) தயாரித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஒசாமா கொல்லப்பட்ட சம்பவமும் சூழலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நோக்கத்தில் பாகிஸ்தான் பற்றிய அமெரிக்காவின் நீண்ட கால சந்தேகங்களை மேலும் அதிகரிக்க வைத்துள்ளன.
இது அமெரிக்காவின் பாகிஸ்தான் உறவை எதிர்காலத்தில் சீர்குலைக்கவே செய்யும். பின்லேடன் வேட்டை இரண்டு முடிவுகளைத் தருகிறது. ஒன்று பாகிஸ்தானில் பின்லேடன் ஒளிந்திருப்பதற்கு சில அதிகாரிகள் துணைபுரிந்திருக்க வேண்டும். இரண்டு அல்கொய்தா தலைவர்களைத் தேடுவதில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத் துறை இரண்டும் முற்றிலும் செயல்திறமையற்று இருந்திருக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பின்லேடன் உள்ளிட்டவர்கள் பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் சொல்லி வந்தனர். இதனாலேயே இப்போது பாகிஸ்தான் மீதான நம்பகத் தன்மை பலத்த அடி வாங்கிவிட்டது. ராணுவ அகடமியின் அருகில் வசதியான ஒரு வீட்டில் பல ஆண்டுகளாக பின்லேடன் தங்கியிருந்திருக்கிறார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.அதனால் தான் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதியுதவி செய்துதான் ஆக வேண்டுமா என்பதில் அமெரிக்க பாராளுமன்றம் தனது ஆட்சேபனையை மேலும் அதிகரித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF